Thursday, November 20, 2014

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -5

திருக்கயிலாய மானசரோவர் தரிசனம் - 2014

பொதுவாக காத்மாண்டுவில் இருந்து அதிகாலை கிளம்பி  அரனிகா ராஜ பாட்டையில்  பேருந்தில் பயணம் செய்து சுமார் 4  மணி நேரத்தில் கொடாரி என்னும் நேபாளத்தில் எல்லையில் உள்ள கிராமத்தை அடைந்து பின்னர் போடே கோசி நதியின் குறுக்கே உள்ள நட்பு பாலத்தைக் கடந்து சீனாவில் நுழைந்து ஜாங்மூ கடந்து நைலம் நகரை அடைந்து அங்கே இரவு தங்குவார்கள். இந்த வருடம் என்ன நடந்தது தெரியுமா?  


                           

நிலச்சரிவைக் கடக்க நடைப்பயணம் ஆரம்பம்





2014ல் நேபாளத்தில் ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையால் சிந்துபால் சௌக் மாவட்டத்தின் ஜுரே (Jurey) என்ற இடத்தில்  பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு திருக்கயிலாய யாத்திரை செல்பவர்கள் பயணம் செய்கின்ற பாதை அடைபட்டு விட்டது.  போடே கோசி நதியும் (Bhote Kosi) அடைபட்டு பெரு ஏரியாகி விட்டது,  அந்த ஏரி, வண்டிகள் செல்லும்  பாதையையும் விழுங்கி விட்டது. 


துலிக்கேலில் 142 அடி உயர சிவபெருமான்  தரிசனம்


பின்னர் அடைப்பை திட்டமிட்டபடி அளவாகத் திறந்து தண்ணீர் பாயும்படி செய்தனர். பாதை அடைபட்டு விட்டதால் ஆகஸ்ட் மாதம் சென்ற யாத்திரிகள் அனைவரும் ஒரு பக்கம் ரூ 12500/- கட்டணத்தில் ஹெலிகாப்டரில் காத்மாண்டுவில் இருந்து கொடாரி சென்று வந்துள்ளனர் எனவே தாங்களும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டியிருக்கலாம் எனவே அதிகப்படியாக பணம் அல்லது கடன் அட்டை (Credit Card) கொண்டு வாருங்கள் என்று சென்னையிலேயே கூறினார்கள். நாங்கள் சென்ற சமயம் வானிலை சரியில்லாததால் எவரெஸ்ட் சிகரம் காணச்செல்லும் மலை சுற்றுலா விமானப்பயணமும் இரத்து செய்யப்பட்டது.


நிலச்சரிவு சரி செய்யப்பட்டு வருகின்றது



காத்மாண்டுவில் நடந்த கூட்டத்திலும் சரியாக நிலைமையை  இவர்களால் கூறமுடியவில்லை. நிலச்சரிவை சுமார் மூன்று மணி நேரத்தில் மாற்றுப்பாதை வழியாக கடந்து விடலாம் என்று பொதுவாகக் கூறினர். குதிரைக்காரர்களுக்கு எவ்வளவு யுவான்கள் செலுத்த வேண்டும் என்று கேட்டதற்கும் சரியான பதில் கிட்டவில்லை. அஷ்டபத் இந்த வருடம் செல்ல முடியாது சீன அரசு தடை விதித்து விட்டது என்ற  ஒரு செய்தியையும்   கூறினர். இதனால் அருகில் சென்று ஐயனையும் நந்தியெம்பெருமானையும் தரிசனம் செய்யும் வாய்ப்பை இழந்தோம்.  பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் ரூ 500/-, பின்னர் அங்கிருந்து பேந்தில் செல்ல  ரூ 700/- ஆகும் எனவே அனைவரும் ரூ 1200/-  அதிகப்படியாக கொடுக்கவேண்டி இருக்கும் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் கூறினர்.


