சில்லுருவாய் சென்று திரண்டாய் போற்றி
மிக்கோர் அமுதுண்ண தான் ஆழ் கடலில் இருந்து வெகுண்டெழுந்த ஆலாலம் உண்ட நீலகண்டனை, தியாகராஜனை, மணிமிடற்றண்ணலை தரிசிக்க புறப்பட்ட யாத்திரிகள் , யாத்திரையின் ஆறாம் நாள் 13-05-2011 அன்று மானசரோவரில் ஒரு முக்கியமான கடமையை நிறைவேற்றினர். ஆம் அன்றைய தினம் புனித மானசரோவரின் கரையில் தங்கிய அவர்கள் சிவபெருமானுக்கு மிகவுன் பிரீத்தியான ருத்ர ஹோமம் செய்து சிவசக்தியை வழிபட்டனர்.
காலையில் மீண்டும் மானசரோவரில் புனித நீராடி ருத்ர ஹோமத்தில் அனைவரும் கலந்து கொள்ளும் காட்சிகளை காண்கின்றீர்கள்.
ஹோமத்திற்கான பூர்வாங்க வேலைகள்
அடுத்த நாள் காலையில் மானசரோவரில் இருந்து புறப்பட்டு அவர்கள் டார்ச்சனை அடைந்தனர். டார்ச்சன் திருக்கயிலாய கிரி வலத்திற்க்கான ஆதார முகாம். கிரி வலத்திற்கு முன்னும் பின்னும் யாத்திரிகள் இந்தி தங்கிச்செல்கின்றனர். இங்கு தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன. இங்கு திபெத்திய கலைப்பொருட்கள் கிடைக்கும். குறிப்பாக சுத்தமான ஸ்படிக மாலைகள் கிடைக்கும். இங்கு தொலைப்பேசி வசதிகள் உள்ளன. கிரிவலம் தொடங்கும் முன் தங்கள் இல்லங்களை தொடர்பு கொள்ளலாம்.
தூரப்பார்வையில் திருக்கயிலாய மலை
இவர்கள் இன்றைய தினமே அஷ்டபத் சென்று ஐயனின் அருகாமை தரிசனம் பெற்றனர். ஐயனின் தெற்கு முகத்தையும், நந்தி தேவரையும் . சில சமயம் ஆத்ம லிங்கம் எனப்படும் பனி லிங்கத்தையும் அஷ்டபத்திலிருந்து அருமையாக தரிசிக்க முடியும். அஷ்டபத்திற்கு மிக அருகாமை வரை வண்டிகள் செல்கின்றன. இங்கு தான் ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் முக்தியடைந்தாத். அவ்விடத்தில் ஒர் சிறிய புத்த விகாரம் உள்ளது.
திருக்ககயிலாயத்தில் கமனீயமான பொன் உஞ்சலில் திருவோலக்கம் கொண்டருளி, சகல புவனங்களையும் காத்து இரட்சிக்கும் சர்வேஸ்வரன் பவள வண்ணராம் சிவபெருமானையும், அவரது வாம பாகத்தில் என்றும் நீங்காமல் வாழும் அம்பிகை பச்சை நிறத்தாள் பார்வதி தேவியையும் எப்போதும் தனது மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டிருப்பவர் நந்தியெம்பெருமான். இந்த அமைப்பை நாம் அஷ்டபத்தில் ஸ்பஷ்டமாக தரிசனம் செய்யலாம். மலை ரூபத்தில் நமக்கு சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தியின் விஸ்வருப தரிசனம் கீழே.
நந்தியெம்பெருமானின் விஷ்வரூபம்
பொதுவாக வெளி கிரிவலம் செல்லும் போதும், அஷ்டபத்தில் இருந்தும் நந்தியெம்பெருமானின் பின் தரிசனம்தான் கிட்டும். தாங்கள் மேலே பார்ப்பது நந்தியெம்பெருமானின் முன் பக்க தரிசனம், நந்தி கிரி வலம் சென்ற அன்பர் திரு. கயிலை பாலா அவர்கள் அனுப்பிய அரிய தரிசனக் காட்சி இது.