Tuesday, June 21, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -1


ஓம் நமசிவாய


கண்ணார் அமுதனே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

எல்லாம்வல்ல மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் மாப்பெருங் கருனையினால் வழக்கம் போல் இந்த வருடமும் திருக்கயிலை நாதரை தரிசனம் செய்து விட்டு வந்த அன்பர் ஒருவரின் புகைப்படங்களையும் அவரது அனுபவங்களையும் மெய்யன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது, வாருங்கள் ஜெகத்தீரே காக்கை போல கலந்துண்ணலாம் சிவானந்த அமிர்தத்தை.

இந்த யாத்திரையை மேற்கொண்டவர் சென்னையை சார்ந்த திரு. இரவி ராமநாதன் அவர்கள். இவர் அடியேனது திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம் என்னும் புத்தகத்தை பதிப்பித்தவர். 2007 வருடம் முதல் பதிப்பு வெளி வந்தது, இந்த வருடம் அவர் திருக்கயிலை சென்று வந்தவுடன் இரண்டாவது பதிப்பும் வெளியானது. இவர் பிரேமா பிரசுரம் உரிமையாளர்.

இப்புத்தகத்தை வெளியிட்டநாள் முதலாய் திருக்கயிலையில் இருந்து நம்மையெல்லாம் காத்தருளும் சிவசக்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது, அது அவனருளால் இந்த வருடம் நிறைவேறியது. இவரது அனுபவம் மெய்சிலிர்க்க வைப்பதாய் உள்ளது. திருமயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரிடம் திருக்கயிலை வர வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்த போது முதலில் துனைவியுடன் காசி சென்று விட்டு வா, பின்னர் திருக்கயிலாயம் வரலாம் என்று உத்தரவு வந்ததாம் அது போலவே ஏப்ரல் மாதம் காசி, திருவேணிசங்கமம், கயா குடும்பத்தினருடன் சென்று விட்டு வந்தார்.

"அவனருளால் தான் அவன் தாள் வணங்க முடியும்" என்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியது போல அவர் தரிசனம் என்பது அவரின் இச்சைப்படிதான் நடைபெறுகின்றது என்பது நிதர்சனமான உண்மை என்றார். அவர்கள் காசியிலிருந்து கயாபேருந்தில் செல்லும் வழியில் ஒரு சிறு விபத்து ஏற்பட்டு இவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு அவர் கயா செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாம். அப்போது அந்த பேருந்து நடத்துனர் பல தடவை காசியிலிருந்து கயா செல்லும்போது யாத்திரை முடியாமல் போயுள்ளது என்று கூறினாராம். இங்கு சமவெளியில் எல்லா வசதிகளும் உள்ள இடத்திலேயே இப்படி என்றால் பனி படர்ந்த யாரும் எளிதாக அணுக முடியாத, நல்ல உடல் நிலை மற்றும் அதிக செலவாகும் திருக்கயிலை யாத்திரை செய்தவர்கள் பேறு பெற்றவர்கள் எனபதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

இனிகயிலை செல்ல விரும்பும் அன்பர்களுக்கு உதவும் விதமாக இவர் யாத்திரை மேற்கொள்ள தேந்தெடுத்த நிறுவனத்தினரின் முகவரி இதோ

அன்னபூர்ணா யாத்ரா சர்வீசஸ்,
63, நடுத்தெரு,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004

தொலைப்பேசி எண்கள்: 044-32946526


Annapoorna Yatra Service,
63, Naduththeru,
Mylapore,
Chennai-600004
Tel. 044-32946526/27
இவர்கள் நேபாள் நாட்டின் தலை நகரான காத்மாண்டுவில் உள்ள எதாவது ஒரு யாத்திரை நிறுவனத்தினரிடம் நம்மை எல்லாம் ஒப்படைத்து விடுவதால் நாம் நேராக அவர்களுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு செல்லலாம்.பசுபதி நாதர் ஆலயம் , காத்மாண்டு

மே மாதம் ஏழாம் நாள் காலை சென்னையிலிருந்து முதலில் இவர் விமானம் மூலம் டெல்லி சென்று பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார். அங்கு நேபாள யாத்திரை நடத்துனர்கள் இவரை ஹோட்டலில் தங்க வைத்தனர் மற்றும் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்தனராம். காத்மாண்டு யாத்திரை நிறுவனத்தினர்


ரிச்சா டூர்ஸ்,
நேபாள் பிளாஜா பில்டிங்,
இரண்டாவது மாடி,
திரிவேதி மார்க், தாமேல்,
அஞ்சல் பெட்டி எண் 1657,
காத்மாண்டு, நேபாளம்.
Richa Tours Nepal Plaza Bldg,
Second Floor,
Tridevi Marg, Thamel,
PO BOX 1657,
Kathmandu, Nepal
Phone:977-1-4423064, 4420710, 4411953,
Fax:+977-1-4421573
E-mail:explore@mail.com.np
,


