காத்மாண்டில் இரு நாள்
யாத்திரை நிறைவு
மர்ஸ்யாங்க்டி ஹோட்டல்
திட்டப்படி கிரி வலம் முடித்த அன்று மானசரோவர் கரையில் தங்கி
மறு நாள் சாகா வந்திருக்கவேண்டும் ஆனால் நாங்கள் நேராக அன்றே சாகா வந்து விட்டதால்
ஒரு நாள் அதிகமாக காத்மாண்டுவில் கிட்டியது. நேபாள தலை நகரில் கடைகள் மற்றும் ஆட்டோ,
டாக்சி ஓட்டுனர்கள் இந்திய ரூபாயை எற்றுக்கொள்கிறார்கள். ஆகவே ஆட்டோகாரர்களிடம்
பேரம் பேசும் போது சரியாக இந்திய ரூபாயா? அல்லது நேபாள ரூபாயா? என்று சரியாக கூற
வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் என்பதால் எங்கு வேண்டுமென்றாலும் பணத்தை
மாற்றும் வசதியுள்ளது.
.
ஹோட்டல் முன் எங்கள் குழுவினர்
ஹோட்டலில் காலை உணவு
நாராயண ஹிட்டி அரண்மணை
அந்த இரு நாட்களில் முதல் நாள் காலை நாராயண ஹிட்டி அரண்மணை சென்றோம், தற்போது அது ஒரு அருங்காட்சியகமாக மாறியுள்ளது. நேபாள் குடிமக்களுக்கு குறைவான கட்டணமும், தெற்கு ஆசிய கூட்டமைப்பு குடிமக்களுக்கு அதை விட அதிகமான கட்டணமும், மற்ற வெளி நாட்டினருக்கு என்று மூன்று வித கட்டணங்கள் வசூலிக்கின்றனர். நேபாள ரூபாய்தான் ஏற்றுக் கொள்கிறார்கள் எனவே அருகில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று இந்திய ரூபாய்களை மாற்றிக்கொண்டு வந்து தந்தோம். அரசர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது மற்றும் எவ்வாறு ஒருவரின் தவறினால் அரச பதவி பறி போனது என்பதை எல்லாம் நேரில் பார்க்க முடிந்தது.
துலிக்கெல் 152 அடி உயர சிவன் சிலை
நந்தியெம்பெருமான்
அந்தி சாயும் வேளையில் சிவ குடும்பம்
அன்று மாலை அடியேனும் திரு. சுந்தர் அவர்களும் துலிக்கேல் (Dhulikel) சென்று 152 அடி சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு புகைப்படங்கள் எடுத்து விட்டு வந்தோம். ஒரு இந்தியர் தான் இந்த உலகத்திலேயே உயரமான சிலையை ஒரு சிறு குன்றின் உச்சியில் சிவபெருமான் சிலையை நிறுவியுள்ளார். வண்டி மூலமாகவும் மேலே செல்ல முடியும், ஆனால் நாங்கள் சென்ற சமயம் சாலை மராமத்து வேலை நடந்து கொண்டிருந்ததால் நடந்தே மேலே சென்றோம். இதனுடன் இணைந்த ஒரு சுற்றுலா விடுதியும் அமைத்துள்ளார், பயணிகள் தங்கிச்செல்வதற்காக. சிவ குடும்பமும், நந்தியும் மற்றும் பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் அமைத்துள்ளார். அருமையான பூந்தோட்டங்களும் உள்ளன. தரிசிக்க வேண்டிய ஒரு இடம் என்பதில் ஐயமில்லை.
மற்றவர்கள் ஹோட்டலின் அருகிலேயே உள்ள கடைகளில் பொருட்களை வாங்கியும், ஓய்வு எடுத்தும் சுற்றிப்பார்த்தும் நேரத்தைக் கழித்தனர். மாலைதான் கொடாரியிலிருந்து எங்களுடைய பைகள் எல்லாம் திரும்பி வந்து சேர்ந்தன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் திருக்கயிலாயம் செல்ல விழையும் இன்னும் சில குழுவினர் தங்கியிருந்தனர். அதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு குழுவினரும் இருந்தனர். அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு திபெத்தில் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார்கள். பனி முழுதும் உருகாததால் ஒரு ஜெர்மன் யாத்திரி விழுந்து அடிபட்டதன் விளைவு இது. மூன்று நாட்களுக்கு கிரி வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாம். அவனருளால் அவன் தாள் வணங்க முடிந்தது என்று நன்றாக புரிந்தது. அவர்ன் அருளால் அவனது தரிசனமும் கிரி வலமும் சித்தித்தது. இன்றைய தினம் காத்மாண்டுவில் ஓய்வுநாள்.
மலைச் சிகர தரிசனம்
இமயமலையின் சிகரங்கள்
மறுநாள் காலை எங்கள் குழுவினரில் சிலர் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகில் உள்ள சுற்றுலா நிறுவனத்தினர் மூலமாக முன் பதிவு செய்து சிறு விமானம் மூலம் எவரெஸ்ட் உள்ளிட்ட நேபாளத்தில் உள்ள உயர்ந்த பனி மூடிய சிகரங்களை சென்று பார்த்துவிட்டு வந்தனர். அந்த அனுபவம் அருமையாக இருந்தது என்று கூறினர்.
காத்மாண்டுவின் கடை வீதி
இன்றைய தினம் அடியேனும் சுந்தர் பாபு ஆகிய மூவரும் எளி வந்த கருணையினால் அருமையான தரிசனமும், கிரி வலம் முடிக்க அருள் புரிந்த பரம்பொருளுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பசுபதி நாதர் ஆலயம் சென்று அவரை வணங்கி நன்றி கூறிவிட்டு வந்தோம். மதியம் 12 மணிக்கே அறையை காலி செய்ய வேண்டியிருந்தது, பல குழுக்கள் திபெத்துக்குள் செல்லாமல் காத்மாண்டுவிலேயே நின்றதால் அறைகளுக்கு சரியான கிராக்கி இருந்தது. சிறிது நேரம் காத்மாண்டின் வீதிகளில் சுற்றி விட்டு வந்து மாலை 6:30 அந்தி சாயும் நேரத்தில் Spicejet விமானமேறி டில்லி வந்து சேர்ந்தோம்
தில்லி திரும்பிகிறோம்
தில்லி விமான நிலையத்தில்
நண்பர் உதயகுமார் வீட்டில் தங்கியிருந்து மறு நாள் சென்னை வந்து சேர்ந்தோம் இவ்வாறு அவனருளால் இந்த இரண்டாவது யாத்திரையும் மிகவும் அற்புதமாக அமைந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் ஆனால் ஆனந்த அனுபவம்.
பின்னர் இல்லத்தின் பரம கருணாமூர்த்தியான சிவபெருமானுக்கும் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கும் அருமையாக கிரி வலம் முடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்ததற்காக இல்லத்தில் ருத்ர அபிஷேகம் செய்து அவன் தாள் வணங்கினோம்.
இத்துடன் 2012ம் ஆண்டின் திருக்கயிலாய யாத்திரைத் தொடர் நிறைவு பெறுகின்றது. இது வரை வந்து தரிசனம் பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சிவசக்தி அனைவருக்கும் அருள் வழங்க வேண்டுகிறேன். வரும் நாட்களில் மேலும் புகைப்படங்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன் அது வரை மற்ற வலைத் தலத்தில் சந்திக்கலாம் அன்பர்களே.
இத்துடன் 2012ம் ஆண்டின் திருக்கயிலாய யாத்திரைத் தொடர் நிறைவு பெறுகின்றது. இது வரை வந்து தரிசனம் பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சிவசக்தி அனைவருக்கும் அருள் வழங்க வேண்டுகிறேன். வரும் நாட்களில் மேலும் புகைப்படங்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன் அது வரை மற்ற வலைத் தலத்தில் சந்திக்கலாம் அன்பர்களே.
ஓம் நம சிவாய
152 அடி உயர சிவன் சிலை அற்புதம்...
ReplyDeleteஅவனருளாலே அவன் தாள் வணங்கி...
ReplyDeleteஅருமையான நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
சிவாநந்த போகம் சேவித்ததற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteமிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDelete