மானசரோவரின் கரையில் ஹோமம்
ஐயனுக்கு முதலில் அபிஷேகம்
பின் அலங்காரம்
மற்ற பூஜா மூர்த்திகள்
ஹோமத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள்
ஹோம அக்னி ஏற்றுகிறார் திருமதி ரஷ்மி மஹாஜன்
(இல்லங்களில் அக்னியை காப்பாற்றி வருவதால்பெண்கள் முதலில் ஹோம அக்னியை ஏற்றுவதில் உரிமை உடையவர்களாகின்றனர்)
கொழுந்து விட்டு எரியும் ஹோம அக்னி
ஓம்
பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய
பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம்
சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:
( ஓம்,
அதுவும் பூர்ணம், இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்துதான் பூர்ணம் உதயமாகியுள்ளது.
பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை எடுத்தாலும் எஞ்சுவது பூர்ணமே)
என்று அந்த பரிபூரணனுக்கு மங்களம் பாடி
பூர்ணாகுதி செய்து ஹோமம் நிறைவு
ஹோமம் முடிந்த பின் சிவசக்திக்கு நன்றி கூறி சரணமடைகின்றோம்
யக்ஞ கர்த்தா அஜய் குமார் கௌசிக்
திருப்தியாக ஹோமம் முடித்த மகிழ்ச்சியில்
அனில் குமார், கௌசிக், புனிதா,யஞ்யாங் பாண்டே
பாண்டே, குப்தா, அடியேன்
ஹோமம் நிறைவு பெற்ற பின்
கைலாஷ் கௌசிக், அவரது மனைவி சதீஷ் கௌசிக்,
அவர்களது புத்திரன் ரமண் கௌசிக் அவரது நண்பர் மனிஷ் குமார்
சிவசக்தியை வணங்கும் காட்சி
அனைவரும்
தீர்த்தமாடிய பின் ஹோமத்திற்காக ஒன்றாக அமர்ந்தோம். சோதனையாக சீனர்கள் அனுமதித்த எங்கள் பூஜா
பொருட்கள் அடங்கிய பை காணாமல் போய்விட்டது. வண்டியிலேயே வைத்திருந்தோம், எப்படியோ
கை மாறிப் போய் விட்டது. அங்கேயே சில மரக்கட்டைகளை சேகரித்துக் கொண்டு வந்தார்காள்
சேர்ப்பாக்கள் பின் மற்றவர்களிடம் இருந்த ஹோம திரவியங்களை பயன் படுத்தினோம்.
முதலில் பூஜா மூர்த்தங்களுக்கு மானசரோவர் தீர்த்ததினால் அபிஷேகம் செய்து அலங்காரம்
முடித்தோம். மற்றவர்கள் கொண்டு வந்திருந்த யாக பொருட்களை கொண்டு மிகவும்
திருப்தியாக கணேசர், துர்கா, மஹா ம்ருத்யுஞ்சய மற்றும் சிவ ஹோமங்கள் திரு. அஜய்
குமார் கௌசிக் அவர்களை கர்த்தாவாக கொண்டு சிறப்பாக செய்து முடித்தோம். இல்லத்திற்கு கொண்டு வர
கேன்களில் மானசரோவர் சரோவர் தீர்த்தம் சேகரித்துக் கொண்டோம். எங்கள் சேர்ப்பாகளும்
கிரி வலத்தில் சமையலுக்கு தேவைப்படும் நீரை பீப்பாய்களில் நிரப்பிக் கொண்டனர்.
இவ்வாறு திருக்கயிலாய யாத்திரையின் போது செய்ய வேண்டிய ஒரு முக்கிய கடமையை
திருப்தியாக முடித்தோம். மேக மூட்டமாக இருந்ததால்
ஐயன் தரிசனம் கிட்டவில்லை ஆயினும்
எங்கள் பூஜையை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக பொன் வாத்து வந்து காட்சி
தந்தது.
பின்னர் தங்கும் விடுதி திரும்பி வந்த போது சீன
வழிகாட்டி சாகா தாவா பண்டிகை காண வருபவர்களை நான் அழைத்து செல்கின்றேன் 50
யுவான்கள் தாருங்கள் என்று கூறினார். எத்தனை பேர் வருகின்றார்கள் என்று விசாரித்து
சொல்வதற்குள் அவர் பேசி வைத்திருந்த வண்டி
ஓட்டுநரின் மனம் மாறி விட்டது, நான்
வரவில்லை வேண்டுமென்றால் மற்ற ஜீப்பை அழைத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.
அவர்களிடம் கேட்ட போது இருவரே வருவதற்கு முன் வந்தனர் ஆயினும் ஒருவருக்கு 200
யுவான்கள் வேண்டும் என்று கேட்டனர். இறுதியில் எங்களின் அந்த ஆசை கனவாகவே இருந்து
விட்டது. நன்றாக நாடகமாடி உள்ளனர் என்று புரிந்தது, ஒன்று மட்டும் உண்மை பல பொய்
கூறுகிறார்கள், நாம் ஒன்றும் செய்ய முடியாது இவர்கள் அழைத்துச் செல்லும் படித்தானே
நாம் செல்ல வேண்டி இருக்கின்றது.
இன்று உச்சிக்காலத்திற்கு மேல் மேகம் விலகி ஐயனின்
அற்புத தரிசனமும் கிட்டியது. திவ்யமாக விடையேறும் கபாலியை, கற்பகவல்லியை அம்மை சிவகாமி நேசனை சேவித்தோம். சிறிது
நேரம் ஓய்வெடுத்த பின்னர் சுற்றி வந்து மானசரோவரில் விளையாடும் பறவைகளை
இரசித்தோம்.
மாலை சுடு நீர் ஊற்றுக்கு சென்றோம் மேலும் மலை மேல் உள்ள சியூ புத்த
விகாரத்திற்கும் சென்று வந்தோம். மலை மேலிருந்து மானசரோவரின் தரிசனம் இன்னும் அருமையாக இருந்தது. அந்தி சாயும்
நேரத்தில் சூரியன் கோம்பா அமைந்துள்ள மலைக்கு பின்னர் மறையும் அழகையும் கண்டோம்.
முன்னரே கூறியது போல டார்ச்சன் செல்லாமல் இங்கு மானசரோவரின் கரையிலேயே தங்க
வைத்தான் அந்த ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தன். இன்று இரவும் முழுமதியாகவே சந்திரன் உதித்தான் சக்கரைப் பந்தலில் தேன் மழை
பெய்தது போல இன்று இரவும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அம்மா உமா, சைலேந்தர தனயா, கௌரி உன் தரிசனம்
டோல்மாவில் கிட்ட வேண்டும் என்று தூய மனதுடன் தூங்கச்சென்றோம்.
மறு நாள் காலை மானசரோவரில் ஒரு புதுமையான அருமையான அனுபவம் கிட்டியது அது என்னவென்று அறிந்து கொள்ள சற்று அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருக்கயிலாயம்
பாடல் எண் : 10
விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரு மொழியைக்கொள்ளார் புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ண முடையார்போலுங் கயிலை மலையாரே.
பொருதுபகரு மொழியைக்கொள்ளார் புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ண முடையார்போலுங் கயிலை மலையாரே.
பொருள் :தாம் பெற்ற விருதுகளைப் பலரிடமும் சொல்லிப் பெருமை கொள்ளும் இயல்புடைய
கொடுஞ்சொல் பேசும் சமணரும் வஞ்சனையான மனமுடைய சாக்கியரும் பிறசமயத்தவரோடு சண்டையிட்டுக்
கூறும் சொற்களைக் கேளாதவராய், புகழ்ந்து போற்றுவார்க்கு அணிமையானவராய் விடை ஒன்றைச்
செலுத்தி உணவிடுவார் பால் இரந்து உண்பவராய் இகழ்பவரும் தம்பெருமையை நினைந்து போற்றும்
இயல்பினராய் விளங்குபவர் கயிலைமலை இறைவர்.
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/
யாத்திரை தொடரும்....................
திருப்தியான ஹோமம்...
ReplyDeleteஅடுத்த அற்புதத்தை ஆவலுடன்...
விரைவில் பதிவிடுகின்றேன், தனபாலன் ஐயா.
ReplyDelete