Tuesday, April 07, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 19

முதல் நாள் கிரி வலம்  - 4

  பனி மழைக்குப்பின்  வாமதேவ   (வடக்கு) முக தரிசனம் 

பனி மழையின் போது அறையில் இருந்து ஐயனின்  தரிசனம்  


மேகமூட்டம் முழுவதுமாக ஐயனை மறைத்து விட்டது 

திடீரென்று ஆரம்பித்த பனிப்பொழிவின் காரணமாக மெதுவாக நடந்து கொண்டிருந்த யாத்திரிகள் பலர் நனைந்து  விட்டனர். எங்கள் குழுவினரில் மூன்று பேர் பனிப் பொழிவு முடிந்த பின்னரும்  தங்கும் விடுதி  வந்து சேரவில்லை. எங்கள் குழுவினரில் சிலரிடன் செல்பேசி இருந்தது. அதன் மூலம் அவர்களிடம் பேச முடிந்தது.  அவர்களை  பாதுகாப்பாக மீட்பு வண்டி  மீட்டு  அவர்கள்  தங்கும் விடுதியில்  தங்க வைத்திருப்பதாக தகவல் கிட்டியது  கிரிவலப்பாதையில் ஏற்பட்டுள்ள சில முன்னேற்றங்களில்  இதுவும் ஒன்று . ஒரு மீட்பு வண்டியும் ( Rescue  Vehicle)  ஒரு மருத்துவ வண்டியும்  (Ambulance) எப்போதும் ரோந்து வந்து கொண்டிருக்கின்றது. மின்சார வசதியும், செல் போன் கோபுரங்களும்  எல்லாவிடத்திலும் தற்போது உள்ளது. குதிரைக்காரர்கள் அனைஅவ்ரும் தற்போது  செல் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே வருகின்றனர்.  இந்த யாத்திரையின் உயரமான இடமான  டோல்மாவில் இருந்து கூட  செல்போனில் பேசலாம். 



மேகம் சிறிது  விலகிய பின் தரிசனம் 



நந்தியெம்பெருமான் போல் தோற்றமளிக்கும் மலைப்பகுதி 


மாறாத ஒன்றே ஒன்று  கழிவறைகள்தான்.  .  முதலில் கழிவறைகளே கிடையாது ஆனால் தற்போது  கழிவறைகள் ஆங்காங்கு கட்டியுள்ளனர் ஆனால் இன்னமும் அவர்கள் பாணியில்தான்  உள்ளது. இந்த கழிவறைகளை விட திறந்த வெளியே மேல்






ஐயனின் சில அருகாமை காட்சிகள்


பொதுவாகவே  இந்தியாவில் இருந்து  இயங்கும் இந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தினர் தாமாக யாத்திரிகளை  சீனப்பகுதிக்கு அழைத்து செல்வதில்லை. அவர்கள் நேபாளத்தில் உள்ள ஏதாவது சுற்றுலா நிறுவனத்தாருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் செய்வது எல்லாம் நம்மிடம் பணத்தை வாங்கி அவர்களிடம் கொடுப்பது மட்டும்தான். எல்லா முடிவுகளும்   அந்த சுற்றுலா நிறுவனத்தினரின் சேர்ப்பாக்கள் எடுப்பதுதான்  இவர்களுக்கு அவர்களிடன் எந்தவித சம்பந்தமும் இருப்பதில்லை என்பதால் யாத்திரிகளுக்கு சீனப்பகுதியில் பல வித துன்பங்கள் ஏற்படுகின்றது. 2012  டில்லியை  சார்ந்த சிரேஷ்டா நிறுவனத்தின் மூலம் திருக்கயிலாய  சென்றபோதும் அடியேனுக்கு இந்த உண்மை புரிந்தது. அவர்கள் ஏற்பாடு செய்த தங்குமிடம் மிகவும் மோசமாக இருந்தது. ஜாங் ஜெர்பூவில் எங்களை யாக் கட்டும் கூடாரத்தில் தங்க வைத்தனர். அதில் ஒரு பெண்மணிக்கு எதோ பூச்சி கடித்து உடல் முழுவதும் தடிப்பாகி ஒரு வருடம் சிகிச்சையெடுத்து கொண்டாராம். 


அதே போல ஒரு அனுபவம் எங்களை  இந்த வருடம்  அழைத்து சென்றவர்களுடனும் ஏற்பட்டது. சேர்ப்பாக்கள் அனைவரும் அறை அறையாக சென்று பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதல் டோல்மாவில் நிலைமை மோசமாக இருக்கும்  ஆகவே இனி கிரிவலத்தை தொடரவேண்டாம் இப்படியே திரும்பிவிடுங்கள் என்று அறிவுறுத்தினர். அடியோங்களில் ஒரு சிலர் மட்டும் இல்லை கிரி வலம் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு அவர்கள்  நாங்கள் யாரும் உங்களுடன் வர மாட்டோம் தாங்கள் மட்டும் செல்லலாம் என்று முதலில் கூறினார்கள், பரவாயில்லை அந்த திருக்கயிலை நாதர் எங்களை கவனித்துக் கொள்வார் தாங்கள் வரவேண்டியதில்லை என்று கூறினோம், இது குதிரை ஆண்டு இந்த வருடம் கிரிவலம் முடித்தால் பன்னிரண்டு ஆண்டுகள் கிரி வலம் செய்த பலன் உண்டு எனவேதான் இவ்வருடம் திருக்கயிலாய யாத்திரை வந்தோம் என்ற பிறகு சிறிது இறங்கி வந்தார்கள்.  பின்னர்  ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தாங்கள் தான் பொறுப்பு எங்களுக்கு ஒன்றும் தெரியாது எந்த வழியிலும் நாங்கள் உதவ மாட்டோம்  என்று கூறினார்கள். வெகு நேரம் விவாதம் நடந்தது.  நிறைவாக இரவிலோ அல்லது அதிகாலையிலோ பனி பெய்தால் செல்ல வேண்டாம் இல்லாவிட்டால் செல்லுவோம் எனவே காலையில் ஒரு முடிவு எடுப்போம் என்றபின் அவர்கள் சென்றனர். திரு. குமாரசாமி அவர்கள் இரவு முழுவதும் ஜன்னல் மூலமாக ஐயனை தரிசித்துக்கொண்டிருந்தாராம் இரவு மூன்றுமணியளவில் ஐயனின் முழு தரிசனம் கிட்டீயது என்று கூறினார்.   

