Monday, July 07, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -10

திருசிற்றம்பலம்

மூன்றாம் நாள் யாத்திரை

(பேருந்து பயணம் பித்தோர்கரிலிருந்து கெஸ்கூ வரை)



அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்

சில்லுருவாய் சென்று திரண்டாய் போற்றி




தேவர் அறியாத தேவே போற்றி




புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி




போகாதுஎன் சிந்தை புகுந்தாய் போற்றி




பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி




பற்றி உலகை விடாதாய் போற்றி




கல்லுயிராய் நின்ற கனலே போற்றி




கயிலை மலையானே போற்றி போற்றி (6)





இன்றைய நாள் நிலச்சரிவுகள் மற்றும் நீர் விழ்ச்சிகளின் நாளாக அமைந்தது.


உல்கா தேவி கோவிலின் பிரகாரத்தில் குழுவினர்



அட்டவணையின் படி நாங்கள் காலா சென்றிருக்க வேண்டும் ஆனால் நிலச்சரிவுகளின் காரணமாக எங்கள் பயணம் தடைப்பட்டதால் கெஸ்கூ என்னும் கிராமத்தில் இரவில் தங்கினோம்.


பித்தோர்கர் நகரின் அழகு



காலையில் பித்தோர்கர் (Pithoragarh) நகரின் எழிற்காட்சிகளை கண்ணுற்று அருகில் இருந்த உல்கா தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டு தாருசூலாவிற்கு (110 கி, மீ தூரம்) எங்கள் பயணத்தை பேருந்து மூலம் தொடங்கினோம். சுமார் அரை மணி நேரம் சென்ற பின் ஒரு நிலச்சரிவு ஆனால் எங்களை அதிக நேரம் காக்க வைக்கவில்லை எம்பெருமான். பாதை சீக்கிரம் சரிசெய்யப்பட்டது, பின் அல்மோரா (Almora) வழியாக மலைகளுக்கு நடுவே ஒடும் சரயு நதி தீரத்திலேயே பயணம் செய்து ஓக்லா(1320 மீ உயரம்) என்னும் இடத்தை அடைந்தோம் அங்கு ITBP - 7வது கம்பெனியினர் எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். நாங்கள் ITBP யின் 14வது கம்பெனியின் தலைமையிடமான மிர்த்திக்கு (Mirthi) சென்றிருக்க வேண்டும் ஆனால் பாதை மாறி வந்ததால் ஓக்லாவில் வரவேற்பு நடைபெற்றது. அங்கு எங்களது குழுவினரின் புகைப்படம் எடுக்கப்பட்டது மற்றும் நாங்கள் செல்ல வேண்டிய வழி விளக்கப்பட்டது.


ஓக்லாவில் எடுக்கப்பட்ட எங்கள் குழுவினரின் படம்




எங்கள் குழுததலைவர்(L.O) தங்கள் கிராமத்தினருடன்





வழியில் எங்களது குழுத்த்லைவர் திரு. பொனால் சிங் (L.O) அவர்களின் கிராமமான போன் (BON) வந்தது அங்கு அக்கிராம வாசிகள் தங்கள் மண்ன் மைந்தனின் குழுவினரை தங்களது பாரம்பரிய உடையில் வரவேற்று உபசரித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். பின் மதிய உணவிற்கு தாரூசூலாவை அடைந்தோம். வழியில் காளி மற்றும் கௌரி நதிகளின் சங்கமம் கண்டோம்.








முதல் நாள் இரவே வந்திருக்க வேண்டிய இடத்திற்கு அடுத்த நாள் மதியம் வந்து சேர்ந்தோம், கயிலாய யாத்திரையின் ஆதார முகாம் (Base Camp) இந்த தாரூசூலா(880 மீ உயரம்). நேபாள் மற்றும் இந்திய நாடுகளின் இயற்கை எல்லையான காளி நதிக்கரையில் இந்நகரம் அமைந்துள்து. இதுவே யாத்திரையின் கடைசி பெரிய நகரம். அதே பெயருள்ள ஒரு நகரம் நேபாள் நாட்டிலும் அடுத்த கரையில் உள்ளது இரண்டு நகரங்களையும் நட்பு பாலம் இனைக்கின்றது. நமக்கு வேண்டிய பொருட்களை நாம் கடைசியாக இங்கு தான் வாங்க வேண்டும். எங்கள் குழுவினரும் விட்டுப் போன பொருட்களை இங்கு வாங்கினோம். இந்த இடம் வரையில் STD போன் பேச முடியும் இதற்கு மேல் போனால் செயற்கை கோள் தொலைபேசி மட்டும் நாம் தங்கும் இடங்களில் உள்ளன. இங்கிருந்து 25 கிலோ எடை சாமான்களுக்கு அமுல் படுத்தப்பட்டது எனவே எங்கள் பொருட்கள் எல்லாம் எடை போடப்பட்டன. நாங்கள் வேண்டாத பொருட்களை இங்கேயே வைத்து விட்டு சென்றோம்.







இங்கு தான் நமக்கு குதிரை மற்றும் போர்ட்டர் வேண்டுமென்றால் நாம் அவர்களை இங்குதான் அமர்த்திக் கொள்ள வேண்டும். போர்ட்டருக்கு மேலே செல்வதற்கு ரூ2165ம், இறங்குவதற்கு ரூ1950ம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குதிரைக்கு மேலே செல்வதற்கு ரூ2600ம், இறங்குவதற்கு ரூ 2275ம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.





வழியில் நிலச்சரிவுகள்









அடியேன் முதலில் படித்திருந்தேன் நாம் யாத்திரை செய்யும் போது தேவைப்படுகின்றதோ அல்லவோ போர்ட்டர் அமர்த்திக் கொண்டால் ஒருவருக்கு வேலை கொடுத்தது மாதிரியும் இருக்கும் அதே சமயம் நமக்கும் அவர்கள் உதவியாக ஊன்று கோலாக இருப்பார்கள் எனவே நான் ஒரு போர்ட்டரும் ஒரு குதிரையும் வாடகைக்கு அமர்த்திக் கொண்டேன். என்னுடைய குதிரைக்காரர் பெயர் ருகம் ராம் அவரது குதிரையின் பெயர் டம்ரூ. டம்ரூ என்ற ஹிந்தி மொழி சொல், தமிழில் உடுக்கையாகும். ஆம் எம்பெருமானின் வலக்கரத்தில் ஆக்கல் தொழிலுக்கு அடையாளமாக விளங்கும் உடுக்கை என்பதே அக்குதிரையின் பெயர். என்னுடைய போர்ட்டரின் பெயர் தேவேந்தர் சிங், 18 வயதான இளைஞர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தார், நாம் ஒவ்வொரு முகாமிலிருந்தும் கிளம்புவதற்கு முன்பே நம்முடைய பொருட்களை கட்டி எடுத்துச் சென்று கோவேறு கழுதைகளில் வைப்பார், நமக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தார், அடியேனுடைய தண்ர் பாட்டில், உணவுப் பொருட்கள் முதலியவை அடங்கிய பையை அவர்தான் சுமந்து வந்தார். இறக்கங்களில் இறங்கும் போது நமது கையைப் பிடித்து பாதுகாப்பாக இறங்கவும் உதவிகள் செய்தார். நாம் முகாம் அடைவதற்கு முன்பே அங்கு அடைந்து நமது பொருட்களை நமக்கு திருப்பி வந்து சேர்ப்பார். இவ்வாறு எல்லா வகைகளிலும் உதவியாக இருந்தார் அவர். மொத்தத்தில் போர்ட்டர் அமர்த்திக் கொண்டால் பல வகைகளில் நன்மைதான்.




