Friday, October 10, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -18


கைலாய கிரி வலம் முதல் நாள்
12ம் நாள் டார்ச்சென்னிலிருந்து டேராபுக் வரை கிரி வலம் 20 கி.மீ

திருக்கயிலாய ரூபத்தில் மேகக்கூட்டம்


எத்தனை கோடி ஜன்ம புண்ணியம் மற்றும் எத்தனை தலைமுறை முன்னோர்களின் புண்ணியத்தின் காரணமாக அந்த கருணாமூர்த்தியின் எல்லையறற கருணையினாலும் அவரது இல்லம் வரை வந்தும் கூட அவரது முழு தரிசனம் கிடைக்காமல் அல்லாடி நின்றதை இது வரை படித்தீர்கள் இனி அந்த ஆலமுண்ட நீலகண்டர், அன்னை மலைமகள் பார்வதி, கணேசர், நந்தியெம்பெருமான் ஆகியோர்களின் அற்புத தரிசனம் எப்படி எங்கள் குழுவினருக்கு கிட்டியது என்பதை காண வாருங்கள் அன்பர்களே.ஐயனின் தெற்குமுக (அகோர முக) தரிசனம்

திருக்கயிலாய் கிரி வலத்தின் முதல் நாள் நான்கு முக தரிசனமும் கிட்டுகின்றது இப்பதிவில் முதல் முகமாம் தெற்கு முக தரிசனம் காண்போமா அன்பர்களே.


கிரி வலத்தின் முதல் நாள், யாத்திரையின் 12ம் நாள் நாள் வெகு சீக்கிரம் என்னை அந்த இறைவன் எழுப்பி விட்டார், உடனே வெளியே வந்து எம்பெருமானை நோக்கினேன், ஆஹா அற்புதமான காட்சி, இறைவன் என்னை இன்றைய தினம் ஏமாற்றவில்லை அருமையான நிர்மால்ய தரிசனம். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் என்று ஆனந்த கூத்தாடினேன்.அகோரேப்யோத கோரேப்யோ கோரகோர தரேப்ய:
ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்யஎன்னும் தக்ஷ’ண வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் முதலில் துதி செய்தேன்.பின் எல்லாரையும் எழுப்பி தரிசனம் செய்ய கூறினேன். முதல் நாள் சோதனைக்குப் பிறகு எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்தோமோ அந்த லட்சியம் நிறைவேறியது அந்த கருணைக்கடல் ஏமாற்றவில்லை எங்களுடைய திட சங்கல்பத்தையே பரிசோதனை செய்துள்ளான் என்பது புரிந்தது. அதற்கு பிறகு கிரி வலத்தின் போது ஒரு தடவை கூட மேகங்கள் கண்ணில் படவில்லை அந்த கயிலை நாதனின் கருணையினால்.

இந்த தெற்கு முகத்தைப்பற்றிய சிறு குறிப்பு


நமக்கு முதலில் தரிசனம் தரும் முகம் அகோர முகம் . புராணங்களின் படி இம்முகம் தொங்கிய தாடி உடையதாய் வெளிப்பட்ட பற்களுடையதாகி, கண்டோர்க்கு அச்சமாய் கரிய நிறமாகி வயதான முகம் போல் வலத்தோளில் தெற்கு நோக்கி இருக்கும் முகம்.
பஞ்ச பூதங்களில் இம்முகம் அக்னியை குறிக்கின்றது.


ஐந்தொழிலிலே அழித்தல் தொழிலை (சம்ஹார காரண முகம்) குறிக்கின்றது.ஐந்தெழுத்தில் 'சி'.


ஐயன் அகோர ருத்ர ரூபம்.

அம்மை இச்சா சக்தி.இம்முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி விடும் நீலக்கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம்.


ஜடா முடியும் திரி நேத்ரங்களும் உள்ள முகம்.


அகோர முகம் மனக்குழப்பங்கள் உடனடியாக தீரும், எல்லா விதமான நோய்கள் போக்கும். அறிவுத்திறனும் ஞாபகத்திறமையும் அதிகரிக்கும்.இந்தியாவை நோக்கி உள்ள முகம் இதுதான். நமக்கு முதலில் தரிசனம் தரும் முகம். தேவ லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கங்கை இறங்கிய ஜடா முடியும் திரி நேத்ரங்களும் உள்ள முகம். மேலும் இம்முகத்தில் அடாத செயல் செய்த இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பையும் காணலாம்.
இந்த அகோர முகத்தையே நாம் அதிக நாட்கள் தரிசனம் செய்கிறோம் ராக்ஷஸ்தாலிலிருந்தும், டார்ச்சென் முகாமிலிருந்தும், முதல் நாள் கிரி வலத்தின் போதும் பின் மூன்றாம் நாள் கிரிவலத்தின் போதும், டார்ச்சென் முகாமிலிருந்தும், மானசரோவர் கிளம்புகின்ற போதும் மானசரோவர் கிரி வலத்தின் போது இம்முகமே நமக்கு தரிசனம் கிடைக்கின்றது.

தெற்கு நோக்கி இருப்பதால் இம்முகம் தக்ஷிணா மூர்த்தி ரூபம், உண்மையிலேயே தாமரை மலரில் ஒரு தவ யோகி அமர்ந்திருப்பதைப் போல இம்முகம் அமைந்திருக்கின்றது. இம்முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி விடும் நீலக்கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம். அதன் அழகைக் காணுங்களேன்.

அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கதிபதியாய், அம்மை சிவகாம சுந்தரி நேசனாய், பொன்னம்பலத்தாடும் ஆனந்த நடராஜராய் எம்பெருமான் எழுந்தருளி இருப்பதும் தெற்கு நோக்கித்தான். டார்ச்செனிலிருந்து முழு முகமும் தெரிவதில்லை, அட்சய வடம் என்னும் பாதுகாப்பு மலை மறைக்கின்றது. கிழக்கு முகத்தின் ஒரு பகுதியும் டார்ச்சென்னிலிருந்து தரிசனம் செய்ய முடியும்.டார்ச்சன்னிலிருந்து கிடைக்கும் திருக்கயிலாய த்ரிசனம்


பின் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, குளித்து, சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது சூரியன் தனது சொர்ணமயமான கதிர்களால் தழுவம் அழகையும், முதலில் வெள்ளை பின் சொர்ணம் பின் வெள்ளை என்று கைலாயத்தின் கிழக்கு முகத்தில் கழும் வர்ண ஜாலத்தையும் கண்டு மகிழ்ந்தோம்.காலைச்சூரிய ஒளியில் ஒளிரும் கிழக்கு முகம்"நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த நின்றாய்" எந்த சிவ புராண பதத்திற்கு விளக்கம் இங்கே கிடைத்தது.


சொர்ணமயமாக ஜொலித்த இறைவனை


நமோ ஹிரண்ய பாஹவே ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய ஹிரண்ய பதயே அம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோ நம:

என்னும் நமஸ்கார மந்திரத்தால் துதித்து பின் பேருந்து மூலம் யம துவாரத்திற்கு (வாயில்) புறப்பட்டோம். வழியில் நந்தா தேவி மலை சிகரங்களை கண்ணுற்றோம். பின் யம பயம் போக்கும் யம துவாரத்தின் உள்ளே நுழைந்து வெளியே வந்து எம்பெருமானை தரிசித்து கீழே விழுந்து வணங்கினோம். அடியேன் கொண்டு சென்றிருந்த வில்வ தளங்களால் வில்வ அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தேன்.


மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை


மணியினை பணிவார் வினை கெடுக்கும்


வேதனை வேத வேள்வியர் வணங்கும்


விமலனை அடியேற்கு எளி வந்த


தூதனை தன்னை தோழமை அருளித்


தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்


திருக்கயிலை நாதனின்


இணையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினோம்.


யம துவாரத்தில் நுழைபவர்களுக்கு அகால மரணம் கிடையாது என்பது ஐதீகம். புத்தர் கோவில்களில் உள்ள சிறு விகாரம் போல உள்ளது யம துவாரம். இங்கிருந்து நமக்கு தெற்கு முகத்தின் முழு தரிசனமும் கிடைக்கின்றது.

யம பயம் போக்கும் யமத்துவாரம்

(பின்புறம் தெற்கு முக முழு தரிசனம் காணலாம்)
இங்கிருந்து கணேசரையும் நந்தியையும் தரிசனம் செய்யலாம். ஐயனுக்கு வலப்புறத்திலேயே சிறிய மலை வடிவில் அம்மையப்பரை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற,

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன்என்றபடி தன்னை வழிபடும் அடியவர்களின் துன்பம் தீர்க்க அம்மையப்பர் தோற்றுவித்த கணேசர் தரிசனம் தருகின்றார். சொணமயமான ஊஞ்சலில் கமனீயமாய் அமர்ந்திருக்கும் பால் வெண்றந்த பவள நிற எம்பெருமானையும், பச்சை நிற அம்பாளையும் எப்போதும் தமது மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டு இருப்பவர் நந்தியெம்பெருமான். அவரையும் இம்முகத்திற்கு எதிரே மலை ரூபமாக தரிசனம் செய்கின்றோம். அசுர பலம் கொண்ட இராவணன் கயிறு கட்டி கைலாய மலையை இழுத்த வடு இந்த முகத்தில் நமக்கு காணக்கிடைக்கின்றது.
எம்பெருமானின் ஆனந்த தரிசனத்தை கண்ட பிறகு, கீழே திபெத்தியர்களின் கொடிகள் கட்டப்பட்டிருப்பதையும் கண்டோம். திபெத்தியர்களின் பிரார்த்தனை கொடிகள் இவை. மேலும் திபெத்தியர்களின் பலி பீடம் உள்ளது தங்களது உயிலில் தங்கள் உடலின் ஏதோ ஒரு பகுதியை தங்கள் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர், எனவே அவர்கள் இறந்த பிறகு அவர்களின் அந்த உடல் பகுதி வெட்டி எடுக்கப்பட்டு அட்சய வட மலையில் எறியப்படுகின்றது.

பாலை ஆடுவார் பன்மறை ஓதுவார்
சேலை ஆடிய கண் உமை பங்கனார்
வேலையார் விடமுண்ட வெண்காடற்கு
மாலையாவது மாண்டவர் அங்கமே


என்ற திருநாவுக்கரசர் பதிகம் தான் நினைவுக்கு வந்தது, பிரளய காலத்தில் இந்திரன், பிரம்மன், விஷ்ணு முதலியோர்களும் இறக்க, அவர்களது எலும்புக்கூடுகளை கங்காள மூர்த்தியாக அணியும் எம்பெருமானை, கொடிய ஆலகால விடத்தை உண்டும் எப்போதும் முடிவு இல்லாத சித்சபேசனை, குஞ்சித பாதனை மனதார வணங்கினோம். அண்டர் நாயகனி அற்புத தரிசன்ம் கண்டு ஆணந்தம் உற்றோம் அந்த தெய்வீக உணர்வை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை.

சீன அரசு கைலாய கிரி வலப்பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை வழியெங்கும் மிருக எலும்புகள் கிடைக்கின்றன. எம்பெருமான் மயான வாசன் அல்லவா, சீன அரசும் அவ்வாறே இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றதோ என்னவோ. வருடத்தில் ஒன்பது மாதங்களுக்கு மேல் பனியால் மூடி கிடப்பதாலும் இருக்கலாம்.கயிலை நாதன் எதிரே காளை நாதன்


வலப்புரம் கணநாதன்இந்த ஐயனின் காலடியில் யம துவாரத்திற்க்கு அருகில் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்ப மேளா போல ஒரு மேளா நடைபெறுகின்றது. அந்த வருடம் கைலாய யாத்திரை செய்பவர்களும், சீன வருடத்தின் குதிரை ஆண்டில் யாத்திரை செய்தவர்களும் உள் பரிகிரமா செய்ய முடியும் அதாவது நந்தி தேவரை வலம் வர முடியும். இதற்கு முன் 2002ல் கும்பமேளா நடைபெற்றது, எங்கள் குழுவிலிருந்த திரு இந்திரேஷ் புரோஹித் அவர்கள் அந்த வருடம் யாத்திரை செய்திருந்தார். ஆனால் உள் கிரிவலத்திற்காக சீன அதிகரிகளிடம் தனி அனுமதி பெற வேண்டும். யமதுவாரத்திலிருந்து மேலும் இரண்டு கி .மீ தூரம் வரை பேருந்து செல்கின்றது. அங்கிருந்து சிந்து நதி (லா சூ) தீரத்திலிருந்து நடைப்பயண கைலாய கிரிவலம் துவங்குகின்றது.டார்ச்சென் 4600 மீ உயரத்தில் அமைந்துள்ளது , கிரி வலத்தின் முதல் நாள் தங்கும் டேராபுக் 4800 மீ உயரத்தில் அமைந்துள்ளது, இரண்டாம் நாள் நாம் கடக்கும் டோல்மா கணவாய் 5800 மீ உயரம், யாத்திரையின் உயரமான இடம் இதுதான், அன்றே பின் இறங்கி 4600 மீ உயரத்தில் உள்ள ஜாங்ஜெர்பூவை அடைகின்றோம். பின் மூன்றாம் நாள் கிரி வலம் முடித்து டார்ச்சனை திரும்ப அடைகின்றோம். எனவே மூன்று நாட்களாக பரிக்கிரமாவை செய்வதால் உடம்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் அங்கே தங்கியிருப்பதால் திபெத்தியர்கள் ஒரே நாளில் பரிக்கிரமாவை முடிக்கின்றனர்.எங்கள் குழுவினரில் குதிரை வேண்டியவர்கள் அனைவருக்கும் குதிரைகள் கிடைத்தன, யாக்கில் ( YAK-இமய மலையின் குளிர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு வகை காட்டெருமை)
பயணம் செய்வதால் செலவு சிறிது குறைவாக ஆகும் ஆனால் அவற்றை கட்டுப்படுத்துவது சிறிது கடினம். மேலும் žனப்பகுதியில் பல யாக்கிற்கு ஒரே ஓட்டி இருப்பார் என்பதாலும் குதிரையில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று ITBP யினர் கூறி இருந்தனர் எனவே நாங்கள் குதிரையை தேர்வு செய்தோம். குதிரைகள் குலுக்கல் மூலம் அனைவருக்கும் ஓதுக்கப்பட்டது புதுமையாக இருந்தது.

எங்களுடைய சமையற்காரர்களே போர்ட்டர்களாகவும் பணியாற்றினர். திருக்கயிலாயத்தை சுற்றி நான்கு பக்கமும் மலைகளே அரணாக உள்ளன இவை இரண்டுக்கும் நடுவே பாதாளம் அதில் உற்பத்தியாகின்ற பனி ஆறுகளே ஆசியாவின் நான்கு திசையிலும் பாய்ந்து ஆசியாவை செழிப்பாக்குகின்றது. நாம் கிரி வலம் செய்கின்ற பாதை இந்த மலைகளைத் தாண்டித்தான் எனவே தான் கிரிவல து‘ரம் 52 கி,மீ. மேலும் கையிலாயம் புனிதமான மலை என்பதால் அதன் மேல் நாம் கால் பதிக்கமுடியாது என்பதாலும் இந்த மலைகளை சுற்றியே நாம் கிரி வலம் செய்கின்றோம்.


அதானலேயே எப்போதும் நமக்கு கயிலாயத்தின் முழுப்பகுதியும் தெரிவதில்லை. இந்த மலைகள் மறைத்து விடுகின்றன. கைலாய மலையை சுற்றியுள்ள காப்பு மலைகள் : இராவண பர்வதம், ஹனுமான் பர்வதம், பத்ம சம்பவர் பர்வதம், மஞ்சுஸ்ரீ பர்வதம். வஜ்ரதாரா பர்வதம், அவலோகேஸ்வரர் பர்வதம். ஜம்பேயாங் பர்வதம், ஷவாரி பர்வதம் ஆகியன. மேலும் கைலாயத்தின் உட்பகுதியில் பல்வேறு ரிஷ’களும், முனிகளும் தவம் செய்வதாலும், கந்தவர்கள், யக்ஷர்கள் வாசம் செய்வதாலும் நாம் அங்கு கால் பதிக்கக்கூடாது என்பதால் இந்த žரிய சிம்மானத்தில் அமர்ந்து இந்த சகல லோகத்தையும் படைத்து காத்து பரிபாலிக்கும் சர்வேஸ்வரன் - சர்வேஸ்வரியின் அரண்மனையின் காவல் அரணாக கோட்டைச்சுவராக விளங்கும் மலைகளைத் தாண்டியே நாம் கிரி வலம் செய்கிறோம்.

கைலாய கிரி வலத்தின் முதல் நாள் நான்கு முக தரிசனமும் கிடைக்கின்றது காலையில் டார்ச்செனிலிருந்து கிழக்கு முக தரிசனம் மற்றும் தெற்கு முகத்தின் மேற்பகுதி தரிசனம் கிடைக்கின்றது, பின் யம துவாரத்திலிருந்து தெற்கு முகத்தின் முழு தரிசனம் மற்றும் கணேசர் மற்றும் நந்தியின் தரிசனமும் கிடைக்கின்றது, பின் மதியம் மேற்கு முகத்தின் தரிசனம் கிடைக்கின்றது, மாலையில் வடக்கு முக தரிசனம் கிடைக்கின்றது. மொத்தம் 20 கி. மீ இன்று நடக்கிறோம். பராக்கா சமவெளி என்று அறியப்படும் இடத்திலிருந்து நாம் கிரிவலத்தை தொடங்குகின்றோம். ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கிரி வலம் செய்யும் போது மிகவும் பெருமிதமாக உள்ளது. ஞானப்பழம் பெற வினாயகர் அம்மையப்பரை வலம் தானே வந்தார், இவ்வாறு நாம் அம்மையப்பரை வலம் வர அழைத்த அந்த மாவகிடண்ண கண்ணி பங்கருக்கு ஆயிரம் கோடி நன்றி செலுத்தினோம். ஓற்றையடிப்பாதைதான், லா சூ சமவெளியில் நடந்த போது மதியம் மேற்கு முக தரிசனம் கிடைத்தது. இந்த கிரி வலத்தின் போது எனக்கு அப்பர் பெருமானின் அங்க மாலை பதிகம் தான் ஞாபகம் வந்தது,


தலையே நீ வணங்காய் , தலை மாலை தலைக்கந்து தலையாலே பலிதேருந் தேவனை தலையே நீ வணங்காய் என்று ஆரம்பித்து கண்காள் காண்மிண்களே கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை, செவிகாள் கேண்மின்களோ செம்பவள மேனி பிரான் திறமெப்போதும், வாயே வாழ்த்து கண்டாய் பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான் தன்னை,நெஞ்சே நீ னையாய் மஞ்சாடும் மங்கை மணாளனை , கைகாள் கூப்பித்தொழீர் பைவாய் பாம்பு ஆர்த்த பரமனை, என்று கூறி ஆக்கையால் என்ன பயன் அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டி போற்றி என்னாத ஆக்கையால் என்ன பயன், என்று வினவி, கால்களாற் என்ன பயன் கறைகண்டன்யுறை கோவில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா காலகளாற் என்னபயன் என்றவாறு, இந்த உடல் எடுத்த பயனை இன்று அடைந்தோம் என்ற ஆனந்தம் நெஞ்சில் நிறைந்தது.


இப்பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு புல்லும் புனிதமானது. அந்த எம்பெருமானது அருள் அலைகளை (vibrations) நாம் பெறுவது கண் கூடு. இவ்வளவு சிரமங்களுக்கு அப்புறமும் கிரி வலம் செய்யும் போது, எம்பெருமானை தரிசனம் செய்யும் போது ஒரு அலாதி ஆனந்தம் , நமது உடலும் மனதும் து‘ய்மை அடைந்து விட்ட ஒரு உணர்வு. அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அதை அனுபவித்தால் மட்டுமே உண்மையாக உணர முடியும். இனி அடுத்த பதிவில் மேற்கு முக மற்றும் வடக்குமுக தரிசனம் காண்போம் அன்பர்களே.

No comments: