Sunday, November 23, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -23

மானசரோவர் கிரி வலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள்

16, 17ம் நாட்கள் குஹூவில் தங்கல்

கௌரி சங்கர் என்று அழைக்கப்படும்
திருக்கயிலாயமும் மானசரோவரும் இணைந்த காட்சி

*******

அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி


ஆதி புராணணாய் நின்றாய் போற்றி


பண்டை வினைக ளறுப்பாய் போற்றி


பாரோர் விண்ணேத்தப் படுவாய் போற்றி


தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி


தொழில் நோக்கி ஆளுஞ் சுடரே போற்றி


கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (18)


*********



குஹூ என்பதற்கு மனதை தூய்மையாக்குதல் என்று பொருள், ஆம் அந்த சர்வேஸ்வரன் - சர்வேஸ்வரியின் தரிசனம் பெற்ற பின் மனதில் உள்ள அழுக்கு எல்லாம் அவர்களது அருட்புனலால் துடைக்கப்படுவதால் மனது நிர்மால்யமாகி விடுகின்றதல்லவா? எனவே இந்த்ப் பெயர் இந்த இடத்திற்கு மிகவும் ஏற்புடையது.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தால் குஹூவில் (4500 மீ உயரம்) ஒரு நாள் தான் தங்கியிருப்போம் பின் கிஹூ சென்று கைலாய கிரி வலம் சென்ற குழுவிற்காக காத்திருதிருந்திப்போம், ஒரே குழுவாக சென்றதால் இங்கே இரு நாட்கள் தங்கினோம். யாத்திரையின் 16 நாள் ஓய்வு எடுத்தோம்,

அடுத்த நாள் நடக்கப்போகின்ற யாகத்திற்கு வேண்டிய பொருட்களை தயார் செய்தோம்.

எங்கள் துணிகளை துவைத்து காய வைத்தோம்.

மானசரோவரின் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் வர்ண ஜால அழகை ரசித்தோம்.

குஹூ புத்த விகாரம்

அங்குள்ள புத்த விகாரத்திற்கு சென்று அதன் அழகை ரசித்தோம்,

மானசரோவர் கரையில் விளையாடும் பறவைகளை கண்டு சிவ சக்தியின் திருவிளையாடலாக நினைத்து ஆனந்தம் அடைந்தோம்.

முக்கியமாக கடினமான கிரிவலத்திற்குப்பின் மிகவும் அவசியமான ஓய்வு எடுத்தோம்,

மாலை மகிழ்ச்சியுடன் அனைவரும் இனைந்து பஜனை செய்தோம்.

இரவு அடியேனும், மற்றும் சில அன்பர்களும் நட்சத்திர ரூபத்தில் தேவர்கள் மானசரோவரில் நீராடுவதை காண அமர்ந்திருந்தோம் ஆனால் யாருக்கும் அந்த பாக்கியம் அன்று கிடைக்கவில்லை. இரவு வானத்திலே நட்சத்திரங்கள் கோடி கோடி காட்சி கொடுத்தன, உயர் மட்டம் என்பதாலும், மேலே காற்று மாசு அடையாமல் இருப்பதாலும் இருக்கலாம். அதே சமயம் இரவிலும் கூட ஒளிரும் மானசரோவரைக் கண்டு களித்தோம்.

17 நாள் மிகவும் முக்கியமான கடமைகளை மானசரோவரில் நிறைவேற்றினோம். மானசரோவர் தடாகத்தில் நீராடுவது , அதன் தீர்த்ததை பருகுவதும் அதன் கரைகளில் கிடைக்கும் வித விதமான நிறங்களையும், வடிவங்களையும் உடைய கற்களை எடுத்து வந்து சிவலிங்கமாக பூசை செய்வது மிகவும் புனிதமானது.

காலைச்சூரியன் உதிக்கும் காட்சி மானசரோவர் கரையில்

முதாலவதாக மானசரோவரில் மூன்றாம் முறையாக நீராடினோம் இங்கு கடுகு எண்ணெய் தேய்த்துக் கொண்டு மானசரோவரில் இறங்கினால் அதிக நேரம் நீரில் இருக்கலாம் என்பதால் இன்று கடுகு எண்ணெயை உடலில் பூசிக் கொண்டு மானசரோவரில் குளித்தோம். ஏனென்றால் ஒரு மிக முக்கியமான கடமையை இன்று செய்ய வேண்டி இருந்தது.

