Wednesday, December 31, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -27

மீண்டும் இந்தியப்பகுதியில்

23ம் நாள் கூஞ்சியிலிருந்து புத்தி வரை நடைப்பயணம்


சிவ சக்தி தரிசனம் பெற்று திரும்பி வரும் போது
சிறிய கைலாயத்தின்
அற்புத தரிசனம்
*******


அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி

செல்லாத செல்வமுடையாய் போற்றி

ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி

ஆகாய வண்ணமுடையாய்ப் போற்றி

வெய்யாய் தணியா யணியாய் போற்றி

வேளாத வேள்வி யுடையாய் போற்றி

கையார் தழலார் விடங்கா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (24)


************



கூஞ்சி ( Gunji ) மூகாமிலிருந்து கிளம்பியதும் கிராமம், கிராமத்தை தாண்டியதும் நல்ல இறக்கம், பின் காளி நதியைக் கடந்து, ஆதி கைலாயத்தை ( சிறிய கைலாயம்) தரிசனம் செய்து பின் டிங்கர், காளி நதிகளின் சங்கமம் பார்த்து, பைன் மரங்களுக்கிடையில் சென்ற பாதையில் பல்வேறு முறை ஏறியும் இறங்கியும் நடந்து, காளி நதியின் வேகம் கூடுவதையும் ரசித்து பின் பூக்களின் சமவெளியில் பல்வேறு பூக்களை புகைப்படம் எடுத்தோம். வழியில் காளி நதியில் அமைக்கப்பட்டுள்ள மாவரைக்கும் இயந்திரங்களைக் கண்டு அக்காலத்திலேயே தண்ணீரின் சக்தியை பயன்படுத்தி இயந்திரங்களை அமைத்த பொறியியல் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. மீண்டும் மூழ்கும் கிராமமாம் கர்பியாங்கை கடந்து, எல்லா குழுவினருக்கும் திருக்கயிலாயம் செல்லும் குழுவினருடன் சந்திப்பு ஏற்படும், ஆனால் இறுதிக்குழு (16வது குழு) முன்னரே சென்று விட்டதால் நாங்கள் மட்டும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் நடந்தோம்.
யாத்திரை முடித்து திரும்பி வரும் போது
கர்பியாங்கில் அடியேன் தனுஷ்கோடி மற்றும் தபஸ்வி



அன்னபூர சிகரங்களை தரிசித்து, அனைத்து உயிர்களுக்கும் அன்னமாம் உணவு அளிக்கும் அன்னபூரணிக்கு ஆயிரம் நன்றிகள் கூறினோம். பின் பூசமவெளியை கடந்து சியாலே (Chiyaleh) வந்தடைந்தோம். அதற்க்கு பின் நல்ல இறக்கம் உண்மையான முழங்கால் முறிச்சான். பின் ஆப்பிள் மரங்கள் நிறைந்த புத்திக்குள் ( Budhi) வந்து சேர்ந்தோம்.

************


24ம் நாள் புத்தியிலிருந்து மாங்டி நடைபயணம்,
பின் தாருசூலா வரை பேருந்தில்




அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்


ஆட்சி யுலகை யுடையாய் போற்றி

அடியார்க் கமுதெலா மீவாய் போற்றி

சூட்சி சிறிது மிலாதாய் போற்றி

சூழ்ந்த கடல்நஞ்சு உண்டாய் போற்றி

மாட்சி பெரிது முடையாய் போற்றி

மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி

காட்சி பெரிதும் அரியாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (25)


*********



புத்தியிலிருந்து நாங்கள் கிளம்பிய போது மழைத்தூறல்கள் பாதை வழுக்கலாக இருந்தது, மற்றும் நீர் வீழ்ச்சிகளில் அதிக நீரோட்டம் இருக்குமே என்று சிறிது பயந்தோம். ஆனால் இறையருளால் சுமார் பதினைந்து மிடங்களில் மழை நின்று விட்டது. காளியானவள் நாம் யாத்திரையை முடித்து விட்டு செல்வதால் கோபம் கொண்டவள் போல் தோன்றியது, நடுவில் மால்பா என்னும் இடத்திற்கு அருகில் இரண்டு நாட்களுக்கு முன் தான் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது அதில் 16வது குழுவினரின் ஒரு கோவேறுக் கழுதை ஆற்றில் விழுந்து பின் கீழே சென்று தப்பித்ததாக செய்தி வந்திருந்தது, குதிரையின் மேல் இருந்த பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்ல பட்டன.

மால்பா அருகே நேபாள பகுதியின் நிலச்சரிவு

எனவே நாங்கள் கவனத்துடனும் அதே சமயம் வேகமாகவும் இறங்கினோம். சென்ற போது இருந்ததை விட வரும் போது நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் குறைவாகவே இருந்தது. இன்று சிறிது கவலையும் வந்தது, இந்த ஒரு மாதமாக ஒன்றாக இருந்த அனைவரும் பிரிந்து அவரவர் இடத்திற்கு செல்லப்போகிறோமே என்று. அப்படி ஒரு நெருக்கம் எங்களுக்குள் ஏற்பட்டிருந்தது. மதிய உணவு வேளையில் மாங்டி கால்வாயை அடைந்தோம். நடைப்பயணத்தின் இறுதியிலும் இறைவன் வருண பகவானை அனுப்பி எங்களை ஆžர்வதித்தார்.

எங்களுக்காக சிறிய பேருந்து காத்து நின்றது உணவுடன். இதுவரை கூடவே இருந்து நடைப்பயணத்தின் போது சிற்றுண்டியும், தேனீரும் அளித்து, பாதுகாப்பும் அளித்த ITBPயினருக்கு மிகுந்த நன்றி கூறி விடையளித்து, அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, போர்ட்டருக்கும், குதிரைகாரர்களுக்கும் சிறு பரிசுகள் அளித்து மாங்டியிலிருந்து புறப்பட்டோம். வரும் வழியில் இது தான் பாங்லா நீர்வீழ்ச்சி, இது ஜெஸ்கூ இங்கு தான் இரவு தங்கினோம் என்று எல்லா இடங்களையும் நினைவு கூர்ந்து கொண்டும் நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசித்துக் கொண்டும் தாருசூலா வந்தடைந்தோம். ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அருட்பெரும் ஜோதியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் சென்ற போது அதிகமாக இயற்கை அழகை ரசிக்கவில்லை, இப்போது இமய மலையின் அழகை முழுதுமாக ரசித்தோம்.

இந்திய நேபாளப்பகுதிகளை இனைக்கும் நட்புப் பாலம்

தாருசூலாவில் அன்று இரவு தங்கினோம். பகலில் நேபாள தாருசூலாவிற்கு நட்பு பாலம் மூலம் சென்று பார்த்து விட்டு வந்தோம். கைலாயம் செல்லும் போது அவசரத்தில் கவனிக்கவில்லை, KMVN சுற்றுலாவிடுதி காளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, ஆற்றின் பக்கம் அமைந்துள்ள அறைகளிலிருந்து அருமையான காட்சி கிடைத்தது. இரவு சுற்றுலா விடுதியின் முற்றத்தில் அமர்ந்து பஜனை மற்றும் பூஜைகள் செய்தோம்


யாத்திரையின் 24ம் நாள் நடைப்பயணம் நிறைவு பெற்ற நாள்.

No comments:

Post a Comment