Friday, September 11, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை - 1

டில்லியில் முதல் மூன்று நாட்கள் 

மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலைநாதரின் மாப்பெருங்கருணையினால்  இனிய ஒரு திருக்கயிலாய யாத்திரையுடன் அன்பர்களாகிய தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.   வாருங்கள் அன்பர்களே அடியேனுடன்  இன்னொரு முறை திருக்கயிலை நாதரை தரிசிக்கலாம். 

அஷ்ட் மங்கல பொருட்களுடன் 
சிக்கிம் அரசின் சின்னம் 

முதலில் இது வரை இந்திய குடிமக்கள் எவ்வாறு திருக்கயிலாயம் சென்று வந்தனர்  என்று காண்போம் அப்போது தான் இந்த  நாதுலா கணவாய் வழியாக செல்லும் பாதையின் முக்கியத்துவம் நமக்கு புரியும்.  

ஆதிசங்கரர் திருக்க்யிலை சென்று பெருமானை தரிசனம் செய்து ஐந்து லிங்கங்களை பெற்று வந்தார், காரைக்காலம்மையார்  பேய் உருவுடன் மலை ஏறினார், திருநாவுக்கரசர் திருக்கயிலை செல்லும் போது எவ்வாறு துனபம் பெற்றார் பின்னர் இறைவன் அருளினால் திருவைய்யாற்றில் எவ்வாறு திருக்கயிலாய காட்சியை பெற்றார் என்பதெல்லாம் புராணக்கதைகள்

நம்முடைய காலத்தில் அதாவது 50களில்   திருக்கயிலாயம் அமைந்துள்ள திபெத் தனி நாடாக இருந்தது.  அப்போது திருக்கயிலாயம் செல்ல எந்தப்பாதையும் கிடையாது. உயர் மட்ட மலைப்பிரதேசம் என்பதால் வழியில் எந்த வசதியும் இருக்கவில்லை எனவே அப்போது திருக்கயிலாயம் சென்ற்வர்கள் குழுவாக சென்றனர், உணவு பொருட்கள், வேலை ஆட்கள் எல்லாவற்றையும் தங்களூடன் கொண்டு சென்றனர். அப்போது மிகவும் கடினமான யாத்திரை என்பதால் ஒரு சிலருக்கு இதுவே நிறைவு யாத்திரையாகவே இருந்தது. 


குதுப்மினார்   டில்லி 


1962க்குப்பின் திருக்கயிலாயப்பகுதி சீனாவின் வசம் சென்ற பின் 1980 வரை சீன அரசு யாரையும் திருக்கயிலாய யாத்திரை செல்ல அனுமதிக்கவில்லை. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று 1981 முதல் இந்திய நேபாள எல்லையையில்  உத்தராகாண்ட மாநிலத்தில்  உள்ள லிபு கணவாய் வழியாக  குறிப்பிட்ட எண்ணிக்கை பக்தர்கள்   திருக்கயிலாயம் செல்ல அனுமதியளித்தது. ஆனால் இவ்வழியில் இந்தியப்பகுதியில் சுமார் 150 கி.மீ நடைப்பயணம் அவசியம் என்பதால் மொத்த யாத்திரை சமயம் சுமார் 30 நாட்களாக இருந்தது தற்போது 25 நாட்களாக குறைந்துள்ளது.  


ISKCON ஆலயம் 

தனியார் சுற்றுலா நிறுவனங்கள்  நேபாளம் வழியாகவும் திருக்கயிலாய யாத்திரை அழைத்துச் செல்கின்றன. முதலில் பாதை சரியில்லாத போது இதற்கு 21 நாட்கள் பிடித்தது Land Cruiser என்னும் ஜீப்களில் குலுங்கிக்கொண்டே மண் பாதையில் பயணம் செய்தனர். தற்போது தார் சாலை அமைத்து விட்டதாலும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பாலம் கட்டிவிட்டதாலும் பேருந்து மூலம் சுகமாக பயணம் செய்து 13 நாட்களில் யாத்திரையை முடிக்கின்றனர். இவ்வழியில் உள்ள ஒரு குறை பலர் இவ்வளவு குறுகிய காலத்திற்கு உடல் உயர் மட்டத்திற்கு தயார் ஆவதில்லை என்பதால் சிலர்  துன்பப்படுகின்றனர்.


இந்த இரண்டு வழிகளிலும் உள்ள நன்மைகளையும் சேர்த்தாற் போல இந்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று சீன அரசு இந்த ஆண்டு அதாவது 2015 முதல் மூன்றாவதாக ஒரு பாதை வழியாக செல்ல அனுமதியளித்தது. சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் வழியாக செல்ல அனுமதி அளித்தது. இப்பாதையில் உள்ள ஒரு சௌகரியம் நடைப்பயணம் அவசியமில்லை. அதனால் முதியவர்களுக்கு இப்பாதை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். யாத்திரை காலம் சுமார் 22 நாட்கள் இது உயர் மட்டத்திற்கு உடம்பு தயாராக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அட்டவணை அமைத்துள்ளனர். இப்பாதையின் தற்போதைய ஒரே ஒரு குறைவு அதிக செலவு சுமார் 1.8 இலட்சம் ஆகின்றது.


இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் (I.T.B.P)  விளக்கம் 







இந்த வருடம் முதல் வருடம் என்பதால்  40 பக்தர்கள் கொண்ட 5 குழுக்கள் மற்றுமே செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இதில் ஐந்தாவது குழுவில் அடியேனின் நண்பர் திரு.நாகேஸ்வர சிங் அவர்கள் சென்று திருக்கயிலை நாதரை தரிசித்து வந்தார்கள் அவரது அனுபவங்களை அவரது குழுவினரின் புகைப்படங்கள் மூலம் காணலாம் அன்பர்களே.


வெளியுறவு துறையினர்
யாத்திரை குறித்து விளக்கினர்



யாத்திரை முடித்து வந்த 
திரு.நாகேஸ்வர சிங் அவர்கள் 

வழக்கம் போல இந்த முறையும் விளம்பரம் வந்தது இரண்டு வழிகளில் எந்த வழியாக செல்ல விரும்புகின்றார்களோ அதை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தனர். நண்பர் புது வழியான நாதுலா வழியாக  செல்ல விண்ணப்பம் செய்தார். சிவபெருமானின்  அருளால் ஐந்தாவது குழுவில் இவர் தேர்வானார். 

யாத்திரைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சேகரித்துக்கொண்டு 31.07.2015 அன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதல் நாள் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில்  தேர்வு பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தொலைப்பேசியில்  கூறினார். பின்னர் I.T.B.Pயினர், மற்றும் வெளியுறவுத்துறை  அதிகாரிகளின் விளக்கங்களை   கேட்டனர். டில்லி சுற்றுலா சென்று வந்தனர். பின்னர் விமானம் மூலம் மேற்கு வங்காளத்தில் உள்ள பாக்டோக்ரா என்ற ஊருக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாங்கை அடைந்தனர். 

கடினமான யாத்திரை சென்று வந்ததாக உணரவில்லை, எதோ ஒரு கல்யாணத்திற்கு சென்று வந்தது போல என்று கூறினார் நண்பர் வாருங்கள் யாத்திரைத் தொடர்வோம்.     

யாத்திரை தொடரும் . . . . . . .