Wednesday, February 03, 2010

திருக்கயிலாய நந்தி கிரி வலம் - 1

திரு கயிலை பாலா அவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர் ஆகவே அந்த மலையரசன் மருகன் மற்றும் பொற்பாவையின் மாப்பெருங்கருணயினால் அவர்களை மிக அருகில் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. சென்ற வருடம் அவர் நந்தி கிரி வலத்தையும் உள் கிரிவலம் இரண்டையும் வெற்றிகரமாக அவனருளால் அவன் தாள் வணங்கி நிறைவு செய்தார். அந்த தெய்வீக அனுபவத்தை அவரது நந்தி கிரி வலம் பதிவுகளில் ஆங்கிலத்தில் கண்டு களிக்கலாம்.

இப்பதிவில் உள்ள படங்கள் எல்லாம் அவரின் படங்கள் அவற்றுக்கான விளக்கங்கள் மட்டும் அடியேனுடையது இது தமிழில் உள்ளது. வாருங்கள் ஒரு அற்புதமான அனுபவத்தைப் பெற அடியேனுடன்.


உள் கிரிவலம் மற்றும் நந்தி கிரிவலம் செல்ல சீன அரசின் விஷேச அனுமதி ( Special Permit ) பெற வேண்டும், அதை உங்கள் சுற்றுலா நிறுவனத்தினர் ( Tour operator) இவற்றைப் பெற்றுத்தருவார். 12 தடவை வெளிப் பரிக்கிரமா செய்தவர்கள் அல்லது சீன குதிரை வருடத்தில் யாத்திரை மேற்கொண்டவர்கள்தான் இப்பரிக்கிரமாக்களை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். வெளி பரிக்கிரமாவை விட இவை மிகவும் கடினமானவை என்பதால் இவ்வாறு வைத்துள்ளனரோ என்னவோ?

நந்தி கிரி வலத்தின் படம்
( முக்கிய இடங்களும் உயரமும்)

மேலே உள்ள படத்தில் நந்தி கிரி வலம் வரும் போது யாத்திரிகள் எந்த இடங்களை கடந்து செல்கின்றனர் மற்றும் அவ்விடத்தின் உயரம் என்ன என்பதை தெளிவாக படம் போட்டுக் காட்டியுள்ளார் கயிலை பாலா அவர்கள். கிரி வலம் செல்லும் பாதை தார்ச்சன் ஆதார முகாமிலிருந்து கிளம்பி சிலுங் புத்த விகாரம் வழியாக அஷ்டபத் மலையை அடைகின்றனர். பின் சிலுங் மற்றும் கயிலாய கங்கை நதிகளின் சங்கமம் கண்டு, குதிரை குளம்படி தழும்பு தாண்டி திருக்கயிலாய மலையின் தெற்கு முகம் மற்றும் நந்தியெம்பெருமான் இருவருக்கும் நடுவில் உள்ள மலையில் செங்குத்தாக ஏறி தெற்கு முகத்தின் திருவடித்தாமரைகளில் இருக்கும் சப்தரிஷி குகையில் அற்புதமான தரிசனம் பெறுகின்றனர். பின்னர் நந்தியெம்பெருமானின் முன்புற விஸ்வரூப தரிசனம் பெற்று கிரி வலத்தை தொடர்கின்றனர். நந்தி கிரி வலத்தின் உயரமான பகுதி இந்த பகுதிதான். நாம் வெளி கிரிவலம் செய்யும் போது நந்தியெம்பெருமானின் பின் பகுதி தரிசனம் கிட்டும். சில பாக்கியசாலிகளுக்கு மட்டுமே இந்த முன் பக்க தரிசனம் சித்திக்கும். பின்னர் அங்கிருந்து இறங்கு முகமாக காவலா, காவாலி என்னும் இரண்டு குளங்களைக் கடந்து சிலுங் புத்த விகாரம் அடைந்து நந்தி கிரிவலத்தின் நிறைவாக மீண்டும் தார்ச்சன் ஆதார முகாமை அடைகின்றனர். மொத்த தூரம் 28 கி. மீ, இதில் ஏறு முகம் சுமார் 12 கி.மீ , இறங்கு முகம் சுமார் 16கி. மீ ஆகும். ( படத்தை பெரிது படுத்தி தெளிவாகப் பார்க்கலாம்)


நந்தி கிரி வல நேர அட்டவணை

இந்த படத்தில் அதே செய்தி நேரக்குறிப்புகளுடன் கால அட்டவனையாக கொடுக்கப்பட்டுள்ளது. நந்தி கிரிவலத்தை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிறைவு செய்யலாம் அவர் அருளால். திரு கயிலை பாலா மற்றும் அவருடன் சென்ற 20 பேர் இந்த் நந்தி கிரி வலத்தைத் தொடங்கினர் ஆனால் ஐந்து பேரால் மட்டுமே நந்தி கிரி வலத்தை முடிக்க முடிந்தது. அதிலிருந்து எவ்வளவு கடினமானது இந்த உள் கிரி வலம் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ளலாம்.



நந்தி கிரி வலத்தின் தொடக்கம்

வெள்ளிப்பனி மலையாம் திருக்கயிலாய மலையில் கமனீயமான பொன் மய ஊஞ்சலில் அமர்ந்த பவள மேனியராம் முக்கண் முதல்வன், ஆலகால விடமுண்ட நீலகண்டன், தன் தேவி பச்சைப் பசுங்கொடி மலையரசன் பொற்பாவை உமாதேவியாருடன் திருவோலகத்துடன் கொண்டு எழுந்தருளி சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் விளையாடும் அந்த சிவ சக்தியரை எப்போதும் தம் மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டிருப்பவர் ஐயனின் பூதப்படையாம் சிவகணங்களில் முதல்வர், முழுமுதற் தொண்டர் நந்தியெம்பெருமான். இந்த அமைப்பை நாம் கயிலையில் கண்கூடாகக் காணலாம் ஐயனுக்கு முன்பாக அதே மலைவடிவில் நந்தியெம்பெருமானும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அந்த நந்தியெம்பெருமானின் கிரி வலம் எவ்வாறு செய்யலாம் என்பதை திரு. கயிலை பாலா அவர்களின் அனுபவத்தின் மூலம் தங்கள் அனைவருக்கும் கொண்டு சேர செய்த சிவசக்திக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

அந்த நந்தியெம்பெருமானின் கிரி வலத்தை தன்னுடன் வெளி கிரி வலம் செய்த 21 அடியார்களில் 20 அடியார்களுடன் துவங்குகிறார் திரு கயிலை பாலா, இவர்களுடன் ஆறு அனுபவம் மிக்க நேப்பாள வழிகாட்டிகளான சேர்ப்பாகளும் ( Sherpa) உற்ற துணைகளாக உடன் செல்லுகின்றனர். நந்தி கிரி வலம் மிகவும் கடினமானது அந்த சிவ சக்தியின் அருளும் திட மனமும் நல்ல உடல் நலமும் தேவை என்கிறார் கயிலை பாலா. தலைக் கவசம்(helmet) அணிந்து கொண்டு தான் இவர்கள் கிரி வலத்தை மேற் கொள்கின்றனர். ஏனென்றால் ேலிருந்து கற்கள் விழுந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த முன்னேற்பாடு.


குழுவினர் அனைவரும் எந்த வித விக்னமும் இல்லாமல் கிரி வலம் நிறைவு பெற வேண்டும் என்று அச்சது பொடி செய்த அதி தீரன் விநாயகப் பெருமானையும் சிவசக்தியையும் மற்ற முப்பத்து முக்கோடி தேவர்களையும் ( அவர்கள் திருக்கயிலை மலையில் அம்மையப்பரை வணங்கி நிற்பவர்கள்) அவர்களுக்கு நம்முடைய நடமாட்டத்தால் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்காக மன்னிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வணங்கி யாத்திரையை தொடங்கினர். முதலில் கும்பலாக ஆரம்பித்த யாத்திரை, நேரம் செல்ல செல்ல ஒருவர் பின்னர் ஒருவராக ஒரு வரிசை ஆகிவிட்டதாம். ஆனால் அவரவர்கள் தங்கள் சொந்த கதியில் நடந்தால்தான் பிராண வாயு குறைவாக உள்ள இந்த உயர் மட்டங்களில் நடக்கமுடியும் என்பதால் நல்ல உடல் நலமும் மனத்திண்மையும் உள்ளவர்கள் முன்னே சென்று விட முடியாதவர்கள் பின் தங்கி விட்டனர் .

