Tuesday, November 18, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -22

மானசரோவர் கிரிவலம் ஆரம்பம்

அஷ்டபத்திலிருந்து ஐயனின் தெற்குமற்றும் கிழக்கு முகங்கள் மற்றும் எதிரே நந்தி

அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்


ஆறேறு சென்னி முடியாய் போற்றி

அடியார்கட் காரமுதமாய் நின்றாய் போற்றி

நீறேறு மேனி யுடையாய் போற்றி

நீங்கதென் னுள்ளத் திருந்தாய் போற்றி

கூறேறு மங்கை மழுவா போற்றி

கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி

காறேறு கண்ட மிடற்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (17)


அநேகமாக பெரும்பாலான குழுவினர் அஷ்டபத் செல்வதை கிரிவலத்தின் மூன்றாம் நாளே முடித்து விடுவர், ஏனென்றால் ஒரு பகுதியினர் மானசரோவர் கிரிவலத்தை முடித்து விட்டு இவர்களுக்காக காத்திருப்பர் எனவே இவர்கள் சரியான சமயத்திற்கு சென்று சேர வேண்டும். என்பதால். நாங்கள் ஒரே குழுவாக கிரிவலம் செய்ததால் அந்த மாதிரி பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. மேலும் நாங்கள் முந்தைய நாள் மதியம் அலி ரோட் சென்று விட்டதால் அடுத்த நாள் அஷ்டபத் சென்றோம். இப்போது முன் போல மலை ஏறி செல்ல வேண்டியதில்லை. அஷ்டபத் வரையிலும் வாகனங்கள் செல்கின்றன, எனவே நாங்களும் அதிகாலையிலே எழுந்து ஜ"ப்பில அஷ்டபத் சென்றோம். அஷ்டபத்திற்கான து‘ரம் 5 கி.மீ, கடைசி ஒரு கிலோ மீட்டர் ஏற்றம் என்பதால் நாம் நடந்துதான் செல்ல வேண்டும். இந்த அஷ்டபத் மலையில்தான் ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் முக்தியடைந்தார். அவருடைய சமாதி உள்ளது. நேற்று நாங்கள் தூரமாக சென்று தெற்கு முகத்தை தரிசித்தோம், இன்று மிக அருகில் சென்று தரிசனம் செய்தோம். நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்து அறம் உரைத்த எம்பெருமானின் தாளடியில் நின்று அவரை தரிசனம் செய்தோம். ஐயனின் தெற்கு, கிழக்கு முகங்கள் மற்றும் நந்தியெம்பெருமானை மிக அருகில் அஷ்டபத்தில் இருந்து தரிசனம் செய்தோம். . இங்கு கைலாய கிரிவலத்தை முடித்ததற்கு நன்றி கூற ஒரு யாகமும் நடத்தினோம். பல் வேறு ஸ்லோகங்களால் இறைவனை துதித்தோம். அடியேனும், திரு தனுஷ்கோடியும் ஸ்ரீ ருத்ரம் மற்றும் போற்றித் திருத்தாண்டகம் பாராயணம் செய்தோம்.


ஐயனின் தெற்கு முகம் நந்தி மற்றும் மஹாவீரர் நினைவிடம்


நிதநபதயே நம: நிதநபதாந்திகாய நம:

ஊர்த்வாய நம: ஊர்த்வ லிங்காய நம:

ஹிரண்யாய நம: ஹிரண்ய லிங்காய நம:

ஸ”வர்ணாய நம: ஸ”வர்ண லிங்காய நம:

திவ்யாய நம: திவ்ய லிங்காய நம:

பவாய நம: பவாய லிங்காய நம:

ஸர்வாய நம: ஸர்வ லிங்காய நம:

சிவாய நம: சிவ லிங்காய நம:

ஜ்வலாய நம: ஜ்வல லிங்காய நம:

ஆத்மாய நம: ஆத்ம லிங்காய நம:

பரமாய நம: பரம லிங்காய நம:


என்னும் சிவோபாஸன மந்திரத்தால் துதி செய்தோம். வில்வ அர்ச்சனை செய்தோம். ( ஐயனை 108 நாமங்கள் கூறி அர்ச்சிக்க முடியாதவர்கள் இந்த எட்டு மட்டும் கூறி அர்ச்ச்னை செய்தால் கூட அதே பலன் கிட்டும்) பின் டார்ச்சென் முகாம் திரும்பி வந்து மதிய உணவை உட்கொண்டு மானசரோவர் கிரிவலத்தை பேருந்து மூலம் துவக்கினோம்.


15 ம் நாள் டார்ச்செனிலிருந்து குஹு பேருந்து மூலமாக (85 கி.மீ)

ஓம் மங்களம் பாடி எங்கள் மானசரோவர் யாத்திரையை துவக்கினோம். குஹூவை நோக்கிச் செல்ல செல்ல கிழக்கு முகத்தின் முழு தரிசனம் கிடைத்தது. கிழக்கு முகத்தின் தொடர்ச்சியே சிவ ஸ்தலமாக டோல்மா வரை நீண்டிருப்பதால் கயிலாய கிரிவலத்தின் போது நமக்கு கிழக்கு முகத்தின் முழு தரிசனம் கிடைப்பதில்லை. தூரத்திலிருந்தே நமக்கு நல்ல தரிசனம் கிடைக்கின்றது. பேருந்தை நிறுத்தி சிறிது நேரம் அம்முகத்தை வணங்கினோம். இனி கிழக்கு முகமான தத்புருஷ முகத்தைப்பற்றிய சிறு குறிப்பு.


வெயில் பிரதிபலிக்கும் பகுதிதான் தத்புருஷ முகம்


தத்புருஷம் : யௌவன பருவமுடையதாய் கோகம்பூ நிறமாய் கிழக்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் வாயுவை குறிக்கின்றது, ஐந்தொழிலில் காத்தல் தொழிலை (தத்புருஷ கவச திரோபவ காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'வ", ஐயன் மகேஸ்வர வடிவம். அம்மை ஞான சக்தி வடிவம். இம்முகம் மின்னல் போல ஒளி வீசும் ஸ்படிகம் என்பது ஐதீகம். இம்முகத்தை


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி

தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்


என்னும் ப்ராக் வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம். தத்புருஷ முகம், மண், மனை, பூமி இவற்றில் நல்ல ஆதாயங்கள் கிட்டும். தீராத பல பிரச்னைகள் தீர்த்த, குடும்ப பிணக்கு தீர்த்தல் ஆகியவற்றை இம்முகம் தந்தருளுகிறது.

ஐந்தொழில் புரியும் ஐயனுக்கு ஐந்து முகங்கள் என்பது ஐதீகம் இது வரை நான்கு திசைகளின் நான்கு முகங்களின் தாத்பரியத்தைப் பற்றி பார்த்தோம் இனி மேல் நோக்கி உள்ள முகமான ஈசான முகத்தைப்பற்றிய சிறு குறிப்பு.





ஈசான முகம் : சிறுபிள்ளை முகம் போல் பளிங்கு றமாய் ஈசான திசையை பார்த்து மேல் நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை குறிக்கின்றது, ஐந்தொழிலில் அருளல் தொழிலைக் (அனுக்கிரகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் "ய". ஐயன் சதாசிவ வடிவம். அம்மை பராசக்தி வடிவம். சுத்த அன்னம் நைவேத்யம். இம்முகம் கண்களை உறுத்தும் வெள்ளியாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம் இம்முகத்தை


ஈஸான: சர்வ வித்யானாம் ஈஸ்வர: சர்வ பூதானாம்

பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர்

ப்ரஹ்மா சிவோ மே அஸ்து சதாஸிவோம்.


என்னும் ஊர்த்வ வக்தர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம். ஈசான முகம் விஷ பயம் போக்கும், தீராத நோய்கள் தீரும், புத்திர தோஷம் தீர்க்கும். காரியத்தடைகள் நீங்கி காரிய சாதகம் ஏற்படும். சிவலிங்கம் போல் விளங்கும் கயிலாய மலையின் மேல் நோக்கிய முகம். கையிலங்கிரியிலே ஈசான முகத்தை நேரடியாக நாம் பார்க்க முடியாது. இந்தபடம் ஹெலிகாப்டரினால் மேலிருந்து எடுக்கப்பட்ட படம் பனியாறுகள் உருவாகும் பாதாளத்தையும் கிழக்குப்பகுதியில் உள்ள விஸ்வ லிங்கத்தின் தாரையும் நாம் தெளிவாக இப்படத்தில் காணலாம். ஐயனுடைய ஐந்து முகங்களை பற்றி கண்ட பின் நமது யாத்திரையைத் தொடர்வோம்.


ஹோரே செல்லும் வழியில் திருக்கயிலாயம்

(சிவலிங்கத்தின் தாரா போல கிழக்கு முகத்தின் தொடர்ச்சியை காணலாம்)

கைலாயத்துடன் இனைந்துள்ள மற்றொரு திபெத்திய புராண வரலாறு புத்த பிக்ஷ”வான மிரெபா என்பவர்க்கும், திபெத்தின் புராதன சமயமான போன்பாக்களின் தலைமை குருவான நாரோ பான் சங் இருவருக்கும் இடையே நடந்த போட்டி. இருவருமே மந்திர வித்தையில் புணர்கள். ஆகவே இருவருக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது, திருக்கயிலாய மலை யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்ய. யார் அதிகாலைக்குள் திருக்கயிலாய சிகரத்தை அடைகின்றார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இரவிலேயே மலை ஏறத் தொடங்கி விட்டார். ஆனால் மில்ரேபாவோ இரவு முழுவதும் தனது உடுக்கையை ஒலித்துக் கொண்டே காத்திருந்தார். காலையில் சூரியன் தோன்றியவுடன் தனது மந்திர சக்தியை பயன் படுத்தி சூரிய கிரணங்களைப் பற்றிக் கொண்டு உச்சியை அடைந்து விடுகிறார். மேலே சென்ற நாரோ பான்சங் அண்ணாந்து பார்த்த போது , மில் ரேபாவை மேலே பார்த்து தனது உடுக்கையை கீழே போட்டு விழுந்தார். அதன் பின்னரே திபெத்தில் புத்த சமயம் வலுப்பெற்றது என்பதை எங்கள் வழிகாட்டி டேவிட் அவர்கள் கிரி வலம் வரும் போது கூறினார்.


பின் பர்க்கா (Parakha) வழியாக மதிய உணவு நேரத்திற்கு ஹோரே(Hore) என்னும் இடத்தை அடைந்தோம். சில வருடங்களுக்கு முன் இந்த இடமும் முகாமாக இருந்தது, ஆனால் இப்போது முழு கிராமமாகி விட்டது. இங்கு பழங்கள், மற்றும் மளிகைச்சாமான்கள் கிடைக்கின்றன. பாதை கற்களால் ஆனதுதான். புழுதி நிறைந்த பாதை, பல் வேறு ஆறுகளை அப்படியே கடந்து வந்தோம் எங்கும் பாலம் கிடையாது அதிக தண்ணீர் இல்லாததால் பிரச்சினை இல்லை.


இவ்விடத்திலிருந்து மானசரோவரின் அருமையான தரிசனம் கிடைத்தது. பின் யாத்திரைத்தொடர்ந்து செரிலங் என்னும் இடத்தை அடைந்தோம். உச்சி வெய்யிலில் அலைகள் வைரம் போல் மின்னின, மேலும் பல்வேறு வர்ணங்களில் மானசரோவர் தரிசனம் பெற்றோம்.

வெயில் பட்டு வைரமாக மின்னும் மானசரோவர்



இங்கிருந்து கைலாயத்தை தரிசித்த போது ,
சீரிய சிங்காதனத்தில் சர்வேஸ்வரனும் சர்வேஸ்வரியும் அமைந்து தன் குடிமக்களை பரிபாலிப்பது போல கயிலங்கிரி ஓங்கி உயர்ந்து காட்சியளித்தது. அது மானசரோவர் கரையில் செல்லும் நம்மை ரட்சிக்கின்றது போல தோன்றியது. இவ்விடத்தில் ஒரு புத்த விகாரம் உள்ளது. சிறிது நேரம் அங்கு கழித்து விட்டு பின் பயணத்தை தொடர்ந்து குஹூ(Quhu) முகாமை அடைந்தோம்.


இங்கு இரண்டு நாட்கள் தங்கினோம். குஹூவை அடைந்த அன்றே மானசரோவரில் இரண்டாவது முறையாக நீராடினோம். பின் அன்று பிரதோஷம் என்பதால் அடியேனும், திரு தனுஷ்கோடியும் எம்பெருமானை நோக்கி அமர்ந்து ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்தோம், பின் லிங்காஷ்டகம், பில்வாஷ்டகம் பாராயணம் செய்ய போது மற்ற யாத்திரிகளும் எங்களுடன் கலந்து கொண்டனர், அவர்களுக்கு நாங்கள் போற்றித் திருத்தாண்டகத்தின் சிறப்பையும் அப்பர் பெருமானின் வரலாற்றையும் பற்றி கூறி அதையும் பாராயணம் செய்தோம். பின் அவர்களில் சிலர் தங்கள் தங்கள் மொழியில் பாடினார்கள், பின் இறைவனுக்கு


மங்களம் பகவான் சம்போ

மங்களம் ரிஷபத்வஜ:

மங்களம் பார்வதி ரமணா

மங்களாய தனோ சிவ:


என்று மங்களம் கூறி , ஆரத்திப்பாடலுடன் ஆரத்தி காண்பித்து பஜனையை முடித்தோம், பிரதோஷ மற்றும் சிவராத்திரி பூஜை நாங்கள் நினைத்ததை விட மிகவும் சிறப்பாக அமைந்தது அந்த ஆண்டவனின் அருளினால்தான். இவ்வாறு இன்று தொடங்கிய பஜனை கடைசி நாள், அதாவது டெல்லி சென்று அடையும் வரை ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்தது. தினசரி பஜனையில், ஐந்தெழுத்து மந்திரமான


நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நான் அறிஇச்சையும்

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே ஓம் நமசிவாய மந்திரத்தை 108 முறையும்,


த்ர்யம்பகம் யஜாமஹே ஸ”கந்திம் புஷ்டிவர்தநம். உர்வாருகமிவ

பந்தநாத்-ம்ருத்யோர்-முக்ஷ“ய-மாம்ருதாத்


( மூன்று கண்களையுடையவரும், மணம் வீசுகின்ற உடலையும் உடைய பசுபதியே, வெள்ளிரிப் பழமானது எவ்வாறு பழுத்தவுடன் தானாக தாய்க் கொடியிலிருந்து விலகுகின்றதோ அது போல எங்களையும் இந்த சம்சார சாகரத்திலிருந்து விலக்குவீராக ) என்னும் மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை 21 முறையும் பாராயணம் செய்தோம்.


இந்த பதினைந்தாவது நாள் அஷ்டபத்திலிருந்து ஐயனை தரிசனம் செய்த மற்றும் மானசரோவர் கிரிவலம் ஆரம்பித்த நாள்

1 comment:

Jai said...

அருமையான பதிவு, நமசிவாய வாழ்க!