அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்
திருக்கயிலாயம்
ஊராகி நின்ற உலகே போற்றி
ஒங்கி அழலாய் நின்றாய் பே'ற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவியான நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி (5)
எங்கள் கோனையும் எம்பிராட்டியையும் அவர்கள் இல்லம் சென்று தரிசிக்கும் புண்ணிய யாத்திரையின் இரண்டாம் நாள் காலை ராணிகேத் D.S.P யும், KMVN உயர் அதிகாரிகளும் எங்களை வாழ்த்தி, மாலையிட்டு மரியாதை செய்து பச்சைக் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். சிவபெருமானுக்கு பூஜனைகள் செய்து தாருசூலா என்னும் நகருக்கு செல்லும் பேருந்து பயணத்தைத் தொடங்கினோம். மலை முகடுகளின் மேலே பஞ்சு போன்ற மேகக்கூட்டங்களினூடே பேருந்து மிதந்து சென்றது அற்புதமாக இருந்தது. வழி நெடுக செழுமை, இவ்வளவு உயரத்திலும் நெல் நாற்றுக்கள் தலை அசைத்து எம்மை வாழ்த்தின. பச்சை கம்பளம் போர்த்திய ஒரு பெரிய மனிதனாக காட்சி தந்தது இமயமலை. நடு நடுவே
குதூகலித்து ஒடும் ஆறுகள் என்று அருமையான பயணத்தை ரசித்துக் கொண்டே சென்றோம்.
காளிகா, கசௌனி, ஓக்லா வழியாக பைஜ்யனாத் என்னும் இடத்தை அடைந்தோம் அங்கு. சரயு மற்றும் கோமதி நதி சங்கமத்தில் அமைந்துள்ள பாண்டவர்கள் வழிபட்ட பைஜ்யனாதரையும், அம்பிகையையும் வழிபட்டோம். இரு பக்கமும் நதிகள் ஓட ஒரு தீவில் அமைந்தது போல அழகிய மலர்ச் சோலைகளுடன் எழிலாக அமைந்துள்ள புராதமான இவ்வாலயத்தை தற்போது இந்திய அகழ்வாராய்ச்சித் துறையினர் ( Archeological Survey of Indaia) பராமரிக்கின்றனர். பின் திட்டமிட்டபடி பாகேஸ்வர் வழியாக மதிய உணவிற்கு சக்கோரி (Chakori) என்னும் இடத்தை அடைந்தோம்.
அடியேனுடன் திரு. முட்கல்
(நான்கு முறை திருக்கயிலை நாதனை தரிசனம் செய்யும் பேறு பெற்றவர்)
எந்த ஒரு காரியத்திற்க்கும் நல்ல விளைவுகளும் கெட்ட விளைவுகளும் உண்டு. அதைப் போல மலைப்பகுதிகளில் நாம் பாதைகள் அமைப்பதால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக தென்மேற்கு பருவகாற்றுக் காலத்தில் மழை பெய்யும் போது இம்மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுகின்றது.
இன்றைய நாள் மேகங்களின் நாளாக அமைந்தது எங்கள் பேருந்து
மேகக்கூட்டங்களுக்கிடையே சென்றது, இவ்வுயரத்தில் அரிசி பயிரிடப்பட்டிருந்தது. மலைப்பாதை சரயு நதியை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சமயம் நாம் மேல் நோக்கி செல்கின்றோம் அடுத்து ஒரு இறக்கம் பின் நதியை பாலம் மூலம் கடக்கிறோம் பின் நதியின் அடுத்த கரையை ஒட்டி பயணம் என்று பயணம் சுகமாக இருந்தது. மலைப்பகுதிகளில் சாதாரணமாக மாலை ஆறு மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை ஆயினும் வெகு சிரத்தியுடனும் வெகு கவனமாகவும், ஓட்டுனர் பேருந்தை பத்திரமாக ஓட்டிச்சென்று பித்தோர்கர் நகருக்கு கொண்டு சேர்த்தார்.