த்ரிபுராந்தகனை, த்ரியம்பகனை, த்ரிசூலதாரியை தரிசிக்க நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட யாத்திரிகள் யாத்திரையின் ஐந்தாம் நாள் 12-05-11 அவர்கள் எதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டார்களே அந்த நோக்கத்தை அடைந்தனர் . ஆம் அன்றைய தினம் அவர்களுக்கு மான் மழு ஏந்தும் மாப்பெரும் கருணையனின் முதல் தரிசனம் கிட்டியது. மேலும் அன்றைய தினம் அவர்கள் புனித மானசரோவரிலும் நீராடினர்.
உறைந்து கிடக்கும் பிரம்மபுத்திரா நதி
காலையில் தோங்பாவிலிருந்து புறப்பட்டு மதியம் பிரம்மபுத்திரா நதியை அடைந்தனர், மே மாதம் என்பதால் நதி இன்னும் உருக ஆரம்பிக்கவில்லை அப்படியே பனியாகவே இருந்தது. இங்கு மதிய உணவு உண்டு பின்னர் மானசரோவர் ஏரிக்கு புறப்பட்டனர்.
திருக்கயிலாயத்தின் முதல் தரிசனம்
எவ்வளவோ புண்ணியம் செய்தவர்கள் இவர்கள் மானசரோவர் கரையை அடைந்தவுடனே பொன் பொதி மத்த மாலை புனல் சூடும் மாதொரு பாகரின் தரிசனம் இவர்களுக்கு கிட்டியது. ஆனந்தத்தால் அவர்கள் சிவசக்திக்கு ஆயிரம் கோடி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ஆனந்தத்தில் யாத்ரிகள்
பொன்னார் மேனியன், வரிப்புலித் தோலை இடையில் கட்டியவன், மின்னார் செஞ்சடையில் கொன்றை அணிந்த சிவபெருமானின் தரிசனம் கண்டு களிக்கும் அன்பர்கள்.
கௌரி சங்கர்
மானசரோவர் ஏரி பிரம்மா தனது மனதில் இன்று தோற்றுவித்தது. மிகவும் புனிதமான ஏரி. இதன் தீர்த்தம் நம் உடலில் பட நாம் பல ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். மானசரோவர் ஒரு சக்தி பீடமும் மற்றும் வைணவர்களின் ஒரு திவ்ய தேசமும் ஆகும். ஆகவே திருக்கயிலாயமும், மானசரோவரும் இனைந்த இந்த காட்சியை கௌரி சங்கர் என்று அழைக்கின்றனர்.
சீனா முழுவதும் இப்போது சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. இந்த தார் சாலை அதற்கு சான்று, முன் போல எலும்புகள் குலுங்கும் வண்ணம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மானசரோவரில் புனித நீராட செல்லும் பக்தர்கள்