அருவிகளைக் கடக்கின்றோம்

சேற்றில் நடந்தோம்

மறுநாள் காலை சனி மஹாப்பிரதோஷமும், திருவோணமும் இணைந்த நன்னாளில் சுமார் 9 மணிக்கு சிவபுராணம் பாடி ஐயனை வணங்கி வேண்டிக்கொண்டு  காத்மாண்டுவிலிருந்து பேருந்து மூலம் புறப்பட்டோம். இந்தத் தடவை அடியேன் பயணம் செய்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் அன்பர்கள் இருந்தனர். ஆயினும் அனைவரும் தமிழ் பேசினர் என்பதால் ஒரு அந்நியோன்யம் அனைவரிடமும் இருந்தது. மேலும் பன்னிரு திருமுறைகளையும்  பண்ணுடன் இசைக்கும் திரு.குமாரசாமி என்ற   ஒரு அன்பரும் எங்கள் குழுவில் இருந்தார். ஆகவே தினமும் காலையும் மாலையும் அனைவரும் ஒன்றாகக் கூடி சிவபுராணம் விண்ணப்பித்து ,  பன்னிரு திருமுறைகள் பாடி சிவசக்தியை வழிபட்டோம் என்பது இந்த யாத்திரையின் ஒரு சிறப்பு ஆகும். 


பெரிய அணையாக மாறிவிட்ட போடே கோசி நதி

இக்கரையில் இருந்து அக்கரை செல்ல படகுப்பயணம்


மேலும் அடியேனது புத்தகத்தை படித்தபின் இந்த யாத்திரையை மேற்கொண்ட அன்பர்கள் நான்கு பேர் எங்கள் குழுவில் இருந்தனர். புத்தகம் எழுதிய நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் சிவசக்திக்கு  அடியேன் நன்றி  தெரிவித்தேன். துலிக்கேலில் 142 அடி உயர  சிவபெருமானை வணங்கி சுமார் ஒரு மணி நேரத்தில் பனி படர்ந்த கௌரிசங்கர்  மலைச்சிகரங்களை பார்த்து இரசித்துக்கொண்டே மேகங்களுக்கிடையே பயணம் செய்து  நிலசரிவு ஏற்பட்டிருந்த ஜுரே என்னும்   இடத்தை  அடைந்தோம்.


பாதைக்காக  காத்திருக்கின்றோம்




இனி நிலச்சரிவினால் மாற்றுப்பாதையில் பசுமையான நெல் வயல்களுக்கிடையில் சேற்றிலும் சகதியிலும், பாய்ந்தோடி வரும் அருவிக்களுக்கிடையில் நடந்த  சாகச அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மலைப்பாதைகள் எல்லாம்  பொதுவாக ஆற்றின் கரையை ஒட்டியே அமைந்திருக்கும். ஒரு பக்கம் பள்ளத்தில் ஆறு ஓடிக்கொண்டிருக்கும் மறு பக்கம் நெடிதுயர்ந்த மலையில் நடுவே வெடி வைத்து தகர்த்து  பாதை அமைக்கின்றனர்.  இவ்வாறு  மலையை நாம் நம்முடைய வசதிக்காக மாற்றுவதாலேயே பாதைகளின் மேற்புறத்தில்    உள்ள மண் மழையில் ஊறி சரிவதால் அதிகமான நிலசரிவுகள் ஏற்படுகின்றன.  நிலசரிவினால் பாதையும் ஆறும் அடைபட்டுவிட்டதால்  எங்களுக்கு மலை மேல் ஏறிச் சென்று நிலச்சரிவை கடக்க வேண்டி வந்தது. 


குழுவினரில் ஒரு சிலர் 



நிலச்சரிவு ஏற்பட்ட போது கோசி ஆற்றின் குறுக்கே  மண் விழுந்து தண்ணீர் செல்ல முடியாமல் ஒரு அணை போல ஆகிவிட்டது தேங்கிய தண்ணீர் சுமார் 3 கி.மீ வரை பரவி விட்டது. நேபாள அரசு அந்த நிலச்சரிவை  வெடி மூலம் உடைத்து தண்ணீர் பாயும் படி செய்ய திட்டமிட்டது, அப்படி செய்திருந்தால் கீழே பீகாரில் பெரும் வெள்ளம் வந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருப்பர்  மற்றும் ஏகப்பட்ட சேதம் ஏற்பட்டிருக்கும் . ஆகவே இந்திய அரசு கேட்டுக்கொண்டதகு இணங்கி நேபாள அரசு மண்ணில் சிறு ஓட்டை போட்டு தண்ணீர் கட்டுப்பாடான நிலையில் பாயும்படி செய்தனர். மேலும் கிட்டத்தட்ட 40  நாட்கள்   ஆகியும் பாதை சரியாகவில்லை  என்பதிலிருந்தும்   நீங்கள்  அது எவ்வளவு பெரிய நிலச்சரிவு என்று ஊகித்துக் கொள்ளலாம்.

சுமைகளை சுமந்து செல்லும் பெண்ணிடம்
 பேட்டி எடுக்கும் தொலைக்காட்சியினர்


ஒற்றையடிப்பாதையில் ஒரு பக்கம் சுமைகளை சுமந்து  
வந்து கொண்டிருக்க  மிகவும் சிரமத்துடன் முன்னேறினோம்



எறும்புக்ளைப்போல ஒருவர் பின் ஒருவராக
 சேற்றில் நடந்து செல்லும் காட்சி 


அதிக சிரமம் இருக்காது என்று நினைத்துத்தான் மலையேற ஆரம்பித்தோம். ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய ஒற்றையடி மண்பாதை ஆனால் அதில் இரண்டு பக்கமும் ஆட்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும்  இருந்தனர். அதுவும் யாத்திரிகளின் சுமைகளை சுமந்து கொண்டு போர்ட்டர்களும்  அதே வழியில் வந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கியே செல்ல வேண்டியிருந்தது. மலையின் மேற்பகுதியில் இன்னும் மழை பெய்து கொண்டிருந்து போலத்தான் தெரிந்தது, ஏனென்றால் அருவிகள் பல இன்னும் புதுப்புனலுடன் பாய்ந்து வந்து கொண்டிருந்தன. நடக்கும் வழியிலிருந்தே  மேலே புது மண் சரிவு ஏற்படுவதைப் பார்க்க முடிந்தது. கற்கள் மேலிருந்து விழுந்து கொண்டிருந்தன. எங்கள் கண் முன்னரே ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. வழியெங்கும் குளிர் பானங்கள், நொறுக்குத்தீனி விற்கும் கடைகள் முளைத்திருந்தன.  தொலைக்காட்சியினர் வந்து படம் எடுத்து யாத்ரிகளிடம் நேர்முகம் எடுத்துக்கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் சரியான சேறு ஒரு பெண்மணியின் கால்  உள்ளே முழங்கால் வரை மாட்டிக்கொண்டது,  அனைவரும் சேர்ந்து மிகவும் சிரமப்பட்டு அவரை வெளியே இழுத்தோம்.

பல அருவிகளை கடந்தோம்


முதியவர்களை முடிந்தவர்கள் கையைப் பிடித்து கூடவே அழைத்துச் சென்றோம். மிகவும் பருமனான சில பெண்மணிகளால் சேற்றில் நடக்க முடியாமல் போனதால் போர்ட்டர்கள் அவர்களை தங்கள் முதுகில் சுமந்து கொண்டு வந்தனர். பலர் வழுக்கி விழுந்தனர்.  அருவிகள் பாயும் இடங்களில் கடக்கும் போது அனைவரது காலணிகளும் நனைந்தது. வழியில் பல அன்பர்கள் திருக்கயிலாய யாத்திரை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்ததை அவர்கள் கையில் இருந்த மானசரோவர் தண்ணீர் கேனின் மூலம் உணர்ந்தோம். அடியேனுடன் 2005ல் யாத்திரை செய்த இரு அன்பர்கள் இது போல வந்து கொண்டிருந்ததை கவனித்து சிறிது நேரம் அவர்களுடன் அளவளாவினேன். இது எத்தணை யாத்திரை  என்று அவர்களிடம் கேட்ட போது பத்தாவது யாத்திரை என்றார்கள். உடனே கையெடுத்து இருவரையும் வணங்கினேன். 2005ல் இருந்து ஒரு வருடம் தவறாமல் யாத்திரை செய்திருக்கின்றனர் என்னே அவர்களது சிவ பக்தி.


