Friday, February 13, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -11

கௌரி  சங்கர் தரிசனம்



டோக்செனிலிருந்து மானசரோவர் தரிசனம் 

ஐயனின் அற்புதமான தரிசனத்திற்கு பிறகு மானசரோவரின் கரையில் தங்குவதற்காக திபெத் அரசின் சொகுசு பேருந்தில்  கடுமையான சோதனைக்கு ;பின் புறப்பட்டோம். வானம் தெளிவாக இருந்தது. வெயில் காய்ந்து கொண்டிருந்தது மானசரோவர் ஏரி வலத்தை தொடர்தோம்.


கௌரிசங்கர் தரிசனம் 


இரு பெரும் மலைத்தொடர்களான திருக்கயிலாய மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாதா மலைத்தொடர்களுக்கு இடையே மானசரோவர் தடாகம் மற்றும் இராவணன் ஏரி எனப்படும் இராக்ஷஸ் தால் என்னும் ஏரி அமைந்துள்ளன. இம்மைலையில் உள்ள பனி உருகி இந்த ஏரிகளில் பாய்ந்து பின்னர் ஆசிய கண்டத்தை வளமாக்கும் பிரம்மபுத்திரா, சிந்து, கர்னாலி, மேப்சூ ஆகிய நதிகள் உருவாகின்றன. 



திருக்கயிலாய மலை சிவன் என்றும், மானசரோவர் தடாகம் அம்பாள் அதாவது  கௌரி என்பது ஐதீகம். எனவே  திருக்கயிலாயம் மற்றும் மானசரோவர் இணைந்த காட்சி "கௌரிசங்கர் தரிசனம்" என்றழைக்கப்படுகின்றது. அந்த அற்புத தரிசனத்தை தாங்களும் கண்டு ஆனந்தம் பெறுங்கள் அன்பர்களே. 



மானசரோவரின் அழகும் வர்ணமும் நொடிக்கு நொடி மாறக்கூடியது. இங்கே அந்த மானசரோவர் தடாகத்தின் பல்வேறு வர்ண ஜாலங்களை காண்கின்றீர்கள் அன்பர்களே. 

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் வண்ணங்கள் 


அம்பாளின் துதிகளைப் பாடிக்கொண்டே கிரி வலத்தை தொடர்ந்தோம். மெதுவாக பனி படர்ந்த  குர்லா மாந்தாதா  மலைச்சிகரங்கள் தெளிவாக  கண்ணில் பட்டன. 





மானசரோவரின் வர்ணஜாலம் 


ஸ்படிகம் போல் தெளிவான நீர் 

மெதுவாக மேகக்கூட்டம் வந்து ஐயனை தழுவிக்கொண்டது  அப்போது மானசரோவரின் அழகு. 




                                                       மானசரோவரில் நீந்தும் பறவைகள் 


குர்லா மாந்தாதா மலைச்சிகரங்களின் அழகு   







இவ்வாறாக மானசரோவர் மற்றும் கௌரி சங்கரின் தரிசித்துக்கொண்டே  சரியாக  குர்லா மாந்தாதா மலை சிகரங்களின் அடிவாரத்தை வந்தடைந்தோம்.  அருமையான ஸ்படிகம் போன்ற நீர் இருந்த இடத்தில் மானசரோவர் தடாகத்தில் நீராடுவதற்காக பேருந்தை நிறுத்தினர்.   இனி புனித நீராட்டம் எவ்வாறு இருந்தது அங்கு என்ன  அற்புதம் நடந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி 
          அச்சம் தீர்த்தநின் அருட்பெருங் கடலினுள்
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்;
          திருப்பெருந்துறை மேவிய சிவனே!
வளைக் கையானொடு மலரவன் அறியா
          வான வா! மலை மாது ஒரு பாகா!
களிப்பெ லாம்மிக்க கலங்கிடுகின்றேன்;
           கயிலை மாமலை மேவிய கடலே! 
                                                                                                                                                                                                                                                                                                                    யாத்திரை தொடரும் . . . . . . . . .

No comments:

Post a Comment