இவர்தான் செர்பா கும்பு. வழிகாட்டிகளின் குழுத்தலைவர் முப்பது முறை திருக்கயிலை நாதரின் கிரி வலம் செய்யும் பேறு பெற்ற உத்தமர். அனைவரையும் ஒரு தாயைப் போல கவனித்து கிரி வலம் முழுமையாகுமாறு உதவி செய்தவர்.

கிரி வலம் செய்யும் போது அந்த சிவசக்தியினரின் பிரபாவத்தை அப்படியே உணர முடிந்தது என்கிறார் கயிலை பாலா. அம்மையப்பரின் அருகாமையின் அதிர்வலைகளை முழுமையாக உணர முடிந்ததாம். அவர்கள் அழைப்பு இல்லாமல் அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்களிடம் நாம் சென்று இவ்வளவு அருமையான தரிசனம் பெற முடியுமா என்ன? இதை பார்க்கும் வாய்ப்புப் பெற்ற தாங்களும் பாக்கியம் பெற்றவர்கள்தான் என்பதில் ஐயமில்லை.


பராக்கா சமவெளி அஷ்டபத்திலிருந்து

சிலுங் புத்த விகாரத்தில் இருந்து அஷ்டபத் மலை செல்லும் போது எடுக்கப்பட்ட படம் இது கீழே மானசரோவர் மற்றும் இராக்ஷஸ் தால் என்னும் இரண்டு எரிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பராக்கா சமவெளி ஆகும் இது. ஐயனின் அருகில் செல்ல செல்ல அப்படியே ஒரு ஆனந்த பரவசம் மனதில் பெருகியதாம். யாரையும் மிக அருகில் சென்று தரிசனம் செய்தால் அது மிகப் பெரிய ஆனந்தம் தானே. இந்த மானுட வாழ்வில் ஒரு முறையாவது இந்த பாக்கியம் கிடைக்காதா என்று எண்ணி எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்க அந்த் சிவசக்தியின் அருளால் அவர்களின் மிக அருகில் சென்று அவர்களின் பாதம் ஸ்பரிசிக்கும் பாக்கியம் எளிதில் கிடைக்கக்கூடியதா என்ன?

தார்ச்சன் ஆதார முகாமிலிருந்து சிலுங் வரை நாம் வண்டிகளில் செல்ல முடியும் பின்னர் இங்கிருந்து நடைப்பயணம் தொடங்குகின்றது. சிலுங் புத்த விகாரத்தில் இருந்து அஷ்டபத் சுமார் இரண்டு கி. மீ தூரம் உள்ளது இந்த தூரத்தை இவர்கள் சுமார் 45 மணித்துளிகளில் நடந்தனர். அஷ்டபத் மலையில் பல பவித்ரமான குகைகள் உள்ளதாம் . அஷ்டபத்திலிருந்து கயிலாய கங்கை மற்றும் சிலுங் நதிகளின் சங்கமத்திற்கு உள்ள தூரம் சுமார் 1.2 கி.மீ இந்த தூரத்தை இவர்கள் சுமார் அரை மணி நேரத்தில் ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே ஏறினார்களாம். இவ்விடத்திலேயே இவர்களுடன் வந்த சிலர் இனியும் தொடர முடியாது என்று திரும்பிச்சென்று விட்டார்களாம். ஆகவே அந்த அற்புத சங்கமத்தில் சிறிது நேரம் தங்கி அனைவரும் இன்னும் அதிக தூரம் செல்வதற்கு தங்களைத்தானே தயார் செய்து கொண்டார்கள்.


