Monday, October 13, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -19

கைலாய கிரி வலம் முதல் நாள்

12ம் நாள் டார்ச்சென்னிலிருந்து டேராபுக் வரை கிரி வலம் 20 கி.மீ

இரண்டாம் பாகம் - மேற்கு மற்றும் வடக்கு முக தரிசனம்




அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

மாலை எழுந்த மதியே போற்றி


மன்னிஎன் சிந்தை இருந்தாய் போற்றி


மேலை வினைக ளறுப்பாய் போற்றி


மேலோடு திங்கள் முடியாய் போற்றி


ஆலைக்கரும்பின் தெளிவே போற்றி


அடியார்கட் காரமுதமானாய் போற்றி


காலை முளைத்த கதிரே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (14)





யம துவாரத்திலிருந்து ஐயனின் தெற்கு முக தரிசனமும், கணேசருடைய தரிசனமும் , நந்தியெம்பெருமானுடைய அருமையான தரிசனமும் பெற்ற பின்( ஆம் மேகங்கள் மறைக்காத அற்புத தரிசனம் ) பெற்ற பின் ஃபராக்கா சமவெளி சென்று குதிரை வேண்டுபவர்கள் குதிரையை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செல்ல மற்றவர்கள் லா சூ எனப்படும் சிந்து நதிக்கரையோரம் அந்த தேவ பூமியில் பல்வேறு புண்ணிய புருஷர்கள் தங்கள் கால் பதித்து நடந்த வழியில் ஓம் நமசிவாய மந்திரம் ஜெபித்துக் கொண்டே நடைப்பயணத்தை தொடர்ந்தோம். வழியில் மாறி மாறி வரும் மலைக்காட்சிகளை கண்டு வணங்கினோம்.

டேராபுக் செல்லும் வழியில் மலைக்காட்சி




தெற்கு முகத்திலிருந்து செல்லும் போது நடுவில் பல விதமான பாறைகள் நிறைந்த மலைத்தொடர்களைக் காணலாம், அவை இப்பிரமாண்டத்தில் உள்ள பல் வேறு சிவாலயங்களாக காட்சி தந்தன. மதிய நேர சமயத்தில் மேற்கு முக தரிசனம் பெற்றோம். சமையல்காரர்களும் நம்முடனே பயணம் செல்வதால் மதிய உணவிற்கு நாம் கொண்டு சென்றிருந்த நொறுக்கு தீனிகள்தாம் உணவாக அமைந்தன அனைவரும் அவர் அவர் தின் பண்டங்களை பகிர்ந்து உண்டோம்.




சத்யோஜாத முகத்தின் பல காட்சிகள்

இனி இன்று இரண்டாவதாக தரிசனம் தரும் மேற்கு முகத்தைப்பற்றிய சிறு குறிப்பு.

சத்யோஜாதம் என்று அழைக்கப்படும் இம்முகம் புராணங்களின் படி அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம்.

பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது.

ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்).

ஐந்தெழுத்தில் 'ந'.

இம்முகம் செந்நிறம் கொண்ட மாணிக்கக் கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம்.

சத்யோஜாதமுகம் ஞானம் தரும் திருமுகம், கல்வியில் ஏற்படும் சகல தடையும் நீங்கும். அரசியல் ஜெயத்தையும், கலைத்துறையில் வெற்றியையும், திருமணத்தடைகளையும் நீக்குகின்றது.




கைலாயத்தில் மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. அனேகமாக பெரும்பாலான திருக்கோவில்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் போது கிழக்கு முக மண்டலமாகவோ அல்லது மேற்கு முக மண்டலமாகவோதான் பிரதிஷ்டை செய்வர். திருமயிலையிலே கபாலீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இம்முகத்தை

ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:
பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம :

என்னும் பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்தோம்.


எம் பெருமானின் இம்முகத்திற்க்கும் வில்வ அர்ச்ச்னை செய்தோம். எங்கள் குழுவினரில் சிலர் காப்பு மலை மேல் ஏறி உள் பிரகாரத்தை பார்த்து விட்டு வந்தனர்.

சிறிது நேரம் எம்பெருமானின் திருமுன்பு அமர்ந்து பஜனை செய்து விட்டு டேராபுக் முகாம் நோக்கி நடைப்பயணத்தை தொடர்ந்தோம், வழியில் மேற்கு முகமும் வடக்கு முகமும் இணைந்த அற்புத தரிசனம் பெற்றோம்.

மேற்கு முகமும் வடக்கு முகமும் இணைந்த அற்புத தரிசனம்

டேராபுக்கை நெருங்க நெருங்க காப்பு மலைகளின் நடுவே உதய சூரியன் அற்புதமாக விளங்கும் வாம தேவ முகத்தின் தரிசனம் கண்டு உடலும் உள்ளமும் சிலிர்த்தோம்.


பின் கிரி வலத்தை தொடர்ந்து டேராபுக்(4890 மீ) என்னும் இடத்தை அடைந்தோம். டேராபுக் என்பதற்கு பெண் யாக்கின் கொம்புகளின் குகை என்பது அர்த்தம். கிரி வலத்தின் முதல் நாள் இங்கு தான் தங்குகிறோம். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதாவ்ர்களும் கூட இந்த புண்ய பூமியில் நடக்கும் போது அந்த ஆபத் பாந்தவன், அனாத ரக்ஷகனின் பெருமையை உணர்வர் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.











டேராபுக் முகாம் வடக்கு முகத்திற்கு நேர் கீழே இருக்கின்றது. தெற்கு பக்கம் உள்ளது போல் இல்லாமல் இங்கு எம்பெருமானுடைய முழு முக தரிசனமும் நமக்கு கிடைக்கின்றது. மேலும் கைலாயத்தின் மிக அருகில் அமைந்துள்ள முகாமும் இதுதான். ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இரு பக்கமும் வஜ்ரபா, அவலோகேஸ்வரர் என்ற இரு மலைகளுக்கு நடுவே எழுகின்ற உதய சூரியன் போல் இம்முக தரிசனம் நமக்கு கிடைக்கின்றது. இங்கு முகாம் சென்று சேர்ந்த பின் காப்பு மலை மேல் ஏறிச் சென்று அடியேன் எடுத்து சென்றிருந்த வீட்டில் பூசிக்கும் வினாயகர் மற்றும் சிவலிங்க மூர்த்தங்களுக்கு வடக்கு பகுதியிலிருந்து பாய்ந்து வரும் ஆற்று நீரால் அபிஷேகம் செய்து, எம்பெருமானே நாம் செய்யும் இவ்வபிஷேகத்தை உனக்கு செய்யும் அபிஷேகமாகவே ஏற்றுக் கொள் என்று வேண்டி, எம்பெருமானுடைய 108 நாமங்களை கூறி அர்ச்சனை செய்து, ஆயிரம் புஷ்பங்களுக்கு சமமான வில்வ தளங்களால், வில்வாஷ்டகத்துடன் அர்ச்சனை செய்து, போற்றித்திருத்தாண்டகத்தால் போற்றி கூறி, சிவ புராணம் இசைத்து பின் தூபம் காட்டி,

கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சார சாரம் புஜகேந்த்ர ஹாரம்
சதா வசந்தம் ஹ்ருதயாரவிந்தம்

பவம் பவானி சஹிதம் நமாமி

என்று சிவ சக்தியை வந்தனை செய்து, கற்பூர தீபம் காட்டி, கைலாய தீர்த்தம் கேனில் நிரப்பிக் கொண்டு எம்பெருமானுடைய

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்ற
ஈசன் எந்தை இனையடி
யில் விழுந்து வணங்கிவிட்டு மிகுந்த மன மகிழ்ச்சியுடன் முகாம் திரும்பினோம். இந்த முகாமும், அடுத்த ஜாங்ஜெர்பூ முகாமும் தகர கூரை வேயப்பட்ட மண் சுவர்களால் ஆன அறைகளைக் கொண்டுள்ளது, ஒரே அறையில் ஐந்து பேர் தங்கினோம், நாம் நடப்பதற்கு மட்டுமே இடம் விடப்பட்டுள்ளது அறை முழுவதும் கட்டில்கள் தான். சென்ற வருடம் முகாமில் யாத்திரிகள் அனைவரும் கீழே வெறும் பலகையின் மேல் மெத்தை போடப்பட்டிருந்தது அதில் உறங்கினார்களாம், இந்த வருடம் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. மேலும் கைலாய மலையின் பக்கம் அறைகளின் கதவு இருந்ததாம், இந்த வருடம் அதை மாற்றி அந்தப் பக்கம் ஜன்னல் வைத்து விட்டனர். ஆகவே இரவு முழுவதும் எம்பெருமானுடைய தரிசனம் கிடைத்துக்கொண்டிருந்தது. எங்கள் தலைகளின் மேல் அந்த அம்மையப்பரின் பத்ம பாதங்கள் பட்டாதாகவே நாங்கள் உணர்ந்தோம்.

இனி இந்த வாம தேவ முகத்தைப்பற்றி ஒரு சிறு குறிப்பு.

வாம தேவ முகம்

மாதர் முகம் போல் ஆபரணமந்து வெட்சிபூ றமாய் இடத்தோளின் மீது வடக்கு நோக்கி இருக்கும் முகம்.

பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கின்றது.

ஐந்தொழிலில் காத்தல் தொழிலைக் ( விஷ்ணு ஸ்திதி காரண முகம்) குறிக்கின்றது.

ஐந்தெழுத்தில் 'ம'. அம்மை ஆதி சக்தி.

இம்முகம் பளபளக்கும் தங்கமாக பொன்னார் மேனியனாக திகழ்கின்றது என்பது ஐதீகம்.

கையிலங்கிரியிலே மிகவும் ஸ்பஷ்டமாய் தரிசனம் தரும் முகம் இம்முகம். மேலே நாகம் குடைப்பிடிக்க இடப்பக்கத்தில் அம்மையையும் அப்பரும் சிவ சக்தியாக தரிசனம் தரும் முகம் இதுதான்.

முக்கண் முதல்வரையும் மலையரசன் தன் பொற்பாவையையும் ஒரு சேர இம்முகத்திலே தரிசனம் செய்கின்றோம்.

கயிலாயம் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முகமும் இதுதான். இம்முகத்தை

வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ ருத்ராய நம:

காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ

பலப்ரமதாய நமஸ்-ஸர்வ-பூததமநாய நமோ மநோந் மநாய நம:

என்னும் உத்தர வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்தோம். வாம தேவ முகம் சகல செய்வினை தோஷத்தை போக்கியருளும் சர்வ சக்தி படைத்த முகம், பூத பிரேத பயங்களையும், அலுவலக பணியில் ஏற்படும் அச்சதையும் தீர்க்கும்.

அடுத்த நாள் மிகவும் கடினமான ஏற்றம் ,மற்றும் டோல்மா கணவாயை கடக்க வேண்டும் என்பதால் žக்கிரமே தூங்கச் சென்றோம்.

இந்த 12ம் நாள் நான்கு முக தரிசன நாள்.

அடியேனுடன் இரண்டாவது தடவையாக யாத்திரை செய்த டெல்லியைச் சார்ந்த திரு. முட்கல் அவர்கள் நான்காவது முறையாக 2007ம் ஆண்டும் சிவசக்தி அருளினால் யாத்திரை மேற்கொண்டார். அவர் கூறியபடி இப்போது யமதுவாரத்திலிருந்து டேராபுக் முகாம் வரையில் மோட்டார் சைக்கிள்கள் செல்ல துவங்கி விட்டதாம் நடக்க முடியாதவர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம். டோல்மா கணவாயை விடுத்து ஐயனின் அனைத்து முகங்களையும் இனி மேல் செல்லும் அன்பர்கள் காண முடியும். இதற்காக அந்த அம்மையப்பருக்கு நன்றிகள்.

No comments: