Sunday, July 20, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -13

திருசிற்றம்பலம்

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி


முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி


தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி


சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி


ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி


அல்லல் நலிய அலந்தேன் போற்றி


காவாய் கனகத் திரளே போற்றி போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (9)


ஆடுகின்றானடி திருக்கயிலையிலே






யாத்திரையின் ஆறாம் நாள் ஒய்வு நாள் மற்றும் உயர் மட்ட மருத்துவ பரிசோதனை நாள்.





கூஞ்சி கோவிலில் ITBPயினருடன் பஜனை

மூன்று நாள் நடைப்பயணத்திற்க்குப்பின் இன்றையன தினம் மிகவும் வேண்டிய ஒய்வு நாள். கூஞ்சியில் ஒரு நாள் தங்குகின்றோம். கூஞ்சி கடல் மட்டத்திலிருந்து 3500 மீ (10000 அடி) உயரத்தில் உள்ள இடம். சுற்றிலும் பனி மூடிய மலைச்சிகரங்கள். இங்கு இரண்டாவது மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றது. அடுத்த நாள் காலையில் ITBP மருத்துவர்கள் முதலில் எங்களுக்கு உயர் நிலைகளில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றி மறுபடியும் விளக்கினர். பின் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை இங்கும் சரி பார்த்தனர். இங்கு இரண்டு சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டன ஒன்று இரத்த அழுத்தம் மற்றொன்று இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு. எங்கள் குழுவினரில் இரண்டு பேருக்கு மட்டுமே இரத்த அழுத்தம் சிறிது அதிகமாக இருந்தது, இருவரையும் நடக்க வேண்டாம் குதிரைகளில் செல்லுங்கள் என்ற அறிவரையுடன் எங்கள் குழுவினர் அனைவரும் மருத்துவ பரிசோதனையில் தேர்வு பெற்றோம்.







கூஞ்சி முகாம் ஒரு பறவையின் பார்வையில்





இது உயர் மட்ட பயணத்திற்கு நமது உடல் தயாராக இருக்கின்றதா என்பதை அறிய செய்யப்படும் சோதனை. இங்கு மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெறாதவர்களை KMVNயினர் ஆதி கைலாசம், மற்றும் ஓம் பர்வதம் சுற்றி காண்பித்து திருப்பி அனுப்பி விடுகின்றனர். இங்கு என்னை பரிசோதனை செய்த மருத்துவர் மிகவும் நல்லவர், கொலஸ்ட்ரால் சிறிது அதிகமாக உள்ளது இந்த உணவுகளை தவிருங்கள் தினமும் முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கினார். நானோ பயத்தில் எங்காவது தேர்வு செய்யாமல் விட்டு விடுவாரோ என்று இதனால் யாத்திரைக்கு செய்ய முடியும் அல்லவா என்று கேட்டேன், அவர் சிரித்துக் கொண்டே பயப்படவேண்டாம் நான் முதலில் மருத்துவர், எனது கடமை தங்களுக்கு மருத்துவ ஆலோசனை தருவது என்று கூறி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். டெல்லியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து முடிவுகள் X- Ray முதலியவற்றை இங்கு நாம் கொண்டு வர வேண்டும் இவற்றை ITBP மருத்துவர்கள் சரி பார்க்கின்றனர். இந்த மருத்துவ முடிவுகள் பின் அங்கேயே பாதுகாக்கப்படுகின்றன. யாத்திரை முடித்து திரும்பி வரும் போது இவை நம்மிடம் திருப்பித்தரப்படுகின்றன.



கூஞ்சி முகாமில் ஒரு தங்கும் அறை


மருத்துவ பரிசோதனை மதிய உணவிற்க்கு முன்பே அனைவருக்கும் முடிந்து விட்டது. எங்கள் குழுவினரில் சிலர் L.O அவர்களின் கிராமம் வரை சென்று பார்த்து விட்டு வந்தனர். திரு மிட்டல் அவர்கள் ஒரு காலணி வாங்கினார் இக்கிராமத்தில். எல்லாரும் அன்று மாலை ஓய்வு மற்றும் அனைவரும் தேர்வு பெற்ற மன மகிழ்ச்சியுடன் நன்றுடையானுக்கு, தீமையிலாதானுக்கு, நரை வெள்ளேறு விடையானுக்கு, உமை ஒரு பாகம் உடையானுக்கு சென்றடையாத திருவுடையானுக்கு கையிலை குன்றுடையானுக்கு நன்றி கூறி கோவிலில் பஜனைகள் செய்தோம். இதுவரை தங்கிய இடங்களில் KMVNன் ஓய்வு விடுதிகள், எனவே கட்டில் மற்றும் சுடு தண்ர் முதலியன தாராளமாக கிடைத்தன சில இடங்களில் ஒரு அறையில் மூன்று பேர் தங்கினோம் அறைகள் குறைவாக இருந்ததால். கூஞ்சியிலிருந்து முகாம்களில் ஒரு நிரந்தரமான tent களில் சுமார் 8 பேர் முதல் 10 பேர் தங்கினோம். இங்குள்ள முகாமில் அரை வட்ட வடிவத்தில் ஓய்வு அறைகள் உள்ளன, சுவர்களுக்குள் சூட்டை கடத்தாத பொருள் (insulator) ரப்பப்பட்டுள்ளதால் உள்ளே குளிர் தெரிவதில்லை கீழே மெத்தை விரிக்கப்பட்டிருக்கின்றன. போர்த்திக்கொள்ள யாக்கின் உரோமத்தாலான கம்பளி வழங்கப்படுகின்றது, அந்த கம்பளி எவ்வளவு குளிராக இருந்தாலும் இதமாக இருக்கின்றது. இங்கு நாம் குளிப்பதற்கும், துகளை துவைப்பதற்கும் வேண்டிய வசதிகள் உள்ளன. மேலும் ஒரு நாள் ஒய்வு கிடைப்பதால் நமது உடலும் அடுத்து ஏற்றத்திற்கு தயாராகி விடுகின்றது. இங்கிருந்து செயற்கைகோள் தொலைப்பேசி மூலம் நாம் நம் வீட்டை தொடர்பு கொள்ளலாம். மூன்று மிடங்களுக்கு 40 ரூபாய் ஆனது.



கூஞ்சி கிராமத்தின் ஒரு பழங்காலத்து வீடு





மேலும் வழி நெடுக இங்குள்ள மக்கள் காட்டுகின்ற அன்பையும், பக்தியையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை, நம்மை விட வயதானவர்களே ஆனாலும் ஓம் நமசிவாய என்று கூறி நம்மை வணங்கும் போது நமக்கே கூச்சமாக உள்ளது, நமக்கு முதலில் பாதை வழங்குகின்றனர் நம்மை சிவ சொரூபமாகவே மதித்து எல்லா உதவிகளையும் செய்கின்றனர். கூஞ்சிதான் இப்பயணத்தில் இந்தியப்பகுதியின் கடைசி கிராமம் இதற்கு மேல் உள்ள இடங்கள் எல்லாம் ITBP முகாம்கள் அதனுடன் KMVN முகாம்களும் இனைந்துள்ளன. கூஞ்சியில் ஒரு வங்கி இருக்கின்றது. நமக்கு வேண்டிய சில பொருட்களை இங்கும் நாம் வாங்கிக் கொள்ள முடியும். கூஞ்சி கிராமத்தில் வீடுகள் மலைப்பகுதிகளில் கட்டப்படுவது போல் அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளன.




பழுத்து தொங்கும் woodapple பழங்கள்



யாத்திரையின் ஆறாம் நாள் ஒய்வு நாள் மற்றும் உயர் மட்ட (இரண்டாம் கட்ட)மருத்துவ பரிசோதனை நாள்.