சென்ற தடவை திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட போது திரு கயிலை பாலா அவர்கள் இந்த இடம் வரை வந்திருக்கிறாராம். அவர் அந்த தெய்வீக அனுபவத்தை இந்தத் தடவை தனது கேமராவில் மற்றவர்களுக்கு பயன் படுமே என்று ஒன்றி விடாமல் பதிவு செய்து கொண்டராம். அதனால் தானே நம் அனைவருக்கும் அந்த திருக்கயிலை நாதரை அருகில் தரிசனம் பாக்கியம் கிட்டியுள்ளது.

ஆனந்த ஆத்ம லிங்க தரிசனம்

சென்ற தடவையும் இதே சேர்ப்பா மற்று சென்னையை சார்ந்த இராஜன் என்னும் யாத்திரியுடன் இதே இடத்தில் வந்து ஆத்மலிங்கத்தின் தரிசனம் பெற்றாராம் இரண்டாவது முறையும் அது போலவே மூவரும் ஆத்ம லிங்க தரிசனம் செய்யும் ஆனந்தக் காட்சி.



குதிரைக்குளம்படி, ஆத்ம லிங்கம்
கயிலாய கங்கை தரிசனம்

சங்கமத்திலிருந்து திருக்கயிலாய திருவடியை அடையும் வரை சிறிது இறக்கம். தூரம் சுமார் 1.6 கி. மீ பயணம் செய்த பின் குதிரைக் குளம்படியை தரிசனம் செய்கின்றனர். இவ்விடத்தில் திபெத்தியர்கள் தங்கள் வழக்கம் போல கொடிகளால் அலங்கரித்துள்ளனர். இவர்கள் இவ்விடத்தை லிங்- ஸிங்ஜென் ( Ling- Singjen) என்று அழைக்கின்றனர். கொடிகளுக்கிடையில் குதிரை குளம்படியை தரிசனம் செய்யலாம். பின் புறத்தில் தெளிவாக ஆத்ம லிங்கத்தின் தரிசனம் கிடைக்கின்றது. மேலும் ஐயனின் ஜடாமுடியிலிருந்து ஓடி வரும் கையிலாய கங்கையையும் தரிசனம் செய்கின்றோம். ஆனால் ஐயனின் முழு முக தரிசனமும் இவர்களுக்கு கிட்டவில்லை மேற்பகுதியை மேகங்கள் மறைத்து விட்டன. மேகம் விலகி முழு தரிசனமும் சித்திக்குமா என்று சிறிது நேரம் காத்திருந்தும் ஐயன் இன்னோரு சமயம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேகங்களை விலக்கிக் கொள்ளவில்லை. எனவே சிறிது நேரம் பஜனை பாடல்கள் பாடி அம்மையப்பருக்கு நன்றி கூறி சிறிது ஒய்வுக்குப் பிறகு சுமார் 11:30 மணி அளவில் கிரி் வலத்தை தொடர்ந்தார்கள். 20 யாத்திரிகளுடன் தொடங்கிய கிரி வலம் தற்போது 11 பேராக குறைந்து விட்டதாம், மிகவும் குளிராகவும் பயணம் மிகக்கடினமாகவும் இருந்ததால் மற்றவர்கள் திரும்பி சென்று விட்டனராம்.

ஒரு பக்கம் இராவணக்குன்றும் மறு பக்கம் நந்தி குன்றும் விளங்க
நடுவில் கயிலாய கங்கை ஐயனின் ஜடா முடியிலிருந்து
ஒடி வரும் அற்புதக் காட்சி


குதிரைக் குளம்படியிலிருந்து மேலும் ஒரு கி, மீ தூரம் இறங்கினால் கற்களால் நிறைந்த செர்துங் சுக் சும் ( Serdung Shuk chum) என்னும் இடத்தை அடைகின்றனர். இப்பகுதியெங்கும் திபெத்தியர்கள் கற்களைக் கொண்டு இது போல சிறிய வீடுகளைக் கட்டி யிருப்பதைக் காணலாம். இவை அப்படியே நின்றால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது அவர்கள் நம்பிக்கை. எவ்வளவு அதிகமாக கற்கள் பயன்படுத்துகின்றோமோ அவ்வளவு நல்லது.



ஆத்மலிங்க தரிசனம்

மிக அருகில் இருந்து ஆத்ம லிங்க தரிசனம். ஐயனின் ஜடா முடியில் அமர்ந்திருக்கின்றாள் கங்கை, தேவ லோகத்தில் இருந்து பகீரதனின் தவத்திற்கு இணங்கி கங்கை பூலோகத்தில் பாயும் போது அவளின் பெரும் பிரவாகத்தினால் பூலோகம் அழிந்து விடாமல் இருக்க அவளை தனது ஜடாமுடியில் தாங்கி இந்த் பூலோகத்தைக் காத்த பரம கருணா மூர்த்தி சிவபெருமான். அந்த ஜடா முடியின் அம்சமாக திருக்கயிலாய அகோர முகத்தில் ஒரு செங்குத்து கோடு உள்ளது அதில் ஜலமகள் கங்கை தண்ணீராகப் பாய்கின்றாள் அது அப்படியே ஐயனின் காலடியில் விழுந்து ஒரு சுயம்பு லிங்கமாக மாறி காட்சி தரும் அற்புதக் காட்சி. இந்த லிங்கத்தை ஆத்ம லிங்கம் என்று அழைக்கிறோம் ஆத்ம லிங்கத்திலிருந்துதான் கையிலாய கங்கை கீழே பாய்ந்து பின் சிலுங் நதியுடன் சங்கமமாகின்றது.

ஆத்மலிங்கத்தை அருகில் இருந்து தரிசனம் செய்யும் பேறு பெற்றவர்கள் ஆறு பேர் மட்டும்தானாம். அதிலும் ஒருவர் எதிரே தெரிந்த திருக்கயிலாய் மலையின் செங்குத்தான திருவடியைக் கண்டு இதை ஏற தன்னால் முடியாது என்று திரும்பி சென்று விட்டாராம் , ஆகவே ஐந்து பேர் மட்டுமே மேலே சப்த ரிஷி குகைக்காக கிளம்பினார்களாம்.



 மேலே உள்ள படம் கிரிவலப்பாதையையும் நந்தி மலையையும், திருக்கயிலாய மலையையும் சப்தரிஷி குகையயும் காட்டுகின்றது தெளிவாகக் காட்டுகின்றது.

திருக்கயிலாய மலையின் தெற்குப்பக்க திருவடி நிழலில்

ஆத்ம லிங்கத்திலிருந்து சப்த ரிஷி குகைகளுக்கான பாதை செங்குத்தான 0.4 கி.மீ மலையில் கயிறு அல்லது மலையேறும் சாதனம் எதுவம் இல்லாமல் அனுபவம் மிகுந்த சேர்ப்பாகளின் உதவியாலும் சிவசக்தியின் அருளினாலும் மட்டுமே நடந்தேறியதாம். பனியாறுகள் வந்து சேர்த்த கற்கள் ஐயனின் திருவடியில் சிறு சிறு குன்றகள் போல விளங்கின இவற்றில் மெல்ல மெல்ல ஏறி ஐயனின் திருவடியில் அமைந்துள்ள சப்த ரிஷி குகையை அடைந்து

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வெண்டறை பொய்கையும் போன்ற
ஈசன் திருவடி நீழலை அடைந்தனர் ஐவரும். நந்தி கிரிவலப் பாதையின் உயரமான இடம் இந்த சப்தகிரி குகைகள்தாம் இதற்குப்பிறகு பின்னர் பாதை இறங்கு முகமாவே உள்ளது.

நந்தியெம்பெருமானின் முன் பக்க விஸ்வரூப தரிசனம் பெற அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள்.

ஓம் நமசிவாய