Friday, June 20, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -8

யாத்திரையின் முதல் நாள்

டெல்லியிலிருந்து ராணிகேத் வரை 350 கி.மீ பேருந்துப்பயணம், யாத்திரையின் முதல் நாள் மலைகளின் ஸ்பரிசம் கண்டோம்.


அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்



ஒம் நமசிவாய
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி


வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி


ஊனத்தை நீக்கும் உடலே போற்றி


ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி


தேனத்தை வார்த்த தெளிவே போற்றி


தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி


கானத்தீ யாட லுகந்தாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (4)

நான்காம் நாள், யாத்திரையின் முதல் நாள் காலை 5 மணிக்கு பேருந்தில் யாத்திரையை


நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய திரியம்பகாய திரிபுராந்தகாய திரிகாலாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமந் மஹா தேவாய நமஹ:





தர்மயாத்ரா சங்கத்தினர் அதிகாலையில் வழியனுப்புகின்றனர்


( அம்மையார் தான் சீமா பண்டிட் 70 வயதில் இரண்டாம் முறை யாத்திரைக்கு வந்தவர்)


என்று அந்த கயிலை வாசனையும் அம்பிகையையும் வணங்கி நாங்கள் தொடங்குகின்ற, இந்த யாத்திரையை சுபமாக வழிநடத்தி முடித்துக் கொடுக்க வேண்டும் என்று வழிபட்டு ஓம் மங்களம் பாடி எங்கள் பயணத்தை துவக்கினோம். அன்று அந்த அதி காலையிலும் "தர்ம யாத்ரா மஹா சங்கத்தினர்" காலை சிற்றுண்டி அளித்ததோடு, ஒரு ஜப மாலையும் அணிவித்து யாத்திரை சுபமாக அமையவும், நல்ல தரிசனம் கிடைக்கவும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். பூஜை சாமான்கள் கொண்ட ஒரு சிறு பையும்(pouch)வழங்கினார்கள், அதில் ஆரத்தி பாட்டு புத்தகமும் வெள்ளி வில்வ தளம் ஒன்றும் இருந்தது மிகவும் சிறப்பு. யாத்திரிகள் அனைவருக்கும் கண்களுக்கு மருந்திட்டு அனுப்பினர்.




எங்களுடன் KMVN அதிகாரிகள் இருவர் கூட வந்தனர். எங்கள் யாத்திரை புண்ணிய நதிகளான யமுனை மற்றும் கங்கை நதிகளை கடந்து துவங்கியது யமுனையை டெல்லியிலேயே கடந்தோம் கங்கையை கருடமுக்தேஸ்வர் என்னும் இடத்தில் கண்டு வணங்கி, உத்திர பிரதேசத்தில் மொரதாபாத், கத்திகளுக்கு பெயர் போன ராம்பூர் , பிலாஸ்பூர், ஹல்த்வானி வழியாக காத்தகோடம் (550 மீட்டர் உயரம்) என்னும் இடத்தை மதிய உணவிற்கு சென்று சேர்ந்தாம். இரயில் இருப்புபாதை காத்தகோடம் வரைதான் உள்ளது.


இந்த நகரத்திற்கு அப்புறம் மலைப்பகுதி தொடங்குகிறது, எனவே இது வரை ஒரு பெரிய பேருந்தில் பயணம் செய்த நாங்கள் இங்கிருந்து இரண்டு சிறிய பேருந்துகளில் பயணம் செய்ய ஆரம்பித்தோம். ஆகவே எங்களது பொருட்கள் அனைத்தையும் இறக்கி மாற்ற வேண்டி வந்தது, காத்தகோடத்தில் நல்ல மழை பெய்தது அதிலேயே பைகளை சிறிய பேருந்துகளுக்கு மாற்றினோம். இரண்டு பேருந்துகளிலும் இரண்டு உத்தராஞ்சல் போலீஸ்காரர்கள் வயர்லெஸ் உடன் காவலுக்காக வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர், அவர் மூலம் டெல்லிக்கும் யாத்திரையின் முன்னேற்றம் தெரியப்படுத்தப்பட்டது. அடுத்த 20 நாட்களுக்கான இமயமலையின் எங்கள் பயணம் இங்கிருந்து தொடங்கியது அந்த அம்மையப்பரின் மாப்பெரும் கருணையினால்.
.

பின் பீம் தால் என்னும் பெரிய ஏரியை கடந்து , பொவாலி, கைர்னா பாலம் வழியாக ராணிகேத் என்னும் இடத்தை அடைந்தோம். வழியிலே கைஞ்சி என்ற இடத்தில், நெடிதுயர்ந்த மலைகளின் அடிவாரத்தில் அழகிய பூந்தோட்டங்களுடனும் அமைதியாக ஓடும் நதியின் கரையில் இரம்மியமாக அமைந்திருந்த வைஷ்ணவ தேவி கோவிலில் அம்பாளை வணங்கினோம்.





ராணிகேத் (2000 மீட்டர் உயரம்) தேவ பூமியாம் குமோன் பிராந்தியத்தின் ஒரு கோடை வாச ஸ்தலம். இமய மலையின் பனி மூடிய சிகரங்களின் அருமையான காட்சி இவ்விடத்திலிருந்து கிடைக்கின்றது, இங்கிருந்து ஒரு வழி கேதார்நாத், பத்ரிநாத் செல்கின்றது. இவ்வூரில் இருந்த சிவன் கோவிலில் ராணிகேத் வணிகர் சங்கத்தினரால் எங்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. எங்களுக்காக தாய்மார்களின் ஒரு குழு பஜனைப்பாடல்கள் பாடினர், அவர்களில் பலர் எங்களை பார்த்த சந்தோஷத்தில் அழுதே விட்டனர், அவர்கள் அன்பும், பக்தியும் எங்களை மிகவும் நெகிழ வைத்தது. நாங்கள் எம்பெருமானுக்கு அருகில் இருந்தும் கூட எங்களுக்கு இந்த் அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கைலாயம் செல்லும் தங்களைக் காண்பதே ஒரு பெரிய பாக்கியம் என்று அவர்கள் கூறியபோது மிகவும் நெகிழ்வாக இருந்தது. இராணிகேத்தின் வணிக சங்கத்தினர் சிற்றுண்டி, அக்கோவிலின் அம்பாளின் ஒரு புகைப்படம் மற்றும் நிணைவுப்பரிசும் வழங்கினர்



இராணி கேத் சிவன் கோவில்

(காலணி அணியாமலே யாத்திரை செய்த அன்பர் திரு.ஜோஷி)


.
அவர்களின் துக்கம் புரிந்தது, அதே சமயம் அந்த சிவசக்திக்கு ஆயிரம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டோம் எங்களுக்கு தரிசனம் தர திருவுள்ளம் கொண்டதற்காக. மேக மூட்டமாக இருந்ததால் ராணிக்கேத்தில் (Ranikhet) எங்களுக்கு இமய மலையின் அரிய காட்சி கிடைக்கவில்லை. முதல் நாள் மலைகளின் ஸ்பரிசம் கண்டோம், நெடிதுயர்ந்த மரங்கள் சிகரங்களில் பச்சை போர்வை போர்த்தது போல் காட்சி தந்தன, ஆறுகள் வளைந்து வளைந்து ஓடின. முதல் நாள் நாங்கள் கிட்டத்தட்ட 350 கி,மீ தூரம் பேருந்தில் பயணம் செய்தோம். பின் KMVN சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினோம்.


இராணிகேத் அம்பாள்







பஜனைப்பாடல்கள் பாடி அழுத அன்புத்தாய்மார்கள்





இனி உத்தராஞ்சல் மாநிலத்தைப்பற்றி ஒரு சிறு குறிப்பு. பழைய உத்திரப்பிரதேசத்தில் இருந்த மலைப்பகுதியே உத்தராஞ்சல் மாலம் ஆகியது, இம்மாலத்தின் மேற்குப்பகுதி கர்வால் என்றும் , கிழக்குப்பகுதி குமோன் என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் யாத்திரை செய்யும் பகுதி குமோன் பகுதி. இந்த பகுதி முழுதும் தேவ பூமி, பல்வேறு ஆலயங்களும், பனி மூடிய சிகரங்களும், வளைந்து வளைந்து ஓடும் ஆறுகளும் நிறைந்த பகுதி. இனி இப்பகுதிக்கு குமோன் என பெயர் வரக்காரணம் விஷ்ணு பகவான் எடுத்த கூர்ம அவதாரம். இரண்டாவது அவதாரமாக கூர்ம அவதாரம் எடுத்த போது எம்பெருமான் இம்மலையில் மூன்று மாதங்கள் தங்கியதாக ஐதீகம். அவரது காலடித்தடம் இன்னும் இம்மலைகளில் உள்ளன, கூர்மாச்சல் என்பதே மருவி குமூ ஆகி பின் குமோன் என்று இன்று அழைக்கப்படுகின்றது. மானசரோவருக்கு நுழைவாயிலாகத் திகழுவதால் இந்த குமோன் பகுதி மானஸ்கண்ட் என்றும் அறியப்படுகின்றது.






யாத்திரை தொடரும்...............

No comments:

Post a Comment