Sunday, October 27, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் -3


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்            (2019). மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் திருவருள் அனைவருக்கும் கிட்ட பிரார்த்தனை செய்கின்றேன்.

இன்றைய தினம் கேதார கௌரி விரத தினம் ஆகும், பல அன்பர்கள் இந்நோன்பை நோற்கின்றனர் . அனைவருக்கும் திருக்கயிலை நாதர் உடனாய மலையரையன், பொற்பாவை கௌரி அம்மன் அருள் வழங்க பிரார்த்தனை செய்கின்றேன்.  கேதார கௌரி விரதம் பற்றியை பதிவைப் படிக்க இங்கு செல்லவும்.  கேதார கௌரி விரதம்



பசுபதி நாதர் ஆலயம் - காத்மாண்டு





பசுபதிநாத் ஆலயத்தில் உள்ள ஸ்ரீசக்ரம்

சஹஸ்ர லிங்க சன்னதி


பாக்மதி ஆறு




2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் திருக்கயிலாயம் செல்லும் பாதையில் கொடாரி என்னும் இடத்தில்  இருந்த, போடே கோசி நதியின் குறுக்கே கட்டப்பட்ட  நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் நட்புப்   பாலமும் சேதமடைந்ததுஎனவே அவ்வருடத்தில் இருந்து சாலை வழியாக திருக்கயிலாயம் செல்லும் யாத்திரை தடைபட்டது. அடுத்த இரண்டு வருடங்களும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் சென்றவர்கள் மட்டுமே நேபாளம் வழியாக திருக்கயிலாயம் சென்று வந்தனர். அதிலும் சென்ற வருடம்(2018) பெருத்த மழை, அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்டு பல குழுக்கள் அங்கங்கே மாட்டிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டனர். சிலர் இறக்கவும் நேரிட்டதுஎனவே சீன அரசு அவ்வருடம் சியாபுருபேசி என்ற ஊரின் வழியாக ருசுவாதி என்ற எல்லை நகரம் வழியாக சீனாவுக்குள் திருக்கயிலாய யாத்திரிகள் செல்ல அனுமதித்தது. பாதை சரியில்லை என்றாலும் சற்று சிரமத்துடன் செல்ல முடியும், யாத்திரை காலம் ஒரு நாள் அதிகமாயிற்று. அடியோங்கள் இவ்வழியாகவே சென்றோம். சீனாவிற்குள் நுழைந்தபின் கிர்யோங் என்னும் ஊரில் ஒரு நாள் தங்கி பின்னர் சாகா நகரத்தை அடைந்து பின்னர் முன்னர் சென்ற வழியில் மானசரோவர் கரையை அடையும் விதமாக இவ்வருடம் யாத்திரை செல்லும்  மார்க்கம்  இருந்தது.