நடக்க முடியாத ஒரு வயதான பெண்மணியை 
சுமந்து செல்கின்றனர்


நிறைவாக மலை நெல் வயல்களில் நடந்தோம் 




பாதையில் ஏற்றமும் இறக்கமும் இருந்தது. பலருக்கு இது ஒரு புது மற்றும் சாகச அனுபவம். பல இடங்களில் நமது வயல்களில் வரப்பில் நாம் நடப்பது போல இமய மலையின் உச்சியில் அமைந்துள்ள நெல் வயல்களில் அடியோங்கள் இன்றைய தினம் நடந்தோம். எங்களுடன் வந்த சேர்ப்பாக்களும் உள்ளூர் மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். நடக்க முடியாத சிலரை சேர்ப்பாக்கள் இழுத்துக்கொண்டு வந்து சேர்த்தனர். யாரிடமும் கைத்தடி இல்லை, மழை வரலாம் என்று நினைத்து மழைக் கோட்டு கொண்டு வந்திருந்தோம் ஆனால் சரியான வெயில் கொளுத்தியது. தேவையில்லை என்று மாற்று காலணிகள் கொண்டு வந்திருக்கவில்லை இனி எவ்வாறு சமாளிப்பது என்று வியந்தோம்.  வியர்வை பொங்கி வழிந்தது.















இப்படியாக மிகவும் சிரமப்பட்டு சுமார் 3 கி.மீ தூரத்தை நான்கு மணி நேரத்தில் கடந்தோம். இறுதியாக பாரேபிஸே என்ற இடத்தை அடைந்தோம். அங்கு மதிய உணவை உண்டோம். அது கடினமான நடைப் பயணத்திற்குப் பிற்கு அந்த உணவு அமிர்தமாக இருந்தது.   சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பேருந்து மூலம் கொடாரிக்கு சற்று முன்பு உள்ள தோதாப்பாணி என்ற கிராமத்தில் உள்ள HImalayan Eco Resorts என்ற விடுதியில் வந்து தங்கினோம்.  இந்த ஊரில் சுடு தண்ணீர் ஊற்றுகள் உள்ளன மற்றும் Bungy jump எனப்படும் சாகச விளையாட்டிற்கு இந்த ஊர் பெயர் போனது.  அடுத்த பதிவில் தோத்தாபணியில் நடந்த ஒரு அற்புதத்தைப்பற்றிக் காணலாம் அன்பர்களே.



4 comments:

  1. சாகசப்பயணம்.. அற்புதப்பகிர்வுகள்

    ReplyDelete
  2. ஆன் அம்மா. ஒரு எதிர்பாராத தனித்தன்மை வாய்ந்த(Unique), அற்புத அனுபவம் இன்றைய தினம் கிட்டியது. அடியேன் மலைகளில் பல் வருடங்கள் பயணம் செய்துள்ளேன் ஆனால் இது ஒரு அருமையான் அனுபவம்.

    ReplyDelete
  3. உங்களின் புனித யாத்திரை கட்டுரைகள் அனைத்தும் மிகவும் சிறப்பு ஐயா! மிக்க நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  4. வாருங்கள் முருகபூபதி ஐயா. மிக்க நன்றி. தொடர்ந்து வந்து தரிசனம் பெறுங்கள்.

    ReplyDelete