Wednesday, November 07, 2012

கயிலை மலையானே போற்றி! போற்றி! -1


திருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரை 2012அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் சிவபரம்பொருள் நாம் எல்லாரும் உய்ய வேண்டி குடி கொண்ட கோவில்கள் ஆயிரத்தெட்டு என்பர் ஆன்றோர்.  அண்ட சராசரங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் அலகிலா விளையாட்டுடை அந்த ஆனந்த கூத்தன் மலையரசன் பொற்பாவையுடன்  வசிக்கும் தலமான  திருக்கயிலாயம் தான் அவற்றுள் முதன்மையானது. வருடம் முழுவதும் பனி மூடி இருக்கும் அந்த வெள்ளிப்பனி மலையில், தேவர்கள், ரிஷி , முனிவர்கள், கந்தர்வ, கின்னரர்கள், யக்ஷ, கருடர்கள் சிவ சம்போ!  ஓம் நமசிவாயா! என்று துதி செய்து அஞ்சலி  ஹஸ்தத்துடன் நின்றிருக்க, பூத கணங்கள் அம்மையப்பரின் ஆணைக்காக காத்திருக்க பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமன் பச்சை பசுங்கொடியாம் கௌரி அம்மையுடன் நவரத்தினங்கள் இழைத்த கமனீயமான ஆனிப்பொன் ஊஞ்சலில், நந்தியெம்பெருமான் தன் மூச்சுக்காற்றால் குளிர்விக்க திருவோலக்கம் எழுந்தருளி சகல ஜகத்தையும் இயக்கும் தலம்தான் திருக்கயிலை.
காத்மாண்டுவில் உள்ள 52 அடி உயர சிவன் சிலை 


அந்த திருக்கயிலாய தரிசனம் பெற ஒருவர் ஆயிரம் ஜன்மம் தவம் செய்திருந்தால் மட்டுமே ஒருவருக்கு அந்த பாக்கியம் கிட்டும். ஏனென்றால் தேவர்களுக்கும் கூட திருக்கயிலாய தரிசனம் மிகவும் துர்லபமானது.   அவன்ருளால் இரண்டாவது முறையாக ஐயனை,  அவர் வசிக்கும்   திருக்கயிலை சென்று  தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. அந்த ஆனந்தத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவுகள்.  அகண்டாகார சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளத்தை புசிப்பதற்கு சேர வாரும் செகத்தீரே! என்று அன்புடன் கை கூப்பி அழைக்கின்றேன்.

பார்வதி தேவி கணேசர் மற்றும் முருகருடன்திருக்கயிலாயம் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது இந்திய அரசின் இந்தியா வழியாக நடைப்பயணமாக செல்லும் 30  நாள் பயணம் . இரண்டாவது நேபாள் வழியாக செல்லும்  13 நாள் பயணம். அடியேன்  முதல் தடவை சென்றது முந்திய பாதை, இந்த வருடம் சென்றது பிந்திய பாதை ஆகும். நாட்கள் குறைவு என்பதால்  சிலருக்கு உயர் மட்டத்திற்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வதில் சிறிது துன்பம் ஏற்பட்டது.

இனி திருக்கயிலை மலையின் சில சிறப்புகளை காணலாமா அன்பர்களே:
1.   திருக்கயிலாயம் என்றால் மணி என்று பொருள். 

2.   பிரம்மா தன் மனதில் இருந்து தோற்றுவித்ததால் மானசரோவர் அப்பெயர் பெற்றது.

3.    அகோர முகம் அதாவது தெற்கு முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி விடும் நீலக்கல்லாக ஒளிர்கின்றது. சத்யோஜாதம் என்னும் மேற்கு முகம்  அந்தி மயங்கிய வான விதானம் போல மின்னும் மாணிக்கக் கல். வாம தேவ முகம் அதாவது வடக்கு முகம் பளபளக்கும் தங்கமாக பொன்னார் மேனியனாக திகழ்கின்றது பளபளக்கும் தங்கமாக பொன்னார் மேனியனாக திகழ்கின்றது. தத்புருஷ முகம் அதாவது கிழக்கு முகம் மின்னல் போல ஒளி வீசும் ஸ்படிகம் என்பது ஐதீகம்.

