Saturday, July 16, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -2ஓம் நமசிவாயகண்ணார் அமுதனே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி

08-05-2011 அன்று திரு. இரவி அவர்கள் காத்மாண்டுவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களான பசுபதி நாதர் ஆலயம், குஹ்யேஸ்வரி ஆலயம் மற்றும் ஜலநாராயணன் என்றுஅழைக்கப்படும் புத்த நீலகண்ட நாராயணர் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று திருக்கயிலை நாதரின் திவ்ய தரிசனம் சித்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வந்தார். முந்தையை பதிவில் பசுபதி நாதர் ஆலயத்தின் காட்சிகளை கண்டீர்கள் இந்தப் பதிவில் ஜலநாராயணர் தரிசனம் கண்டு களியுங்கள்.


பாற்கடலில் பள்ளிகொண்ட பரமன்

இவர் சுயம்பு மூர்த்தி ஆயிரம் பணம் கொண்ட ஆதி சேஷனில் யோக நித்திரை கொள்ளும் அழகிய கோலத்தில் அருட்காட்சி தருகின்றார் ஜலநாராயனர். ஒரு குளத்தின் நடுவில் அப்படியே பாற்க்கடலில் பள்ளி கொண்ட பரமனை நாம் தரிசனம் செய்யலாம்.இந்த ஆலயம் காத்மாண்டு நகரிலிருந்து சுமார் 8 கி. மீ. தூரத்தில் சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மண்ணில் புதைந்து சுயம்புவாக ஐந்தாம் நூற்றாண்டில் கிடைத்த இந்த சிலையை அப்படியே ஒரு குளத்தின் நடுவே பிரதிஷ்டை செய்துள்ளனர்,
சதுர்புஜங்களுடன் சங்கு சக்க்ரம் ஏந்தி யோகு செய்வான் போல் உறங்கும் மஹா விஷ்ணுவின் அழகை என்னவென்று சொல்ல
பக்தர்கள் பரவும் பரமன் ஜலநாராயணர்

தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்த பின்னர் யாத்திரிகளுக்கு யாத்திரையைப் பற்றிய முழு விவரங்களையும் ரிச்சா டூர்ஸ் நிறுவனர்கள் அளித்தனர் அந்த காட்சிகள் கீழே.
திரு இரவி அவர்களிடம் காத்மாண்டுவில் எதாவது வாங்கினீர்களா? என்று கேட்டேன், அவர் அதற்கு அங்கு எல்லாமே விலை அதிகம் எனவே வேண்டியவற்றை எல்லாம் இந்தியாவில் இருந்து வாங்கி செல்வதுதான் நல்லது என்று கூறினார். மேலும் நமது ரூபாய் அங்கு செல்லுபடியாகும். ஒரு ரூபாய்க்கு இரண்டு நேபாள ரூபாய் கிடைக்கின்றது என்றும் கூறினார். மேலும் யாத்திரை நடத்துபவர்கள் கொடுத்த பெரிய கம்பளிக் கோட்டை யாத்திரை முடிந்து திரும்பி வந்த பின் திருப்பி வாங்கிக் கொண்டனர். இவர்கள் நடைக்குச்சி தரவில்லையாம். ( முதலிலேயே யாரையும் கிரி வலம் செல்ல அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் போல உள்ளது)அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்


திருக்கைலாயம்பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி


பிறவியறுக்கும் பிரானே போற்றி

வைச்சா ட னன்று மகிழ்ந்தாய் போற்றி

மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி


பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி


போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி


கச்சாக நாக மசைத்தாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (2)

நற்றுணையாவது நமச்சிவாயவே என்று அறுதியிட்டு கூறிய திருநாவுக்கரச பெருமான் பாடிய இக்கயிலாய பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் சிவபெருமானின் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்தால் நிச்சயம் திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் ஸ்நானமும் திண்ணம் என்பதால் ஒவ்வொரு பதிவிலும் ஒரு பதிகம் இடம்பெறுகின்றது.யாத்திரை தொடரும்…

No comments: