Sunday, March 01, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 17

முதல் நாள் கிரி வலம்  - 2 

சத்யோஜாத  (மேற்கு) முக தரிசனம் 

 கூடார   உணவகங்கள் 

தேநீரும் சுடு நீரும் அருந்தலாம் 

முதல் நாள் கிரி வலத்தின் போது  மெதுவாக இடையில் உள்ள மேற்கு முகத்தை வந்தடைந்தோம்.   ஐயனின் சத்யோஜாத முகத்திற்கு எதிராக பல உணவு விடுதிகள் உள்ளன, சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளலாம்,  குப்பியில் சுடு தண்ணீர் நிரப்பிக்கொள்ளலாம், தேநீர் சிற்றுண்டி அருந்தலாம்.    மேகம் ஐயனை மூடி இருந்ததால் சிறிது நேரம் அமர்ந்து  மேக மூட்டம் விலகும் வரை காத்திருந்தோம். காலையில் அவர்கள் கொடுத்திருந்த சிற்றுண்டிகளை சாப்பிட்டோம்.  இந்த இடம் இரண்டாவது வணங்கிடம் (Second Prostration Point) என்றும்   அழைக்கப்படுகின்றது. 






திரை விலகுவது போல மேக மூட்டம் சிறிது சிறிதாக விலகி ஐயனின் அருமையான தரிசனம் கிடைத்தது அதை நீங்களும் பார்த்து இரசியுங்கள் அன்பர்களே.






   இரு பக்கமும் உள்ள மலைகள் நந்தியெம்பெருமான் போல் காட்சி தரும் அழகு 




சத்யோஜாதம் என்று அழைக்கப்படும் இம்முகம் புராணங்களின் படி  அரசம் பூ போல் வெண்மை நிறமாய்  பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம்.   பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது ,ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில்  ''. இம்முகம் செந்நிறம்   கொண்ட  மாணிக்கக் கல்லாக ஒளிர்கின்றது 

என்பது ஐதீகம்.


இது  அடி  முடி காணவொண்ணா அன்னாமலையாக,  எவரும்  அண்ணாத           (அண்டாத அண்ட முடியாத) நெருப்பு மலையாக, நெருப்புத்தூணாக ஐயன் முதன்முதலாக திரு உருக்கொண்ட லிங்க உருவாக ( லிங்க உத்பவராக) வராக உருவில் திருமாலையும் தன்னோடு கொண்டு காட்சி தரும் விஷ்ணு பாகத்தை குறிக்கின்றது.   



கைலாயத்தில்  மற்ற முகங்கள் குவிந்து   உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள்  வாங்கி  இருக்கின்றது அனேகமாக பெரும்பாலான திருக்கோவில்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் போது கிழக்கு முக மண்டலமாகவோ அல்லது மேற்கு முக மண்டலமாகவோதான் பிரதிஷ்டை செய்வர் திருமயிலையிலே கபாலீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக  மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இம்முகத்தை

  ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம: |

  பவே பவே நாதி பவே பவஸ்வ மாம்   பவோத் பவாய நம : ||

என்னும் பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்தோம். சத்யோஜாதமுகம் ஞானம் தரும் திருமுகம், கல்வியில் ஏற்படும் சகல தடையும் நீங்கும். அரசியல்    ஜெயத்தையும், கலைத்துறையில் வெற்றியையும், திருமணத்தடைகளையும்   நீக்குகின்றது இந்த முகத்திற்கும் வில்வ அர்ச்சனை செய்தேன். கூர்ந்து கவனித்தால் சத்யோஜாத முகத்திற்கு எதிரில் உள்ள நந்தியெம்பெருமானையும் தரிசிக்கலாம்





ஐயனின் முழுமையான தரிசனம் 


ஐயனின் சத்யோஜாத முகத்திற்கு எதிரே நின்று தரிசனம் செய்த போது ஒரு அதிசயம் நடந்தது. ஒரு கருடன் எங்கிருந்தோ பறந்து வந்ததுதரையில் இருந்து கிளம்பி ஐயனை மூன்று முறை சுற்றியது பின் பறந்து சென்று விட்டது.  

ஐயனை கண்ட மகிழ்ச்சியில் அமர்ந்திருக்கும் அன்பர்கள்


இந்திரிய வயம்மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய்
அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் கயிலை(தில்லை) கண்டேனே - மணி வாசகர் 
  
என்று கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க  ஐயனின் கருணையை எண்ணி அடி வீழ்ந்து வணங்கினோம்.  ஜென்ம சாபல்யம் அடைந்தது என்று ஆனந்தக் கூத்தாடினோம். 

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!
      அன்பினில் விளைந்தஆ ரமுதே!

பொய்ம்மையே பெருக்கி பொழுதினைச் சுருக்கும்
       புழுத்து அலை புலையனேன் தனக்கு

செம்மையே ஆய சிவபதம் அளித்த
       செல்வமே! சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
       எங்குஎழுந்து அருளுவது இனியே?  


என்று ஐயனின் திருப்பாதங்களை சிக்கெனப்ப்டித்துக்கொண்டோம். அருமையான தரிசனத்திற்க்குப்பின்பு மெல்ல வடக்கு முகத்தை நோக்கி  மறுபடியும் நடக்கத் துவங்கினோம்.  

                                                                                                                           யாத்திரை தொடரும் . . . . . .