4.   திருக்கயிலாய மலையைப் பார்த்தால் ஆறு இதழ் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல தோற்றமளிக்கிறது.

5.   திருக்கயிலாயமும் மானசரோவரும் இணைந்து சிவசக்தி சொரூபமாகும்.

6.   வடக்கு முகத்தில் நாம் ஐயனுக்கு குடை பிடிக்கும் நாகத்தையும், சிவ சக்தியையும், தெற்கு முகத்தில் முக்கண்களையும், கணேசரையும், ஐயனுக்கு எதிரே நந்தி தேவரையும் தரிசனம் செய்கின்றோம்.

7.   இந்துக்களுக்கு மட்டும் அல்ல ஜைனர்களுக்கும்,புத்தர்களுக்கும், திபெத்தின் புராதான மதமான பான்களும் திருக்கயிலாயம் புனிதமானது. 

டில்லி விமானநிலையத்தின் சூரிய பகவான் ஒரு தடவை திருக்கயிலையை தரிசனம் செய்தவர்கள் அந்த அனுபவத்தை மறப்பது என்பது எளிதல்ல.  காலை எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அந்த நினைவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அவ்வளவு இனிமையான  சிவையான அனுபவன் அது.   அடியேனுடன் பணி புரியும் திரு. சுதார் அவர்களிடமிருந்து இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது.  அதில் ஜூன் மாதத்தில் திருக்கயிலை யாத்திரை மேற்கொள்ள விழைகின்றோம் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்ககாகத்தானே காத்திருந்தோம் என்று உடனே அவருக்கு அடியேனும் வருகின்றேன் என்று அறிவித்து அவன் தாள் வணங்கி அவனை தரிசனம் செய்ய வேண்டிய பணிகளை துவக்கினேன்.


 அம்மையப்பரை தரிசிக்க டில்லியிலிருந்து புறப்படுகின்றோம்


அடியேனுடன் திரு.சுந்தர் மற்றும் திரு. பாபு அவர்களும் இனைந்து கொண்டனர். மூவரும் உயர் மட்ட , பிராண வாயு குறைவான, சீதோஷ்ண நிலை தன் இஷ்டப்படி மாற்க்கூடிய பயணத்திற்காக வேண்டிய பணிகளை துவக்கினோம். கம்பளித்துணிகள், புற ஊதா கதிர்களை தடுக்கும் கருப்புக் கண்ணாடி, மலையேற்றத்தார்க்கான காலணிகள், சீனாவில் செலவு செய்ய யுவான்கள், மலையேற்றத்தின் போது  உட்கொள்ள, குளுகோஸ், சாக்கலேட்கள், நொறுக்கு தீனிகள், அவசியமான மருந்துகள், டார்ச் லைட் என்று யாத்திரைக்கு அவசியமான அனைத்து முஸ்தீபுகளையும் முடித்துக்கொண்டு மனதில் அண்ணலே தங்கள் தரிசனமும், கிரி வலமும் எந்த விக்கினமும் இல்லாமல் சித்திக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனும் காத்திருந்தோம். இதில் சுந்தர் அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதில் நிபுணர் எனவே   வரும் பதிவுகளில் அவரின் அருமையான புகைப்படங்கலை அதிகமாக காண்பீர்கள். எழுத்து அளவாகவே மட்டும் இருக்கும்.

தில்லியில் இருந்து இயங்கும் Shreshta Holidays & Travels என்ற சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் மூலமாக இந்த யாத்திரையை மேற்கொள்ள திரு. சுதார் அவர்கள் ஏற்பாடி செய்திருந்தார். தில்லியிலிருந்து தில்லி 13 நாள் பயணம், பயண கட்டணம்  ரூ68000/-. விரும்புபவர்கள் காத்மாண்டிலிருந்து காதமாண்டு வரை ரூ61000/- செலுத்தியும் கலந்து கொள்ளலாம். உணவு, உறைவிடம், தினமும் இரண்டு பாட்டில் தண்ணீர் மற்றும் சீனப்பகுதியில் பயணம் செய்ய 25 யாத்திரிகளுக்கு மேல் இருந்தால் ஒரு Volvo பேருந்து மற்றும் காத்மாண்டுவில் தங்க மூன்று நட்சத்திர  ஹோட்டல்கள்  மற்றும் ஒரு நாள் காத்மாண்டு சுற்றுலா மற்றும் விசா கட்டணம் இதில் அடக்கம். சுதார் அவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்ச்சியாக யாத்திரை சம்பந்தபட்ட அனைத்து விவரங்களையும் அறிவித்துக்கொண்டிருந்தார்.

காத்மாண்டிற்கு விமானப் பயணம்


 இனி நேபாள் செல்லும் வழியின் கால அட்டவணை என்ன என்று காணலாமா அன்பர்களே:

முதல் நாள்:  தில்லியிலிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு சென்று அங்கு இரவு தங்குதல்.

2ம் நாள்: காத்மாண்டு சுற்றுலா. பசுபதிநாதர் ஆலயம், பௌத்நாத், ஸ்வயம்பு நாத் புத்த விகாரங்கள் மற்றும் காத்மாண்டு நகரை சுற்றிப்பார்த்தல்.

3ம் நாள்: காத்மாண்டு-நைலம் (3750மீ) 150கி.மீ பயணம்  காத்மாண்டுவில் இருந்து திபெத்திய எல்லை நகரான கொடாரி சென்று திபெத்தில் நுழைந்து பின் நைலாம் சென்று அங்கு தங்கல்.

4ம் நாள்: உயர் மட்டத்தில்  பயணம் செய்வதற்காக உடலை தயார் செய்து கொள்ள நைலாமில் தங்குதல் மற்றும் மலையேற்றப்பயிற்சி.

5ம் நாள்: நைலாம் – சாகா  நைலாமிலிருந்து லா-லுங்-லா கணவாய் (16000 அடி) வழியாக , பிரம்மபுத்திரா நதியை கடந்து  சாகா அடைந்து அங்கு தங்கல்.

6ம் நாள்: சாகா – மானசரோவர் (4558 மீ) 450கி.மீ பயணம்
சாகாவில் இருந்து கிளம்பி மயூமா-லா கணவாய் (17000 அடி)  வழியாக ஹோர்சு அடைதல். அங்கு ஐயனின் முதல் தரிசனம் பின் மானசரோவர் அடைந்து அங்கு தங்கல்.

7ம் நாள்: மானசரோவர் தீரத்தில் சிவசக்திக்கு  யாகம் மற்றும் பூஜைகள். மற்றும் கிரிவலத்திற்காக உடலை தயார் செய்து கொள்ள மானசரோவரில் தங்கல்.

8ம் நாள்:  திருக்கயிலாய கிரிவலம் தொடக்கம்.  யமதுவாரத்திலிருந்து டேராபுக் வரை நடைப்பயணம்.  தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு முக தரிசனம். டேராபுக்கில் தங்கல்.

9ம் நாள்: டேராபுக் - ஜுடுல்புக்
கிரி வலத்தின் இரண்டாம் நாள் யாத்திரையின் கடினமான நாள். செங்குத்தான மலையேற்றம். 5200 மீ யாத்திரையின் மிக உயரமான டோல்மா கணவாய் ஏறி அன்னை பார்வதியை வணங்கி, அன்னை நீராடும் கௌரி குளத்தை தரிசனம் செய்து ஜுடுல்புக்கில் தங்கல்.

10ம் நாள்: கிரிவலத்தின் மூன்றாம் நாள், கிரிவலத்தை சுபமாக நிறைவு செய்தல். சுமார் 6 கி.மீ நடந்து வ‘ந்து, பின்னர் பேருந்து மூலம் டார்ச்சன் மூலமாக மானசரோவர் வந்து  தங்கல்

11ம் நாள்:  மானசரோவர் – சாகா

12ம் நாள்: சாகா – காத்மாண்டு திரும்புதல்.

13ம் நாள்: காத்மாண்டிலிருந்து தில்லி திரும்புதல்.

இது அவர்கள் அளித்திருந்த கால அட்டவணை ஆனால் யாத்திரையை மேற்கொண்ட போது இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன அவற்றையெல்லாம் வரும் பதிவுகளில் காணலாம்.  

காத்மாண்டு விமான நிலையத்தின் அழகிய கருடாழ்வார்

மே மாதம் 28ம் நாள் காலை Spicejet விமானம் SG – 321 மூலமாக   மூவரும் தில்லிக்கு புறப்பட்டு சென்றோம்.  அங்கு எங்கள் நண்பர்கள் திரு.உதயக்குமார் தங்குவதற்கு இடமும் வண்டியும் கொடுத்து உதவினார் திரு முரளிதரன் அவர்கள் உணவளித்தார். அன்றையதினம் தில்லியில் சுற்றுலா நடுத்துனர் அளித்த  அடையாளத்திற்காக எண் இட்ட  தண்ணீர்புகா பெரிய  பை மற்றும் கிரி வலத்தின் போது பொருட்களை எடுத்த செல்ல பயன்படுத்த வேண்டிய சிறிய தோள் பையையும் பெற்றுக்கொண்டோம். பின் வெளி நாடு செல்லும் போது எடுக்க வேண்டிய காப்பு (Insurance) எடுத்தோம். மற்றும் யாத்திரைக்கு வேண்டிய பொருட்களை வாங்கினோம்.அடுத்த நாள் அதாவது 29/05/12 மாலை  3:30 மணி  Spicejet விமானம் SG – 45 மூலம் 30 யாத்திரிகள் ஆலமுண்ட நீலகண்டனைக் காணும்   ஆவலில் காத்மாண்டிற்கு புறப்பட்டு சென்றோம்


ஒவ்வொரு பதிவிலும் திருக்கயிலாயப் பதிகங்களின் ஒரு பாடல் இடம்பெறும். திருக்கயிலைநாதனைக் காணும் ஆவலினால் கை கால்களில் உள்ள எலும்பு தேயுமாறு ஊர்ந்து சென்று இறைவனருளால் திருவையாற்றில் திருக்கயிலை காட்சி கண்ட கலை வாய்மை காவலனார் திருநாவுக்கரசர் பதிகத்தின் முதல் பாடல்


கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு  முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (1)

பொருள் :  பொன்னும் வயிரமும் மற்றும் மேம்பட்ட சிறந்த இரத்தினங்களும் நிறைந்த கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்து விடும் அகந்தையுடன் அரக்கன் இராவணன் ஓடி வந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலேயே உமையம்மை அச்சம் கொள்ள, பாவமில்லாதவனாய் நிலை பெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் பெரு விரலை சிறிது ஊன்றிய அளவிலே  அவன் அலறிக்கொண்டு  செயலற்று கீழே வீழ்ந்தான். எம்பெருமான்  நிலைபெற்ற மனத்தினனாய்  விரலை அழுத்தி ஊன்றி இருந்தால் அவன் மீண்டும்  கண் விழித்து  பார்த்திருக்கவே முடிந்திருக்காது.  
                                                                                                                                                                                                                                                                                                           யாத்திரை வளரும்.......

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படமும் பகிர்வும் அருமை...

எத்தனை எத்தனை விளக்கங்கள்...

பகிர்வு சிறப்பு... நன்றி...

Kailashi said...

மிக்க நன்றி தனபாலன், தொடர்ந்து வாருங்கள்.

அரையாய் நிறை said...

miga arumai.nandri.kadaisiyil thirunavukarasarin padaaludan muditha vitham mikka nandru.tamilnatil ulla siva aalayangaluke sella iyalathavanai irukum en pondravanuku ungal pathivu payanullathai amainthathu.avan alulal avanai tharisipen ennum aavaludan irupen.nandri.

Kailashi said...

Many thanks அரையாய் நிறை ஐயா.
தங்களுக்கு கையிலாய தரிசனம் கிட்ட பிரார்த்திக்கின்றேன்.

கோமதி அரசு said...

அகண்டாகார சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளத்தை புசிப்பதற்கு சேர வாரும் செகத்தீரே! என்று அன்புடன் கை கூப்பி அழைக்கின்றேன்.//

கண்டிப்பாய் வருகிறோம்.

Kailashi said...

//கண்டிப்பாய் வருகிறோம்.//

தொடர்ந்து வாருங்கள் கோமதி அரசு. மிக்க நன்றி