Showing posts with label ஜுடுல்புக். Show all posts
Showing posts with label ஜுடுல்புக். Show all posts

Saturday, April 11, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 22

மூன்றாம் நாள் கிரி வலம் 
திருக்கயிலாய கிரி வலம் நிறைவு 

ஜுடுல்புக்கில் இளங்கோவன் ஐயா குதிரைச் சிறுவனுடன்

மூன்று நாளும் இந்தச் சிறுவன்தான் குதிரையை நடத்திக்கொண்டே கிரி வலம் வந்தான்.

கிரிவலப்பாதை

அதிகாலையிலேயே ஜுடுல்புக்கில் இருந்து புறப்பட்டோம். மூன்று நாட்களில் இன்றைய தின கிரி வலம்தான் மிகவும் எளிதானது. மேலும்    நான்காவது வணங்கிடமான  ஜாங்டோ(Zangdo) வரையே  நடை பயணம் அவசியம். அதற்குப்பின் வண்டியில் செல்லலாம் என்பதால் இன்னும் எளிதாகி விட்டது. தற்போது வண்டிகள் செல்லும் விதமாக இரட்டைப் பாதை ஆகிவிட்டது.   அதிகமாக ஏற்ற இறக்கம் இல்லாத இந்த பாதை  ஜாங் சூ ஆற்றை ஒட்டியே அமைந்துள்ளது. வழியில் எந்த வித சிரமமும் இல்லாமல் கிரி வலத்தை நிறைவு செய்தோம்.

சின்னஞ்சிறார்களும் கிரிவலம் செய்கின்றனர் 

சீன குதிரை ஆண்டு என்பதால் திபெத்தியர்கல் இந்த வருடம் மிகவும் அதிகமாகவே இருந்தனர். குடும்பம் குடும்பமாக லிரி வலம் செய்தனர். பலர் தங்களுடைய  சிறு   உறங்கும் கூடாரத்தில் (Sleeping tent)  இரவு படுத்து உறங்கிவிட்டு கிரி வலத்தை மறு நாள் தொடர்ந்தனர்.    ஒரு சிலர் அப்படியே பனி படர்ந்த தரையில் படுத்து உறங்கி விட்டு காலையில் கிரி வலம் துவங்கியதைப் பார்த்தபோது இவர்களைப் பார்த்து  ஆச்சிரியப்படாமலிருக்கவில்லை.



கிரி வலப்பாதையில்  பல இடங்களில் இது போல  மில்ரெபாவின் காலடித்தடம் கொண்ட    புனித இடங்களைப் பார்க்க முடிந்தது. அவியெல்லாம் பல வர்ண பிரார்த்தணை கொடிகளால் நிறைந்திருந்தன.   ஆனால் பெயர்ப்பலை சீன மற்றும் திபெத்திய மொழியில் இருப்பதால் சரியாக தெரியவில்லை.  கூட்டம் அதிகமானதால் குப்பையும் அதிகமால கிடந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான கேன்கள், சிப்ஸ் பாக்கட் உறைகல் என்று எங்கு நோக்கினும் குப்பை நிறைந்து கிடந்தது. ஐயா உனக்கு அப்பர் பெருமான் செய்தது போல உழவாரப்பணி யார் செய்வார்கள். யாருடைய மனதிலாவது அந்த கருத்தை ஏற்படுத்து என்று வேண்டிக்கொண்டே கிரி வலத்தை தொடர்ந்தோம்.    




"ஓம் மணி பத்மே ஹம்" என்ற வாசகங்கள் செதுக்கப்பட்ட மணி கற்கள் இந்தத் தடவை அதிகமாகவே கண்ணில் பட்டது.  ஒரு கல் தச்சர் அங்கேயே அமர்ந்து செதுக்கிக்கொண்டிருந்தார். பலர் அதை விலைக்கு வாங்கி  சமர்பித்துவிட்டு செல்வதையும் கண்டோம்.  

மணிகற்களின் அருகே அடியேன், குமாரசாமி ஐயா

நடுவே பல வண்ண மண் கொண்ட பகுதி

இவ்விடம்  டாகினிகள்  நாட்டியமாடும்  அரங்கம்  ( Dakini Dancing Ground) என்று அழைக்கப்படுகின்றது.  இங்கு மண் சிவப்பாக இருப்பதற்கான காரணம்  ஜேசர் என்னும் திபெத்திய அரசர்  ட்ராங் என்னும்  வன யாக்கை இங்கு கொன்றதால தன் இரத்தத்தினால் மண் சிவப்பாகியது என்று நம்பப்படுகின்றது. மேலும் பட்டை, கறுப்பு மண்களையும் இப்பகுதியில் காணலாம். சில பக்தர்கள் இந்த பல வண்ண மண்ணை தங்கள் இல்லம் எடுத்து செல்கின்றனர்.  



