Sunday, September 14, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -17

தேவ பூமியில் அம்மையப்பரின் காலடியில்
11ம் நாள் தக்லகோட்டிலிருந்து டார்ச்சென் பேருந்து பயணம்(140 கி மீ)



முதல் நாள் அன்று கிடைத்த தரிசனம் இவ்வளவு தான்







அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்



முன்பாகி நின்ற முதலே போற்றி



மூவாத மேனிமுக் கண்ணா போற்றி



அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி



ஆறேறு சென்னி சடையாய் போற்றி



என்பாக எங்கு மணிந்தாய் போற்றி



என்சிந்தை நீங்கா விறைவா போற்றி



கண்பாவி நின்ற கனலே போற்றி



கயிலை மலையானே போற்றி போற்றி


இராக்ஷஸ் தால் ஏரிக்கரையில் எங்கள் குழுவினர்





சீனப்பகுதியின் மூன்றாம் நாள் காலை எண்தோள் வீசி நின்றாடும் பெம்மானை, காலனை காலால் உதைத்த எம்பெருமானை தரிசனம் செய்து கிரி வலம் செய்ய பேருந்து மூலம் புறப்பட்டோம். வழியிலே கர்னாலி நதியின் நடுவே உள்ள ஒரு அணையையும், அதை ஒட்டி கோதுமை பயிர்கள் விளையும் ஒரு கிராமத்தையும் கண்டோம். முன்பே கூறியது போல் பாதை முழுவதும் கற்கள் மேலும் தூசியும் மிகவும் அதிகம்.








குர்லா கணவாயை ஏறி கடந்தவுடன் அந்த தேவ பூமியை கண்ணுற்றோம், இடப்பக்கத்திலே இராக்ஷஸ்தல் ஏரி, வலப்பக்கம் மானசரோவர் ஏரி, நேரெதிரே திருக்கயிலாய மலைத்தொடர், அதில் நடுநாயகமானதும், உயர்ந்த சிகரமும் தான் கயிலாய சிகரம்.






மானசரோவரில் முதல் தீர்த்தமாடல்



மானசரோவர் தடாகம் சூரியன் மற்றும் பகலை குறிக்கின்றது என்றால், இராக்ஷஸ் தால் ஏரி சந்திரன் மற்றும் இரவைக் குறிக்கின்றது, இதன் அழகும் தனி, ஆனால் இதன் தண்ணீரை நாம் உபயோகப்படுத்துவது இல்லை. இங்கிருந்துதான் திருக்கயிலாயத்தின் முதல் தரிசனம் எல்லாருக்கும் கிடைக்கும், ஆனால் எங்களுக்கு என்ன பெரிய ஏமாற்றம் மேகங்கள், சாய விரலூன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமானுக்கும் எங்களுக்கும் இடையே நந்தி போல நின்றன. இங்கு சிறிது நேரம் நின்று பார்த்தோம் ஆனால் நிலைமை மாறவில்லை, பின் மானசரோவர் நோக்கி கிளம்பினோம்.



பின் குகூ (QUHU) என்ற முகாமில் இறங்கி, முக்தியளிக்கும் மானசரோவர் ஏரியில் குளித்தோம். அப்போது எனக்கு மானசரோவர் ஏரியிலிருந்து கணேசர் கிடைத்தார். மானசரோவர் ஏரியின் ஒவ்வோரு கல்லும் சிவலிங்கம் , எனவே எம்பெருமான் வினாயகர் வடிவில் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவே எம்பெருமானை தரிசிக்க கிடைத்த நல்ல சகுனம் என்று நினைத்துக் கொண்டேன். அடியேன் வினாயகர் சேர்க்கும் பழக்கம் உள்ளவன் என்பதால் வினாயகரே அதுவும் முதல் தடவையிலேயே கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது. திரு முட்கல் அவர்கள் எங்களை தண்ணீர் சுத்தமாக இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார் அங்கு ஒரு சிவலிங்கத்தின் ஆவுடை இருந்தது, தடாகத்திலிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வைத்து அனைவரும் மானசரோவர் தண்ணீரால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்தோம்.





இராக்ஷஸ் தால்




பின் கிரிவலத்தின் ஆதார முகாமான டார்ச்செனுக்கு (Darchen) கிளம்பினோம். செல்லும் வழியில் ஒரே ஒரு நிமிடத்திற்கு எம்பெருமானின் தரிசனம் கிடைத்தது. மாலை மூன்று மணியளவில் டார்ச்செனை ( 4890 மீ உயரம்) அடைந்தோம். டார்ச்சனைலிருந்து நாங்கள் கடந்து வந்த குர்லா மந்தாத்தா மலைத்தொடர் பனி மூடி அழகாக காட்சி அளித்தது. ஆனால் அன்று எம்பெருமானுக்கு எங்களுக்கு முழுதாக தரிசனம் தர விருப்பமில்லை, மேகங்கள் கண்ணாமூச்சி ஆடின, து‘ரத்திலிருந்து மேகங்கள் வரும் போது இடைவெளி இருக்கும் ஆஹா தரிசனம் கிடைக்கப்போகின்றது ஆவலுடன் காத்திருப்போம் திடீரென்று ஒரு காற்று அடிக்கும் பின் மேகங்கள் ஒன்று சேர்ந்து விடும், மனதுக்கு மிகவும் வேதனையா இருந்தது.





டார்ச்சன்னிலிருந்து குர்லா மாந்தாத்தா மலைத்தொடர்கள்



அந்த இறைவன் தானே கதி, எம்பெருமானே, ஆனந்த நடராஜா, தக்ஷ’ணா மூர்த்தி, நந்தி வாஹனா, நாக பூஷணா, சந்திர சேகரா, ஜடாதரா, கங்காதாரா, கௌரி மனோஹரா, கிரிஜா காந்தா சதாசிவா உனது தரிசனம் தா என்று வேண்டி அந்த எம்பெருமன் கோபத்தை தக்க ஸ்ரீ ருத்ரத்தை விட எந்த ஸ்லோகம் உயர்ந்தது எனவே ஒரு முறை ருத்ரம் பாராயணமும் செய்தேன், அதற்கு பிறகு கீழ்ப்பகுதி கண்ணில் பட்டது ஆனால் திருமுடி அன்று கண்ணில் படவே இல்லை. வெகு நேரம் சன்னலில் வீடியோ கேமராவை வைத்துக்கொண்டு காத்திருந்தோம் ஆனால் அற்புத காட்சி கிட்டவில்லை மிகவும் கனத்த இதயத்துடனும் மனதில் பிரார்த்தனையுடனும் அன்று து‘ங்கச்சென்றோம். கைலாய் மற்றும் மானசரோவர் இரண்டின் கிரிவலத்தின் போதும் டார்ச்செனில் மட்டுமே நமக்கு I.S.D வசதி உள்ளது இங்கிருந்து நமது இல்லத்தை தொடர்பு கொள்ளலாம்.








இந்த பதினொன்றாம் நாள் வெறும் ஏரிகளின் நாளாக அமைந்தது.

No comments: