Thursday, May 23, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -14 (திருக்கயிலாய யாத்திரை-2012)

நைலாமில் மலையேற்ற பயிற்சி


மலை மேலிருந்து நைலம் நகரின் காட்சி

பொதுவாக உயர் மட்டத்திற்கு உடலை தயார் படுத்திக்கொள்ளும் வண்ணம் அனைத்து யாத்ரிகளூம் ஒரு நாள் நைலாமில் தங்கிய பிறகே செல்கின்றனர். அதே சமயம் மலையேற்றப் பயிற்சியும் மேற்கொள்கின்றனர். இரண்டு நாள் தங்கும் சில குழுவினர்   கைலாய மலையின் உச்சிக்கு சென்றவரான புத்த பிட்சு மில்ரெபா  அவர்கள் தங்கியிருந்த குகைக்கும் சென்று வருகின்றனர். இக்குகை சாகா செல்லும் வழியிதான் உள்ளது என்பதால் சில குழுவினர் செல்லும் போது அப்படியே வண்டியை நிறுத்தி குகையின் உள்ளே சென்று வணங்கி விட்டு செல்கின்றனர். நாங்கள் அரை நாள்தான் நைலாமில் தங்கியதால் மலையேற்ற பயிற்சி மட்டும் செய்தோம்  மலையின் உச்சியில் இருந்து கரும்பாம்பு போல தார் சாலையும், ஆறும் மட்டும் கட்டிடங்கள் நிறைந்த நைலாம் நகரமும் அருமையாக காட்சி தந்தது.


  
நைலம் நகரின் தற்போதய செழுமை 

மலை உச்சியில் எடி அஹர்வால்

அதிக போக்குவரத்து இல்லாத  அருமையான பாதை

மலை உச்சி வரை ஏறிய குழுவினர்

ஒரு காலத்தில்  இந்நகரம் நேபாள மக்களால் நரக நகரம் (City of hell)என்று அழைக்கப்பட்டதாம் அப்போது ஒன்றிரண்டு மண் வீடுகள்தான் இருக்குமாம், ஆனால் இன்று அநேக காங்ரீட் கட்டிடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் செல்வ செழிப்புடன் விளங்குகிறது.  எங்கள் குழுவினரில் பலருக்கு இது முதல் யாத்திரை என்பதால் அவர்களுக்கு இப்பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. முடியாதவர்கள் கீழேயே தங்கி விட்டனர்.


மலை ஏற்றப்பயிற்சி



Dimoxமருந்து சாப்பிட்டதாலோ அல்லது உயர் மட்டம் என்பதாலோ சிலருக்கு உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பிடிக்கின்றதோ இல்லையோ நாம் உணவு உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், அதுவும் திரவங்களை அதிகமாக அருந்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.    நாங்கள் தங்கியிருந்த இந்த விடுதியில் ஒரு கடை உள்ளது. அதில் அவர் யாத்திரைக்கு தேவைப் படும் அனைத்து பொருட்களையும் வைத்துள்ளார்.

மலை இறக்கம்

 வேண்டுமென்றால் இந்திய ரூபாயை சீன யுவானாகவும் மாற்றி தருகிறார். மற்ற இடங்களை விட குறைவாகத்தான் யுவான்கள் தருகின்றார், ஆனால் திரும்பி வரும் போது அதே விலையில் தாங்கள் மாற்றி வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினார். பிராண வாயு உருளைகள் (oxygen Cylinder) கூட வைத்திருக்கின்றார். எங்கள் சேர்ப்பாக்கள் கைத்தடியைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பதால் அனைவரும் 17  யுவானில்  மடக்கக் கூடிய எஃகு கைத்தடி  வாங்கிக்கொண்டோம். இவ்வாறு இன்றைய மூன்றாம் நாள் ஓய்வு மற்றும் மலையேற்ற பயிற்சி நாளாக அமைந்தது. 

*******************************************
சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பாசுரம்

எம்பிரான் தோழர் சுந்தரர்

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் "நொடித்தான் மலை" என்று போற்றிப் பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும்( நொடித்தல்- அழித்தல்). அழித்தல் தொழிலையும் உடைய உருத்திரமூர்த்தி ரூபமாக ஐயன் எழுந்தருளியிருப்பதாலும் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.

திருமயிலையில் ஆடி சுவாதியன்று சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அதைக் காண இங்கு செல்லுங்கள்



வாழ்வை உகந்தநெஞ்சே மட    வார் தங்கள் வல்வினைப்பட்

டாழ முகந்தவென்னை அது     மாற்றி அமரரெல்லாம்

சூழ அருள்புரிந்து தொண்ட     னேன் பரமல்லதொரு

வேழம் அருள்புரிந்தான் நொடித்     தான்மலை உத்தமனே (4)



பொருள்: உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலையில் வீற்றிருந்தருளும் முதல்வ, அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாம் சூழ்ந்து, அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்கு  பெரிதும் மேம்பட்டதான ஓர் யானை ஊர்தியையும் அளித்தருளினன். என்னே  அவனது திருவருள். 

தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க

புனித யாத்திரை தொடரும்........