Saturday, June 22, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -33 (திருக்கயிலாய யாத்திரை-2012)

முதல் நாள் கிரிவலம் -2

மேற்கு முக தரிசனம்- பனிபொழிவில் கிரிவலம் 

ஐயனின் சத்யோஜாத முக (மேற்கு) தரிசனம்

இவ்வருடம் கிட்டிய தரிசனம்

மேலே செல்ல செல்ல .........
(யக்யாங் பாண்டே)

மலைகள் எல்லாம் வெள்ளி கவசம் பூண்டிருந்தன
(அடியேன், நிஷா பாண்டே ......)

கால்கள் கெஞ்சுகின்றன......
( மற்றும் அமீத்  அஹர்வால்,  சுஜாய் ஹஜ்ரா)

மஞ்சு தோயும் குடுமிகள் - பனி படர்ந்த மலை சிகரங்கள்

மலையுச்சியில் மட்டுமா பனி????

தரையெங்கும் மஞ்சு படர்ந்திருந்தது

இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது....

பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது

பனிப்பொழிவிலேயே நடந்து இரண்டாம் வணங்கிடத்தை அடைந்தோம்

 கீழே உள்ள வரை படத்தில் Second Prostration point,  Kailash view, Rock associated with  Mahakhal  என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்.  மேற்கு முக தரிசனம் முழுதுமாக கிட்டவில்லை, மேகங்கள் சூழ்ந்து கொண்டன, நடுவில் உள்ள வளையங்கள்  பனியால் நிறைந்து  மலை மகளின் திருக்கர வளையல்கள் போல தரிசனம் தந்தன, மற்றும்  நந்தி தரிசனம் மட்டும் ஸ்பஷ்டமாக கிட்டியது. அருகில் இருந்த கூடாரத்தில் தேநீர் அருந்தி, சுடு தண்ணீர் நிரப்பிகொண்டு பனிப்பொழிவு நின்றபின் கிரி வலத்தை தொடர்ந்தோம்

 திருக்கயிலாய கிரிவலப்பாதை வரை படம்

மேற்கு முகத்தின் கீழ்ப்பகுதி


கிரிவலப் பாதையெங்கும் பனி நிறைந்து விட்டது 
(பங்கஜ் குப்தா)


பனியிலேயே நடந்தோம்
(விஜய் குமார், ரஷ்மி மஹாஜன் தம்பதியினர்)

ஸ்பஷ்டமான மேற்கு முக நந்தி தரிசனம்

முதல் நாள் கிரி வலத்தின் போது நாம் ஐயனின் நான்கு முகங்களையும் தரிசனம் செய்கின்றோம். டார்ச்சனில் கிளம்பும் போது தெற்கு முகத்தின் திருமுடியையும், கிழக்கு முகத்தையும் தரிசனம் செய்கின்றோம், பின்னர் யம துவாரத்தில் இருந்து கணேசர், நந்தி, ஐயனின் முழு தெற்கு முகத்தையும் தரிசனம் செய்கின்றோம்.  பின்னர் கிரி வலம் செய்யும் போது மேற்கு முகத்தையும், பின்னர் மேற்கு மற்றும் வடக்கு இரண்டு முகங்களையும் இனைத்து தரிசனம் செய்கின்றோம். முதல் நாள் வடக்கு முகத்தின் திருவடியில் தங்குகின்றோம். 

இரண்டாம் நாள் காலை வடக்கு முகம் மற்றும் கிழக்கு முகத்தின் ஒரு பகுதி மற்றும் அதன் நீட்சி மற்றும் டோல்மா கணவாயில் பார்வதி தேவி மற்றும்   அன்னை மலைமகள் கௌரி புனலாடிய கௌரி குளம் மற்றும் நந்தியெம்பெருமானின் ஒரு பகுதியை தரிசனம் செய்கின்றோம். 

மீண்டும் மூன்றாம் நாள் தெற்கு முகத்தின் முழு தரிசனம் மற்றும் கிழக்கு முகத்தின் நீட்சியையும் தரிசனம் செய்யலாம். அஷ்டபத் சென்றால் ஐயனின் தெற்கு முகத்தின் முழு தரிசனத்தையும் நந்தியெம்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.