நமது இந்து தர்மத்தில் நமது முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிரார்த்தம் செய்து பித்ரு பூஜை செய்வது என்பது எல்லோருக்கும் விதிக்கப்பட்டிருகின்ற ஒரு கடமை. அமாவாசை, மாத பிறப்பு, வருட திதி, கிரகண காலம், ஆகிய தினங்களில் புண்ய நதிகளில் நாம் பக்தி சிரத்தையுடன் செய்யும் திதி சிரார்த்தம் என்றழைக்கப்படுகின்றது. இவ்விதம் நாம் நமது மூதாதையர்களுக்கு செய்யும் பூஜையின் பலனால் குலம் தழைக்கும், குழந்தைகள் நன்மைகளை பெறுவார்கள், மிகப்பெரிய கடன் தொல்லைகள் தீரும், நீண்ட ஆயுளைப் பெறலாம். சுவர்க்கம் கிட்டும் என்று மஹா பாரதம் கூறுகின்றது. இவ்விதம் நாம் செய்யும் பூசையின் பலன் சூரிய ஒளிக்கதிர்களின் மூலம் பித்ரு தேவதைகளை அடைந்து அவர்கள் மூலம் நம் மூதாதையர்களை சென்று அடைகின்றன. அதனால் அவர்கள் மகிழ்ந்து நம்மையும் நமது சந்ததியினரையும் ஆசிவதிக்கின்றனர். இப்போது இந்த அவசர உலகத்திலே, தனிக் குடும்பங்களாக ஆகி விட்ட சமயத்தில் அனைவரும் இந்த கடைமையை சரி வர செய்ய முடிவதில்லை. எனவே தான் காசி, இராமேஸ்வரம், கயா முதலிய புனித இடங்களில் நாம் செய்யும் சிரார்த்தம் பல ஆண்டுகளுக்கு நாம் சிரார்த்தம் செய்த பலனைத்தருகின்றது. அது போலவே மானசரோவர் கரையில் செய்யும் பித்ரு காரியம் மிகவும் விசேஷமானது. இன்றைய தினம் அமாவாசை தினம் என்பதால் திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாகவும் இறையருளால் அமைந்தது. இன்றே பித்ருக்களான திதி கொடுத்தோம், சூரியனைப் பார்த்து முதலில் ரிஷ’களுக்கான கடனை அடைக்க ஒரு முறையும், இரண்டாவது தேவர்களுக்கான கடனை அடைக்க அடுத்த முறையும், அவரவர்கள் மூதாதயர்களுக்கான கடனை அடைக்க மூன்றாவது முறையாக எள்ளும் நீரும் இறைத்தோம். பின் யாக குண்டத்தின் முன் வந்து அமர்ந்தோம்.

உலக நன்மைக்காக மானசரோவர் கரையில் யாகம்

அன்று காலையிலிருந்தே சிறிது மேக மூட்டமாக இருந்தது. நாங்கள் யாகத்தை ஆரம்பிக்க செல்லும் போது சிறு து‘றலும் போட்டது, எங்கள் பிரதான யக்ஞ கர்த்தா திரு கோஸ்வாமி அவர்கள் யாரும் யக்ஞம் முடியும் வரையில் எழுந்து செல்லக்க்கூடாது என்று பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த சிவபெருமான் காப்பாற்றுவார் என்று அன்புடன் கட்டளையிட்டார், அதே போலவே அனைவரும் அம்ர்ந்திருந்தோம் சிறிது நேரம் சென்றதும் மேகம் விலகி சூரியன் வந்து நாங்கள் செய்யும் யக்ஞத்தை பார்வையிட்டார். அதைப்பார்த்து திரு கோஸ்வாமி அவர்கள் நம்மை ஆசிர்வதப்பதற்காகவே யக்ஞத்தின் ஆரம்பத்தில் வருண பகவான் வந்து தூறல் போட்டு சென்றார். இப்போது சூரியனும் நம்மை ஆசிர்வதிக்க வந்துள்ளார் என்று கூறினார். முதலில் அவரவர்கள் கொண்டு வந்து சொந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தோம், பின் விபூதி, அட்சதை அர்பணித்து பின் யாகத்தை துவக்கினோம். முதலில் ஸ்ரீ ருத்ர யாகம் செய்தோம், பின் சக்தி பீடத்தில் அம்பாளை துர்கா ஹோமம் நடத்தி வழி பட்டோம் பின் நவக்கிரக ஹோமம், ஸ்ரீ சுக்த ஹோமம் சுதர்சன ஹோமம் முதலியன மிக விஸ்தாரமாக செய்து இவ்வளவு நல்ல தரிசனத்தை தந்த சிவ சக்திக்கு , செந்துவர்வாய் உமை பங்கனுக்கு, சங்க வெண் குழைக் காதுடை எம்பெருமானுக்கு, தையலோர் பங்கினருக்கு, கொன்றை மதியமும், கூவிள மத்தமும் துன்றிய சென்னியருக்கு நன்றி செலுத்தினோம். பின் பூர்ணாகுதி செய்து யாகத்தை முடித்தோம், அது வரை மேகத்தில் மறைந்திருந்த கைலாயம் மேகம் விலகி தரிசனம் தர ஆரம்பித்தது. எங்கள் பூஜையை அந்த எங்கோனும், எங்கள் பிராட்டியும், ஏற்றுக்கொண்டு அருள் பாலித்தனர். பின்
ஓம் பவாய தேவாய நம:
ஓம் ஸர்வாய தேவாய நம:
ஓம் ஈஸானாய தேவாய நம:
ஓம் பஸ”பதேர் தேவாய நம:
ஓம் ருத்ராய தேவாய நம:
ஓம் உக்ராய தேவாய நம:
ஓம் பீமாய தேவாய நம:
ஓம் மஹதே தேவாய நம:

என்னும் அஷ்ட புஷ்ப அர்ச்ச்னை செய்தோம். பின் திரு போக்ரே தம்பதிகள் கொண்டு வந்திருந்த 108 வெள்ளி வில்வ தளங்களால் எம்பெருமானுக்கு அடியேனும், திரு தனுஷ்கோடி அவர்களும் வில்வ அர்ச்சனை செய்தோம். இவ்வாறு எம்பெருமான் அருமையான ஒரு தரிசனமும் கொடுத்து அவருக்கு செய்ய நினைத்த பூஜைகள் அனைத்தும் சிறப்பாக செய்யுமாறு அருள் பாலித்தார். பின் அன்று முழுவதும் ஓய்வு எடுத்தோம்.

நேபாள் வழியாக யாத்திரை வந்த தமிழ் நாட்டுக் குழுவினர் அதே நாள் குஹூ வந்து சேர்ந்தனர், அவர்களுக்காக சில அறைகளை ஒதுக்கி கொடுத்தோம், இருவர் தங்க வேண்டிய ஒரு அறையில் அவர்கள் ஐந்து பேர் தங்கினர் அன்று. எங்கள் பஜனையில் அவர்களில் சிலரும் கலந்து கொண்டு தேவாரம் இசைத்தனர். இன்று இரவு சிலருக்கு நட்சத்திர தரிசனம் மூன்று முறை கிடைத்தது. இந்த 17ம் நாள் கடமைகளை நிறைவேற்றிய நாள். இன்றைய தினம் யாகத்திற்கு தட்சனையாக சுமார் ரூபாய் 5000 சேர்ந்தது. அதில் அடியேனுடன் பணிபுரியும் அன்பர் ஒருவர் தான் நீரிழிவு நோய் உள்ளவர் என்பதால் நான் கயிலை செல்ல முடியாது, தங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது எனவே தாங்கள் விரும்பிய வகையில் இந்த பணத்தை செலவழித்துக் கொள்ளுங்கள் என்று ரூபாய் 1001/- அளித்தார். மற்றும் ஒரு அன்பர் 101/- ரூபாய் அர்ச்சனைக்காக வழங்கினார் அந்தத் தொகைகளை நான் இன்று யாக தட்சினையாக அளித்தேன். திரு கோஸ்வாமி அவர்கள் இவ்வாறு சேர்ந்த யாக தட்சினையை காலாபானி மற்றும் கூஞ்சியில் உள்ள கோவில்களுக்கு வழங்கி விடுவாம் என்று கூறினோம் அவ்வாறே திரும்பி வரும் போது அந்த தொகையை இரண்டு கோவில்களில் உள்ள உண்டியலில் சேர்த்தோம்.

இவ்வாறு இரண்டு நாட்கள் குஹுவில் ஒய்வு எடுத்து முக்கிய கடமையாம் யக்ஞமும் சிவ சக்திக்கு நன்றியும் செலுத்தினோம்.

No comments:

Post a Comment