ஆற்றின் மறு கரையில்  புதுப் பாதை அமைக்கப்பட்டு வருகின்றது அதில் வண்டிகள் எளிதாக செல்ல முடியும். ஜாங் சூ ஆற்றின் இடையேயும் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பகுதியிலும் மீட்பு வண்டி, மருத்துவ வண்டி ரோந்து வந்து கொண்டிருக்கின்றது. 



குர்லா மாந்தாதா மலைச்சிகரங்கள்  இராக்ஷஸ்தால் ஏரி

இன்றைய கிரிவலத்தின் போது குர்லா மாந்தா மலைச்சிகரங்கள், இராக்ஷஸ் தால் ஏரி மற்றும் பார்க்கா சமவெளியின் அருமையான காட்சிகளை பறவைப் பார்வையாக பார்க்கும் வாய்ப்பு கிட்டுகின்றது. 

எங்களுக்காக காத்துக்கொண்டு நின்ற பைரவர்

ஐயனின் கருணையை என்னவென்று சொல்ல பைரவரின் வாகனத்தையே மூன்று நாட்களும்   எங்களுக்கு துணையாக அனுப்பிவைத்தார். பைரவரே எங்களுக்கு காவலாக வந்ததாக உணர்ந்தோம்.  முதல் நாள் கிரி வ்லத்தின் போது மேற்கு முகத்தின் அருகில் முதலில் கவனித்தோம், டேராபுக் முகாம் அடையும் சமயத்தில் கண்ணில் பட்டது. டோல்மா ஏறும் இரு முறை கண்ணில் பட்டது, டோல்மாவிலும் உடன் நின்றது, இன்றைய தினம் கண்ணில் படவில்லையே என்று நினைத்தோம். ஆனால் ஜாங்டோவில் நுழைந்த போது எங்களுக்காக காத்துக்கொண்து இருந்தது.  என்ன ஒரு அதிசயம் எங்கள் குழுவில் எழுவருக்கும் பல் வேறு சமயங்களில் காட்சி கிட்டியது. 


கிரி வலம் நிறைவு செய்த பின் ஜெகதீசன்,  அடியேன் 

இளங்கோவன், குமாரசாமி , அடியேன்

குதிரைக்காரர்களுடன் 


 இறைவன் அருள் பெற்ற எழுவர் 

 அவன் அருளால் தான் அவன் தாள் வணங்க முடியும்.    ஜெகதீசன், இளங்கோவன், குமாரசுவாமி, அடியேன், செந்தில், சேகர் -  ரேவதி  தம்பதியினர். ஆகிய எழுவர் அந்த சிவசக்தியின் அருளால் கிரி வலத்தை முழுமையாக நிறைவு செய்தோம்.  பின்னர் திபெத்திய நிறுவன பேருந்து மூலம் டார்ச்சன் அடைந்தோம்  அடுத்த பதிவில் டேராபுக்கில் இருந்து  திரும்பிச்சென்றவர்கள் பெற்ற தரிசனங்களைப் பார்ப்போம் அன்பர்களே. 

சாதிகுலம் பிறப்புஎன்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் 
ஆதம்இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு;
பேதைகுணம்; பிறர் உருவம் யான் எனதுஎன் உரை மாய்த்து
கோதுஇல் அமுது ஆனானை குலாவு தில்லை(கயிலை) கண்டேனே!

                                                                                                                                                   யாத்திரை தொடரும் . . . . . . 

Thursday, April 09, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 21

                                             இரண்டாம்  நாள் கிரி வலம்  - 2

கௌரி குளத்தின் அழகு 

டோல்மாவில் அன்னை பார்வதியை தரிசனம் செய்து விட்டு  கீழிறங்கினால் வலது பக்கம் அன்னை நீராடும் கௌரி குளத்தை தரிசனம் செய்கின்றோம். மேலிருந்து கௌரி குளத்தின் அழகை இரசிக்கின்றீர்கள் அன்பர்களே.   




டோல்மாவில் இருந்து லாம் சூ பள்ளதாக்கிற்கு இறங்கும் பாதை மிகவும் செங்குத்தானது. மேலும் பாறைகள் நிறைந்தது பார்த்துப்பார்த்து மெதுவாகத்தான் இறங்க வேண்டும் இவ்விடம் கைத்தடி மிகவும் அவசியம். சென்ற யாத்திரையின் போது பாதை முழுவதும் வழுக்கும் உறைபனி இருந்ததால் மிகவும் சிரமத்துடன்தான் இறங்கினோம். இந்த யாத்திரையின் போது பாதையில் பனியில்லாததால்    அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. 
  
டோல்மாவில் இருந்து இறக்கம் 


டோல்மாவில் இருந்து குதிரையில் இறங்குவது பாதுகாப்பானதல்ல என்பதால் யாத்திரிகளை இறங்கச்சொல்லி விட்டு அவர்கள் குதிரையை புல் மேய விட்டுவிட்டு தாங்களும் உணவு உண்டு விட்டு பின்னர்  யாத்திரிகள் கீழே இறங்கி வந்த பின் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். 


லாம் சூ சமவெளியில்  நடை பயணம் 



குதிரைக்காரர்கள் இந்தத் தடவை  மிகவும் முன்னேறி விட்டனர். ஹிந்தியில் பேசுகின்றனர் நாம் சொல்வதை புரிந்து கொள்கின்றனர். செல்போன் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டும், பாட்டு கேட்டுக்கொண்டும் வருகின்றனர். வழியில் செல்பவர்களுக்கும் உதவ முன் வருகின்றனர்.   ஒரு  திபெத்தியப்பெண் எதோ உதவி கேட்க அடியேனிடம் தலைவலி மாத்திரை உள்ளாதா ?என்று கேட்டு வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுத்து உதவினார். 


பறவைப்பார்வையில் சமவெளி

குமாரசுவாமி ஐயா போர்ட்டர்களுடன் 

      
 நந்தியெம்பெருமான் தரிசனம் 

லாம் சூ சமவெளியில் இறங்கிய பின் பாதை சமதளம்தான் அதிக ஏற்ற இறக்கங்கள் கிடையாது. இரு பக்கமும் நெடிதுயர்ந்த மலைகள் ஆற்றை ஒட்டிய பாதை சில இடங்களில் பனியிலும் நடக்க வேண்டி வரலாம். ஆனால் பாதைதான் சுமார் 8 கி.மீ  தூரம். அதுவும் டோல்மா ஏறி இறங்கியபின் இந்த தூரம் அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்வது போல தோன்றுகின்றது.   ஆனால் மிகவும் கடினமான டோல்மா ஏற்றத்தை கடந்து வந்து விட்டதால் இது அவ்வளவு சிரமமானதாக தோன்றாது.  இப்பகுதியில் நமக்கு திருக்கயிலாயத்தின் தரிசனம் கிட்டுவதில்லை ஆனால் நந்தியெம்பெருமானின் பக்கவாட்டு தரிசனம் கிட்டுகின்றது.   

வழியில் சூரிய மின்சார தகடுகள் மற்றும் செல்போன் ஆன்டனாக்கள்

ஒரு அருவியின் தடம் 

                                                ஜுடுல்புக் முகாம் 


பான்போக்களின் குருவுடன் மில்ரெபா போட்டியிட்ட போது மில்ரெபா   திருக்கயிலாயத்தை வலம் வந்தார், நாரோ இடம் வந்தார் இருவரும் இங்கு சந்தித்துக்கொண்டனர். பெரு மழை பெய்தது அப்போது மில்ரெபா ஒரு பெரிய பாறையை உயர்த்தி குடையாக பிடித்தார். இவ்வாறு மில்ரெபா அதிசயம் நிகழ்த்திய  இடம் என்பதால் அதிசய குகை என்றழைக்கப்படுகின்றது. எழுவரும் எந்தவித சிரமமும் இல்லாமல் ஜுடுல்புக் முகாமை அடைந்தோம். இன்னொரு குழுவினருடன் உணவு, அறை ஆகியவற்றை பகிர்ந்து கொண்டோம். மிகவும் அவசியமான ஓய்வெடுத்தோம்.  இவ்வாறாக இரண்டாவது நாள் கிரி வலம் சிவசக்தியின் அருளால் சுபமாக அமைந்தது. 

கல்லாத புலறிவில் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் ஆய்வந்து வனப்புஎய்தி இருக்கும் வண்ணம் 
பல்லோரும் காணஎன்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே (கயிலை மலையில்) கண்டேனே! 

                                                                                                                                                         யாத்திரை தொடரும் . . . . . . 


Tuesday, August 06, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -39 (திருக்கயிலாய யாத்திரை-2012)

லாங் சூ சமவெளியில் நடைபயணம்

டோல்மாவில் இருந்து இறங்கிய பின்
லாங் சூ  சமவெளியில் நீண்ட நடை பயணம்


அமீத் அஹர்வால் ஹிமான்சு




மலைகளிலும் சுற்றுப்புறங்களிலும் பனி 
ஆனால் பாதையில் பனி இல்லை


நீண்ட நடைப் பயணம்- மெதுவாக நடந்தோம்


நந்தியெபெருமானின் அற்புத தரிசனம்
(பக்கவாட்டுத் தோற்றம்)



அற்புதமாக நந்தி தரிசனம்


நெடுந்தூரப் பயணம் என்பதால் 
இடையில் சிறிது நேரம் ஓய்வு

நடுநடுவே கூடாரங்கள் ஜாங்ஜர்பூதான் வந்து விட்டதோ? என்று ஒரு சந்தேகம்
 இல்லை இன்னும் சிறிது தூரம்தான் என்று இன்னும் நடை


உறைந்து போன ஒர் அருவி

இன்னும் நடைப் பயணம் தொடர்கின்றது..................




வழியில் மலை சிகரங்களின் பல முகங்கள்




ஜாங்ஜர்பூ கூடாரத்தின் பரிதாப  நிலைமை





டேராப்புக்கில் ஐயனின் வெண் பனி படர்ந்த  வடக்கு  முக அற்புத தரிசனம், டோல்மாவில் அம்மையின் ஆனந்த தரிசனம், கௌரி குளத்தின் அருகாமை தரிசனம் முடித்து சிவசக்தியின் மாப்பெரும் கருணையினால் வெண் பனி படர்ந்திருந்த வழுக்கலான மலையில் இறங்கி,  சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு லாம் சூ சமவெளியில் நடக்க ஆரம்பித்தோம். சுமார் ஒரு கி.மீ தூரம் வரை இரு பக்கமும் பனி இருந்தது பின்னர் பனி உருகி விட்டிருந்தது. இப்பாதையும் இரு வழிப் பாதையாகி விட்டது.  நடுவில் பாயும் பனி ஆறுகள் எல்லாம் உறைந்து கிடந்தது. செல்லும் போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டே எங்களுக்கு எதிராக சென்றது. பின்னர் விசாரித்த போது ஒரு ஜெர்மன் பெண் யாத்திரி கீழே விழுந்து எலும்பை முறித்துக் கொண்டார் அவரை கொண்டு செல்லவே ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது என்று தெரிய வந்தது. மெதுவாக நடு நடுவே சிறிது சிறிதாக சுடு நீர் அருந்திக்கொண்டு, எதையாவது கொறித்துக்கொண்டு மெல்ல மெல்ல முன்னேறினோம். முடிந்த வரை உட்காராமல் மெதுவாக நடப்பதே உத்தமமானது. சென்ற தடவை தரிசிக்காமல் விட்டுப் போன "நந்தி தரிசனம்" இந்தத் தடவை அற்புதமாக கிட்டியது, மிக்க மனமகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு  மெதுவாக நடை போட்டுக் கொண்டே முன்னேறினோம்.