டேராபுக் புத்த விகாரம் ஆற்றின் அப்பக்கம் உள்ளது

அதிகாலையிலும் நாடகம் தொடர்ந்தது.  கிரிவலம் செல்ல வேண்டாம் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். ஒரு அன்பர் மிகவும் கோபமாக என்னுடைய மனைவியின் நகைகளை அடமானம் வைத்து இந்த யாத்திரை வந்திருக்கின்றேன், இனி ஒரு வாய்ப்பு எனல்க்கு இல்லை எனக்கு ஏதாவது ஏற்பட்டால் அப்படியே இழுத்து தள்ளிவிட்டு சென்று விடுங்கள், எங்கள் வீட்டில் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கின்றேன் என்று கூறிய பிறகுதான்  விரும்பியவர்கள் செல்லுங்கள் என்று கூறினார்கள்.  50 பேரில் ஏழு பேர் மட்டுமே "நாமார்க்கும் குடியல்லாம் நமனை அஞ்சோம்" என்று அந்த சிவபெருமானை வணங்கி வழிபட்டு கிரி வலத்தை தொடர்ந்தோம்.  

யாத்திரை செல்கின்ற அனைவருக்கும் கிரிவலம் வாய்க்காது பல சமயம் சீன அரசே அதை தடை செய்து விடுகின்றது. மேலும் டோல்மாவில் எப்படி வானிலை இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆகவே நாம் நினைப்பது அங்கே நடக்காது எல்லாம் அவன் செயல்தான்.  

மிகவும் வருத்தமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். யாத்திரை முடித்து திரும்பி வந்து அவர்கள் இப்படி செய்கின்றார்களே நீங்கள் ஒன்றும் சொல்வதில்லையா?  என்று சுற்றுலா நிறுவனத்தரிடம் கேட்டபோது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உங்களிடம் பணம் வாங்கி அவர்களுக்கு தருவதுதான் எங்கள் பொருப்பு சீனப்பகுதியில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டேத்தியாக பதில் கூறினார்கள்.  அதுவே முன்பணம் வாங்கும் போது கிரிவலம் கட்டாயம் கூட்டிச் செல்வோம் என்று கூறினார்கள். ஒவ்வொரு சுற்றுலா நிறுவனத்தினரும் ஏதோ  ஒரு வகையில் ஏமாற்றத்தான் செய்கின்றனர். ஆகவே அந்த திருக்கயிலை மலையானை மட்டுமே நம்பிச்செல்ல வேண்டும். 

அந்த மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் அருளால் அந்த ஏழு பேர் கிரிவலத்தை முடிக்க முடிந்ததா இல்லையா? என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.   



வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு
தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டுஎன் பிறப்பு அறுத்த அணையிலியை
அனைத்துஉலகும் தொழும்  கயிலை  (தில்லை அம்பலத்தே)   கண்டேனே!

                                                                                                                            யாத்திரை தொடரும் . . . . . . 

3 comments:

  1. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, இந்தச் சுற்றுலாக்காரர்களுக்கு மிகவும் பொருந்தும் போல இருக்கிறது.

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா. யாத்திரைக்கு முன்னரே நாம் முழு பணமும் செலுத்திவிடுவதால் அதை அப்படியே கபளீகரம் செய்து விடுகின்றனர்.

    அடியேனுடைய நண்பர் ஒருவர் மூன்று பேருக்காக ஒரு சுற்றுலா நிறுவனத்தரிடம் திருக்கயிலாயம் செல்ல பணம் 4.2 லட்சம் கட்டினார் . அவர் யாத்திரை அழைத்துச் செல்லவும் இல்லை, இரண்டு வருடங்களாக பணத்தையும் திருப்பித் தரவில்லை. பின்னர் போலீஸில் புகார் செய்வோம் என்று கூறிய பிறகு எதோ சிறிது சிறிதாக திருப்பிக்கொடுத்தார் நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் முழுப் பணம் திரும்பி வரவில்லை. எனவே நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. சிவாய நம ஐயா வணக்கம்
    உண்மை தான் சுற்றலாக்காரா்கள் எவ்வளவு பசப்பு வாா்த்தைகள் பேசி நம்மிடம் பணம் வாங்கிவிட்டு எவ்வளவு கொடுமை பண்ணிவிட்டாா்கள் அங்கே போய் நாம் பட்ட சிரமம் சொல்லி மாளாது. அதிலும் அன்னபுா்னா Travels மிக மிக கேவலமாக பணம் சாம்பாதிக்க மிகவும் கீீழ்தரமாக நடந்து கொண்டதை எண்ணும் போது இனி செல்லும் சிவ அடியாா்களை இது போல் நயவஞ்சக சுற்றுலா காரா்களிடம் இருந்து சிவபெருமான் காப்பாற்ற வண்ங்குவோம்
    திருச்சிற்றம்பலம்

    ReplyDelete