Friday, February 27, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 15

கிரிவலம் துவக்கம் 

ஐயனின் தெற்கு முகம் மற்றும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சி

திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ளும் அன்பர்களின் மிகவும் முக்கியமான நோக்கம் திருக்கயிலாய கிரிவலம் ஆகும். அவனருளால் அவரது அருமையான தரிசனம் கிட்டியது. பின்னர் மானசரோவரில் புனித நீராடும் பாக்கியமும் கிட்டியது.  நாம் யாருடைய இல்லதிற்காவது அவர்களின் அழைப்பு இல்லாமல் செல்ல முடியுமா? முடியாதல்லவா?  அது போலத்தான் திருக்கயிலாயம் செல்வதும் அவர்கள் அழைப்பினாலேதான்.  எனவே அதற்கு  சிவசக்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  ஹோமங்கள் நடத்தினோம். 



பின்னர் சொகுசு பேருந்து மூலமாக திருக்கயிலாய கிரிவலத்தின் ஆதாரமுகாமான டார்ச்சன் நோக்கி புறப்பட்டோம். செல்லும் வழியில் ஐயனின் அற்புதமான தரிசனம் கிட்டிக்கொண்டிருந்தது. தெற்கு மற்றும் கிழக்கு முகம் மற்றும் அதன் நீட்சி எல்லாம் மிகவும் ஸ்பஷ்டமாக தெரிந்தது.  டார்ச்சனை நெருங்க நெருங்க அருமையான தரிசனம் கிட்டியது. 


ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் பொதுவாகவே நமக்கு ஐயனின் தெற்கு முகத்தைத்தான் நாம் அதிகமாக தரிசனம் செய்கின்றோம். அடுத்து கிழக்கு முகத்தை  முன்னும் பின்னுமாக அதிகம் தரிசனம் செய்ய முடியும்.   மேற்கு வடக்கு முகங்களை நாம் முதல் நாள் கிரி வலத்தின் போது மட்டுமே தரிசனம் செய்ய முடியும். 

 மாறிக்கொண்டே வரும் ஐயனின் அழகு

டார்ச்சனை நெருங்க நெருங்க மேகம் வந்து முழுவதுமாக ஐயனை தழுவிக் கொண்டது.  முன்னர் ஒரு குக்கிராமமாக இருந்த டார்ச்சன் தற்போது ஐரோப்பியர்கள் தங்கும் அறைகள் கொண்ட ஹோட்டல்கள் நிறைந்த நகரம் ஆகிவிட்டது. கடைகளும் பெருகி விட்டது. மெல்ல மெல்ல ஒரு புனித இடம் சுற்றுலா கேந்திரமாக மாறி வருவது போல தோன்றுகிறது. 



டோக்சனில் உள்ளது போலவே இங்கும் ஒரு புது  நிர்வாக கட்டிடம்  ( Administration Building) கட்டியுள்ளனர் இதில் பொருட்களை   X-Ray  கதிர் சோதனை செய்தும்  யாத்திரிகளை பாதுகாப்புச்சோதனை செய்த பின்னுமே  டார்ச்சனுக்குள் நுழைய அனுமதிக்கின்றனர்.  


டார்ச்சனுள் நுழைந்த போது ஐயன்  அளித்த தரிசனம் 

அப்படியே தன்னை தரிசிக்க வரும் அன்பர்களை  திரு விழிகள் மலர்ந்து   ஆசிர்வாதம் செய்யும் அற்புதக் கோலம்  வாய் நாசி எல்லாம் தெளிவாக தெரிகின்றது பாருங்கள். இந்த யாத்திரையில்  ஐயன் அளித்த முதல் திருமுக தரிசனம்  இதுவாகும்.  

 எல்லாம் அவன் செயல் 



புது ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள். அறை வாடகை விசாரித்துப்பார்த்தோம்.  1000   சீன யுவான்கள் அதாவது  ரூ. 10000/- ஆகிறதாம்.  


டார்ச்சனில்  மூன்று நாட்கள் கிரி வலத்திற்காக வேண்டிய பொருட்கள் கிட்டுகின்றன. வேண்டிய அன்பர்கள் அவற்றை வாங்கிக்கொண்டனர்.  அரை நாள் டார்ச்சனில் தங்கினோம்.  உயர் மட்ட நோயால் சிலர் அவதிப்பட்டனர். அவர்கள் கிரிவலம் வரவில்லை இங்கேயே தங்கி விட முடிவு செய்தனர். அவர்களுக்குத் துனையாக ஒரு சேர்ப்பாவும் தங்கினார். எனவே  யாத்திரைக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மூச்சுப்பயிற்சி  செய்வது மிகவும் அவசியம். 