மேற்கு முகம் மற்றும் வடக்கு முக தரிசனம் 

 முதல் தனி வடக்கு முக தரிசனம்





திருக்கயிலாய காப்பு மலை காட்டும் பல்வேறு முகங்களை பார்த்துக்கொண்டே  லா சூ சமவெளியில் மனதில் ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டே மெல்ல மெல்ல மலையேறினோம். சில அன்பர்கள் தேவார திருவாசகம் ஓதிக் கொண்டே எங்களை கடந்து சென்றனர். பாண்டியனாய் வந்து தமிழ் வளர்த்த தென் பாண்டி நாட்டானின் திருமுன் சுந்தரத் தமிழ் பதிகம் கேட்டது காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. இன்றைய தின ஏற்றம் அவ்வளவு செங்குத்தானது அல்ல என்பதால் மிகவும் சிரமம் இருக்கவில்லை. இரு பக்கமும் மலைகள்| முழுவதும் வெள்ளிப் போர்வை போர்த்திக்கொண்டது போல பனியால் மூடப்பட்டிருந்தன. சிறிது தூரம் சென்ற பிறது பாதையின் இரு புறமும் பனி படர்ந்திருந்ததைப் பார்த்தோம்  இனியும் மலை உச்சிகளில் பனி முழுவதுமாக உருகவில்லை மற்றும் பனிப்பொழிவும் தொடர்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.

இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் சென்றிருப்போம் திடீரென்று கரங்களில் ஒரு திடீர் சிலிர்ப்பு என்ன என்று பார்த்தால் ஒரு பனித் துளி. பார்த்தால்  பனிப் பொழிவு ஆரம்பித்து விட்டது. முதலில் சிறு துகள்களாக இருந்தது போகப் போக பெரிதாக விழுந்தது. உடனே அனைவரும் மழைக் கோட், கையுறையை  எடுத்து மாட்டிக் கொண்டோம். இந்த இடத்தில் எங்கும் ஓடி ஒளியவும் முடியாதே அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, மாணிக்க வாசகர் பாடியபடி உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அவர் பதமலர் பணிந்து முன்னேறினோம். தானே அழைத்து தரிசனம் அளித்த அந்த தயாபரனின்  கருணையினால் காற்றின் திசை எங்களுக்கு பின் புறமாக இருந்ததால் அதிக சிரமம் இருக்கவில்லை. முகத்தில் பனி விழுந்திருந்தால் நடைப்பயணம் மிகவும் கடினமாகியிருக்கும். அந்த பனி மழையில் அவன் திருப்புகழ் பாடிக்கொண்டே நடந்தோம். மழைக் கோட்டில் பனி படிவதால் எடை அதிகமாகி விடும், எனவே படியும் பனியை பத்து நிமிடத்திற்கு ஒரு முறை உதறி விட்டுக்கொண்டே மெல்ல மெல்ல முன்னேறினோம். கையில் கம்பளி உறை அணிந்திருந்த போதும் எப்போதாவது ஒரு சிறு பனித் துளி அதன் மேல் விழுந்தால் கூட உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு ஏற்பட்டது. கையுறை இருந்தும் கூட இவ்வாறு இருந்தது கையுறை இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் சிரமமாக போயிருக்கும். கையுறைகளின் முக்கியத்துவம் விளங்கியது. இந்த உயர்மட்டத்தில் எப்போது சீதோஷ்ணம் மாறும் என்பது சொல்ல முடியாது.

இப்பகுதியில் பெய்கின்ற மழையே இந்தப் பனிப்பொழிவு. வெப்பம் மிகவும் குறைவு என்பதால் அது பனியாக மாறிப் பொழிகின்றது. சிறிது நேரம் சென்ற பின் பாதையில் பல  அன்பர்கள் பனியில் நடந்து செல்வதால் ஈரமாகி விட்டது ஒவ்வொரு அடியாக பார்த்து வைத்துத்தான் செல்ல வேண்டி வந்தது. ஈர்த்தென்னை ஆட்கொண்ட பெருமானே உன்னை நம்பித்தான் வந்தோம் எங்களை கரையேற்றுவது உன் பொறுப்பு என்று அவரிடமே சரணமடைந்து விட்டு எந்த கவலையும் இல்லாமல் ஒவ்வொரு அடிக்கும் சிவாயநம கூறிக்கொண்டே மெதுவாக  கைத்தடியின் துணையுடன் ஊர்ந்தோம்.

