Sunday, June 16, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -28 (திருக்கயிலாய யாத்திரை-2012)

மஞ்சு கொஞ்சும் மானசரோவரில் புனித நீராடல்


 மானசரோவர் தீர்த்தம் உறைந்திருந்தது 
( சுதார் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்)

மிதக்கும் பனிக் கட்டிகள்
மஞ்சு கொஞ்சும் மானசரோவரம்

பனியில் சூரிய ஒளி பிரதிபலிக்கும் அழகு


பனியை உடைத்து குவளையில் தண்ணீர் முகர்ந்துதான்
 குளிக்க முடிந்தது


சமையலுக்கு தண்ணீர் முகர்க்கும் சேர்ப்பாக்கள்


 உறைந்த தடாகத்திலும் உள்ளே சென்று 
தீர்த்தம் சேகரித்து வரும் ஒரு அன்பர்

(உச்சி மீது வான் இடிந்து வீழினும் 
அச்சமில்லைஅச்சமில்லை என்பதே)

எடியின் புனித நீராடல்

சிற்றம்பலம் பாடி
சீதப்புனலாடும்
பங்கஜ் குப்தா .......

உடை மாற்றி.......


சிரத்தையாக அர்க்யம் கொடுக்கிறார்

ஹர்சித்  புனலாட ஹிமான்சு உதவுகிறார்


தீர்த்தமாடிய பின் திருக்கயிலை நாதருக்கு  திருப்பல்லாண்டு

திரு வைஷ்ணவ்


பொன் வாத்து

மானசரோவரில் கூடு கட்டி
வாழ்ந்திருக்கும் நீர்ப் பறவை ஜோடி

மேற்படத்தில் கூட்டின் மேல் அமர்ந்திருந்த
 பெண் பறவை இப்படத்தில் தண்ணீரில்

உடை மாற்ற வசதியாக மறைவிடங்கள்
கரையெங்கும் அமைத்துள்ளனர்

முதல் தடவையாக(அடியேன் தவிர) மானசரோவரில் புனித நீராட வேண்டும், மானசரோவரின் கரையில் ஹோமம் செய்ய வேண்டும் பின்னர் டார்ச்சன் சென்று சாகா தாவா பண்டிகையை கண்ணுற வேண்டும் என்று எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன் அந்த நாள் யாத்திரையின் ஏழாம் நாள் (04.06.12) சுபமாக விடிந்தது. அதிகாலையில் எழுந்த உடன் தடாக கரைக்கு சென்று அருணோதய காலத்தில் இன்னும் முழு மதி காட்சி தர வானம் செக்கச் செவேல் என்று மாறும் அழகையும். சூரியன் தோன்றியவுடன் மானசரோவர் உருக்கி ஊற்றிய தங்கக் குழம்பு போல மின்னும் அழகையும் கண்ணுற்றோம் .சூரிய உதய காலத்தின் வர்ண ஜாலத்தை காண்பதற்கு ஏதுவாக மேக மூட்டம் இல்லாமல் இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அழகுடையது மானசரோவர். சேர்ப்பாக்கள் ஒரு பீப்பாயில் சுடு தண்ணீர் தயார் செய்து வைதிருந்தன  எனவே இந்த குளிர்ப் பகுதியில் எங்கள் காலைக் கடனை சிறிதும் சிரமமில்லாமல் முடிக்க ஏதுவாக இருந்தது. கயிலாய கிரி வலத்தின் போதும் காலை சுடு நீர் கிட்டியது. ஒன்றை மட்டும் இங்கு கூற வேண்டும் கொதிக்கின்ற நீர் அரை மணி நேரத்தில் குளிர்ந்து விடுகின்றது.

அன்றைய தினம் நமது வைகாசி விசாகம் - புத்த பூர்ணிமா நாள், சாக்கிய முனி பிறந்த, மஹா நிர்வாணம் அடைந்த மற்றும் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற நாள் என்று முப்பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். திபெத்தியர்கள் இந்த நாளை சாகா தாவா(Saga Dawa) என்னும் மஹா பிரார்த்தனை நாளாக கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் திருக்கயிலையிலே தென்முகத்தின் எதிரே யமத்துவாரத்தின் அருகே உள்ள பெரிய கொடி மரத்தை வருடா வருடம் மாற்றுகின்றனர். ஆகவே நாங்கள் அன்று அங்கு சென்று அப்பண்டிகையை  தரிசனம் செய்ய விரும்பினோம். ஆனால் எங்கள் சீன வழிகாட்டி திபெத்தியர்களுக்கு மட்டும்தான் டார்ச்சன் செல்ல அனுமதிக்கின்றனர் நாம் செல்ல முடியாது என்று கூறினார் திரு சுதார் அவர்கள் யாத்திரைக்கு பூர்வாங்கமாக அனுப்பிய பல செய்திகளில் இந்த பண்டிகையைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார், நாம் அனைவரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தானாகவே நமக்கு அன்றைய தினம் டார்ச்சனில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் எழுதியிருந்தார், ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல டார்ச்சன் செல்ல முடியவில்லை. எல்லாம் அவன் செயல் என்று மனதை தேற்றிக்கொண்டு, அந்த நாள் மானசரோவரின் கரையில் சிவசக்திக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் யாகம் சிறப்பாக செய்யலாம் என்று முடிவு செய்தோம். 

மறுநாள் அதிகாலை எழுந்து எல்லோரும் சிறிது தூரம் தள்ளி சென்று (முந்தைய  யாத்திரையின் போது நிறை ஹோமம் செய்த இடம்) ஏரி சுத்தமாக உள்ள இடத்தில் மானசரோவரில் புனித நீராடினோம். இந்த வருடம் புனித நீராட சென்ற போது மானசரோவரைப் பார்த்தவுடன் ஒரு அதிர்ச்சி, மேல் பகுதி தண்ணீர் இன்னும் உறைந்தே இருந்தது, நேற்று மாலை பார்த்த போது அலை வீசிக்கொண்டு தானே இருந்தது. ஒரு தண்ணொளி முழு நிலவால் இவ்வளவு மாற்றமா? என்று வியந்தோம்   தடாகத்தில் இறங்க  நீராடுவது உசிதம் அல்ல  என்பதால், அந்த பனியை உடைத்து தண்ணீரை குவளைகளில் தண்ணீரை முகந்து ஊற்றி  சிற்றம்பலம் பாடி  சீதப் புனலாடினோம். பின்னர்   மானசரோவர் கரையெங்கும் ஆங்காங்கே இந்த வருடம் பெண்கள் உடை மாற்றிக்கொள்ள ஏதுவாக தற்காலிக  மறைவிடங்கள்  பல அமைத்திருந்தனர்.

*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்

திருக்கயிலாயம்
பாடல் எண் : 9

ஊணாப்பலிகொண் டுலகிலேற்றா ரிலகு மணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்கு மெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலை மலையாரே.

பொருள் : கயிலைமலை இறைவர் உலகில் மகளிர் இடும் பலியை உணவாகக் கொண்டு அதனை ஏற்றவர். விளங்கும் மணிகளைக் கொண்டுள்ள நாகங்களை அனிகலனாகப் பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள் அடிமுடி காண விரும்பிச் சென்று தேட எங்கும் விளங்கும் எரியுருவோடு அவர்கள் காணாதவாறு உயர்ந்து நின்றவர்.


தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஜில்லென்ற படங்கள்... பயணத்தை தொடர்கிறேன்...

Muruganandam Subramanian said...

இன்னும் ஜில் ஜில் அனுபவங்கள் உள்ளன. அவசியம் தொடர்ந்து வாருங்கள் தனபாலன் ஐயா.