Monday, January 21, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -3


காத்மாண்டு

பசுபதிநாதர் ஆலயம்

30-05-2012  அன்று அதிகாலை திவ்யமாக அனந்த சயன பெருமாளை தரிசனம் செய்த திருப்தியுடன் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு,  உடம்பை உயர்மட்ட பயணத்திற்காக தயார் செய்து கொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தங்கும் இந்த நாளை காத்மாண்டுவில் உள்ள  முக்கிய  இடங்களை காண     சிரேஷ்டா ஹாலிடேயினர் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் புறப்பட்டோம். முதலில் நாராயண ஹட்டி அரண்மனையை காண சென்றோம் அன்றைய தினம் விடுமுறை என்பதால் பிறகு பசுபதிநாதர் ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றோம்.  அரண்மனை புதன் மற்றும் வியாழன் விடுமுறை மற்ற நாட்கள் காலை 11:30  மணி முதல் 3:30 மணி வரை திறந்திருக்கின்றது.


  

பசுநாதர் ஆலய கருட முகப்பு 


காத்மாண்டு நகரின் கிழக்குப்பகுதியில் கங்கையைப் போன்று நேபாளிகள் புனிதமாக கருதும் பாக்மதி ஆற்றின் கரையில்  இவ்வாலயம் அமைந்துள்ளது. கோடானுகோடி சிவத்தலங்களில் தலைசிறந்தது இந்த பசுபதிநாதர் ஆலயம். பசு’ என்றால் உயிர். பதி’ என்றால் கடவுள். பாசம் என்னும் மலம் நீங்கினால் பசுவாகிய ஜீவாத்மா பதியாகிய பரமாதவாவை அடையலாம் என்னும் சைவ சித்தாந்தத்தின் படி  பசுக்களின் பதியாக பசுபதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் ஆதியுமந்தமும் இல்லா அருத்பெருஞ்ஜோதியான  சிவபெருமான். பசுபதிநாதர்    நான்கு திசைகளிலும் நான்கு திருமுகங்களை உடைய லிங்கமாக இங்கே எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் என்பது  சிறப்பு. கிழக்குத் திசை நோக்கிய முகத்துக்கு தத்புருஷம்’ என்று பெயர். மேற்கு நோக்கிய திருமுகம் சத்யோஜம்’, தெற்கு நோக்கிய முகம் அகோரம்’, வடக்கு நோக்கிய முகம் வாமதேவம்’. இந்த நான்கு திசைத் திருமுகங்களும் நான்குவிதமான பரிமாணங்களுடையது. நான்கு வேதங்களின் அடிப்படையேபசுபதிநாத் லிங்கத்தின் நான்கு முகங்களும். இந்து நாடாக இருந்து மதசார்பற்ற நாடாக மாறும் வரை நேபாளத்தின் தேசிய  தெய்வம் இந்த பசுபதிநாதர்தான். 




 விநாயகரும் சந்திரனும்





இறைவன் பசுக்களின் பதி என்பதால் இக்கோவிலில் பலி கிடையாது. தோல் பொருட்களை கோவிலுக்குள் கொண்டு செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே புகைப்படம் எடுக்கவும் அனுமதி இல்லை.  விலையுயர்ந்த பொருட்களை கோவிலின் வாயிலின் அருகில் உள்ள சாமான்கள் பாதுகாப்பு அறியில் வைத்து விட்டு செல்லலாம்.  ஆலயத்திற்கு நன்கொடை தருபவர்களும், சிறப்பு பூசை செய்பவர்கள்  இந்த அலுவலகத்தை தொடர்பு  கொள்ளலாம். ருத்ராக்ஷம் அதிகமாக நேபாளத்தில் விளைகின்றது. எனவே இங்கு ருட்த்ராக்ஷமும், சாளக்கிராமமும் வாங்கலாம்.      




முருகரும் சூரியனும்


நேபாளத்தில் கருடனுக்கு  ஒரு தனியிடம் உண்டு. நேபாளத்தில் உள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் அரண்மனைகளின் முகப்பில் கருடன் உள்ளார். பசுபதிநாதர் ஆலய முகப்பிலும் கருடன் உள்ளார். சிம்மங்கள் வாயிலை காவல் காக்கின்றன. சூரிய சந்திரனும். விநாயக முருகனும் எழில் கூட்டுகின்றனர். மேலே திரிசுலம் உடுக்கை, கமண்டலம் கரங்களில் ஏந்தி அபயம் அளிக்கும் கோலத்தில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார்.       

தங்க விமானம் 


பசுபதி நாதர் ஆலயத்தில் நுழையும் போது விஸ்வரூப  தங்க முலாம் பூசிய நந்தியை தரிசனம் செய்கின்றோம். இவ்வாலயத்தில் மூன்று நந்திகள்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தில் விஸ்வரூப நந்தி உள் பிரகாரத்தில் வெள்ளி நின்ற நந்தி உள்ளே அமர்ந்த நந்தி.    கோயில் தங்க கலசத்துடன் இரண்டடுக்கு நேபாள பாணி   நகார கூம்பு வடிவ விமானத்துடன் எழிலாக நான்கு வாசல்களுடன்  விளங்குகின்றது. தங்க ஓடு வேய்ந்த கூரைகளை தாங்கும் மரச்சட்டங்களிலும்  சுவர்களிலும்  அருமையான சிற்பங்கள். பாரத கதையுடன் தொடர்புடைய பல கதைகள் இச்சிற்பங்களில் இடம் பெற்றுள்ளன. மஹா பாரதத்திற்கும் பசுபதிநாத் ஆலயத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு அது என்ன என்று பார்ப்போமா?








பசுபதிநாதர் ஆலய முகப்பு



மஹா பாரதப் போரில் தமது சகோதரர்களையே    கொன்றதனால் பாண்டவர்கள் கோத்ரா ஹத்யா என்னும் பாவத்திற்கும், ஆசார்யர்களை கொன்றதனால் பிராமண ஹத்யா என்னும் பாவத்திற்கும் ஆளாகின்றனர்பாவ விமோசனம் பெற அவர்கள் சிவ பெருமானை தரிசிக்க செல்கின்றனர்.  காசியில் பரம் கருணா மூர்த்தி இல்லாததால் அவர்கள் கைலாயத்தில் உள்ள பெருமானைக் காண இமயமலை வருகின்றனர்.  அவர்களை ஹரித்வார் அருகில் கண்ட அந்த நீலகண்டர்  அவர்களுக்கு தரிசனம் தர விரும்பாமல்  மறைந்து விடுகிறார்.    இதைக்கண்ட தர்மர் இவ்வாறு கூறுகின்றார், " பிரபோநாங்கள் பாவம் செய்திருக்கின்றோம் அதற்காகவே தங்களை தரிசித்து பாவ விமோசனம் பெற வேண்டி தங்கள் பாதம் பணிய வந்தோம்ஆயினும் தாங்கள் இன்னும் மனமிரங்கவில்லைதங்கள் திருவடி தரிசனம் தந்தே ஆக வேண்டும் , தாங்கள் மறைந்த இந்த இடம் குப்த காசி என்று அழைக்கப்பட வேண்டும்என்று வேண்டினார்குப்த காசியிலிருந்து பாண்டவர்கள் கௌரி குண்டத்தை அடைகின்றனர்அங்கு ஒரு மாட்டு மந்தையில் ஒரு நந்தியை  (எருமை என்பாரும் உண்டுநகுல சஹாதேவர்கள் காண்கின்றனர் அதன் கம்பீரத்தைப் பார்த்து சிவபெருமானே இவ்வாறு உருமாறி சோதிக்கின்றார் என்பதை உணர்ந்த அவர்கள் பீமனிடம் கூற பீமனும் தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அந்த காளையைத் துரத்த தொடங்குகின்றான்அவனிடமிருந்து தப்பிக்க எம்பெருமான் ஓட ஆரம்பிக்கின்றார்அவனிடமிருந்து தப்பிக்க எம்பெருமான் பூமிக்குள் பாய்கின்றார் ஆயினும் பீமன் அவரது திமிலைப் பிடித்து விடுகின்றான்அந்த இடத்தில் ஜோதிப் பிழம்பாக எம்பெருமான் தோன்றி பாண்டவர்களுக்கு பாவ விமோசனம் வழங்குகிறார்உங்கள் நிமித்தமாக நான் இங்கேயே ஜோதிர் லிங்கமாக விளங்குவேன் இங்கு என்னை தரிசனம் செய்பவர்கள் என்னுடைய பரம பக்தர்கள் ஆவார்கள் என்றும் வரம் தருகின்றார்எனவே அந்த இடத்திலேயே எம்பெருமான் திமிலின் வடிவமாக ஜோதிர்லிங்கமாக கேதாரீஸ்வரராக கோவில் கொள்கின்றார்பாவ விமோசனம் பெற்ற பாண்டவர்கள் பின் மேலே சென்று பத்ரிநாதரை தரிசனம் செய்து பின்னர்  மோட்சம் அடைகின்றனர். அவ்வாறு ஐயன் பாய்ந்த போது அவரது மற்ற அங்கங்கள் மற்ற இடங்களிலும் வெளிப்படுகின்றன,  ஐயனின் லை பகுதி வெளிப்பட்ட இடம் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத்தொப்புள் மதுமஹேஸ்வரரிலும்கரங்கள் துங்கநாத்திலும்முகம் ருத்ரநாத்திலும்ஜடாமுடி கப்லேஸ்வரிலும் வெளிப்பட்டன. அப்பொது ஐயனின் முன் பாகம் இந்த பசுபதிநாத்தில் வெளிப்பட்டது  இந்த  ஐந்து இடங்களும் பஞ்ச கேதாரம் என்று அழைக்கப்படுகின்றது. பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளித்த சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். 




பாபுவுடன்  அடியேன்


அருள் வழங்கும் பசுபதிநாதர்


மையத்தில் கர்ப்பகிரகம் அமைந்துள்ளது. இரண்டு சுற்று பிரகாரம் ஆலயமெங்கும் அநேக சிறிய சன்னதிகள், ஆயிரக்கணக்கான லிங்கங்கள்,  பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் தங்களால் முடிந்த படி சன்னதி அமைத்து  சிவலிங்க பிரதிஷ்தை செய்கின்றனர் அல்லது வெளியிலேயே அப்படியே சிவலிங்க பிரதிஷ்தை செய்கின்ரனர் போல உள்ளது.  ஒரு சிறிய அனந்த நாராயணர் பிரதிஷ்டையையும்  காணலாம்.   குறிப்பாக பைரவர் சன்னதி,  108  சன்னதி , மற்றும் நாகலிங்க சன்னதிகள் அருமை. நாங்கள் சென்ற சமயம் ஐயனுக்கு ருத்ரன் ஒதப்பட்டு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. இக்கோவிலின் பூசாரிகள், ஆதி சங்கரரால் நியமிக்கப்பட்டபடி நம்பூதிரி பிராமணர்கள் ஆவர். ஆலமுண்ட நீலகண்டனை, அருள் மழை பொழியும் அண்ணலை, தரிசனமும் கிரிவலமும் செம்மையாக நிறைவு பெற உனது அருள் வேண்டும்  என்று மனமுருக வேண்டி நின்றோம்.


திருக்கோவிலின் முன் வாயிலில் எங்கள் குழுவினர்



 உள் பிரகாரத்தில் சுற்றி வந்து ஒவ்வொரு முகத்தையும் தரிசனம் செய்து அந்தந்த முகத்திற்குரிய ஸ்தோத்திரங்களை கூறி வணங்கினோம். அவன் அருளால்தானே அவன் தாள் வணங்க முடியும். வெளி பிரகாரத்தில்  கை கூப்பி வணங்கிய நிலையில் நேபாள அரசர் சிலை வைத்துள்ளனர், மற்றும்  விஸ்வரூப நந்தி அவருக்கு அருகில் அனுமன்  ஆகியோர்களை    தரிசித்தோம்.  108 லிங்க சன்னதியில் சுற்றி சுற்றி வந்து    108 லிங்கங்களையும் தரிசித்தோம்.  வெளியே வரும் போது சிவசக்தி தரிசனம் ஆம் நுழைவு வாயயிலின் பின் புறத்தில் சிவசக்தி சுதை சிற்பம் அருமையாக உள்ளது.    



முழுமுதல் கடவுள் கணேசர்

 நேபாள கதவுகள்

அநேகமாக எல்லா ஆலய கதவுகளும் இவ்வாறுதான் உள்ளன. இரு பக்கமும் சிம்மம் காவல் புரிகின்றது.  கதவில் சூரிய சந்திரர்கள், புத்தர்களின் அஷ்ட மங்கல பொருட்கள் மற்றும், கண் திருஷ்டி பதாமல் இருக்க கண் அமைத்துள்ளனர்.




திறந்த வெளியில் அமைந்துளள ஒரு சன்னதி. 



கோயில் வளாகத்தை சுற்றி ஏகப்பட்ட புறாக்கள், தானியம் வாங்கி இறைப்பவர்கள் அநேகர். அடுத்து  அம்மனின் ஆலயமான குஹ்யேஸ்வரி சென்றோம் அந்த விவரங்களை அடுத்த பதிவில் காணலாம்.    


திருநாவுக்கரசர்  தேவாரம் 

திருக்கயிலாயம் 


சைதை காரணீஸ்வரர் திருக்கயிலாய வாகன சேவை

கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலு மங்கை யஞ்ச வானவ ரிறைவ னக்கு
நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.


பொருள் :

கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான் . மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

  யாத்திரை வளரும்.......

No comments: