ஐயனின் முதல் தரிசனம்
மானசரோவரை நோக்கி செல்லும் வழியில் திருமுறைகளைக் பாடிக்கொண்டே சென்றோம். இரு பக்கமும் இருந்த மலைகள் அனைத்து வெள்ளிப் போர்வை போர்த்த்க்கொண்டிருந்தன. ஜூன் மாதம் என்பதால் பனி முழுமையாக உருகாமல் இன்னும் இருந்ததே அதற்கு காரணம் அதனால் குளிரும் கடுமையாகவே இருந்தது. ஓட்டுனர் பொறுமையாக போக்குவரத்து ஏதும் இல்லா தார் சாலையில் வண்டியை ஒட்டிச் சென்றார். இவ்வாறாக பயணம் செய்து டோக்சன் (Tokchen) என்னும் இடத்தை அடைந்தோம். மானசரோவர் ஏரியின் கரையில் அமைந்துள்ள இவ்விடத்தில் தான் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை முதலில் தரிசிப்போம்.
வழியெங்கும் மஞ்சு கொஞ்சும் முகடுகள்
ஆனால் அடியோங்கள் சென்ற சமயம் ஐயனை மேகம் சூழ்ந்திருந்தது தரிசனம் கிட்டவில்லை. அங்கிருந்த வரவேற்பு வளாகத்தில் சிறிது நேரம் தங்கி போற்றித் திருத்தாண்டகம் படித்தோம் மேகமூட்டம் விலகவில்லை. சரி மானசரோவர் ஏரி வலத்தை துவக்கலாம் என்று வண்டியில் புறப்பட்டோம். சென்ற யாத்திரையின்(2014) போது இவ்விடத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் கடுமையாக இருந்தது. அடியோங்கள் பயணம் செய்த வண்டியை இங்கே நிறுத்திவிட்டு சீன நிறுவனத்தின் வண்டியில் பயணம் செய்யக்கூறினர். இத்தடவை பாதுகாப்பு சோதனை ஏதும் இருக்கவில்லை, மேலும் அடியோங்கள் வந்த வண்டியையே மேலே செல்ல அனுமதித்தனர்.
அடியோங்களை அழைத்துச்சென்ற சேர்ப்பா குழுவினர்
இடையில் மதிய உணவு
டோக்சன் வரவேற்பு வளாகம்
திருக்கயிலாயம் மானசரோவர் வரைபடம்
ஐயனின் அற்புத முதல் தரிசனம்
திருக்கயிலாயமும், மானசரோவரும் இணைந்த கௌரி-சங்கர் தரிசனம்
அரிய வகை பொன் வாத்துக்கள்
மானசரோவர் ஏரி
மானசரோவரின் கிரி வலத்தை துவக்கினோம், சூரிய ஒளி பட்டு அலைகள் வைரம் போல் ஜொலிக்கும் அழகையும், பல் வேறு விதமான பறவைகள் மானசரோவரில் மேல் பறக்கும் அழகையும், நீலம், கருநீலம், பச்சை என்று மாறி பல வர்ணத்தில் காட்சியளிக்கும் மானசரோவரின் எழிலையும் இரசித்துக்கொண்டே ஐயனின் ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டே ஏரி வலத்தைத் தொடர்ந்தோம். ஏரியை சுற்றிலும் கம்பி வேலி அமைத்திருந்ததை கவனித்தோம். சென்ற வருடத்தில்(2018) இருந்து யாத்திரிகள் யாரும் மானசரோவில் இறங்கி நீராடக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சீன அரசு புதிதாக கொண்டு வந்தது, அதற்காக இவ்வாறு ஏரியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளனர்.
ஏரி வலம் தொடர்ந்த போது மேகங்கள் விலகி ஐயனின் தரிசனம் கிட்டத்தொடங்கியது, அனைவரும் ஆனந்தத்துடன் திருக்கயிலை நாதரை தரிசனம் செய்தோம். மானசரோவ்ரின் இக்கரையில் நின்று தரிசனம் செய்வது என்பது கௌரி- சங்கர் தரிசனம் என்றழைக்கப்படுகின்றது. கயிலை மலை சிவமாகவும், மானசரோவர் சக்தியாகவும் பக்தர்களுக்கு அம்மையப்பர் வழங்கும் சிவசக்தி தரிசனம் இது. மிகவும் மகிழ்ச்சியுடன் உமையம்மைக்குரிய அபிராமி அந்தாதிப் பாடல்கள், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றையும் துதித்து சிவ சக்தியை வணங்கினோம். முழுவதுமே பனி நிறைந்திருந்திதால் ஐயன் இத்தடவை வெள்ளிக் கவசத்தில் அடியோங்களுக்கு அருட்காட்சி வழங்கியது போல உணர்ந்து மகிழ்ந்தோம்.
திருக்கயிலாய மலைத்தொடர் முழுவதும் பனிப்போர்வையில்
குர்லா மாந்தாதா மலைத் தொடர்
( மானசரோவர் ஏரியும், இராட்சத ஏரியும் திருக்கயிலாய மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாதா மலைத் தொடர்களுக்கு இடையே அமைந்துள்ளன. )
இடையில் வண்டி மாட்டிக்கொண்டது
அந்தி சாயும் நேரம்
இரவில் மானசரோவரின் அழகு
ஏரி வலப்பாதை முழுவதுமாக தார் சாலை அல்ல என்பதால் சென்று கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் வண்டியின் பின் சக்கரம் மணலில் புதைந்து விட்டது. ஓட்டுனர் வண்டியை வெளியே எடுக்க பெரும் முயற்சி செய்தார் ஆனால் எதுவும் பலிக்கவில்லை. அடியோங்கள் வண்டிக்கு வெளியே நின்று ஐயனை அருமையாக தரிசனம் செய்து கொண்டு கோளறு பதிகம் பாடி வந்த கோளாறு நீங்க வேண்டும் என்று திருக்கயிலை நாதரை பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். டோக்சனில் தரிசனம் தராததால் இவ்வாறு வண்டியை சிக்கச்செய்து நெடு நேரம் அவரை அடியோங்கள் தரிசிக்க ஐயன் செய்த திருவிளையாடல் போல தோன்றியது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு பெரிய வண்டி அப்பக்கம் வந்தது அவ்வண்டியில் கயிறு கட்டி இழுத்து ஒரு வழியாக வண்டியை வெளியே இழுத்தனர். பின்னர் ஏரி வலம் தொடர்ந்தது. மாலை நேரம் ஆகிவிட்டது. அந்தி சாயும் நேரத்தில் ஐயனின் அழகை வண்டியில் இருந்தே தரிசனம் செய்தோம். மானசரோவரில் கரையில் அமைந்துள்ள தங்கும் விடுதியை அடைந்த போது இருட்டிவிட்டது குளிரும் கடுமையாக இருந்தது எனவே சீயூ புத்தவிகாரத்தை சென்று பார்க்க சமயம் கிட்டவில்லை. அனைவரும் உறங்கச்சென்று விட்டோம். மானசரோவரில் மறு நாள் நீராட முடிந்ததா? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
No comments:
Post a Comment