ஒன்றிரண்டு கூடாரங்கள் கண்ணில் பட்டது ஒரு நிமிடம் ஜுடுல்புக்தான் (ஜாங் ஜர்பூ) வந்து விட்டதோ என்று மனதில் ஆனந்தம் தோன்றியது ஆனால் அருகில் புத்த விகாரம் எதுவும் இல்லாததால் அது அல்ல என்று புரிந்தது. சப்ஜே  த்ராக்தோக் (Shabje Drakthok)  என்று நடுவில் உள்ள ஓர் இடத்தில்  டோல்மாவிலிருந்து இறங்கி வருபவர்கள் இளைப்பாறுவதற்காக இந்த கூடாரங்களை அமைத்துள்ளனர்,  பல திபெத்திய போர்ட்டர்கள் இங்கு உணவருந்தினர். எங்கள் போர்ட்டர் சிறுவன் ஒரு பெப்ஸி கேன் வாங்கித் தருமாறு கேட்டான் வாங்கிக் கொடுத்தேன். தன் தோளிலேயே எப்போதும் அணிந்திருக்கும் பையை திறந்து அதில் ஒரு துணியில் சுற்றி வைத்திருந்த எதோ ஒன்றை சிறிது சிறிதாக அறுத்து சாப்பிட்டான்.  அதன் நடுவே ஓடிய எலும்பிலிருந்து அது அநேகமாக செம்மறி ஆட்டுக் கறி என்று யூகித்துக்கொண்டேன் அப்படியே பச்சையாகவே சாப்பிட்டான். அவனுடன்தான் பேச முடியாதே எல்லாம் சைகை பாஷை தான். சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொண்டு, பின்னர் ஃபிளாஸ்கில் சுடு தண்ணீர் நிரப்பிக் கொண்டு நடைப்பயணத்தை தொடர்ந்தோம். பாதை அனுமார் வால் போல பாதை நீண்டு கொண்டே சென்றது, கால்கள் கெஞ்சின, மூச்சு விடவும் சிரமமானது,  நேரம் செல்ல செல்ல நடப்பது மிகவும் சிரமமாகி விட்டது. ஆனாலும் அந்த முக்கண் முதல்வனின் அருளால், அவன் அளித்த சக்தியால் நடந்து வந்து ஜுடுல்புக் வந்தடைந்தோம். இன்றைய தினம் புறப்பட்ட அனைவரும் சேமமாக வந்து சேர்ந்தோம். இவ்வாறு சிவசக்தியின் அருளினால் சங்கல்பித்துகொண்டு புறபட்ட அனைவரும் வெற்றிகரமாக டோல்மாவை கடந்தோம்.

இங்கு சேர்ப்பாக்கள் வண்டி வழியாக முதலிலேயே அங்கு வந்து தங்கியிருந்தனர். இங்கு அவர்களால் இரு கூடாரங்களை மட்டுமே  தங்குவதற்காக ஏற்பாடு செய்ய முடிந்தது. அதிலும் படுக்கை கீழேதான் இந்த வசதியின்மையைப் பார்த்து  எங்கள் குழுவினரில் பலருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடியேன் சென்ற தடவை இது போலத்தான் தங்கினேன் என்று கூறினேன், டில்லியில் மண் வீடுகளில் தங்க வைப்பதாக கூறினார்கள் இவ்வாறு ஏமாற்றி விட்டனரே என்று குறைப்பட்டுக்கொண்டனர்.


மலை ஏறி, இறங்கி, நெடுந்தூரம் நடந்த வந்த களைப்பினால் கால் வலித்தது தைலம் தடவிக்கொண்டு இரண்டு கப் சூப் மட்டும் குடித்து விட்டு (வேறு எதுவும் சாப்பிட மனமில்லை) கம்பளிககுள் நுழைந்த மாயம் உறக்கம் வந்து விட்டது, காலையில் எழுந்த போதுதான் மற்றவர்கள் யாக் கட்டியிருந்த கூடாரத்தில் படுக்கைகளைப் போட்டு நம்மை தங்க வைத்து விட்டனர். இரவு முழுவது விசு விசு என்று குளிர் காற்று அடித்துக்கொண்டிருந்தது என்றனர். அடியேனுக்கு ஒன்று தெரியவில்லை. “மாவுக்கேற்ற பணியாரம்”  என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. நாம் குறைவாக கட்டணம் செலுத்தியதால் இவ்வாறு செய்தார்களோ என்ற ஐயம் இருந்தது. உண்மையை அந்த இறைவனே அறிவார். பல அன்பர்கள் அடியேனிடம் கூறியபடி இவ்வழி செல்லும் போது இந்த சுற்றுலா அமைப்பாளர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது நன்றாக புரிந்தது. எவ்விதத்திலோ இவர்கள் யாத்திரிகளை நிச்சயமாக ஏமாற்றுகின்றனர் என்பது மட்டும் உண்மை.  இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் இந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது நமக்கு எல்லா வசதிகளும் கிட்டாது,  கிடைக்கின்றதை ஏற்றுக்கொண்டுதான் யாத்திரையை முடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செல்வது உத்தமம். ஒன்று மட்டும் நிச்சயம் சீனபகுதியில் தங்கும் வசதிகள் மேம்பட்டிருக்கின்றன இன்னும் மேம்படும் என்பது உண்மை.  இவ்வாறு அந்த அம்மையப்பரின் மாப்பெரும் கருணையினால்  மிகவும் கடினமான இரண்டாம் நாள் கிரி வலமும் நந்தியெம்பெருமானின் தரிசனத்துடன் சிறப்பாக அமைந்தது.