பின் மூன்று மணியளவில் மாங்டி வழியாக காலாவிற்காக புறப்பட்டோம். காளி நதியை ஒட்டியே எங்கள் பயணம் நடைபெற்றது. வழியிலே எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள். அடுத்த கரையில் நேபாள நாடு இக்கரையில் நாம் பயணம் செய்கின்றோம். இரு பக்க மலைச்சரிவுகளின் நடுவிலே ஆழத்தில் காளி நதி. நல்ல மழை பொழிந்து பாதையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது பாதையின் ஒரு பக்கம் அதல பாதளம் அதில் மழைபெய்ததால் பொங்கும் நுரையுடன் சிவப்பாக தண்ணீர் படு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது மழையும் வெகு வேகமாக பெய்து கொண்டிருந்தது வெகு திறமையாக பேருந்தை ஓட்டிச்சென்றார் ஓட்டுனர். எங்கள் பேருந்துகளை சில நீர் வீழ்ச்சிகள் திருமுழுக்காட்டின. வழியில் கயிற்றின் உதவியால் ஆற்றைக்கடந்து நேபாள மக்கள் இந்தியா வந்து திரும்பி செல்வதைக் கண்ணுற்றோம். காளி நதியில் அமைந்துள்ள நீர் மின் நிலையத்தையும் கண்டோம். தவாகாட்(914 மீட்டர்) என்ற ஊரைக் கடந்து மாலை 5 மணியளவில் கெஸ்கூ(Gesku) என்ற கிராமத்தை தண்டியதும் ஒரு பெரிய நிலச்சரிவு, எல்லை பாதை அமைப்பு ( Border Roads Organisation) ன் பொறியியல் பிரிவான GREF ( General Reserve Engineering Force) ஐ சேர்ந்த ஜவான்கள் இரண்டு Bulldozer உதவியுடன் பாதையை சரி செய்து எங்களை எப்படியும் அனுப்ப அரும்பாடு பட்டனர், அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் மேன் மேலும் மண் சரிந்து கொண்டிருந்தது. இறைவன் சித்தமும் வேறு விதமாக இருந்தது, எங்களை சோதிக்கவே எம்பெருமான் இப்பரிட்சையை வைத்தான் என்று நினைக்கின்றேன், ஏனென்றால் யாத்திரையின் முன் பகுதியில் எங்கள் குழுவினருக்கு பல சோதனைகள் ஏற்பட்டன. ஆனால் எங்கு மற்றவர்களுக்கு கஷ்டமான இடமோ அங்கு எங்களுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. மாலை 7 மணி வரை கடுமையாக GREFயினர் போராடியும் பாதையை சரி செய்ய முடியவில்லை. மேலும் பங்லா என்ற இடத்திலும் நிலச்சரிவு என்ற செய்தியும் கிடைத்தது. இரவாகி விட்டதால் மாவட்ட ஆட்சியாளருடன் கலந்து கொண்டு எங்கள் L.O அவர்கள் கெஸ்கூ (Gesku) கிராமத்திலேயே இரவு தங்கிக் கொள்வோம் காலையில் சூரியன் உதயமானவுடன் பாதை சரியானதும் செல்லலாம் என்று முடிவெடுத்தார். கெஸ்கூவில் GREFக்கு சொந்தமான ஒரு மண்டபம் இருந்தது யாத்திரிகள் முப்பது பேரும் அதில் சென்று தங்கினோம். அன்றுதான் KMVNன் உண்மையான சேவையின் முக்கியத்தை நாங்கள் உணர்ந்தோம். கிராமத்தில் சென்று அங்கிருந்த மக்களிடம் நாங்கள் படுப்பதற்கும், போர்த்திக் கொள்வதற்கும் வேண்டிய ஜமுக்காளம், கம்பளிகள் முதலியவற்றை அரை மணி நேரத்தில் பெற்றுக் கொண்டுவந்து சேர்த்தனர். அங்கேயே இரவு உணவுக்கும் அருமையான ஏற்பாடு செய்தனர். இரவு முழுவதும் அந்த நீலகண்டனை பிரார்த்தனை செய்து கொண்டு கோளறு பதிகம் பாடி கழித்தோம். எங்கள் குழுவினரின் ஒற்றுமையும் இதானால் அதிகமானது. அரசும் எவ்வாறு யாத்திரிகளின் நலனை மாவட்ட ஆட்சியாளர் மூலம் கவனித்து கொள்கிறது என்பதையும் உணர்ந்தோம். மாவட்ட கலக்டரே wireless ல் வந்து பேசினார். காலை 4 மணி வரை மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மூன்றாவது நாளை நீர்விழ்ச்சி, மற்றும் நிலச்சரிவுகளின் நாள் என்று அழைக்கலாம்.

2 comments:

வடுவூர் குமார் said...

வாவ்!
அருமையான விவரனை.

S.Muruganandam said...

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய