பிடூரில் இருந்து சியாபுருபேசி செல்ல இரண்டு பாதைகள் உள்ளன அவற்றில் சற்று தூரம் குறைவான அபாயகரமான பாதையில் ஓட்டுனர் வண்டியை ஒட்டிச் சென்றார். பாதை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு வழிப்பாதை கீழே 40 அடி பள்ளத்தில் திரிசூலி ஆறு ஓடிக்கொண்டிருக்க மேலே கத்திமுனை போன்ற பாதையில் பயணம் செய்தோம். பல இடங்களில் பாதை சேறும் சகதியுமாக இருந்தது. ஓட்டுனர் லாகவமாகத்தான் ஓட்டிச் சென்றார் என்றாலும் எந்நேரம் என்ன நடக்குமோ என்று திருக்கயிலை நாதரை துதித்துக்கொண்டே சென்றோம். இவ்வழியில் போக்குவரத்து ஒன்றும் இருக்கவில்லை எப்போதாவது ஒரு கிராமம் கண்ணில்பட்டது. வழியில் பல அருவிகளைக் கண்டோம், சிறிதும் பெரிதுமாக தங்கள் நீரை திரிசூலி ஆற்றில் கொட்டிக்கொண்டிருந்தன. பாதை முழுவதும் கற்கள் என்பதால் வண்டி குலுங்கி, குலுங்கிக்கொண்டே சென்றது. ஆற்றின் அப்புறமும் இப்புறமுமாக பாதை அமைந்திருந்தது.
திரிசூலி ஆற்றின் கரையோரம்
மிகவும் மோசமான பாதை
வழியெங்கும் அநேக அருவிகள்
சீன அரசின் உதவியுடன் Upper Trishuli Hydroelectric Project என்ற நீர் மின்சார நிலையத்தின் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அவற்றிலும் அதிகமாக சீனர்களே பணி புரிந்து கொண்டிருந்தனர். பருவ மழை காலத்தில் இவ்வழியில் பயணம் செய்தால் நிலச்சரிவினால் பாதை அடைபட நல்ல வாய்ப்பு உள்ளது. இடையில் ஒரு சங்கமம், சீனாவில் இருந்து ஒடி வரும் போடே-கோசி நதியுடன் இந்த திரிசூலி நதி கூடி பின்னர் திரிசூலியாக நேபாளத்தில் ஒடுகின்றது என்றும் இந்நதிக்கு திரிசூலி என்று பெயர் வர ஒரு சுவையான புராணத்தையும் வண்டி ஓட்டுநர் கூறினார், பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விடத்தை சிவபெருமான் அருந்தியபோது அதன் வீரியம் தாங்க முடியாமல் தன் கரத்தில் இருந்த திரிசூலத்தை ஊன்றிய போது அதிலிருந்து கங்கை பொங்கி ஓடினாள் எனவே இந்நதிக்கு இப்பெயர் என்றார். இவ்வாறு மிகவும் சிரமத்துடன் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் மிகவும் சிரமத்துடன் பயணித்து சியாபுருபேசி அடைந்தோம், எல்லை வரை செல்லாமல் அக்கிராமத்தில் தங்கினோம்.
