Friday, August 15, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -14
ஒம் நமசிவாய


2005ம் வருடம் இன்றைய தினம் அதாவது ஆகஸ்டு 15 அன்று மாப்பெருங்கருணையன், மாதொரு பாகனை, த்ரிசிக்க அவரால் அழைக்கப்பெற்ற 40 நபர்கள் டெல்லியில் கூடினோம் ஆகவே இந்த 2008 ஆண்டில் அவர் கொடுத்த அற்புத தரிசனத்தைக் அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவரது கருணையே.


7ம் நாள் கூஞ்சியிலிருந்து காலாபானி வரை (9 கி.மீ நடைப்பயணம்)
அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்

நெடிய விசும்பொடு கண்ணே போற்றிநீள அகல முடையாய் போற்றி


அடியும் முடியும் இகலி போற்றி


அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி


கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி


கோயிலாய் என்சிந்தை கொண்டாய் போற்றி


கடிய உருவமொடு மின்னே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (10)காலாபானிக்கு கூஞ்சியிலிருந்து யாத்திரை ஆரம்பம்

மூன்று நாள் நடைப்பயணம் பின்பு ஒரு நாள் ஓய்வுக்குப்பின் மன்னு மகேந்திர மாமலை நாதரைக் காண செல்லும் யாத்திரையின் ஏழாம் நாள் அதிகாலை 5 மணிக்கே உற்சாகத்துடன் கிளம்பினோம், எப்போதும் சரியான நேரத்திற்கு வந்து விடுகின்ற குதிரைக்காரர் அன்று வரவில்லை, எனவே பாதி தூரம் நடந்தே மலை ஏற நேரிட்டது. விசாரித்ததில் இரவில் மேய விட்டிருந்த குதிரை எங்கோ ஓடி விட்டது எனவே குதிரைக்காரர் குதிரையை தேடிக்கொண்டு சென்றிருக்கிறார் என்று மற்றவர்கள் கூறினார்கள். தெய்வ சித்ததினால் அன்று வேறு ஒரு குதிரை கிடைத்தது பாதி தூரம் அக்குதிரையில் பயணம் செய்தேன். குதிரைக்காரர்கள் வாடகையை அவர்களுக்குள் சரி செய்து கொண்டனர். செல்லும் வழியில் ஆதி சேஷன் மற்றும் நாகினி சிகரங்களை கண்டு களித்தோம்.


வியாசர் குகை சிறு புள்ளியாய் தெரிகின்றது

எதிர்ப்பகுதியில் போஸ்ட் கார்ட் போல பனி மூடிய சிகரங்களில் கீழே பைன் மரங்கள் அடர்த்தியாக இருந்தன். வழியெங்கும் பைன் மரங்கள், மற்றும் wood rose எனப்படும் புதர்கள் கரும் பச்சை றப்புதரில் சிவப்பு நிறப்பழங்கள்(இலந்தைப்பழம் போல் உள்ளன) நிறைய 'சி' விட்டமின் உள்ள பழம் என்றனர், இங்குள்ள மக்கள் இப்பழங்களை உண்கின்றனர். கூடவே முன்னும் பின்னும் ITBPயினர் பாதுகாப்புக்காக நம்முடன் வருகின்றனர்.ஒற்றையடிப்பாதைதான் சில இடங்களில் காளி நதி இங்கு பாதை மட்டத்திலேயே ஓடுகின்றது உயரம் அதிகமானதால் அப்படிப்பட்ட ஓரிடத்தில் காளி நதியில் குளித்து சிறிது நேரம் இளைப்பாறினோம் இங்கு காளி நதி வெகு சாந்தமாக ஓடுகின்றது. காலாப்பானியை நெருங்கும் போது உயரத்திலே வியாசர் தவம் செய்த குகை கண்ணில் படுகின்றது. ITBP யினர் இந்த குகைக்குள் சென்று வந்திருக்கின்றனர். 14 அடி நீளமுள்ள குகை உள்ளே கமண்டலம், மற்றும் சாம்பல் முதலியவற்றை கண்டதாக கூறினார்கள். இங்கும் காளிநதியின் மேல் உள்ள பாலத்தை கடந்து காலாபானிக்குள் நுழைந்தோம், சிவன் கோவில், காளி கோவில், மற்றும், காளி குளம் நம்மை வரவேற்கின்றது.
உயரம் அதிகமாக அதிகமாக நாம் நடைப்பயணம் செய்யும் தூரம் குறைகின்றதை கவனித்தீர்களா? ஏனென்றால் ஆக்ஸிஜன் குறைவு மேலும் நாம் அதிகமாக சக்தியை செலவிட வேண்டியுள்ளது உயர் மட்டங்களில் என்பதால்.

காளி நதியில் குளியல்


காலாபானி(3370 மீ) என்னும் இந்த இடமே தாருசூலாவிலிருந்து நாம் தொடர்ந்து வந்த காளி நதியின் உற்பத்தி ஸ்தானமாக கருதப்படுகின்றது. லிபு கணவாயிலிருந்தே ஒரு கால்வாய் உருவாகி வழியில் அங்கங்கே பல்வேறு ஆறுகள் கொண்டு வந்து சேர்க்கும் நீரைக்கொண்டு வருகின்றது. காலாப்பனியிலுள்ள சிவ குளத்திலிருந்து உருவாகும் ஆறும் இத்துடன் கலந்து காளி நதியாக கீழே பாய்கின்றது. குளக்கரையில் சிவபெருமானுக்கும், காளி தேவிக்கும், அனுமனுக்கும் கோவில்கள் உள்ளன. திரு. ஜோஷி அவர்கள் இந்த கோவிலுக்காகவே விளக்குக்கான எண்னையை தானே சுமந்து வந்தார். பனிக்காலங்களில் கீழிருந்து பொருட்கள் கொண்டு வருவது சிரமம் என்பதை உணர்ந்திருந்த அவர் இவ்வாறு செய்தார், ஏற்கனவே ஒரு தடவை அவர் கைலாய யாத்திரை செய்தவர் என்பதால் அவருக்கு இந்த உண்மை தெரிந்திருந்தது.

காளி குளம் மற்றும் காளி சிவ திருகோவில்கள்
நதியிலிருந்து கோவில் வரைக்கும் மற்றும் காளி குளத்தை சுற்றியும் மணிகள் நிறைய தொங்குகின்றன, அவற்றை ஒலித்துக்கொண்டே அந்த காளிக்கும், சிவனுக்கும் நன்றி கூறிக்கொண்டே முகாமை அடைந்தோம். அங்கு பின் emmigrationஐ முடித்தோம், பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்வதற்கான முத்திரை இடப்பட்டது. இங்கிருந்தும் ஆதி சேஷன் மலை நன்றாகத் தெரிகின்றது. இங்கு லிபு கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய நீர்மின் நிலையம் அமைத்துள்ளனர். அருகில் ஒரு சுடு தண்ணிர் ஊற்று உள்ளது, ஆனால் நாங்கள் யாரும் அங்கு குளிக்கச் செல்ல முடியவில்லை. சிவன் கோவிலும் காளி கோவிலும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன, அய்யனுக்கு வலப்புறம் அம்மனின் சந்தி, கல்யாண கோலத்தில் கோவில்கள் அமைந்துள்ளன. ஏதிரே விலாசமான காளி குளம். அனுமன் சந்தியின் கீழே சிறிய சிவக்குளம் இதிலிருந்து தான் நீர் பின் காளி குளத்திற்கு பாய்கின்றது. காளி குளத்தின் நடுவிலே சிறு மேடையில் சிவலிங்கம் மற்றும் திரி சூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.


காளி குளக்கரையில் உள்ள அனுமன் ஆலயம்.


இவ்வாலயத்தின் அடியில் உள்ள சிவ குளத்தில் இருந்து தான்காளி நதி உற்பத்தியாகின்றது.
காலாபானி காளி தாயின் அருட்காட்சி


இரவு காளி கோவிலில் அருமையான பஜனை நடைபெற்றது, அடியேன் திருநாவுக்கரசு சுவாமிகளின் போற்றித் திருத்தாண்டகம் பாராயணம் செய்தேன் இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் கயிலை மலையானே போற்றி போற்றி என்று முடிகின்றது, திருவையாற்றிலே கையிலைக் காட்சியை கண்டபின் அப்பர் பெருமான் பாடிய பதிகம் இது. உயர் மட்டத்தில் பாராயணம் செய்யும் போது கீழே பாராயணம் செய்யும் வேகத்தில் பாராயணம் செய்ய முடியவில்லை, மருத்துவ பரிசோதனையின் உண்மையான அர்த்தத்தை அப்போது உணர்ந்தோம். இன்றைய தினத்திற்குப்பின் தினமும் ஒரு தடவையாவது போற்றித் திருத்தாண்டகம் பாராயணம் செய்யும் வாய்ப்பை அளித்தார் அந்த மாதொரு பாகர்.

இந்த ஏழாம் நாள் காளி கோவில் மற்றும் பனி மூடிய சிகரங்கள், பைன் மரங்கள் மற்றும் wood rose பழங்களின் நாள்.

4 comments:

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி.

Kailashi said...

நன்றி வடுவூர் குமார் அவர்களே. யாத்திரை முடியும் வரை வந்து தரிசியுங்கள்.

rangameena said...

ஆஹா! இதோ நானும் கூட வந்து கொண்டிருக்கிறேன்!

Kailashi said...

வாருங்கள் அரங்கமீனா அவர்களே.

இனி மேல் தான் சீனாவிற்குள் நுழையப்போகிறோம் ஐயனை தரிசிக்க தாங்களும் கூட வந்து தரிசனம் பெறுங்கள்.