Website:www.richatour.com

பசுபதிநாதர் ஆலய மஹா துவாரம்
( You can see the rear side of Nandi the mount of Lord Shiva)


08-05-2011 அன்று இவர்கள் காத்மாண்டுவில் உள்ள ஆலயங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர். முதலில் அவர்கள் சென்றது பசுபதி நாதர் ஆலயம். நேபாளின் காசி என்று இவ்வாலயத்தை நாம் கூறலாம். பசுக்களாகிய நம்முடைய பாசத்தை அறுத்து முக்தியளிக்க வல்ல பதியாகிய சிவபெருமான் நான்கு முக லிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார், இமய மலையின் ஆலயங்கள் அமைந்துள்ள பகோடா பாணியில் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் உள்ளேயே சக்தி பீடமான குஹ்யேஸ்வரி ஆலயமும் அமைந்துள்ளது. பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் தென்னாட்டவர்கள் தலைமை பூசாரிகளாக இருப்பது போல இக்கோவிலிலும் ராவல் இந்தியராக உள்ளார், இந்த ஏற்பாடு ஆதி சங்கர பகவத் பாதாள் உருவாக்கியது. பல நூற்றாண்டுகளாக இவ்வாலயம் உள்ளது. நேபாளத்தின் பல்வேறு அரசர்கள் இத்திருக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.


சிவபெருமான் ஒரு சமயம் மான் வடிவெடுத்து யாரும் அறியாமல் பாக்மதி காட்டில் சுற்றிக்கொண்டிருந்த பொது அவரைக் காணாமல் அல்லல் பட்ட தேவர்கள் பூலோகம் வந்து மானாக இருந்த சிவபெருமானை கண்டு வேண்ட அவர் மீண்டும் திருக்கயிலை சென்றார். அதற்கு பின்னர் அந்த மானின் கொம்பையே சிவலிங்கமாக வழிபட்டு வந்தனர் காலத்தால் கொம்பு அழிய அனைவரும் மறந்து விட்டனர். பின்னர் ஒரு சமயம் ஒரு இடையன் காராம் பசுவொன்று தானாக புற்றில் பால் சொரிவதைக் கண்டு அவ்விடத்தில் தோண்டிப்பார்க்க சிவலிங்கம் கிடைத்தது பின்னர் கோவில் ஏற்பட்டது.

நேபாளத்திலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வாலயம் வந்து சிவபெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர். ஏகாதசி, சங்கராந்தி, மஹா சிவராத்திரி, அக்ஷ்ய திருதியை, கிரகண காலங்கள், பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் குவிகின்றனர். மஹா சிவராத்திரியன்று பாக்மதி ஆற்றில் புனித நீராடி, இரவு முழுவதும் ஆலயம் நெய் விளக்குகளால் ஒளிர்கின்றது பக்தர்கள் கண் விழித்து விரதம் இருந்து வழிபடுகின்றனர்.

Propreiter Prema Prasuram

Publisher of Kailash Manasarovar Yatra book


கோவில் வளாகத்தில் புறாக்கள்


சீன அரசு இந்திய அரசு நடத்தும் யாத்திரையின்மூலம் செல்வதற்கு பல் வேறு நிபந்தணைகளை விதிக்கின்றது. முதல் குழு மே மாதம் 27தேதியன்றுதான் புறப்படுகின்றது. மேலும் ஒரு குழுவில் அதிகபட்சமாக 60 பேர்தான் செல்லமுடியும். ஆனால் நேபாள் வழியாக செல்பவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை என்பதை தாங்கள் காணலாம். மேலும் இவ்வழியாக செல்லும் போது நாட்களும் குறைவாக ஆகின்றது , நடை பயணமும் தேவையில்லை என்பதால் பலமுதியவர்கள் இவ்வழியாக செல்கின்றனர், ஆயினும் அனைவராலும் கிரி வலம் செய்ய முடிவதில்லை திருக்கயிலை அருகில் சென்ற திருப்தியுடன் திரும்பி வருகின்றனர்.

அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்
திருக்கைலாயம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி யுள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே யமர்ந்தாய் போற்றி
ஆறங்க நால் வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி 1நற்றுணையாவது நமச்சிவாயவே என்று அறுதியிட்டு கூறிய திருநாவுக்கரச பெருமான் பாடிய இக்கயிலாய பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் சிவபெருமானின் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்தால் நிச்சயம் திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் ஸ்நானமும் திண்ணம் என்பதால் ஒவ்வொரு பதிவிலும் ஒரு பதிகம் இடம்பெறுகின்றது.

யாத்திரை வளரும்

No comments: