Thursday, June 06, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -20 (திருக்கயிலாய யாத்திரை-2012)

பழைய டாங்போ

 தங்கிய விடுதி

ஹிமான்சு

ரேஷ்மி மஹாஜன்


மனிஷ்குமார், கைலாஷ் கௌசிக், சதீஷ் கௌசிக்


அதிகாலையில்சுடு தண்ணீர் வழங்கும்  லாரி

குளிருக்கு இதமாக வெயில் காயும்
குப்தா, ஹிமான்சு
எடி அஹர்வால்


அருகில் இருந்த ஒர் கடை

ஐயனைக் காண செல்கின்றோம்

வழியில் ஒரு மணல் குன்று

வழியில் ஒரு கிராமம் மின் வசதியுடன்

பிரயாங்கில் டயரை சரி செய்கின்றோம்


பிரயாங் நகரம்


6ம்நாள் பழைய ட்ராங்போ – மானசரோவர் பயணம்
மறு நாள் காலை எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பே இன்றுதானே ஐயனின் முதல் தரிசனம் செய்யப்போகிறோம் என்ற ஆவலுடன் எழுந்து, வெளிப்புறம் சென்று காலைக்கடனை  முடித்தோம். செக்கர் வானத்தில் தங்க  சூரிய உதயத்தை கண்டு களித்தோம். சேர்ப்பாக்கள் காலை சுடு தண்ணீர் தருகின்றனர் ஆகவே காலைக் கடன்களை சுலபமாக செய்ய முடிகின்றது. உயரம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் குளிரும் அதிகமாகிக் கொண்டே வந்ததது, கம்பளி ஆடைகள் அதிகமாவதால் உடலின் எடையும் கூடியது. நாங்கள் தங்கிய அந்த விடுதி ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதை கவனித்தோம். வழக்கம் போல் காலை உணவை முடித்து விட்டு மானசரோவர் கரையை நோக்கி புறப்பட்டோம் இந்நகருக்கு அருகிலேயே புது டாங்போ என்னும் நகரம் உள்ளது. இந்நகரில் ஒரு அருமையான புத்த விகாரம் உள்ளதைப் பார்த்தோம். இன்று நமக்கு திருக்கயிலாயத்தின் முதல் தரிசனம் கிடைக்குமென்று சேர்ப்பா சோனம் கூறினார். அந்த மகிழ்ச்சியில் இன்னும் அதிக வேகமாக ஓட்டுநர் பேருந்தை வழுக்கி(ஓட்டி)க் கொண்டு சென்றார் .

சாலையின் இரு பக்கமும் வெறும் மணல் தூரத்தில் பனி மூடிய சிகரங்கள் எங்கும் மக்கள் வசிக்கும் அறிகுறியே இல்லை. ஆனால். இயற்கையின் விளையாடலை வியக்காமல் இருக்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகம் என்பதால் மணல் புயல்கள் ஏற்பட்டன. நொடிக்கு நொடி பெருங்காற்று வீசுவதால் வித விதமாக மாறும் மணல் குன்றுகளை கண்டு களித்தோம். இந்த காட்சி துபாயை நினைவு படுத்தியது. சுமார் 500 கி.மீ தூரத்திற்குள் பசுமைப் பகுதி, கல் மலை, மணல் மலை, பனி மூடிய மலைகள் என்று  பல விதமான நிலப்பகுதிகளையும் படைத்த அந்த ஆண்டவனை வணங்கினோம். பல மணல் புயல்கள் பாதையை கடந்தும் சென்றன. சுத்தமாக ஆட்களின் நடமாட்டம் இல்லை எங்கோ யாக் மற்றும் செம்மறி ஆடுகள் அது பாட்டிற்கு மேய்ந்து கொண்டிருந்தன அவைகளுக்கு காவலாக சடை நாய்கள் உள்ளன. மனிதர்கள் இல்லாத போதிலும் இந்த நாய்கள் மற்ற விலங்குகளை காக்கின்றன.  சிறிது தூரம் பயணம் செய்த பின் பிரயாங்(Prayang) என்னும் சிறு நகரைக் கடந்தோம். இங்கு சிறிது நேரம் நின்று வண்டியின் ஒரு டயரை பழுது பார்த்தோம்.   


*********************** 

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பாசுரம்

நால்வர் 

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார்  "நொடித்தான் மலை" என்று போற்றிப் பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும்( நொடித்தல்- அழித்தல்). அழித்தல் தொழிலையும் உடைய உருத்திரமூர்த்தி ரூபமாக ஐயன் எழுந்தருளியிருப்பதாலும் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.

திருமயிலையில் ஆடி சுவாதியன்று சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அதைக் காண இங்கு செல்லுங்கள்



ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே (10) 



பொருள்: ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை  மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திருநாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழையுடையனவாகவும்,     கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமனோடு ஒன்றுபட்டுப் பாடிய இப்பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும்பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.



தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நாங்களும் கூடவே பயணிக்கிறோம்...

படங்கள் அருமை...

S.Muruganandam said...

அவசியம் தொடருங்கள் தனபாலன், ஐயனின் அருகில் வந்து விட்டோம் இன்னும் தரிசனம் பாக்கியுள்ளதே