Friday, July 10, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 5

ஜோம்சமிலிருந்து முக்திநாத் ஜீப் பயணம்


காளி கண்டகி நதிகண்டகி நதியின் குறுக்கே உள்ள பழைய பழுதடைந்த பாலம்

அவனருளால் குழுவினர் சுமார் 40 பேரும் விமானம் மூலம் போக்ராவிலிருந்து ஜோம்சம் வந்தடைந்தோம். பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு சிறு பேருந்து மூலம் கண்டகி நதியை அடைந்தோம். காளி கண்டகி (கறுப்பு கண்டகி) என்ற பெயருக்கேற்றார் போல - அந்த கருவிளை வண்ணன் பாதம் தொட்டு வருவதால் கருமையான நிறத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள் கண்டகி. ஆற்றங்கரையில் எதாவது சாளக்கிராமம் கிடைக்கின்றதா என்று தேடினோம். இங்குள்ளவர்கள் தாமோர் குண்டத்தில் இருந்து நதி புறப்படும் இடத்தில் இருந்தே  வலை கட்டி சாளக்கிராமங்களை சேகரித்து விடுவதால் அவரின் பிராப்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாளக்கிராமம் ஆற்றில் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாளக்கிராமம் கிட்டவில்லை. சில கூழாங்கற்களை மட்டும் சேகரித்துக் கொண்டோம்.

ஆதி காலத்தில்  இமயமலைப் பிரதேசம் சமுத்திரமாக இருந்தது. அப்போது நமது இந்தியக் கண்டம் தனியாக இருந்தது. சுமார் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நிலப்பரப்பு மெல்ல மெல்ல வடமேற்காக நகர்ந்து வந்து  ஆசிய நிலபரப்போடு மோதியதால் உருவானவையே உலகின் உயர்ந்த மலையான இமயமலை. எனவே உயர் பீடபூமியான திபெத்தில் உள்ள பல   ஏரிகள் இன்றும் உப்பு நீராக இருப்பதற்கு இதுவே காரணம். சாளக்கிராமங்களும் அந்த கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்று அறிவியலார் கூறுகின்றனர். நேபாள அரசும் சாளக்கிராமங்களை விற்பதையும், நேபாளத்தில் இருந்து வெளியே எடுத்து செல்வதையும் தடை செய்துள்ளது. ஆனால் விஞ்ஞானமும் மெய்ஞானமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லையே, கடல் வாழ் உயிரினங்களின் கூடு என்றால் இமயமலையில் இருந்து உருவாகி ஆசியா முழுவதும் பாயும் எண்ணற்ற நதிகளில் இந்த ஒரு நதியில் மட்டுமே ஏன் சாளக்கிராமங்கள் கிட்டுகின்றன என்பதை யாராலும் விளக்க முடியவில்லை.  எது எப்படி இருந்தால் என்ன நம்புகின்றவர்களுக்கு சாளக்கிராமங்கள் பெருமாள்தான்.லூப்ரா - முக்திநாத் நடைப்பயண வரைபடம்

பழுதடைந்த பாலத்தைக் கடந்து லூப்ரா கிராமத்தை அடைந்தோம். இக்கிராமத்தில் உள்ள முக்திநாத் செல்லும் சிறு பேருந்துகளும், ஜீப்களும் புறப்படும் நிலையத்தை அடைந்தோம். இந்த பேருந்து நிலையத்தின் எதிரே போன்பா அவர்களின் புத்த விகாரம் உள்ளது. புது வர்ண கலாபத்தில் எழிலாக இருந்தது புத்த விகாரம். இங்கிருந்து நடைப்பயணம் மூலமாகவும் பலர் முக்திநாத் செல்கின்றனர். 


லூப்ராவில் உள்ள போன்பா புத்த விகாரம்

இங்கிருந்து முக்திநாத் செல்ல  சரியான பாதை கிடையாது மலையில் கல் நிறைந்த பாதையில் மேலும் கீழும் இறங்கி   குலுங்கிக்கொண்டே பயணம் செய்தோம் பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் பேருந்து கண்டகி நதியில் இறங்கியது மிகப்பெரிய நதி ஆனால் தண்ணீர் சிறு பகுதியில்தான் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் மலையேற்றம் என்று சுமார் 20  கி.மீ தூரத்தை 3 நேரத்தில் கடந்தோம். வழியெங்கும் சிறு சிறு கிராமங்கள் உள்ளன. கடுகு, வரகு அரிசி முதலியன பயிர் செய்கின்றனர். ஆப்பிள் மரங்களையும் பார்த்தோம்.  சில கிராமங்களில் தக்காளி, முள்ளங்கி கூட விளைகின்றன. அனைத்து இல்லங்களின் முன்புறம் டிஷ் ஆன்டனாக்கள் போல  சூரிய குக்கர்கள் (Solar cookers) அமைத்துள்ளனர்.   அனைத்து கிராமங்களிலும் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. அன்னபூரணா மலைதொடரின் பனி படர்ந்திருந்த தொராங் லா கணவாயை பார்த்தோம். இந்த உயரத்தில் பொதுவாக மரங்கள் இருக்காது. ஆனால் இவ்வழியில் பல மரங்களைக் கண்டோம்.


முக்திநாத் சென்ற பாதை???

சிறு பேருந்தில் பயணம்


குலுக்கியெடுக்கும் ஜீப் பயணம்

அக்டோபர் மாதத்திற்கு பிறகு பனி பெய்ய ஆரம்பித்து முக்திநாத் முழுவதும் பனியால் மூடிவிடும் பின்னர் இளவேனில் காலத்தில் பனி
 உருக ஆரம்பிக்கும் மே மாதம் சில சமயம் குறைவாக பனி இருக்கும் சாகச பயணம் மேற்கொள்ள விரும்பும் ஐரோப்பிய  அன்பர்கள் அப்போது இங்கு வருவர், பருவ மழை துவங்குவதற்கு முன்னர் ஜூன் மாதம் இங்கு வர ஏற்ற காலம்.   நேபாள அரசு இந்த ஜோம்சம் - முக்திநாத்  பாதையை 2020க்குள் தார் சாலையாக  மாற்ற திட்டமிட்டுள்ளதாம்.  அப்படி நடந்தால்  தொராங் லா எனப்படும் கணவாய் வழியாக சீனாவில் நுழைந்து  திருக்கயிலாய யாத்திரை செல்ல இனியொரு வழி உருவாகும் என்றும் வழிகாட்டி  கூறினார்.   வழியில் உள்ள் கிராமங்களில் டிஷ் ஆன்டன்னா போல சூரிய குக்கர்கள்


இரு சக்கர வண்டிகள் நிலையம்

கம்பளி ஆடைகள் பின்னும் பெண்கள்கோவில் வரை ஜீப்கள் செல்வதில்லை சுமார் அரை கி.மீ தூரம் முன்னதாக உள்ள ஜீப் நிறுத்ததில் இறக்கி விடுகின்றனர். ஜீப் நிறுத்ததில் இருந்து இரு சக்கர வண்டி நிறுத்தம் செல்ல சிறிது தூரம் நடக்க வேண்டி உள்ளது. அங்கிருந்து ஆலய வாசல் வரை இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. விரும்புபவர்கள் சுமார் 100  படிகள் ஏறியும் கோவிலை அடைகின்றனர். அடியோங்களில் சிலர் இரு சக்கர வண்டியிலும் சிலர் நடந்தும் கோவில் வாசலை அடைந்தோம். வழியில் உள்ள கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்னரும் சாளக்கிராமங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். அன்றைய தினம் சூரியன் பிரகாசித்துக்கொண்டு இருந்தான் எனவே வெளியே அமர்ந்து கம்பளி உடைகளை பின்னிக் கொண்டிருந்தார்கள்.


த்ரில்லான இரு சக்கர வண்டி பயணம் 
 வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் ஏற்றத்தில் இரு சக்கர வண்டி பயணமும் த்ரிலானதாகத்தான் இருந்தது. 15 நேபாள ரூபாய்கள் செல்வதற்கும் வருவதற்குமாக வசூலிக்கின்றனர் ஒரு அடையாள அட்டை கொடுத்து விடுகின்றனர் தரிசனம் முடித்து திரும்பி வரும் போது  அடையாள அட்டையை  காண்பித்து எந்த வண்டியில் வேண்டுமென்றாலும் அமர்ந்து திரும்பி வரலாம். திரும்பும் போது முடியாதவர்களை ஜீப் நிறுத்தம்  வரை  கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி இளைஞர்களுக்கு வருமானம் கிட்டுகின்றது. வாருங்கள் இனி முக்திநாதரின் ஆலயத்தை தரிசனம் செய்வோம். 

1 comment:

பழனி. கந்தசாமி said...

நல்ல திரில்லிங்க்கான யாத்திரை.