மறு நாள் காலை எழுந்து  கிரி வலம் செல்பவர்கள் அனைவரும்  ஐயனை 
வணங்கி கிரி வலம் துவங்கும் டார்ப்போசேக்குப் புறப்பட்டோம்.  இந்த வருடம்  சீன குதிரை வருடம் என்பதாலும் இந்த வருடம் செய்யும் கிரி வலம் 12  வருடங்கள் கி வலம் செய்ததற்கு நிகரானது என்பதாலும். இந்த வருடம் கிரி வலம் செய்தவர்கள் உள் கிரி வலம் செய்ய தகுதியுடையவர்கள்  என்பதாலும். கிரிவலம் செய்யும் திபெத்தியர்கள் அதிகமாக இருந்தனர். ஆகவே போர்ட்டர்கள்  யாரும் கிட்டவில்லை. எனவே குதிரைக்காரர்களே யாத்திரிகளின் பைகளை சுமந்து சென்றனர். எனவே இந்த வருடம் குதிரைக்கான கட்டணம்   2500 சீன யுவான் அதாவது  ரூ.25000/-  ஆனது.  எனவே எதிர்பாராத செலவுகளுக்காக அதிகப்படி பணம் கொண்து செல்வது அவசியம்.   




டார்ப்போச்சே நோக்கி செல்கின்றோம்






கிரிவலம் துவங்க தயார் நிலையில் 

குமாரசாமி, இளங்கோவன், முருகானந்தம்,  இராஜன், சின்ன பாப்பையா, சந்திரா, குமாரி அம்மாள்






                                                                                யமத்துவாரம் 






இது வரை நாம் பயணம் செய்தது பூலோகம் இதற்கு மேல் தேவபூமி என்பது ஐதீகம். ஆகவே இந்த தேவ பூமிக்கு நுழைவு வாயில் யமத்துவாரம் ஆகும். இதன் உள்ளே நுழைந்து ஐயனை தரிசனம் செய்பவர்களுக்கு யமபயம் கிடையாது.  இன்று  மேக மூட்டத்தின் காரணமாக ஐயனின் தரிசனம் கிட்டவில்லை.  யமதுவாரத்தில் இருந்து ஐயனின்  முழு தெற்கு முக தரிசனம் மற்றும் கணேசரின் தரிசனம் கிட்டும். 






 சாகா தாவா கொடி மரம் 


பின் புலத்தில் உள்ளது 84  மஹா சித்தர்களின் சமாதி  மற்றும் திபெத்தியர்களின் ஆகாய மயானமும் ஆகும். திபெத்தியர்கள் இறந்தவர்களின் உடலை துண்டு துண்டுகளாக்கி இங்கே எறிந்து விடுகின்றனர். கழுகுகள், நாய்கள் அவற்றை உணவாகக் கொள்கின்றன.   



வருடா வருடம் புத்த பௌர்ணமியன்று ( புத்தர் பிறந்த , ஞானம் பெற்ற, நிர்வாணம் அடைந்த) வைகாசி பௌர்ணமியன்று  இந்த கொடி மரம் புதிதாக மாற்றப்ப்டுகின்றது. அது சாகா தாவா"  என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.  இந்த வருடம் குதிரை வருடம் என்பதால்  மிகவும் அதிகமாக பஞ்ச வர்ண கொடிகளைக் காண்கிறோம். 



புத்தர்கள் புனிதமாக கருதும் இடங்களில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் ஐந்து வர்ண கொடிகள் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.இவற்றில் மந்திரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.  காற்றில் இவை சசையும் போது இந்த மந்திரங்கள் அதன் கீழ் செல்பவர்களுக்கு அந்த மந்திரத்தின் பலனை கொண்டு செல்கின்றன என்பது ஐதீகம். 





குதிரைகள் தயார்

கிரிவலம் நடந்து செல்ல முடியாதவர்கள் குதிரையை மட்டுமே பயன்படுத்தவும், யாக் பயன்படுத்தவேண்டாம். 


பொருட்களை சுமந்து செல்ல யாக் பயன்படுத்தப்படுகின்றது 


நடைப்பயணம் மூலமாக கிரிவலம் செல்பவர்கள் முதலில் புறப்பட்டு சென்றனர். குதிரை மூலம் செல்பவர்கள் சிறிது நேரம் காக்க வேண்டி வந்தது.  மூன்றாம் நாள் கிரிவலத்தினை முடித்த பின்னர் வேகமாக குதிரையில் வந்து  மறுபடியும்  கிரிவலம் செல்கின்றனர் குதிரைக்காரர்கள்   எனவேதான் சிறிது தாமதமாகின்றது. குதிரைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டது.  ஒரு சிலருக்கு  குதிரைக்காரர்களால் சிறிது துன்பம் ஏற்பட்டது. 

முதல்நாள் கிரி வலம் எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம். 
                                                                                                                                 யாத்திரை தொடரும் . . . . . . 

2 comments:

  1. துன்பமே இன்பம்.

    ReplyDelete
  2. எல்லாம் மனதில்தான் உள்ளது.

    ReplyDelete