Thursday, November 10, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -12


20-05-2011 அன்று மனோகாம்னா தேவியில் அன்னையை தரிசனம் பெற்று அவள் அருள் பெற்ற அன்பர்கள் அடுத்த நாள் ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், பெருமாள் சுயம்புவாக தோன்றிய ஸ்வயம்வக்த ஸ்தலமான முக்திநாத் எனப்படும் சாளக்கிராமத்திற்கு தங்கள் யாத்திரையை தொடர்ந்தனர்.


போக்ரா விமான நிலையம்.
முதலில் அவர்கள் போக்ரா வந்து அங்கிருந்து சிறு விமானம் மூலமாக முக்திநாத்திற்கு சென்றனர்.

சிறு விமானம்



அன்னபூரணா மலைதொடர்

சூரிய ஒளியில் ஒளிரும் அன்னபூரணா மலைத்தொடர்
விமானத்தில் செல்லும் போது அன்னபூரணா சிகரங்களின் அழகைக் கண்டு இரசித்தனர் அதை தங்கள் கேமராக்களிலும் பதிவு செய்து கொண்டனர்.

அன்னபூரணா மலைச்சிகரம் மிக அருகாமையில்



முக்தி நாராயணர் தாயார்களுடன்

விஸ்வாமித்திர மஹாரிஷியின் புதல்வரான சாளங்காயனர் என்பவருக்காக சுயம்புவாக தோன்றிய பெருமாள் தாயார்களுடனும், இராமானுஜருடனும் சேவை சாதிக்கின்றார். இவரை பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பி என்று அனுபவிக்கின்றார். திருமங்கையாழ்வாரோ இவரை சக்கரவர்த்தித் திருமகனாக இராமனாக அனுபவிக்கின்றார்.

புனித கண்டகி நதி

இந்த புண்ணிய கண்டகி நதியில்தான் விஷ்ணுவாம்சம் பொருந்திய பூஜைக்குரிய சாளக்கிராமங்கள் தோன்றுகின்றன.





முக்திநாத்திற்கு செல்லும் பாதை

முக்திநாத் நுழைவாயில்


முக்திநாத் ஆலயம்

ஸ்ரீ மூர்த்தி - சாளக்கிராமம்

பாலைக்கறந்தடுப்பேறவைத்துப் பல்வளையாளென்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று இறைப்பொழுதங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி சாய்த்துப்பருகிட்டுப்போந்து நின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.

என்று இவரை கண்ணனாக பெரியாழ்வார் அனுபவிக்கின்றார்.



108 தீர்த்தங்கள்

வெளிப்பிரகாரத்தில் 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில் 108 தாரைகள் விழும்படி விசாலமான ஒரு குண்டம் உள்ளது. நடுங்கும் குளிரிலும் அந்த சீதள நீரில் யாத்திரிகள் புனித நீராடுகின்றனர்.










முக்தினாத்தை சுற்றி ஜ்வாலாமுகி மற்றும் பல புத்த விகாரங்கள் உள்ளன. ஜ்வாலாமுகியில் எப்பொதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதியைக் காணலாம்.



கருடாழ்வார்

இந்த க்ஷேத்திரத்தின் பெருமையைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே படியுங்கள்.

விஷ்ணுவின் சொரூபமாகத் திகழ்வது சாளக்கிராமம் ஆகும். இது ஒரு வகை கல். இதற்கு சுருள் என்பது பொருள். நேபாளத்தின் கண்டகி நதிக்கரையில் இவை கிடைக்கின்றன. பூஜிப்பதற்கு உகந்த மங்களகரமான சாளக்கிராமத்தின் அவதாரத் தலம் இந்த முக்திநாத் ஆகும். முக்திநாத்தில் சங்கு, சக்கர, கதாதரராக திருமகளுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். இதற்கு பின்னால் விஷ்ணுவின் அம்சமான மிகப்பெரிய அபூர்வ சாளக்கிராம மூர்த்தியை தரிசிக்கலாம். எனவே இத்தலம் சாளக்கிராமம் என்றும் அறியப்படுகின்றது. பாக்கியமுள்ள பக்தர்கள் அங்கு சென்று சாளக்கிராம மூர்த்திகளை, தாங்களே சேகரித்து எடுத்து வருகின்றனர். சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள். நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.


முக்திநாத் தரிசனம் செய்தவர்கள் பிறப்பு, இறப்பு என்னும் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். எம்பெருமானின் இருப்பிடமான வைகுந்தத்தில் நித்ய சூரியர்களாக வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். இக்கோயிலில் ராமானுஜருக்கும் சன்னதி இருப்பது சிறப்பான அம்சம். விசுவாமித்திர முனிவரின் சாளங்காயனர் என்பவர் பிள்ளைப் பேறு வேண்டி காளி கண்டகி நதியில் நீராடி ஸால் மரத்தினடியில் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது சுயம்புவாக தோன்றிய பெருமாள் அவருக்கு அளித்த வரத்தின்படி ஸ்வயம்புவாய் இங்கே சேவை சாதிக்கின்றார். அது போலவே விஷ்ணு சாந்நித்யம் உள்ள சாலக்கிராம கல்லாகவும் அனைவருக்கும் அருள் வழங்குகின்றார்.

மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் இந்த முக்திநாத் என்னும் சாளக்கிராமமும் ஒன்று. இந்த திவ்ய தேசத்தை

இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க, மணம் கமழும்,

தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை, நெஞ்சே!

என்று திருமங்கையாழ்வாரும், மற்றும் பெரியாழ்வாரும் மொத்தம் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும் காண்கிறார். திருமங்கையாழ்வார் இவரை ராமனாக காண்கிறார். இந்த திவ்ய தேசத்தில் ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார். இங்கு பகவான் தீர்த்த ரூபியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இத்தலம் பெருமாள் தானாகவே எழுந்தருளிய ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள் ஒன்று. மற்ற தலங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை, புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்ரமம் ஆகியவை ஆகும்

வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்பந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்கு மகிழ்ந்த எம்பெருமான் கண்டகி நதியில் நித்ய அவதாரம் (சாளக்கிராம ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.

கண்டகி நதிக்கரையில் உள்ள "முக்திநாத்" க்ஷேத்திரம் நேபாள நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரிலிருந்து 272கி.மீ. தொலைவில், இமயமலைத் தொடரான அன்னபூர்ணாமலைத் தொடருக்கு அப்பால் உள்ள தவளகிரிப் பிராந்தியத்தில் உள்ளது.

பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வரும் சாளக்கிராம திவ்ய தேசத்தின்

மூலவர் : ஸ்ரீமூர்த்தி - (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பூ மூர்த்தி) நின்ற திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்.

தாயார் : ஸ்ரீதேவி நாச்சியார்

தீர்த்தம் : ஸ்ரீசக்ர தீர்த்தம்

விமானம் : கனக விமானம்

பிரத்யக்ஷம் : ப்ரம்மா, ருத்ரர், கண்டகி

ஆழ்வார் பாடல்கள்: பெரியாழ்வார் - 2பாசுரங்கள், திருமங்கையாழ்வார் 10பாசுரங்கள்.


அர்ச்சாமூர்த்திகளில் (விக்ரகம்) ஸான்னித்யம் ஏற்பட முதலில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டுவது மிகவும் அவசியம். ஆராதனம் செய்பவர்கள் ஆசார்யர்களிடம் இதற்கான தீக்ஷை பெறவேண்டும். தீக்ஷை பெற்றவர்கள்தான் அர்ச்சா மூர்த்தியை ஆராதனம் செய்யத் தகுதிபெற்றவர்கள். ஆனால் எம்பெருமானின் ஸான்னித்யமுள்ள சாளக்கிராமமூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் போன்ற கடினமான நியதிகள் கூறப்படவில்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதன மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனம் செய்யலாம்.

