Monday, October 05, 2009

கைலாச மானசரோவர் தரிசனம் 2009 -3

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


வடக்கு முக தரிசனம்

கிரிவலத்தின் முதல் நாள் நாம் ஐயனின் மூன்று முகங்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கின்றது. அதிகாலையில் அகோர முகமான தெற்கு முகத்தின் மேற்பாகத்தை முக்கண்ணுடன் தரிசனம் செய்கின்றோம். பின்னர் யமதுவாரத்திலிருந்து இம்முகத்தின் முழு தரிசனமும் கிடைக்கின்றது. கணேசர் நந்தி தரிசனமும் இங்கிருந்தே சித்திக்கின்றது. யமனின் எல்லையை விடுத்து தேவ பூமியில் கங்கா சூ என்னும் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்று மேற்கு முகமாம் சத்யோஜாத முகதரிசனமும், மேற்கு முகத்தின் முன்னர் உள்ள நந்தி தரிசனமும் பெறுகின்றோம். பின்னர் நடைப்பயணம் தொடர்கின்றது மேற்கு மற்றும் வடக்கு முகங்களின் இணைந்த தரிசனம் காண்கின்றோம். பின்னர் டேராபுக் முகாமை அடையும் போது வடக்கு முகத்தின் தரிசனம் கிட்டுகின்றது.
ஐயனின் ஜாடமுடியில் விளையாடும் நாகத்தை இம்முகத்தில் நாம் தரிசிக்கலாம். மேலும் சிவ சக்தியையும் நாம் தரிசனம் செய்கின்றோம்.


டேராபுக் முகாமில் இருந்து மேலே சிறிது மலையேற்றம் செய்தால் ஐயனின் பாத தரிசனம் கிடைப்பதோடு, ஐயன் பாதத்தில் இருந்து பாய்ந்து வரும் அவரது கருணை வெள்ளமான பனியாற்றைக் காணலாம், அந்த தீர்த்தத்தை பருகலாம். நாம் கொண்டு செல்லும் தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்.


கீழே காணும் மூன்று படங்களும் கௌரி சங்கர் என்று அழைக்கப்படும் திருக்கயிலாயம் மற்றும் மானசரோவர் தடாகம் இணைந்த காட்சி. சிவ சக்தி என்று ஐதீகம். அதுவும் அருணோதய காலத்தில் வானமெங்கும் சிவப்பு நிறத்தில் ஜொலிக்க அம்மையாப்பரின் அற்புத தரிசனம் காண்கின்றோம்.


கௌரி சங்கர் தரிசனம்
இமயமலையின் உயர் மட்டங்களில் யாக் என்னும் இந்த சடை எருமைகள்தான் காணப்படுகின்றன. இவற்றைத்தான் திபெத்தியர்கள் தங்கள் வளர்ப்பு பிராணியாக பயன்படுத்துகின்றனர். இதன் பாலையே அவர்கள் அருந்துகின்றனர், யாக்கின் உரோமமே கம்பளி செய்ய பயன் படுத்தப்படுகின்றது. இவர்கள் யாக்கின் கொம்புகளை மங்களப் பொருளாக கருதுகின்றனர். எனவே யாக்கின் கொம்புகளை தங்கள் இல்லத்தின் முன்னர் மாட்டி வைக்கின்றனர். அவ்வாறு செய்வது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. இங்கே யாக்கின் கொம்புகளுக்கிடையில் திருக்கயிலாய தரிசனம்.

பிரதோஷ தரிசனம்
பிரதோஷ காலத்தில் தேவர்களும், மூவரும், அனைத்து ஜீவராசிகளூம் உய்ய திருக்கயிலாய மலையில் விஷ்ணு மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட ஐயன் நந்தி தேவரின் கொம்புகளிக்கிடையே, விடமுண்ட நீலகண்டராக, மணீமிடற்றண்ணலாக. தியாகராஜராக ஆனந்தத் தாண்டவம் ஆடியருளினார். ஆகவே இன்றும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே ஐயனை கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட பிரதோஷ தரிசனம் கண்டு களியுங்கள் அன்பர்களே.


இப்படங்களை தந்து உதவிய இந்த வருடம் திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட மும்பையைச் சார்ந்த திரு, பிரகாஷ் கோட்டிகர் மானசரோவர் தடாகத்தில் நீராடும் காட்சி. மானசரோவர் தீர்த்தம் எவர் உடலில் படுகின்றதோ அவர்களின் ஏழு தலை முறையினரின் பாவங்கள் அனைத்தும் சூரினைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது. எனவேதான் தேவர்களும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நட்சத்திர ரூபத்தில் வந்து மானசரோவர் வந்து நீராடி எங்கோனையும் எங்கள் பிராட்டியையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

பௌர்ணமி தரிசனம்

மேலே கிளிக்கினால் திரு. பிரகாஷ் அவர்களின் ஆல்பத்தை தாங்கள் காணலாம்.

Click above to see the original album of Shri. Prakash Gotikar and below to view his blog with more photos.

கீழே கிளிக்கினால் அவரது வலைதளத்தை இன்னும் நிறைய படங்களுடன் ஆங்கிலத்தில் படிக்கலாம்

http://prashantghotikar.wordpress.comஇத்தொடருக்கான பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. மலேசியாவிலிருந்து திருக்கயிலாயம் இரண்டாம் முறை சென்று உள் கிரிவலமும், நந்தி கிரிவலமும் செய்யும் பேறு பெற்ற கயிலை பாலா அவர்களின் அனுபவத் தொடருடன் பல அரிய புகைப்படங்களுடன் கூடிய ஐயனின் அருட்தொடர் இன்னும் தொடரும்....

4 comments:

வருத்தப்படாத வாலிபன். said...

மிகவும் அருமையான பயண மற்றும் ஆன்மீக தொடர் நண்பரே .புகைப்படங்களும் மிக அருமை.

Kailashi said...

இன்னும் பல அரிய புகைப்படங்களுடன் இக்கட்டுரை தொடரும் அவசியம் வந்து சிவசக்தியின் அருள் மழையில் நனையவும் வருத்தப்படாத வாலிபரே.

பித்தனின் வாக்கு said...

மிகவும் அருமை. நாங்களும் உங்களின் கட்டுரை படிக்க புண்ணியம் செய்தவர்கள் ஆனேம். படங்கள் மிகவும் நன்று. தங்களின் கட்டுரை நேரில் தரிசித்த மாதிரி உள்ளது.

Kailashi said...

எல்லாம் அவன் அருள். வரும் காலங்களிலும் வந்து தரிசியுங்கள்.