Sunday, June 02, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -16 (திருக்கயிலாய யாத்திரை-2012)

லாலுங்  லா கணவாய்

கணவாயின் தோரண வாயில் 
( நைலாம்லிருந்து செல்வதால் மறுபடியும்  நைலாம் வாருங்கள் என்று அழைக்கின்றது) 

 தோரண வாயிலின் மறுபக்கம்
(நைலத்திலிருந்து நேபாளத்தின் அழகை இரசியுங்கள் என்று அறிவுறுத்துகின்றது)


 இரு பக்கமும் ஆயிரமாயிரம் பிரார்த்தனைக் கொடிகள் 


கொடிகளின் இடையில் அமீத் 

 கணவாயில் எங்கள் குழுவினர்


கலைப் பொருட்கள் விற்கும் ஒரு மேடை

 பட்டாம் பூச்சி


 மணி மாலைகள்

இமய மலை வரை ஆட்டின் கொம்புடன் ஹிமான்சு
 ( நீ என்ன கொம்பனா? என்று கேட்க தோன்றுகின்றதா?)


 ஒரு வெங்கலப்புலி
( சுந்தர் அவர்களின் புகைப்படம்)

இவ்வாறு  சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்த பின் லாலுங் லா கணவாயை (5050 மீ ) (Lalung La Pass) அடைந்தோம். இமயமலை மடிப்பு மலைகளால் ஆனதால் நாம் பயணம் செய்யும் பாதையிலும் ஏற்ற இறக்கங்கள் அதிகம் ஆகவே இவ்விடம்  கணவாய் ஆனது நாம் தற்போது பயணம் செய்த மலையின் உச்சி பின்னர் மறுபடியும் பாதை இறங்குமுகமாக உள்ளது. இவ்வாறு மலையில் ஏறி மற்றும் இறங்கி நாம் பயணம் செய்கின்றோம். கணவாயை குறிக்கும் கையில் அலங்கார வாயில் உள்ளது. அதன் ஒரு பக்கம்  நைலாமிற்கு மீண்டும் வருக என்றும் மறு பக்கத்தில் நைலாம் துறைமுக நகரிலிருந்து நேபாளத்தின் அழகை கண்டு களியுங்கள் என்று எழுதியுள்ளனர். வாயிலின் இரு பக்கமும் பஞ்ச வர்ண பிரார்த்தனை  கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இவை காற்றில் அசையும் போது அதில் எழுதப்பட்டுள்ள மந்திரங்கள் இவ்வழியாக செல்பவர்களுக்கும் இதன் அருகே வசிப்பவர்களுக்கும் நன்மைகளை செய்கின்றது என்பது திபெத்தியர்களின் நம்பிக்கை. சரியான குளிர் காற்று மிகவும் வேகமாக   வீசிக் கொண்டிருந்தது. குளு குளு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்ததால் இது வரை ஒன்றும் தெரியவில்லை. பேருந்தை விட்டு இறங்கியவுடன்தான் உண்மை புரிந்தது. சிறிது நேரம் இங்கு வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டோம் அருகிலேயே சிறு கடைகளில் பல அரிய பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். மணி மாலைகள், இப்பகுதியில் கிடைக்கும் அரிய பொருட்கள், வெண்கல பொம்மைகள், இரு இமயமலை வரை ஆட்டின் கொம்புகள் என்று பல பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். எதுவும் வாங்கவில்லை என்றாலும் வித விதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  

இறைவன் என்னும் கலைஞன் எவ்விதம் இந்த அத்துவான மலை பிரதேசத்தில் தன்னுடைய கை வரிசையை காட்டி இருந்தான், மேலிருந்து பார்த்தால் நீல வானம் அதில் பல்வேறு வடிவங்களில் மிதந்து கொண்டிருக்கும் மேகங்கள், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்கள் வெண் பனி, பழுப்பு மலை, செம்மண் பூமி, நடுவில் பனி உருகி அதிலிருந்து ஓடி வரும் சிறு ஆறு என்று என்ன அற்புதமான இயற்கை காட்சி. எங்கும் பசுமை  இல்லை ஆயினும் இதுவும் ஒரு தனி அழகுதான். ஒவ்வொரு சிகரமும் ஒரு வடிவம் . எங்கும் பசுமை இல்லை இதுவும் ஒரு தனி அழகாக இருந்தது. உளி எடுத்து ஒவ்வொன்றாக எவ்வாறு இப்படி செதுக்கி எதற்காக யாரும் வராத இந்த இடத்தில் ஒளித்து வைத்தான் இறைவன் என்று வியந்தோம், நமக்கு அவனை தரிசனம் செய்ய செல்லும் போது இவ்வழகை பருகும் வாய்ப்புக்கிட்டியதே என்று மகிழ்ந்தோம். முப்பத்தாறு பேர்களிடம் 10 புகைப்பட கருவிகள் இருந்தன படங்களை எடுத்துத் தள்ளினோம். இவ்வாறு பயணம் செய்து கொண்டே சீ சா பாங்மா என்னும் பனி மலை சிகரங்களுக்கு பிரிந்து செல்லும் பாதை அருகே வந்து சேர்ந்தோம்.

( யாத்திரை முழுவதும் 10 கேமராக்களின் மூலம் சுமார் 2000 புகைப்படங்கள் எடுத்தோம்,  மேலும் சுந்தர் என்னும் அற்புத புகைப்பட கலைஞரும் எங்களுடன் வந்தார் ஆகவே பதிவுகளில் அதிகமாக படங்கள் இடம் பெறுகின்றன. எவ்வாறு நேபாள தலை நகர் சுற்றுலா என்னும் ஒரு நாள் மட்டும் ஐந்து பதிவுகளாக வந்ததோ அது போலவே இன்றைய படங்களும் ஐந்துபதிவுகளாக வர இருக்கின்றது) 

****************************************
சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பாசுரம்

 
எம்பிரான் தோழர் சுந்தரர்

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார்  "நொடித்தான் மலை" என்று போற்றிப் பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும்( நொடித்தல்- அழித்தல்). அழித்தல் தொழிலையும் உடைய உருத்திரமூர்த்தி ரூபமாக ஐயன் எழுந்தருளியிருப்பதாலும் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.

திருமயிலையில் ஆடி சுவாதியன்று சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அதைக் காண இங்கு செல்லுங்கள்


அஞ்சினை ஓன்றிநின்று அலர் கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மனமே வைகி வானநன் னாடர் முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனை தந்தான்  நொடித் தான்மலை உத்தமனே (6) 


பொருள்: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று மலர்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுத்தாகிய  எனது மனத்தின் கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண் முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான்;   அவன் திருவருள்தான் என்னே! 


தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க

யாத்திரை தொடரும்................

4 comments:

  1. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  2. பரவசம் - படங்களும்...

    நன்றி...

    ReplyDelete
  3. வாருங்கள் ஞானம், தொடருங்கள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி தனபாலன்

    ReplyDelete