Sunday, December 23, 2012

கயிலை மலையானே போற்றி! போற்றி! -2


காத்மாண்டு

ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயம்.

புத்த நீல கண்டர் திருமுக சேவை

29-05-2012 அன்று மாலை நேபாள தலை நகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.  நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்து  பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது காத்மாண்டு நகரம். விமானம் தரை இறங்கிய காட்சி அருமையாக இருந்தது. நேபாளம் வருபவர்களை வரவேற்கிறார் கருடன். அனைத்து ஆலயங்களிலும் முகப்பில் கருடனைக் காணலாம். இங்கே அஞ்சலி ஹஸ்தத்துடன் மண்டியிட்த நிலையில்கழுத்திலும் காதுகளிலும் நாக ஆபரணங்களுடம்ன் அற்புதமாக உள்ளது கருடன் சிலை.  Immigration  பணிகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.  விமான நிலையமெங்கும் அற்புதமான ஓவியங்கள், புத்தரின் வாழ்க்கை வரலாறு, பசுபதி நாதர் ஆலயம்  மற்றும்  பழங்குடி மக்களின் வாழ்க்கை ஆகியவை  கவின் மிகு ஒவியமாக தீட்டப்பட்டுள்ளன.   


காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 

விமான நிலயத்தின் அலங்கார வளைவு

விமான நிலையத்தில் எங்கள் குழுவினர்

வெளியே வந்து  வண்டி மூலம்  நெரிசல் மிகுந்த காத்மாண்டு நகரைக்கடந்து சிவபுரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள  பார்க் வில்லேஜ் ( Park Village Hotel & Resorts)  ஹோட்டலை அடைந்து அங்கி இரவு தங்கினோம்.  திரு. சுந்தர் அவர்கள்  ஜல் நாராயணன் ஆலயம் அருகில்தான் உள்ளது  என்று கூறினார். எனவே காலை எழுந்தவுடன் அலையாழி அரி துயிலும் மாயனை சென்று தரிசிக்க முடிவு செய்து உறங்கச்சென்றோம். 

சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஹோட்டல்
 மற்றும் ஜல் நாராயணர் ஆலயம் 

நாங்கள் தங்கிய பார்க் வில்லேஜ் ஹோட்டல் 

ஹோட்டலின் வரவேற்பு பலகை 

ஹோட்டலில் அமைத்துள்ள பஞ்ச லோக புத்தர் சிலை

அதிகாலையில் எழுந்து அருகில் இருந்ததால் நடந்தே ஆலயத்திற்கு சென்றோம். இருள் பிரியும் அருணோதய காலத்தில் பெருமாளை தரிசனம் செய்தோம். ஆலயத்திற்கு செல்லும் வழியில் இரு பக்கமும் கோஷ்டத்தில் பல்வேறு தெய்வ முர்த்தங்களை அமைத்துள்ளனர். நேபாள ஆலயங்களின்  வழக்கமான  பஞ்ச லோக கருடன் சிலை இங்கும் அமைத்துள்ளனர். மேலும் கல்லால் வடித்த கருடாரூட விஷ்ணு பகவான் சிலையும் பசுபதி நாதர் போல நான்கு முக விஷ்ணு சிலையும் அருமை. 

இருள் பிரியும் அதிகாலை  நேரத்தில்
 ஸ்ரீ அனந்த நாராயணர் தரிசனம் 

ஜல நாராயணரின் நிர்மால்ய தரிசனம்

 நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயணர் ஆலயம்   என்றும்  இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு , குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11  தலை ஆதி சேஷனில்   சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். 

கணேசர் சந்நிதி


திருக்கதவ கருடன் 

காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது புத்தநீலகண்டர் சேவை சாதிக்கின்றார். இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும். ஒரு சமயம் வயதான கணவன் மனைவி இருவரும் தங்களின் விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பூமிக்கு அடியில் இருந்து இந்த பிரம்மாண்ட சிலை வெளிப்பட்டுள்ளது. ஊர்காரர்களை அழைத்து வந்து காட்ட முயன்ற போது அச்சிலை மாயமாக மறைந்து விட்டதாம். பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த விவசாயி தனது நிலத்தை உழுது தொண்டிருந்த போது மீண்டும் பூமிக்கு அடியில் இருந்த வெளிப்பட்ட சிலையில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியதாக இக்கோயில் குறித்த வரலாறு கூறப்படுகிறது. இருப்பினும் இக்கோயிலில் அமைந்துள்ள மகாவிஷ்ணு சிலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இவ்வளாகத்தில் ருத்ராக்ஷ மரமும் உள்ள\து. 