சாளக்கிராம மூர்த்திகள், ஹிமாலயத்திலிருந்து (சாளக் கிராம சிகரம்) உற்பத்தியாகும் கண்டகி நதிப்படுகையில் சக்ர தீர்த்தம் என்ற புனிதமான இடத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன என்பதை முன்னரே பார்த்தோம். இதன் அளவு சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம் வரை பெரிதாகவும், அபூர்வமான சில சாளக்கிராம மூர்த்திகளில் ஸ்வர்ணரேகையும் இருக்கும். இதனால் அந்த நதி அங்கு “ஹிரண்யவதி” என்றும் கூறப்படுகிறது.நேபாளத்தில் உள்ள "மஸ்டாங்" என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர்உயரத்தில் உள்ள "தாமோதர் பீடபூமி"யில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன. அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள் ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள்.இந்த ஏரிகள் "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப் படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலை"யும் அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப் படுகிறது.


கண்டகி நதியைப் பற்றி , அங்கே உலவும் ஒரு செவி வழிக் கதை இது.வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாதுதிகைக்க,அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.

அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி.

அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம் அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு,சக்ரகதாபாணியான ஸ்ரீமந்நாராயணன் காட்சி அளிக்கிறார். கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச் சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்" ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பெயரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள்.

சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது.

முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும்.
குளிர்ச்சியாக இருக்கும்.

2-ம்வகை: சரிபாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது

3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும்.

எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

இச்சாளக்கிராமங்களை விலை கொடுத்து வாங்குவதை விட வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்

பச்சை - பலம், வலிமையைத் தரும்

கருப்பு - புகழ், பெருமை சேரும்

புகைநிறம் - துக்கம், தரித்திரம்.

சாபத்தினால் மலையாக மாறிய விஷ்ணுவை, மஹாலக்ஷ்மித்தாயார் கண்டகி நதியாக ஓடி அறுத்துத் தள்ளுவதால் சாளக்கிராமங்கள் உருவாகின்றன. எப்போது மலை முழுவதுமாக அறுக்கப்படுகின்றதோ அன்று மஹா விஷ்ணுவின் சாப விமோசனம் என்பது ஒரு ஐதீகம்.

இது ஹிந்துக்களைத் தவிர பௌத்த மதத்தவர்களுக்கும் புனித க்ஷேத்ரமாக விளங்குகிறது. பௌத்தர்கள் இதை திபேத் மொழியில் “சம்மிங்க்யாஸ்தா” - “மோட்சமளிக்கும் பள்ளத் தாக்கு” என்று அழைக்கிறார்கள். இங்கு பெருமாளுக்கு பூஜை செய்பவர்கள் புத்த சந்நியாசினிகள் ஆவர். சாளக்கிராமம் (முக்திநாத்) யாத்திரை செல்ல ஏற்ற சமயம். ஏப்ரல் 10தேதிக்கு மேல் மே மாதம் மூன்றாம் வாரம் வரை ஆகும் . (மே மாதக் கடைசியில் மழை ஆரம்பமாகிவிடும்). மேலும் செப்டெம்பர் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை ஆனால் இச்சமயம் குளிர் அதிகமாக இருக்கும் கம்பளி உடைகள் எடுத்து செல்ல வேண்டி வரும்.

3 comments:

  1. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
    அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow



    (First 2 mins audio may not be clear... sorry for that)

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    My blog:
    http://sagakalvi.blogspot.com/

    ReplyDelete
  2. சாளக்கிராமம் சிறீமூர்த்தி தர்சனம் கிடைத்து மகிழ்ந்தோம்.

    கண்டகி நதி சாளக்கிராமங்கள்,108 தீர்த்தங்கள் என அனைத்தும் காணும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.

    முன் யாத்திரைகளையும் கண்டேன். நன்றி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி மாதேவி. இன்னும் ஐயன் அருள் தொடரும். அப்போதும் வந்து தரிசனம் செய்யுங்கள்.

    ReplyDelete