Friday, May 17, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -13 (திருக்கயிலாய யாத்திரை-2012)

நைலாமில் தங்கல்

சீ - சா- பங் -மா ஹோட்டல்

நாங்கள் சென்ற சமயம் ஒரு குழுவினர் தங்கும் விடுதியின் முற்றத்தில் அமர்ந்து  ஒரு சுவாமிஜீ ஒருவரின் தலைமையில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டிருந்தனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உண்மையாகவே ஹோட்டல் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது ஜே ஜே என்று கூட்டம். அறைகள் எதுவும் காலியாக இல்லை. பின்னர்  ஒரு குழுவினர் கிளம்பிச் சென்ற போதுதான் இரண்டு  பெரிய ஹால்கள் கிடைத்தன அந்த இடைப்பட்ட நேரத்தில் சிறிது நேரம் பஜனைப் பாடல்களைப் பாடி கொண்டிருந்தோம். உணவு தயார் ஆனவுடன் உணவருந்தினோம்.   அதுவும் 8 பேர் தங்கும் இடத்தில் 12 பேர் தங்க வேண்டியிருந்தது. அனைவருக்கும் பொதுவாக சுமார் 10 கழிவறைகளும், குளியல் அறைகளும் இருந்தன. வரிசையில் நின்றுதான் இந்த அறைகளை பயன் படுத்த வேண்டியிருந்தது. சுத்தம் என்பது பேருக்குக்கூட இல்லை. அறைகள் கிடைத்த பின் அவரவர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து விட்டு சிறிது மலையேற்றப் பயிற்சிக்காக அருகில் உள்ள ஒரு மலைக்கு சென்றோம்.



 தங்கும் விடுதியின்   அழகு

 அறைகளுக்காக காத்திருக்கின்றோம் 



இன்னும் காத்திருக்கின்றோம்.........

 காத்திருக்கும் நேரத்தில் பஜனை

நண்பர்கள் பாபு மற்றும் சுந்தர்

 செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் உணவு


விடுதியின் முற்றத்தில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமம்
 பாராயணம் செய்யும் ஒரு குழுவினர் 

ஒரே அறையில் 12 யாத்திரிகள்

பொதுவாக உயர் மட்டத்திற்கு உடலை தயார் படுத்திக்கொள்ளும் வண்ணம் அனைத்து யாத்ரிகளூம் ஒரு நாள் நைலாமில் தங்கிய பிறகே செல்கின்றனர். அதே சமயம் மலையேற்றப் பயிற்சியும் மேற்கொள்கின்றனர். இரண்டு நாள் தங்கும் சில குழுவினர்   கைலாய மலையின் உச்சிக்கு சென்றவரான புத்த பிட்சு மில்ரெபா வர்கள் தங்கியிருந்த குகைக்கும் சென்று வருகின்றனர். இக்குகை சாகா செல்லும் வழியிதான் உள்ளது என்பதால் சில குழுவினர் செல்லும் போது அப்படியே வண்டியை நிறுத்தி குகையின் உள்ளே சென்று வணங்கி விட்டு செல்கின்றனர். நாங்கள் அரை நாள்தான் நைலாமில் தங்கியதால் மலையேற்ற பயிற்சி மட்டும் செய்தோம்.


*************************************

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரர் நொடித்தான் மலை  என்று போற்றி பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல்  தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை  என்னும் பெயர் பெற்றது.


திருமயிலையில் சுந்தரர் குருபூசை விழா
வெள்ளை யானையில் திருக்கயிலாயம் செல்லும் காட்சி


இவ்விழாவை முழுதும்காணஇங்கு செல்லுங்கள்



மந்திரம் ஒன்றறியேன் மனை வாழக்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி சேசெயுந் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில் அழ கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித் தான்மலை உத்தமனே !(3)

பொருள்: நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகை தரும் வேடங்களை புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கும், திருக்கயிலையின் கண் வீற்றிருக்கும்  முதல்வன் வெளியாகிய  பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய  யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ! 


தேவாரம் முழுவதையும் படிக்க இங்கு செல்லுங்கள்

 http://www.thevaaram.com 

No comments:

Post a Comment