Tuesday, May 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -11 (திருக்கயிலாய யாத்திரை-2012)

ஜாங்மூவிலிருந்து நைலாம் பயணம் 

ஜாங்மூவிலிருந்து நைலாம் செல்லும்  தார் சாலை
(தற்போது டார்ச்சன் வரை பாதை இது போல அருமையாக உள்ளது)


மறு நாள் காலை சூரிய உதயம் அருமையாக உதித்தது தன் செவ்வண்ணக் கதிர்களினால் சூரியன் அந்த ஜாங்மூ நகரத்தை தழுவும் அழகைக் கண்டு களித்தோம். பனி உருகி விட்டதால் நகரமெங்கும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலைப்பிரதேசம் என்பதால் அடுக்கடுக்காக நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. நகரின் நடுவே பெரும்பாதை செல்கின்றது. இன்றைய தினம் நைலாம் நகரில் தங்க வேண்டும் என்பதாலோ என்னவோ வண்டி ஓட்டுநர் தாமதமாக வந்தார்.

பாம்பு போல வளைந்து செல்லும் பாதை
வழியில் உள்ள ஒரு  சுரங்கப்பாதை

எனவே காலை உணவை முடித்து விட்டு நாங்கள் ஜாங்மூ நகரை சிறிது  சுற்றி வந்தோம். எல்லைப்புற நகரம் என்பதால் நகரம் முழுவதும் கடைகள் நேப்பாளத்தில் இருந்து வருபவர்கள் மொத்தமாக பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். பலதரப்பட்ட ஒப்பணை (Cosmetics) பொருட்கள் விற்கும் கடைகளைப் பார்த்தோம். இந்நகரில் ஒரு இந்துக் கோவிலும் உள்ளது. நகரத்தை சுற்றி வந்து அழகான குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு வண்டி ஓட்டுநர் வந்தவுடன் நைலாமிற்கு புறப்பட்டோம்.

                         


வழியில் ஒரு அருவி

வண்டியில் ஏறிய உடன் ஒரு பாட்டில் குடிநீர் அனைவருக்கும் வழங்கினர். முன்பே கூறியது போல பாதை இரட்டை வழி தார்ச் சாலை மலையிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டாலும் அதை பாதையை அடைக்காதவாறு பல இடங்களில் தடுப்பு சுவர்களும் வலைகளும் அமைத்திருக்கின்றனர் மழைத் தண்ணீர் ஓடுவதற்காக கால்வாய்கள் அமைத்திருக்கின்றனர். பல்வேறு லாரிகள் நேபாளத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் ஓரமாகவே பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு பக்கமும் பல பனி முடிய சிகரங்களை கண்ணுற்றோம். 

      
                                                               குளு குளு வண்டியில் எங்கள் குழுவினர்

ஒரு கொண்டை ஊசி வளைவு
********************************

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்

திருக்கயிலாய மலையை  எம்பிரான் தோழர்  சுந்தரர் நொடித்தான்மலை என்று போற்றிப் பதிகம் பாடியுள்ளார்.  நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல் தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது. 

  

சுந்தரர் வெள்ளை யானையில் திருக்கயிலாயம் சென்ற விழா திருமயிலையில் கொண்டாடப்படும் அழகை இங்கு சென்று படியுங்கள்தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள் புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை உத்தமனே (1)

பொருள்: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்த்ருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான். தோற்றுவித்த அத்திருக்குறிப்பினையுணர்ந்து அவரது பொன் போலும் திருவடிகளுக்கு அந்தோ, எவ்வளவில் பாடல் செய்தேன்!  செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது , என்னை தன் அடியார்களுள் ஒருவனாக்  வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர் கொள்ளுமாறு, பெரியதோர் வெள்ளை யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; அவன் திருவருள் இருந்தவாறு என்!


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் இனிய பயணம்... நன்றி...

Muruganandam Subramanian said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்