Wednesday, June 05, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -19 (திருக்கயிலாய யாத்திரை-2012)

பிரம்மபுத்ரா பாலம்

பிரதி பிம்பம்

பிரம்மபுத்ரா ஆறு








பிரம்மபுத்ரா பாலம்



பாலத்தின் அலங்கார வளைவு

சாகா நகரக் காட்சிகள்






பிரம்மபுத்ரா ஆறு திருக் கயிலாய மலையிலிருந்து உற்பத்தியாகி ஸாங்-போ, யார்லங் சாங்போ என்ற பெயரில்  திபெத்தில் ஓடி, இந்தியா மற்றும்  வங்காள தேசம் ஆகிய நாடுகள்  வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. மொத்தம் 2800  கி.மீ தூரம் ஓடும் இந்த ஆறு, சுமார் 1700 கி.மீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளில் கிழக்கு நோக்கி பாய்ந்து பிறகு நாம்சா-படுவா மலையருகே தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசலப் பிரதேசத்தில் சியாங் என்ற  பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப் பகுதியில் இந்நதி திகாங் என்று அழைக்கப்படுகின்றது. சமவெளிப்பகுதியில் 35  கி.மீ தொலைவு கடந்த பின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகலோடு சங்கமம் ஆகி மிகவும் அகன்ற ஆறாக மாறி, பிரம்மபுத்ரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகின்றது.

  அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒரு சில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜூலித்தீவு என்று அழைக்கப்படுகிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா  என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளை ஆறான   பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.பொதுவாக இந்தியாவில் நதிகளை பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது. மேலும் நேரடியாக கடலில் கலக்காத ஆறு பிரம்மபுத்ரா ஆகும்.


பத்து வருடங்களுக்கு முன்னர் சாகா அருகே பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே பாலம் இல்லை எனவே அப்போது வண்டிகள் கூட படகுகளின் மூலமாகத்தான் அக்கரை கொண்டு செல்லப்பட்டன. மேலும் படகுகள் பகலில் மட்டும்தான் இயக்கப்பட்டதால் பலர் இக்கரையிலேயே இரவில் தங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. சீன அரசு இங்கு பாலம் கட்டிய பின்னர் யாத்திரிகள் மிகவும் சுலபமாக பிரம்மபுத்ராவை கடக்க முடிகிறது. பாலத்தின் இரு மருங்கும் பஞ்ச வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

மாலை சுமார் 3 மணி( சீன நேரம்) அளவில் சாகாவை (4267 மீ, 15233 அடி)  அடைந்தோம். சாகா என்றால் மகிழ்ச்சி பிரதேசம் என்று பொருள். திருக்கயிலாயம் செல்லும் இவ்வழியில் சாகா ஒரு பெரிய நகரம். பிரம்மபுத்ரா நதி மற்றும் டார்க்யே சாங்போ நதிகளின் சங்கமம் , மற்றும் நாம் பயணம் செய்யும் நைலாம் லாஸா சாலை, பூராங் (தக்லகோட்டிலிருந்து) வரும் சாலை மற்றும் ஜோங்காவிலிருந்து  வரும் சாலை ஆகிய மூன்று சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது இந்நகரம். சீன நேபாள எல்லையை பாதுகாக்கும் இராணுவ படையினரின் நிலையங்கள் இந்நகரில் உள்ளன. யாரும் இந்நிலையங்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர். சாகாவில் பல வசதிகளுடன் கூடிய ஹோட்டல்கள் உள்ளன.

சாகா சென்ற பிறகுதான்  இந்நகரில் தங்கப்போவதில்லை இதற்கடுத்த கிராமத்தில் சென்று தங்கப்போகிறோம் என்று எங்களுக்குக் கூறினார்கள். சாகாவில் இருந்து பாதை சரி செய்யும் வேலை நடை பெறுவதால் வழியை மாற்றி அனுப்பினர் முன்னர் பல அன்பர்கள் கூறியிருந்தது போல மண்பாதை ஏகப்பட்ட மேடு பள்ளங்களுடன் இருந்தது. சுமார் 4 கி.மீ பயணம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. பின்னர் நல்ல பாதைக்கு வந்து சாகாவிலிருந்து  சுமார் 145 கி.மீ பயணம் மாலை மயங்கும் நேரத்தில்  பழைய ட்ரோங்போ  என்ற சிறு நகரை அடைந்தோம். அங்கு திபெத்திற்கே உரிய மண் வீட்டில் எங்களை தங்க வைத்தனர். சாகாவில் நல்ல அறையில் தங்க வைக்காமல் இவ்வாறு ஒரு கிராமத்தில் மண் வீட்டில் தங்க வைத்தது,  எங்கள் குழுவினரில் பலருக்கு பிடிக்கவில்லை. ஸ்ரேஷ்டா நிறுவனத்தினரை கூப்பிட்டு பேசியும் பயனில்லை  நிச்சயமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. இன்றைய தினம் சனி மஹா பிரதோஷ தினம் என்பதால் ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்தோம். அதிகாலையில் இருந்து மாலை வர பயணம் செய்த களைப்பினால் பின்னர் மிகவும் வேண்டிய ஓய்வெடுத்தோம். பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த கிராமத்திலும் சூரிய ஒளியால் இயங்கும்  இன்றைய தினம் கணவாய்கள், ஏரிகள் மற்றும் பனி மூடிய சிகரங்களின் நாளாக அமைந்தது.

*********************** 

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பாசுரம்

வெள்ளை யானையில் திருக்கயிலாயம் ஏகும் சுந்தரர் 

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார்  "நொடித்தான் மலை" என்று போற்றிப் பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும்( நொடித்தல்- அழித்தல்). அழித்தல் தொழிலையும் உடைய உருத்திரமூர்த்தி ரூபமாக ஐயன் எழுந்தருளியிருப்பதாலும் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.

திருமயிலையில் ஆடி சுவாதியன்று சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அதைக் காண இங்கு செல்லுங்கள்



இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான்  நொடித் தான்மலை உத்தமனே (9) 



பொருள்: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன் எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானையூர்தியை அளித்தருளி, அங்கு மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள்,  "இவன் யார்" என்று வினவ, "இவன் நம் தோழன்"; "ஆருரன்"      , என்னும் பெயரினன் என்று திருவாய் மலர்ந்து அருளினான் ;  அவன் திருவருள்தான் என்னே! 


தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க
யாத்திரை தொடரும்....................

No comments: