பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வரும் சாளக்கிராம திவ்ய தேசத்தின்
மூலவர் : ஸ்ரீமூர்த்தி - (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பு மூர்த்தி) நின்ற திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்.
தாயார் : ஸ்ரீதேவி நாச்சியார்
தீர்த்தம் : ஸ்ரீசக்ர தீர்த்தம்
விமானம் : கனக விமானம்
பிரத்யக்ஷம் : ப்ரம்மா, ருத்ரர், கண்டகி
ஆழ்வார் பாடல்கள்: பெரியாழ்வார் - 2 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.
ஆழ்வார் பாடல்கள்: பெரியாழ்வார் - 2 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.
அர்ச்சாமூர்த்திகளில் (விக்ரகம்) ஸான்னித்யம் ஏற்பட முதலில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டுவது மிகவும் அவசியம். ஆராதனம் செய்பவர்கள் ஆசார்யர்களிடம் இதற்கான தீக்ஷை பெறவேண்டும். தீக்ஷை பெற்றவர்கள்தான் அர்ச்சா மூர்த்தியை ஆராதனம் செய்யத் தகுதிபெற்றவர்கள். ஆனால் எம்பெருமானின் ஸான்னித்யமுள்ள சாளக்கிராமமூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் போன்ற கடினமான நியதிகள் கூறப்படவில்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதன மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனம் செய்யலாம்.
முக்திநாத் ஆலய நுழைவு வாயில்
சாளக்கிராம மூர்த்திகள், ஹிமாலயத்திலிருந்து (சாளக் கிராம சிகரம்) உற்பத்தியாகும் கண்டகி நதிப்படுகையில் சக்ர தீர்த்தம் என்ற புனிதமான இடத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. இதன் அளவு சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம் வரை பெரிதாகவும், அபூர்வமான சில சாளக்கிராம மூர்த்திகளில் ஸ்வர்ணரேகையும் இருக்கும். இதனால் அந்த நதி அங்கு “ஹிரண்யவதி” என்றும் கூறப்படுகிறது.நேபாளத்தில் உள்ள "மஸ்டாங்" என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் உள்ள "தாமோதர் பீடபூமி"யில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன.
அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள் ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள். இந்த ஏரிகள் "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலை"யும் அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப்படுகிறது.
அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள் ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள். இந்த ஏரிகள் "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலை"யும் அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப்படுகிறது.
கண்டகி நதியைப் பற்றி , அங்கே உலவும் ஒரு செவி வழிக் கதை இது.வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாதுதிகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.
அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி.
அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம் அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு, சக்ர, கதாபாணியான, ஸ்ரீமந்நாராயணன் கௌஸ்துப, வனமாலா விரதிஜனாக கோடி சூர்ய பிரகாசத்துடனும், மன்மத லாவண்யத்துடனும் பிரசன்ன வதனத்துடன் மஹா விஷ்ணு அங்கே சேவை சாதித்தார்.
புண்ணிய - பாவக் குளங்கள்
கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச் சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்" ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாற வேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பெயரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள்.
பெருமாள் சாளக்கிராமக் கல்லாக இருப்பதற்கான இன்னொரு கதை. சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு அவன் மனைவி மஹா திவிரதை பிருந்தையிடம் வந்து, “”தேவி, போரில் நான் வென்று விட்டேன்”என்றார். மகிழ்ச்சி கொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை,
”பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே” என்று துடிதுடித்து, ”கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்” என்று சாபமிட்டாள்.
சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது.
முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும்.
2-ம்வகை: சரி பாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது
3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும்.
எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.
இச்சாளக்கிராமங்களை விலை கொடுத்து வாங்குவதை விட வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்து போனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குல தனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை - பலம், வலிமையைத் தரும்
கருப்பு - புகழ், பெருமை சேரும்
புகை நிறம் - துக்கம், தரித்திரம்.
சாபத்தினால் மலையாக மாறிய விஷ்ணுவை, மஹாலக்ஷ்மித்தாயார் கண்டகி நதியாக ஓடி அறுத்துத் தள்ளுவதால் சாளக்கிராமங்கள் உருவாகின்றன. எப்போது மலை முழுவதுமாக அறுக்கப்படுகின்றதோ அன்று மஹா விஷ்ணுவின் சாப விமோசனம் என்பது ஒரு ஐதீகம்.
இது ஹிந்துக்களைத் தவிர பௌத்த மதத்தவர்களுக்கும் புனித க்ஷேத்ரமாக விளங்குகிறது. பௌத்தர்கள் இதை திபெத் மொழியில்
“சம்மிங்க்யாஸ்தா” - “மோட்சமளிக்கும் பள்ளத்தாக்கு” என்று அழைக்கிறார்கள். இங்கு பெருமாளுக்கு பூஜை செய்பவர்கள் புத்த சந்நியாசினிகள் ஆவர்.
ஜோம்சமில் கண்டகி நதி தீரத்தில் சாளக்கிராமம் தேடுகின்றோம்
முக்திநாத் செல்லும் பக்தர்கள் கண்டகிநதி தரிசனம் செய்து முக்திநாத் கோயில், 108 தீர்த்தத்தில் மற்றும் பாவ புண்ணிய சீதள தீர்த்தங்களில் நடுங்கும் குளிரில் நீராடி, பின்னர் சாளக்கிராம மூர்த்தியை தரிசனம் செய்கின்றனர். பின்னர் மலையடிவாரத்தில் உள்ள புத்தர், ஜ்வாலாமுகி தரிசனம் செய்து பின்னர் ஜீப் மூலம் ஜோம்சம் அடைந்து ஹோட்டலில் தங்குகின்றனர்.
மறுநாள் காலை ஜோம்சமிலிருந்து விமானம் மூலம் போக்ரா வந்து அங்குள்ள டேவிஸ் பால்ஸ், லேக்வராகி, பிந்துவாசினி மற்றும் வராஹி கோயில் தரிசனம் செய்து போக்ராவில் தங்கி மறு நாள் காலை போக்ராவிலிருந்து பேருந்து மூலம் காத்மாண்டு அடைகின்றனர்.
நேபாளத்தின் தட்பவெப்பமும், சூழ்நிலைகளும் திடீரென்று மாறக்கூடியது. திட்டமிட்டது போல எதுவுமே நடக்க வாய்ப்புகள் குறைவு. 2012ல் அடியோங்களின் முக்திநாத் யாத்திரை எவ்வாறு அமைந்தது என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே.
நேபாளத்தின் தட்பவெப்பமும், சூழ்நிலைகளும் திடீரென்று மாறக்கூடியது. திட்டமிட்டது போல எதுவுமே நடக்க வாய்ப்புகள் குறைவு. 2012ல் அடியோங்களின் முக்திநாத் யாத்திரை எவ்வாறு அமைந்தது என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே.
சாளக்கிராமத்தின் பெருமையை அறிந்தோம்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஅறிந்தும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்.
ReplyDelete