குஹ்யேஸ்வரி ஆலய முன் கருட  பதாகை




குஹ்யேஸ்வரி ஆலயத்தில் திருமண தம்பதியர்

அம்பாளை வணங்கும் நேபாள அரசர்கள்


பசுபதிநாத்திலிருந்து குஹ்யேஸ்வரி செல்லும் வழி


பாக்மதி ஆறு

ஒவ்வொரு முறை யாத்திரை செல்லும் போதும் ஒவ்வொரு வகையான அனுபவம் கிட்டுகின்றது. அது போலவே சில பாடங்களும் கிட்டுகின்றதுசென்ற தடவை சென்ற போது தில்லியில் இரண்டு விமான தளங்கள் உள்ளதாலும் ஒன்றிலிருந்து மற்றதற்கு செல்ல சமயம் ஆகுமென்பதால் விமானத்திற்கு முன் பதிவு செய்யும் போது தகுந்த இடைவெளி தேவை என்பதை கற்றோம். இத்தடவையும் ஒரு பாடம் கிட்டியது. இத்தடவை அடியோங்கள் பெங்களூர் சென்று பின் அங்கிருந்து நேபாளத் தலைநகர் காத்மாண்டிற்கு செல்லும் விதமாக விமானத்தில் முன் பதிவு செய்திருந்தோம். பொதுவாக திருக்கயிலாயம் செல்லும் போது நம்முடைய கடவு சீட்டை(Passport) சுற்றுலா ஏற்பாட்டாளரிடம் சீனா விசா வாங்குவதற்காக கொடுத்திருப்போம், பொதுவாக யாத்திரை கிளம்புவதற்கு முன் நம்முடைய கடவு சீட்டு  திரும்பி வந்து விடும் ஆகவே நாம் நேபாளம் செல்லும் போது கடவு சீட்டைக் காட்டி குடிவிலகல்(Emmigration) செய்வோம். ஆனால் இத்தடவை விசா சமயத்தில் கிடைக்காததால் கடவுசீட்டுகள் தில்லியிலேயே இருந்தது. எனவே அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவும் என்று அடியோங்களுக்கு கூறினார்கள். ஒருவரைத் தவிர அனைவரும் வாக்காள அடையாள அட்டை கொண்டு சென்றிருந்தோம். அவ்வன்பர் பெங்களூரில் இருந்து காத்மாண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரிடம் ஆதார் அட்டை மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தும் விமான நிறுவனத்தினர் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஏனென்று விசாரித்த போது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே உள்ள உடன்பாட்டின் படி விமானம் வழியாக பயணம் செய்யும் சமயம் கடவு சீட்டு அல்லது  வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே  அனுமதிக்கபட்டுள்ளது என்று  கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டனர். அவர் பின்னர் சென்னை சென்று வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வேறு விமானங்கள் வழியாக மறு நாள் காத்மாண்டு வந்து சேர்ந்தார் இதனால் சிரமமும், பண விரயமும் அவருக்கு ஏற்பட்டது. விமான சீட்டு கிடைக்காமல் போயிருந்தால் அவர் யாத்திரை வர முடியாமல் போயிருக்கலாம். திருக்கயிலை நாதரின் கருணையினால் அவ்வாறு ஏற்படவில்லை.


பெங்களூர் விமான நிலையத்தில் உடுப்பி பெஜாவர் மடாதிபதி சுவாமிகளை தரிசித்தோம். அவரிடம் யாத்திரை நல்லவிதமாக நிறைவு பெறவேண்டும் என்று ஆசியும் பெற்றோம். இச்சுவாமிகள் ஒரு சமயம் உடல் நலக்குறைவுடன் இருந்த போது கருடன் வந்து இவர் அருகில் அமர்ந்து இவரை கவனித்துக்கொண்டது.  






புத்த நீல கண்டர் - ஜல நாராயணர் 

ஜல நாராயணர் ஆலயத்தில் குழந்தைகள்

உபநயனம்



ஸ்வயம்புநாத் ஸ்தூபி


தங்கும் விடுதியின் மாடியில் 


குத்து விளக்கின் அருமையான வேலைப்பாடு 

காலை உணவு

யாத்திரையை நிறைவு செய்து  திரும்பி வந்த போது சில அன்பர்கள் கடவு சீட்டு மூலம் குடியேறல் (Immigration) செய்ய விரும்பியது போது அங்கிருந்த அதிகாரிகள் எந்த அடையாள அட்டையின் மூலம் சென்றீர்களோ அதே அடையாள அட்டையுடன்  உள்ளே வாருங்கள் என்று அறிவுறுத்தினார்கள்கடவு சீட்டு என்பது ஒரு முக்கியமான ஆவணம் அதை பொதுவாக பிறரிடம் கொடுத்தால் அவர்கள் அதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது எனவே கடவு சீட்டை மற்றவர்களிடம் கொடுக்காமல் இருப்பது உத்தமம் என்றார்கள்.  இவ்வாறு இந்த யாத்திரையின் போதும் சில பாடங்களைக் கற்றோம்வாருங்கள் இவ்வருட யாத்திரை எவ்வாறு இருந்தது என்று காணலாம் அன்பர்களே

இப்பதிவில் நேபாள தலை நகர் காத்மாண்டுவில்  யாத்திரையின் முதல் நாள் அடியோங்கள் தரிசித்த சில ஆலயங்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

No comments: