அன்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2020) வாழ்த்துக்கள். மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் அருளால் அனைவரும் நலமாக வாழ அவர் தாள் பணிகிறேன்.
சரியான சமயத்தில் விசா கிடைக்காதனால்,
காத்மாண்டுவில் தங்கிய அதிகப்படியான மூன்று நாட்களை காத்மாண்டிற்கு அருகில் அமைந்துள்ள சில இடங்களுக்கு சென்று வந்து பொழுதைக் கழித்தோம், திட்டமிட்டபடி பயணம் நடைபெறவில்லை என்பதால் நேபாளத்திலிருந்து செல்வதற்கான பயண சீட்டுகளை மாற்றினோம் இவற்றால் செலவும் அதிகமாகியது. எப்போது நல்ல செய்தி வரும் என்று காத்திருந்தோம்.
விடுதியில் கூட்டம்
புதிய பயண அட்டவணை
சத்சங்கம்
அச்செய்தி 15/06/2019 சனிக்கிழமையன்று மாலை கிட்டியது. விசா திங்கட்கிழமையன்று
கிட்டும், சுற்றுலா நிறுவனத்தின் ஒரு அன்பர் விசாவை டெல்லியில் பெற்று விமானம் மூலம் காத்மாண்டு வந்து பின்னர் தனி சீருந்து மூலம் அதை எல்லைக்கு அதைக் கொண்டு வருவார், எனவே குழுவினர் மறு நாள் புறப்படலாம் என்று ஒரு திருத்திய பயண அட்டவணையை அளித்தனர், அதில் சீனப்பகுதியில் கரோங் நகரில் ஒரு நாள் தங்குவது நீக்கப்பட்டிருந்தது. உடல் உயர் மட்டத்திற்கு பதப்படுவதற்கு தங்கிச்செல்வதுதான் உத்தமமானது என்றாலும் காத்மாண்டிவில் அதிகப்படியாக தங்கியதால் இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு டார்ச்சனில் தெரிந்தது. பலருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி கிரி வலம் செல்ல முடியாமல் போனது. விசா சமயத்தில் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் சுற்றுலா நிறுவனத்தினர் அதை ஏன் முன் கூட்டியே சொல்லாமல் அனைவரையும் காத்மாண்ட்டிற்கு அழைத்தனர் என்று புரியவில்லை.
பயணத்திற்கு தயாராக அமர்ந்திருக்கின்றோம்
வழியில் சிறிது நேரம் ஓய்வு
மறு நாள் மாலை நான்கு மணியளவில் சீன எல்லைக்கான பயணத்தை அவனருளால் துவக்கினோம். இரண்டு சிறு பேருந்துகளில் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டு போக்ரா வரை செல்லும் பிருத்வி நெடும்பாதையில் நௌபிஷே (NauBise) வழியாக கால்ச்சி (Galchhi) என்ற ஊர் வரை பயணம் செய்து பின்னர் நேபாள எல்லை ஊரான சியாபுருபேசி நோக்கி பயணித்தோம். இதற்கு பிறகு பாதை மிகவும் மோசமாக இருந்தது, குண்டும் குழியுமான பாதையில் வண்டி குலுங்கி குலுங்கி சென்றது, மேலும் புழுதியை வாரி இறைத்துக்கொண்டு சென்றதால், மூக்கு கவசமும், கண்களை பாதுகாக்க கண்ணாடியும் தேவைப்பட்டது. திரிசூலி ஆற்றின் கரையை ஒட்டி இப்பாதை அமைந்திருந்ததால், இயற்கை காட்சிகளையும் ஆற்றின் ஓட்டத்தையும் இரசித்துக்கொண்டே பயணித்தோம். இவ்வழியில் மிகக்குறைவாகவே கிராமங்கள் இருந்தன. நட்புப் பாலம் சரியானபின் முன் போல நியாலம் வழியாகவே யாத்திரை நடைபெறும், சென்ற ஆண்டு அதிக பயன்பாட்டில் இல்லாத இவ்வழியில் யாத்திரிகள் பயணம் செய்து சீனாவிற்குள் வர சீன அரசு அனுமதி அளித்திருந்தால் இரண்டாம் ஆண்டாக பயணம் இவ்வழியில் பயணம் செய்தோம்.
மாலை 7 மணியளவில் சூரியன் மறைந்தான். மலைகளில் சூரியன் மறையும் அழகைக் கண்டோம். இடையில் த்ரிசூலி நதியும் தொடிகோலா என்ற நதியும் கூடும் சங்கமத்தை தரிசித்தோம். அதற்கு பின்னும் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து பிடூர் (Bidur) என்ற ஊரை அடைந்தோம் சின்ன கிராமம் என்பதால் ஒரே விடுதியில் அனைவருக்கும் தங்க இடம் கிட்டவில்லை. இரு வேறு விடுதிகளில் தங்க வைத்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லாமல் தாமதமாக சென்றதால் உணவும் தயாராக இருக்கவில்லை. நாங்கள் சென்ற பின்னர் சமைத்து ஒரு மண்டபத்தில் உணவு பறிமாறினார்கள்.
பிடூரில் தங்கிய இரு விடுதிகள்
லிச்சி மரங்கள்
மரமே ஆலயமாக
சியாம் - கௌரி தம்பதியினர்
நீர் மின் நிலையம்
யாத்திரை தொடரும் . . . . .
No comments:
Post a Comment