Friday, November 07, 2014

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -1

 திருக்கயிலாய மானசரோவர் தரிசனம் - 2014


பொன்னார் மேனியன்
தெற்கு முகம் 


நானேயோ தவம் செய்தேன் "சிவாய நம"  எனப்பெற்றேன் என்றபடி மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர்    தரிசனம் என்பது  அவர் அருளால் கிடைக்கும் ஒரு பெரும் பாக்கியம் ஆகும். பல வேறு ஜென்மங்களில் மனமுருக வழிடும்  அன்பர்களுக்கே ஏதாவது ஒரு ஜன்மத்தில் இந்த பாக்கியம் சித்திக்கின்றது.  அதன் பிறகு அவர்களுக்கு பிறவி என்பது கிடையாது. மேலும் அவரது 21 தலைமுறையினருக்கு முக்தியளிக்கின்றார் அடியேன் சீன குதிரை ஆண்டான 2014ல் திருக்கயிலாயம் தரிசனம்  செய்யும் அற்புத வாய்ப்புக்கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள்     தொடர்ந்து வாருங்கள்.    


திருக்கயிலை நாதரின் முதல் தரிசனம்
கிழக்கு மற்றும் தெற்கு முகங்கள்


சீனர்களின் குதிரை ஆண்டான இந்த வருடம் செய்த யாத்திரை  12 தடவை யாத்திரை செய்ததற்கு சமமாகும் என்பது ஐதீகம். இந்த வருடம் செப்டெம்பர் 4ம் நாள் முதல் 17ம் நாள் வரையும் திருக்கயிலாய யாத்திரையும் இதன் தொடர்ச்சியாக முக்திநாத் தரிசனமும் செய்யும் பேறு அடியேனுக்கு கிட்டியது  முதல் தடவை யாத்திரை செய்தபோதே அவர் அருள் இருந்தால் சீன குதிரை வருடம் முடிந்தால் மறுபடியும் ஐயனை தரிசனம் செய்ய சங்கல்பம் செய்திருந்தேன். அவரருளால் 2014ல் அந்த சங்கல்பமும் நிறையேறியது. அடியேன் நண்பர் திரு.சுந்தர் அவர்களும் இரண்டாவது முறையாக உடன் வந்தார். மேலும் அடியேனின் மற்றொரு நண்பர் சின்ன பாப்பையா அவர்கள்  குடும்பத்தினருடன் வந்திருந்தார்.



முக்திநாதர் 

இத்தடவை சென்னையில் உள்ள அன்னபூரணா  யாத்ரா சர்வீஸர் மூலம் இந்த யாத்திரையை மேற்கொண்டோம். இந்த தடவை  யாத்திரைக்கான கட்டணம் இவ்வாறு இருந்தது. காதமாண்டிலிருந்து  காத்மாண்டுவரைக்கான  13  நாட்களுக்கான திருக்கயிலாய யாத்திரைக்கு ரூ.80000/-. நான்கு நாட்கள் முக்திநாத் யாத்திரரைக்கு ரூ.20000/-.  செப்டெம்பர் மாத யாத்திரைக்கு திடீரென்று ஆகஸ்ட மாதம் சீன அரசு ஒரு பேருந்தில் 18  யாத்திரிகள் மட்டும் பயணம் செய்ய வேண்டும். மேலும் வாகனத்தில் ஒரு காவல் காரரும் பயணம் செய்யவேண்டும் என்று ஆணையிட்டதால் ஒரு பேருந்து அதிகமாகியது ஒருவருக்கு $300 என்று ரூ.18000/- அதிகமாக கட்ட வேண்டி வந்தது.   மேலும் நேபாளத்தில்  ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையால் சிந்துபால் சௌக் மாவட்டத்தின் ஜுரே (Jurey) என்ற இடத்தில்  பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு திருக்கயிலாய யாத்திரை செல்பவர்கள் பயணம் செய்கின்ற பாதை அடைபட்டு விட்டது.  போடே கோசி நதியும் (Bhote Kosi) அடைபட்டு பெரு ஏரியாகி விட்டது,  அந்த ஏரி, வண்டிகள் செல்லும்  பாதையையும் விழுங்கி விட்டது.  பின்னர் அடைப்பை திட்டமிட்டபடி அளவாகத் திறந்து தண்ணீர் பாயும்படி செய்தனர். பாதை அடைபட்டு விட்டதால் ஆகஸ்ட் மாதம் சென்ற யாத்திரிகள் அனைவரும் ஒரு பக்கம் ரூ 12500/- கட்டணத்தில் ஹெலிகாப்டரில் காத்மாண்டுவில் இருந்து கொடாரி சென்று வந்துள்ளனர் எனவே தாங்களும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டியிருக்கலாம் எனவே அதிகப்படியாக பணம் அல்லது கடன் அட்டை (Credit Card) கொண்டு வாருங்கள் என்று சென்னையிலேயே கூறினார்கள். அடியோங்கள் செல்லும் போது நிலச்சரிவை மிகவும் சிரமத்துடன்  நடந்தே கடந்தோம், எனவே திரும்பி வரும் பொது கொடாரியிலிருந்து காத்மாண்டுவரை  ஹெலிகாப்டரில் வந்தோம் அந்த வகையில் ரூ.15000/- அதிகமாகியது. சென்னை காத்மாண்டு சென்னை விமான கட்டணம் ரூ 20000/-.  மேலும் குதிரை, போர்ட்டர்கள் கட்டணமும் அதிகமாகி விட்டதால்  சுமார் ரூ.1,75,000/-  ஆகியது.   


டெல்லி  விமான நிலையத்தில் காத்திருந்தோம் 
அடியேன் சின்ன பாப்பையா குடும்பத்தினர்


உடன் யாத்திரை வரவுள்ள அன்பர்கள் 

04/09/2014 அன்று காலை SG312 Spicejet விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றோம். அன்று சென்னையிலிருந்தே மூன்று குழுவினர் திருக்கயிலாய யாத்திரைக்கு புறப்பட்டோம்.  டெல்லியிலிருந்து  மதியம் கிளம்பிய வேண்டிய விமானம் காலதாமதமானது. எனவே டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தோம். காத்திருக்கும் போது எங்களுடன் யாத்திரை  வரப்போகின்ற குமாரசாமி, இளங்கோவன் மற்றும் பல அன்பர்களுடன் அளவளாவினோம்.   


காத்மாண்டு பயணம் 
 குமாரசாமி,  இளங்கோவன்,  அடியேன்




2012ல் டில்லியில் ஒரு நாள் தங்கி மறுநாள் அங்கிருந்து மறுநாள் காத்மாண்டு சென்றோம். அதே 2014ல் ஒரே நாள் சென்னையிலிருந்து தில்லி சென்று அன்றே காத்மாண்டு செல்லும் வகையில் முன்பதிவு செய்திருந்தோம். அப்போது அடியேன் கவனித்த ஒன்றை அன்பர்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும்.  தில்லியில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன  இரண்டும் சுமார்  10 கி. மீ தூரத்தில் உள்ளன. T1 முனையத்தில் உள் நாட்டு விமான சேவையும், T3 முனையத்தில் வெளி நாடு செல்லும் விமானங்களும் இயங்குகின்றன. எனவே சென்னையிலிருந்து காத்மாண்டு செல்ல விழைபவர்கள் தங்கள் மூட்டை  முடிச்சுகளுடன் T1ல் இருந்து இறங்கி  பேருந்து பிடித்து T3 செல்ல வேண்டும் மற்றும் அங்கு சென்றும் Boarding  மற்றும் Emmigration  பணிகளை மறுபடியும் செய்ய வேண்டும் என்பதால் இரண்டு விமானப்பயணங்களுக்கிடையில் குறைந்த பட்சம் 4  மணி நேரமாவது இருக்குமாறு முன்பதிவு செய்யுங்கள். ஒரு வேளை சென்னையிலிரு|ந்து கிளம்பும் விமானம் தாமதமானாலும்  அதிக சிரமம் இருக்காது. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் ஒரு சில யாத்திரிகள் ஒரு  மணி நேர அவகாசத்தில் முன்பதிவு செய்து விட்டு வந்து காத்மாண்டு செல்லும் விமானத்தை தவறவிட்டு பின்னர் அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி  காத்மாண்டு வந்தடைந்தனர் எனவே கவனமாக இருக்கவும்.


கௌரி சங்கர் 
திருக்கயிலாயமும் மானசரோவரரும் இணைந்த காட்சி 

இவ்வாறு டில்லியில் இரு முனையங்கள் இருப்பதால்  SPICEJET, INDIGO முதலிய விமான நிறுவனங்கள் இரண்டு வழிகளிலும் அவர்கள் விமானத்திலேயே பதிவு செய்திருந்தாலும்  Through Checking என்னும் சென்னையிலிருந்து சாமான்களை நேரடியாக காத்மாண்டு அனுப்பும் வசதிகளை மறுக்கின்றனர். ஆகவே நாம் நமது மூட்டை முடிச்சுகளை டெல்லியில் நாமே ஒரு முனையத்தில்  இறக்கி அடுத்த முனையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். எனவே முன்பதிவு செய்வதற்கு முன்பே எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டு முன்பதிவு செய்தால் சிரமமும், மன உளைச்சலும், பண விரயமும் இருக்காது. ஓரே முனையம் என்றாலும்   வருகை கீழ்த்தளத்திலும், புறப்பாடு மூன்றாம் தளத்தில் உள்ளதால் விமானத்தில் இருந்து இறங்கி, மூட்டை முடிச்சுகளை பெற்று வெளியே வந்து பின் மின்தூக்கி மூலம் மேலே சென்று பொருட்களை பின்னும் ஒப்படைப்பதற்கு சமயம் எடுக்கும் என்பதையும் கணக்கில் கொண்டு முன்பதிவு செய்யவும்.  

மேற்கு முகம் 

சென்னையிலும் யாத்திரை கிளம்பும் நாளில் பல சுற்றுலா நிறுவனத்தினர்  மூலம் யாத்திரை செய்யும்  அன்பர்கள் சென்னையில் குவிவதால் அன்றும்  விமான நேரத்திற்கு சுமார் 3  மணி நேரம் முன்னரே விமான நிலையம் சென்று விடுங்கள், மேலும் விமானத்தில் எவ்வளவு எடை அனுமதிப்பார்களோ அவ்வளவு எடை மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் தங்கள் யாத்திரை சுகமானதாக இருக்கும். 

காத்மாண்டு விமான நிலையம்


காத்மாண்டுவில் தங்கிய ஹோட்டல் 


இறுதியாக இரவு 9.00 மணிக்கு விமானம் புறப்பட்டு காத்மாண்டு அடைந்தபோது இரவு மணி 11.00  ஆகிவிட்டது.  விமான நிலையம் மற்றும் பசுபதிநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள MIRAGE LORDS INN  என்ற ஹோட்டலில் தங்கினோம்.  


மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர் தஞ்சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி யுள்ளான்
காளத்தியான் அவனென் கண்ணுளானே                           
-திருநாவுக்கரசர்.
  


புனித யாத்திரை தொடரும் . . . . . . . . .