 திறந்த வெளி பசுபதிநாதர் சந்நிதி

கல் கருடாரூட மஹா விஷ்ணு

நான்கு முக மஹா விஷ்ணு சிலை 

மகாவிஷ்ணு சிலை,13 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 5 மீட்டர் நீளத்தில் கால்களை குறுக்காக வைத்தபடி சயன கோலத்தில் உள்ளது. நான்கு கைகளிலும் முறைகே சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலர் ஆகியன உள்ளன. இந்த சிலை சுமார் 7 அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சிவனைப் போன்று பழமையான நீல நிற கழுத்தை காணப்படுவதால் இவர் புத்தநீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இவ்வாலயத்தில் விநாயகருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. மற்றும் திறந்த வெளி பசுபதி நாதர் மேடையும் உள்ளது. 




காத்மாண்டுவில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும், ஏன் பல வீடுகளிலும் கூட கதவுகள்  மற்றும் பலகணிகள் அருமையான மர வேலைப்பாடுகளுடன்  காணப்படுகின்றன. எல்லா கதவுகளிலும் சூரிய சந்திரர்களையும், புத்த மதத்தினரின் எட்டு மங்கலப்பொருள்களையும் காணலாம். 



இந்த ஜல் நாராயணர் திறந்த வெளியில்தான்  உள்ளார் மேற்கூரை எதுவும் இல்லை ஒரு மஞ்சள் விதானம்தான் இவரை சூரியனிடமிருந்து காப்பாற்றுகின்றது. பக்தர்கள் இவரது திருவடிகளில் நின்று இவரை வணங்குகின்றனர். நாங்கள் அதிகாலையில் சென்ரதால் அலங்காரம் எதுவும் இல்லா நிர்மால்ய தரிசனம் கிட்டியது. 
  






நாங்கள் சென்ற போது கிரீடத்தை துணியால் மூடியிருந்தனர். சிறிது நேரம் சென்ற பின் அந்த துணியை எடுத்து விட்டு  தாரா பாத்திரத்தினால் அங்குள்ள புத்தருக்கு அபிஷேகம் செய்தனர்.  அந்த அரிய காட்சியை தாங்களும் காண்கின்றீர்கள்.   





திருவடி சேவை


ருத்ராக்ஷ மரம் 


ஆலய வளாகத்தில் பெரிய காண்டா மணியுடன்
எங்கள் குழுவினர் 


புத்த நீலகண்டரை தரிசனம் செய்துவிட்து ஹோட்டலுக்கு திரும்பி வந்து காலை சிற்றுண்டி  அருந்தி விட்டு காத்மாண்டு நாகரின் மற்ற ஆலயங்களை தரிசனம் செய்ய சென்றோம்.   


திருநாவுக்கரசர்  தேவாரம் 

திருக்கயிலாயம் 



கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவ னெடுத்தி டல்லு மரிவைதா னஞ்ச வீசன்
நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (2)


பொருள் : மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில், மலைமகள்  பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் தனது கட்டை விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான். பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

  யாத்திரை வளரும்.......

2 comments:

கோமதி அரசு said...

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் போய் வந்தோம் மறுபடியும் உங்கள் பதிவின் மூலம் தரிசிக்கிறேன்.
புறா திருவடி தரிசனம் செய்வது அருமை.

அப்பரின் பாடல் கயிலையில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.
கயிலை மலையானே போற்றி! போற்றி!

S.Muruganandam said...

//இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் போய் வந்தோம்//

எல்லாம் அவன் செயல்

அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும்.

//புறா திருவடி தரிசனம் செய்வது அருமை//

அடியேனின் நண்பர் சுந்தர் எடுத்த படம். அவர் ஒரு professional photographer என்பதால் அருமையாக படங்கள் இன்னும் வரும் பதிவுகளிலும் தாங்கள் காணலாம்.

கயிலை மலையானே போற்றி! போற்றி!