Tuesday, July 14, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 8

போக்ரா சுற்றுலா

சுற்றுலா செல்ல தயாராகி நிற்கின்றோம்

போக்ரா நேபாள நாட்டில் காத்மாண்டு நகருக்கு அடுத்த  பெரிய நகரம் ஆகும். அருமையான பனி மூடிய அன்னபூரணா, தவுளகிரி, மனசுலு  சிகரங்கள் பின்னணியில் விளங்க,  மிகப்பெரிய ஏரி, அருங்காட்சியகங்கள், கோவில்கள், நீர்வீழ்ச்சி, பாதாள ஆறு, குகைகள் என்று சுற்றுலா பயணிகள் பார்த்து இரசிக்க  வேண்டிய பல அம்சங்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன.  மற்றும் அன்னபூரணா மலை சிகர ஏற்றதிற்காக செல்பவர்கள், முக்திநாத் செல்பவர்கள் ஆகியோர் வந்து செல்வதாலும் பல  தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் இவ்வூரில் அமைந்துள்ளன. இவ்வூரிலிருந்து நமக்கு அன்னபூரணா மலைச்சிகரங்களின் அருமையான காட்சி நமக்கு கிட்டுகின்றது என்று முன்னமே பார்த்தோமல்லவா? எனவே அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இங்கு ஒரு நாளாவது தங்கி சுற்றிப்பார்த்து விட்டுத்தான் செல்கின்றனர். எனவே நாங்களும் போக்ராவை சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

 சிறு  குன்றின் மேல் உள்ள அம்மன் கோயில் வளாகத்திற்கு செல்லும் படிகள்
(குமாரசாமி, இளங்கோவன், அடியேன், இராமகிருஷ்ணன்)

விநாயகர் சன்னதி முன் சுந்தர்
(இப்பதிவுகளில் உள்ள பல புகைப்படங்கள் இவர் கை வண்ணம் ஆகும்)

மூஞ்சூறு வாகனம்

விந்தியாவாசினி அம்மன் சன்னதி
( நெற்றிச்சுட்டியை கவனித்தீர்களா?)

 அம்மன் சன்னதி முகப்பு[ பலகை

சிவன் சன்னிதி முன் நந்தி வாகனம்


சிவன் சன்னிதியின் சில கற்சிற்பங்கள்

முதலில் நாங்கள் சென்றது விந்தியாவாசினி ஆலயம் ஆகும். போக்ரா நகரின் காவல் தேவதை இந்த அம்மன் என்று போற்றப்படுகின்றாள். அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள் அன்னை. இப்பிரதேச அரசன் விந்திய மலையிலிருந்து அம்மன் சிலையை கொணர்ந்ததால் அம்மனுக்கு இந்தத்திருநாமம்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலய  வளாகம். ஒரு தனி சன்னதி வட இந்தியக்கோவில்கள் போல  விமானம்  உள் பக்கம் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். அம்மனை தொட்டு வணங்க அனுமதிக்கின்றனர். மேலும் கணபதி. பசுபதிநாதர், லக்ஷ்மி நாராயணர், இராதா கிருஷ்ணர், சீதா இராமன் சந்நிதிகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. ஒரு ருத்ராட்ச மரமும் ஆலய வளாகத்தில் உள்ளது. அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் இவ்வாலயத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும்.  குன்றின் மேலிருந்து போக்ரா நகரத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.

இராதா கிருஷ்ணர் - லக்ஷ்மி நாராயணர் - சீதா இராமர் சன்னதி
லக்ஷ்மி நாராயணர்
(கதவின் மர வேலைப்பாட்டை கவனியுங்கள்)
 கருட பலகை

இராதா கிருஷ்ணர் சன்னதி முன் இருந்த பித்தளை குத்து விளக்கு
(நுண்ணிய வேலைப்பாட்டை கவனியுங்கள்)

கோவிலைக் கட்டிய அரசர்

அடுத்து நாங்கள் சென்றது  செட்டி கண்டகி நதி என்னும்  வெள்ளை கண்டகி நதி, முக்திநாத் சென்ற போது நாங்கள் பார்த்தது காளி கண்டகி நதி அதாவது கருப்பு கண்டகி நதி, இந்நதி பூமி மட்டத்தில் பாய்கின்றாள். இங்கு பாய்வது சேதி கண்டகி நதி அதாவது வெள்ளை கண்டகி நதி இவள் பாதாளத்தில் பாய்கின்றாள். K. I. சிங் என்ற இந்தியர்  நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய   இந்நதியின் ஓட்டதைப் பயன்படுத்தினார் எனவே அந்த நீர் மின் நிலையம் அவர் பெயரால் அழைக்கப்படுகின்றது. அவ்விடம் சென்று Calcium Carbonate என்னும் தாதுப் பொருள் அதிகமாக உள்ளதால் வெண்மையாக  பூமிக்குக்கீழ் பாயும் ஆற்றை கண்டோம். எனவே இந்நதியின் குறுக்கே உள்ள பாலம் இவர் பெயரால் K.I.சிங் பாலம் என்றே அழைக்கப்படுகின்றது.   அருகிலேயே கூர்க்காக்களின் அருங்காட்சியகம் உள்ளது.
பாதாளத்தில் பாய்கின்றாள் வெள்ளை கண்டகி நதி

நீர் மின் நிலையத்தில் வெள்ளை கண்டகி நதி

                கூர்க்கா அருங்காட்சியகம்                         

 அடுத்து நாங்கள் இங்கு பாதாளே சாங்கோ (Patale Chhango - Nether Fall) என்றும் தற்போது Devi’s  Falls என்றும் அழைக்கப்படும் அருவியைக் காணச்சென்றோம். பேவா ஏரியிலிருந்து உருவாகி ஓடி வரும் ஒரு ஆறு இங்கே பாதாளத்தில் சென்று மறைந்து ஓடி மீண்டும் வெளியே வருகின்றாள். Davis என்ற ஐரோப்பியர் தவறி இந்நதியில் விழுந்து  பாதாளத்தில் சென்று மறைந்து பின்னர் வெளியே வந்ததால் அவர் நினைவாக தற்போது இப்பெயரில் அழைக்கப்படுகின்றது. அருகே பல கடைகள் உள்ளன பல திபெத்திய கலைப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.  

ஒரு மழலை






கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்



குப்தேஸ்வர் மஹா தேவ் குகைக் கோவில்

இதன் எதிரே குப்தேஸ்வர் மஹாதேவ் என்னும் ஒரு குகைக்கோவில் சென்று சிவபெருமானை வழிபட்டு நிறைவாக இவ்வூரில் அவசியம் பார்க்க வேண்டிய   பேவா ஏரியை அடைந்தோம். 


2 comments:

ப.கந்தசாமி said...

அருமையான காட்சிகள்.

S.Muruganandam said...

நன்றி ஐயா, உடம்பு சரியாகி விட்டதா? ஐயா.