சியாபுருபேசி
சிறிது ஒய்வெடுத்துக்கொண்டு அக்கிராமத்தை சுற்றிப் பார்த்தோம், ஒரு சங்கமத்தின் கரையில் இக்கிராமம் அமைந்திருந்தது. ஒரு புத்த விகாரம் ஆனால் சேதம் அடைந்திருந்தது. இக்கிராமத்திலிருந்து தினமும் எல்லையில் உள்ள ருசுவாகத்தி, கால்ச்சி, மற்றும் காத்மாண்டுவிற்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் இக்கிராமத்தில் ஒரு வெந்தீர் ஊற்றும் உள்ளது. காலார மக்காசோள தோட்டங்களுக்கிடையே நடந்து சென்று வெந்நீர் ஊற்று வரை சென்று பார்த்து விட்டு (குளிக்கவில்லை) வந்தோம். இக்கிராமம் பல மலையேற்ற வழிகளுக்கு ஆதார முகாமாக விளங்குகிறது. (Base camp for many Trekking routes)
சேதமடைந்த புத்த விகாரம்
ஒரு சங்கமம்
ஆற்றின் குறுக்கே அமைந்த ஒரு பாலம்
வெந்நீர் ஊற்று செல்லும் வழியில்
காம்படார் வெந்நீர் ஊற்று
காலையில் கூட்டு பிரார்த்தனை
சியாபுருபேசியில் குழுவினர்
எல்லையை நோக்கி பேருந்து பயணம்
பேருந்தை லாவகமாக ஓட்டிய அன்பர்
போடே-கோசி ஆறு
எல்லையில்
காத்து நிற்கின்றோம்
மறுநாள் காலை விசாவுடன் அன்பர் காத்மாண்டிலிருந்து கிளம்பி விட்டார் என்ற செய்தி கிட்டியது. காலை கூட்டு வழிபாட்டை முடித்து, காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு கிளம்பினோம். இங்கிருந்து எல்லையில் உள்ள ருசுவாகத்தி சுமார் 10 கி.மீ தூரம்தான் ஆனால் சுமார் 45 நிமிடங்கள் பயணம் செய்தோம். சிறிது நேரம் கழித்து கடவு சீட்டு மற்றும் விசாவும் வந்து சேர்ந்தது. ஆனால் அன்று எல்லையை கடக்க அதிகமான யாத்திரிகள் இருந்ததனால் சீனர்களின் மதிய உணவு இடைவெளிக்கு பின்னரே எங்களை அனுமதித்தனர் (நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இதையே 2:30 மணி நேர கால வித்தியாசம் உள்ளது). இங்கும் ஒரு அன்பருக்கு சிறு தடங்கல் ஏற்பட்டது. அவர் சுற்றுலா ஏற்பாட்டாளர்களீடம் தன்னுடைய பழைய கடவுசீட்டின் எண்ணை கொடுத்திருந்தார், அதன் அடிப்படையில் அவர்களும் விசாவிற்கு விண்ணப்பத்திருந்தனர், எனவே விசாவில் அவருடைய பழைய கடவுசீட்டின் எண் இருந்தது. தற்போது அவர் புதுப்பிக்கப்பட்ட கடவுசீட்டுடன் பயணம் செய்தார் எனவே அவரை முதலில் அனுமதிக்க மறுத்தனர். அனைவரும் குமாரசாமி ஐயா அவர்களை இடர்களைவாய் நெடுங்களம் மேயவனே என்னும் பதிகத்தைப் பாடி எம்பிரானை வேண்டுமாறு பிரார்த்தித்தோம். அவரும்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. (திருஞான சம்பந்தர் ) என்ற நெடுங்கள பதிகத்தைப் பாடி இறைவனை பிரார்த்தித்தார்.
அதற்குப்பிறகு புதிய கடவு சீட்டின் பின்புறம் உள்ள பழைய கடவு சிட்டின் எண்ணைக் காண்பிக்க அவர்களும் அவரை அனுமதித்தனர். அனைவரும் எல்லையைக் கடந்து சீனாவிற்குள் நுழைந்தோம். சீனப்பகுதியில் யாத்திரை எவ்வாறு அமைந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. (திருஞான சம்பந்தர் ) என்ற நெடுங்கள பதிகத்தைப் பாடி இறைவனை பிரார்த்தித்தார்.
அதற்குப்பிறகு புதிய கடவு சீட்டின் பின்புறம் உள்ள பழைய கடவு சிட்டின் எண்ணைக் காண்பிக்க அவர்களும் அவரை அனுமதித்தனர். அனைவரும் எல்லையைக் கடந்து சீனாவிற்குள் நுழைந்தோம். சீனப்பகுதியில் யாத்திரை எவ்வாறு அமைந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
No comments:
Post a Comment