Tuesday, June 04, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -18 (திருக்கயிலாய யாத்திரை-2012)

பைகு சோ ஏரியின்  கரையில்

வழியில் ஒரு அழகிய பனிச் சிகரம்

 பனி உருகி நீர் ஓடி வரும் ஒரு கால்வாய்

மதியம் உணவருந்திய விடுதி
(குளிர் அதிகமாக இருப்பதால் கதவுகள் மூடப்பட்டுள்ளன)


பைகு சோ ஏரி



ஏரியின் கரையில் குப்தா அவர்கள்


சாலையில் குழுவினர் 


விடுதியின் உட்புற அழகிய  வர்ண ஓவியங்கள்

இவர்கள் பயன்படுத்தும் அடுப்பு


திபெத்திய  குடும்பத்தாருடன் சுதார் 

சுதார் மற்றும் முகர்ஜி

லா லுங் லா கணவாயை கடந்து பயணம் செய்து வழியில் இமயமலையின் வரை ஆடு, கழுகு, காக்கை ஆகிய சில வன விலங்குகளையும் கண்ணுற்றோம், மொட்டை மலைகளில் ஊர்களின் பெயரை சுண்ணாம்பு கொண்டு எழுதியிருப்பதை பார்த்தோம். அங்கங்கே பனி உருகுவதால் ஓடி வரும் சிறு ஆற்றினால் விளைந்துள்ள சிறு புற்களை யாக் மற்றும் செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். உலகின் கூரை எனப்படும் இப்பகுதியில் மழை பெய்வதே இல்லை.

மதிய வேளைக்கு  4591மீ உயரத்தில் அமைந்துள்ள  பைகு சோ (Paiku Tso) என்னும் பெரிய ஏரியை அடைந்தோம், இதன் எதிரே உள்ள ஒரு உணவு விடுதியில் எங்களுக்கு உணவு பரிமாறினர். அப்பக்கம் பல பனி மூடிய சிகரங்களைக் கண்டோம். சேர்பாக்கள் காலையில் கிளம்பும் போதே சப்பாத்தி, கறி மற்றும் பருப்பு தயார் செய்து விடுகின்றனர். மதிய வேளையின் போது ஏதாவது ஒரு உணவு விடுதியில் நிறுத்தி சிறிது சூடு செய்து உணவு வழங்குகின்றனர். இந்த விடுதியின் உட்புறத்திலும் மற்ற திபெத்திய வீடுகள் போல பல வர்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர். .  இவர்கள் துருத்தி போன்ற ஒரு அடுப்பை பயன் படுத்துகின்றனர் அதற்கு எரி பொருளாக யாக்கின் சாண வரட்டி பயன்படுத்துகின்றனர். இந்த அடுப்புடன் இனைந்த புகைப்போக்கியில் எப்போதும் கரும் புகை வந்து கொண்டிருக்கும். 

மூன்று  பக்கங்களில் நெடிதுயர்ந்த பனி மூடிய சிகரங்களைக் கொண்ட மலைகள் சூழ பைகு ஏரி மிகவும் இரம்மியமாக காட்சியளிக்கின்றது. இந்த ஏரி (4591 மீ – 15070 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இதன் விஸ்தீரணம் நீள வாக்கில் 27 கி.மீ குறுக்கு வாக்கில் 6கி.மீ  கொள்ளளவு சுமார் 330 சதுர கி.மீகள் ஆகும். அதனால்தான் நாங்கள் வைத்திருந்த எந்த புகைப்பட கருவியினாலும் இந்த ஏரியை முழுதுமாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. மலை உச்சியில் உறைந்துள்ள  பனி உருகி பாய்ந்து வரும் தண்ணீர் மணல் பகுதியில் பாய்ந்து பின்னர் இந்த ஏரிக்கு வந்து சேருகின்றது. இந்த ஏரி  பெரிய கிண்ணம் போன்ற ஒரு பீடபூமியில் அமைந்துள்ளாதால் இது நிரம்பி இதன் தண்ணீர் எங்கும் பாய்வதில்லை.இது ஒரு உப்புத் தண்ணீர் ஏரி. ஒரு பக்கம் பனி மூடிய மலை மறுபுறம் ஏரி என்று இவ்விடம் திருக்கயிலாயத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றது. இங்கு பலருக்கு சாப்பிட மனமே இல்லை ஆயினும் எதையே வயிற்றில் போட்டுக்கொண்டே சென்றோம். உயர் மட்டங்களில் பயணம் செய்யும் போது சாப்பிடப் பிடிக்காது , சாப்பிடும் போதும் மூச்சிரைக்கும் ஆகவே மெதுவாகத்தான் சாப்பிட முடியும், மேலும் உயர் மட்டத்தில் அதிக நேரம் பயணம் என்பதாலும் பசியே இருக்காது. ஆனாலும் எதாவது சாப்பிட்டுக்கொண்டும் தண்ணீர் அருந்திக்கொண்டு செல்வதுதான் சிறந்தது.  

முன்னும் பின்னும் எந்த போக்குவரத்தும் இல்லை, வெண்ணெய் போல வழுக்கிக்கொண்டும் ஓடும் தார் சாலை என்பதால் வண்டி ஓட்டுநர், எச்சரிக்கை ஒலியை எழுப்பிக்கொண்டே பேருந்தை அநாயசமாக ஒட்டிக்கொண்டு சென்றார். வெளியே  பெருங்காற்று வீசிக்கொண்டிருப்பது கிளம்பும் தூசியின் மூலம் தெரிந்தது. பேருந்து குளு குளு வண்டி என்பதால் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இருந்தது. வழியில் போக்குவரத்து இருக்கின்றதோ இல்லையோ பல இடங்களில் சோதனை சாவடிகள் மட்டு  உள்ளன. வண்டியை நிறுத்தி பயணிகள் அனைவரும் சரியாக உள்ளனரா? என்று சரி பார்த்த பின்னரே முன்னே செல்ல அனுமதிக்கின்றனர். இந்த மாதிரி சமயங்களில் மட்டும் எங்கள் சீன வழிகாட்டி வந்து அனுமதி சீட்டை காண்பித்து செல்கின்றார். இவ்வாறு பயணணணணணணம் செய்த பின் பிரம்மபுத்ராவின் கரையை அடைந்தோம்.

****************************************
சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பாசுரம்

வெள்ளை யானையில் திருக்கயிலாயம் ஏகும் சுந்தரர் 

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார்  "நொடித்தான் மலை" என்று போற்றிப் பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும்( நொடித்தல்- அழித்தல்). அழித்தல் தொழிலையும் உடைய உருத்திரமூர்த்தி ரூபமாக ஐயன் எழுந்தருளியிருப்பதாலும் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.

திருமயிலையில் ஆடி சுவாதியன்று சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அதைக் காண இங்கு செல்லுங்கள்


அரவொலி ஆகமங்கள் அறி வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஓலி விண் ணெலாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி தந்தெனக் கேறுருவதோர்
சிரமலி யானை தந்தான்   நொடித் தான்மலை உத்தமனே (8) 

பொருள்: "ஹர ஹர" என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாக்களின் ஒலியும், பல்வேறு வகையாக பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுவதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த வாணன் என்னும் கணத்தலைவன் வந்து , முன்னே வழி காட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை    திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், எனக்கு அளித்து அருளினான் ;  அவன் திருவருள்தான் என்னே! 


தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க
யாத்திரை தொடரும்....................

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வயிறு முட்ட உடனே சாப்பிட முடியாது...!

படங்கள் மிகவும் அருமை...

பயணம் தொடரட்டும்...

S.Muruganandam said...

//வயிறு முட்ட உடனே சாப்பிட முடியாது...!//

உயர் மட்டம் என்பதால் சுத்தமாக சாப்பிடவே பிடிக்காது, சாப்பிட்டாலும் வாந்தி வருவது போல் இருக்கும், ஆனாலும் சாப்பிடாமல் பயணம் செய்தால் உடல் நலம் கெடும்.

மிக்க நன்றி தனபாலன். பயணம் தொடரும் ஐயனின் தரிசனமும் கிரி வலமும் பாக்கியுள்ளதே.