Monday, July 06, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் -1

முக்திநாத் யாத்திரை


முக்திநாதர்

நேபாளம் வழியாக திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்கின்ற அன்பர்களுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு  முக்திநாத் தரிசனம் ஆகும். திருமாலின் அருளால் மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட  108  திவ்யதேசங்களில் ஒன்றான நேபாள் நாட்டில் அமைந்துள்ள முக்திநாத் என்றழைக்கப்படும் சாளக்கிராமம் என்னும் திவ்யதேசத்தை தரிசிக்கும் வாய்ப்பும் கூடுதலாக கிட்டுகின்றது.  பொதுவாக கடினமான திருக்கயிலாய மானசரோவர் யாத்திரையை முடித்த பின் விருப்பமுள்ள பக்தர்கள் குறிப்பாக நமது தமிழகத்தில் இருந்து செல்லும் அன்பர்கள்  காத்மாண்டு வந்தடைந்து பின்னர் நான்கு நாள் பயணத்தில் இந்த முக்திநாத் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.


முக்திநாதர் ஆலயம்



முக்திநாத் ஆலயத்தின் 108 தாரைகள்

கண்டகி நதிக்கரையில் உள்ள "முக்திநாத்" க்ஷேத்திரம் நேபாள நாட்டின் தலைநகரம் காத்மாண்டு நகரிலிருந்து 272 கி.மீ. தொலைவில்இமயமலைத் தொடரான அன்னபூர்ணாமலைத் தொடருக்கு அப்பால் உள்ள தவளகிரிப் பிராந்தியத்தில்  3710 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

மனோகாம்னாவில் அமைந்துள்ள கருடன் சிலை

இயமலையின் பனிச் சிகரத்தின் இடையே அமைந்திருப்பதாலும், நேபாள நாட்டில் விமானப்பயணம் அவசியம் என்பதாலும் இந்த புனித பயணம் மிகவும் கடினமானது, அதே சமயம் அபாயகரமானது என்பதில் எந்த ஐயமுமில்லை.  யாத்திரைக் காலம் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் ஆகும். எவ்வளவு கவனமாக திட்டமிட்டாலும்,  மலைப்பிரதேசம் என்பதால் இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே திட்ட்மிட்டபடி யாத்திரை சுகமாக நிறைவேறும்.  பனி, மழை, நிலச்சரிவு, காற்றோட்டம்,  பாதை அடைப்பு, விமானக்கோளாறு என்று ஏதோ ஒரு தடங்கல் இல்லாமல் யாத்திரை முடித்தவர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள். எனவே ஓரிரு நாட்கள் அதிகமாக தங்கவேண்டி வரலாம் எனவே அதற்கு தயாராக செல்ல வேண்டும், அதற்கு அதிகப்படி செலவாகும் என்பதால் அதற்கும் சேர்த்து பணம் அதிகமாக எடுத்துச்செல்ல வேண்டும்.

நேபாளத்தில் விமான பயணம் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே நடை பெறுகின்றது. அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரையிலேயே அதிகமான மூடுபனி, காற்றோட்டம் இல்லாத போதுதான் விமானங்கள்  இயக்கப்படுகின்றன. எப்போது வானிலை மாறும் என்று தெரியாது. எனவே தேவைப் பட்டால் நெளிந்து வளைந்து  செல்லும் கரடு முரடான பாதையில் அதிகநேரம் பயணம் செய்யவேண்டி வரலாம். சில சமயம் வானிலை திடீரென மோசமடைவதாலும், விமான கோளாற்றினாலும், பேருந்துகள் அதள பாதாளத்தில் உருண்டு விழுவதாலும் ஒரு சில விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீமந் நாராயணா உன் பாதமே சரணம் என்று சென்றால் எல்லாவிதமான தடங்கல்களையும் நீக்கி திவ்யமான தரிசனமும் அளித்து அருளுவார் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.

மலைப்பிரதேசம் என்பதால் குளிர் அதிகமாக இருக்கும் எனவே கம்பளி உடைகள் அவசியம் எடுத்துச்செல்ல வேண்டும். ஜோம்சம் முக்திநாத் ஆகிய ஊர்களில் காய்கறிகள் அதிகம் விளைவதில்லை என்பதாலும் அனைத்து உணவுப் பொருட்களும் மேலே கொண்டு வரவேண்டும் என்பதாலும் உணவு விடுதிகளில் அளவான உணவே கிட்டும். மேலும் எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணம் செய்ய நேரிட்டால்  சரியான சமயத்திற்கு உணவு கிட்டாமலும் போகலாம். எனவே கை வசம் நொறுக்குத்தீனிகளான, பிஸ்கெட், சாக்கலேட், இனிப்புகள்,  காரங்கள், சிப்ஸ், மற்றும் குடி தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்வது மிகவும் அவசியம்.


சாளக்கிராமம் (முக்திநாத்) யாத்திரை செல்ல ஏற்ற சமயம். ஏப்ரல் 10 தேதிக்கு மேல் மே மாதம் மூன்றாம் வாரம் வரை ஆகும். (மே மாதக் இறுதியில் பருவ மழை ஆரம்பமாகிவிடும்). மேலும் செப்டெம்பர் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை ஆனால் இச்சமயம் குளிர் அதிகமாக இருக்கும் எனவே அதிகப்படியான  கம்பளி உடைகள் எடுத்து செல்ல வேண்டி வரும்.


போக்ராவில் உள்ள பேவா ஏரி

காத்மாண்டிலிருந்து முக்திநாத்  செல்பவர்கள் முதலில் பேருந்துகள் மூலம் போக்ரா  என்னும் ஊரை அடைகின்றனர். போக்ராவை இந்தியாவில் இருந்து கோரக்பூர் வழியாகவும் நேராக அடையலாம். கோரக்பூரை சென்னையிலிருந்து புகைவண்டி மூலமாகவும் அடையலாம். தற்போது டெல்லி காத்மாண்டு இடையே பேருந்தும் ஓடுகின்றது.  காத்மாண்டில் இருந்து சிறு  விமானம் மூலமாகவும் போக்ராவை அடையலாம்.  

 பின்னர் போக்ராவில் இருந்து ஜோம்சம் என்ற இடத்தை சிறு விமானம் மூலம் சென்றடையலாம் அல்லது நெளிந்து வளைந்து செல்லும் கரடு முரடான  மலைப்பாதையில்   பயணம் செய்தும் ஜோம்சமை அடையலாம் ஆனால் பயணநேரம் அதிகம் ஆகும்.   ஜோம்சலிருந்து பின்னர் ஜீப்/சிறு பேருந்து  மூலமாக முக்திநாத் செல்ல வேண்டும்.




மனோகாம்னா தேவி ஆலயம்

காத்மாண்டிலிருந்து போக்ரா செல்லும் வழியில்  மனோ காம்னா தேவி ஆலயம அமைந்துள்ளது. மனோகாம்னா என்றால் மனதில் தோன்றும் அனைத்து ஆசைகளையும் அதாவது பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அன்னை என்று பொருள். அன்னை பார்வதி விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் பகவதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.  இழுவை இரயிலில் ஆலயத்திற்கு  செல்ல வேண்டும்கோயிலின் நுழைவில் அருமையான பூங்கா உள்ளது. இரண்டடுக்கு பகோடா அமைப்பில் இக்கோயில் அமைந்துள்ளது.


அன்னபூரணா மலைச்சிகரம்

னோ காம்னாவில் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் அன்னையை தரிசனம் செய்த பின் பக்தர்கள் போக்ரா வந்து தங்குகிறனர்.  போக்ராவின் சிறப்பு அதன் ஏரி. “பேவா ஏரி(Pewa Lake) என்‍ நீர் அருமையாக பிரதிபலிக்கின்றது,  அந்த அழகை இரசிப்பதே ஒரு அருமையான அனுபவம்.  போக்ராவில் காத்மாண்டுவைப் போல கூட்டம் அதிகம்   இல்லை, சப்தம் இல்லை கிராம சூழலே விளங்குகின்றது. எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அமைதியாக தங்க ஏற்ற இடம். ஏரியை சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகள்  உள்ளன.  கரையில் ஆல மரங்களும் அரச மரங்களும் உள்ளன அதன் அடியில் கற்பெஞ்சுகள் இடப்பட்டுள்ளது, அதில் அமர்ந்து ஏரியின் அழகை  அமைதியாக இரசிக்கலாம்.  படகுப்பயணம் செய்யலாம். சைக்கிளில் அல்லது நடந்து ஏரியை  வலம் வரலாம். 



பேவா ஏரியில் அமைந்துள்ள லேக் வராஹி ஆலயம் 

இந்நகரத்தில் இதன்  காவல் தெய்வம்   பிந்து வாசினி ஆலயம் ஒரு சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. சிறு ஆலயம் தான். சாளக்கிராம ரூபத்தில்  பகவதியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் அன்னை பார்வதி இத்தலத்தில். மற்ற நேபாள அன்னை ஆலயங்களைப் போல இங்கும் பலியிடப்படுகின்றது. பகோடா அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. குன்றின் மேலிருந்து போக்ரா நகரின் அருமையான அழகை இரசிக்கலாம். 


ஜோம்சமில் உள்ள  நீலகிரி  பனிச் சிகரம்

மறு நாள் போக்ராவில் காலை சூரிய உதய காலத்தில் அன்னபூர்ணா சிகரம் பொன் மயமாக மின்னும் அழகை ரசித்த பின்  அங்கிருந்து சிறு விமானம் மூலமாக ஜோம்சம் செல்கின்றனர், பேருந்து மூலமாகவும் ஜோம்சம் செல்ல முடியும் ஆனால் மிகவும் கரடு முரடான பாதை என்பதால் விமானத்தில் செல்வது நல்லது என்றாலும் சில சமயங்களில் இந்த விமானப்பயணம் விபத்தில் முடிந்துள்ளது. மேலும் தட்பவெட்ப நிலையைப் பொறுத்தே விமானப்பயணம் நடைபெறுகின்றது. விமானத்தில் செல்லும் போது அன்னபூரணா சிகரங்களின் அழகையும், மீன் வால் சிகரத்தின் அழகையும்  கண்டு இரசிக்கலாம். ஜோம்சம் நகரிலிருந்து பின்னர் ஜீப் மூலமாக முக்திநாத்தை அடையலாம்.


முக்திநாத் தரிசனம் செய்தவர்கள் பிறப்புஇறப்பு என்னும் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். எம்பெருமானின் இருப்பிடமான வைகுந்தத்தில் நித்ய சூரியர்களாக வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். இக்கோயிலில் இராமானுஜருக்கும் சன்னதி இருப்பது சிறப்பான அம்சம். விசுவாமித்திர முனிவரின் சாளங்காயனர் என்பவர் பிள்ளைப் பேறு வேண்டி காளி கண்டகி நதியில் நீராடி ஸால் மரத்தினடியில் இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்த போது சுயம்புவாக தோன்றிய பெருமாள் அவருக்கு அளித்த வரத்தின்படி ஸ்வயம்புவாய் இங்கே சேவை சாதிக்கின்றார். அது போலவே விஷ்ணு சாந்நித்யம் உள்ள சாளக்கிராம கல்லாகவும் அனைவருக்கும் அருள் வழங்குகின்றார்.

விஷ்ணுவின் சொரூபமாகத் திகழ்வது சாளக்கிராமம் ஆகும். இது ஒரு வகை கல். இதற்கு சுருள் என்பது பொருள். நேபாளத்தின் கண்டகி நதிக்கரையில் இவை கிடைக்கின்றன. பூஜிப்பதற்கு உகந்த மங்களகரமான சாளக்கிராமத்தின் அவதாரத் தலம் இந்த முக்திநாத் ஆகும். முக்திநாத்தில் சங்குசக்கரகதாதரராக திருமகளுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். இதற்கு பின்னால் விஷ்ணுவின் அம்சமான மிகப்பெரிய அபூர்வ சாளக்கிராம மூர்த்தியை தரிசிக்கலாம். எனவே இத்தலம் சாளக்கிராமம் என்றும் அறியப்படுகின்றது. பாக்கியமுள்ள பக்தர்கள் அங்கு சென்று சாளக்கிராம மூர்த்திகளைதாங்களே சேகரித்து எடுத்து வருகின்றனர். சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள். நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.
  
இத்தலம் பெருமாள் தானாகவே எழுந்தருளிய ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள்  ஒன்று. மற்ற தலங்கள் ஸ்ரீரங்கம்ஸ்ரீமுஷ்ணம்திருப்பதிவானமாமலைபுஷ்கரம்நைமிசாரண்யம்பத்ரிகாச்ரமம்  ஆகியவை ஆகும்மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் இந்த முக்திநாத் என்னும் சாளக்கிராமமும் ஒன்று. இந்த திவ்ய தேசத்தை

இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்கமணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடைநெஞ்சே!

என்று திருமங்கையாழ்வாரும்,


பாலைக்கறந்தடுப்பேறவைத்துப் பல்வளையாளென்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று இறைப்பொழுதங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
 சாய்த்துப்பருகிட்டுப்போந்து நின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.
 மொத்தம் 12 பாசுரங்களில் இருவரும் இத்தலத்தை   மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும் காண்கிறார். திருமங்கையாழ்வார் இவரை இராமனாக காண்கிறார். இங்கு பகவான் தீர்த்த ரூபியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.


வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்பந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் தானும்  மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்கு மகிழ்ந்த எம்பெருமான் கண்டகி நதியில் நித்ய அவதாரம் (சாளக்கிராம ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பது ஓர் வரலாறு.




6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்திற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்...

வாழ்த்துகள்...

S.Muruganandam said...

அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும். எல்லாம் அவன் செயல்.

ப.கந்தசாமி said...

உங்கள் தயவால் நாங்களும் முக்திநாதரைத் தரிசிக்கிறோம்.

S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!

Sindhu said...

May Lord Shiva be with u all forever and shower his blessings...

S.Muruganandam said...

Thank you verymuch Sindhu.