இவ்வாறு நடந்து கொண்டிருந்த போது நடுவில் சில கூடாரங்கள் கண்ணில் பட்டன.  இரண்டாம் வணங்கிடம் (Second Prostration Point) அதாவது சத்யோஜாத  முகம்  என்னும் மேற்கு முகத்தை அடைந்து விட்டோம் என்பது புரிந்தது. ஐயனை முதலில் தரிசனம் செய்தோம் மேக மூட்டம் மேலும் பனியால் நிறைந்திருந்ததால் கீழ்ப்பகுதி தரிசனம் மட்டுமே கிட்டியது. அதுவும் நடுவில் உள்ள வளையங்கள் எல்லாம் பனியால் நிறைந்து அம்மை சிவகாம சுந்தரியின் திருகரங்களில் உள்ள வளையல்கள் போல தோற்றமளித்தது. மாணிக்க வாசகரின்  "பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய் வளை தன் பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்" என்னும் திருவெம்பாவை பதிகம்பாடி சிவசக்தியை வணங்கினோம். ஐயனை கொண்டல்கள் கூடி மறைத்துக் கொண்டிருக்க, மேகங்களின் வெள்ளிப் பின்னணியில் கருப்பு நிற நந்தியெம்பெருமானை அற்புதமாக தரிசனம் செய்து சிவனாரை என்றைக்கும் சுமக்கும்  நந்தி தேவரை ஞான முதல்வனை வணங்கினோம்.

பின்னர் கூடாரத்திற்குள் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு தேநீர் அருந்தி விட்டு பிளாஸ்க்கில் சுடு தண்ணீர் நிரப்பிக்கொண்டு(ஒரு flaskகிற்கு ஒரு யுவான்) பனிப்பொழிவு சிறிது மட்டுப்படுவதற்காக காத்திருந்தோம். இங்கேயும் கவனித்தோம் புது மண் வீடுகள் மற்றும் இவர்கள் பாணி கழிவறைகள் அமைத்துள்ளனர். கூடாரங்கள் எல்லாம் நிறைந்து வழிந்தது. ஐயனின் கருணையினால் பனிப்பொழிவு சிறிது நேரத்தில்  நின்றது. உடனே வெளியே வந்து கிரி வலத்தை மறுபடியும் துவக்கினோம். 

நாம் பனியையே பார்த்ததில்லை, ஆயினும் இன்றைய தினம் மழை பெய்வது போல பனிப்பொழிவில் கிரி வலம் செய்யும் போது ஐயனை தரிசனம் செய்யும் அற்புத அனுபவம் அவனருளால் கிட்டியது. இனி டேராபுக் சென்ற பின் வடக்கு முக தரிசனம் எவ்வாறு கிட்டியது என்பதைக் காண கட்டாயம் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

Kailash Manasarovar Yatra -2012 - 32

First Day's Parikrama

Grand Darshan of Akor(South) face of Lord from Yamdwar

The flag post near south face
( This flag post is replaced during  Saga Dawa festval)

Yamadwar

We were late due  to our visit to Asthapad so as suggested by our  Sherpas we proceeded directly skipping yamdwar. These are some of the snaps taken near yamdwar during my last yatra.


Start of Parikrama

( Mukherjee, Suthar, Mahajan, Himansu, Sherpa  Ranjith, Gupta)

Babu,  Porter, Murugan

 Rashmi, Pankaj Gupta

Yagyang Pandey





The weather was  clear when we commenced  the parikrama

 Goyal couple on parikrama route

Frozen water fall

 Parikrama route





 Rest in between
 Waiting for others 

La Chu River (Indus)


After a satisfying darshan at Asthapad, we returned to Darchen, made our shoulder bag ready with snacks, glucose, hot water flask, rain coat, and pooja items and took  our walking stick and left for circumambulation of Holy Kailash. By His grace all the impediments like whether permission will be given and  dilemma whether to undertake the parikrama or not  were  removed and we were ready for parikrama.   As it was already noon  and that day's parikrama  has to be complete we skipped Yamdwar and directly reached   Tarboche from where the Parikrama starts. There ponies and porters were available no body opted for pony that day, some us only hired porter and praying to Shivasakthi we commenced our much awaited parikrama. For lunch we were provided with samosa, apple, frooti juice and kitkat. So it is always better to carry our own snacks during kora.

Darchen is at an altitude of 4575 m and Deraphuk which is our destination is 5150 m and the distance of the trek is about 13 Km, the ascent is gentle almost plain. So we proceeded slowly and steadily enjoying the mountains and the frozen La Chu River. As it was the beginning of the season there were many pilgrims from all parts of the world and one never felt lonely as it was last time.

We noticed many improvements this time, there are signs that tha  kora path is being developed into a good   road so that vehicles can ply upto Deraphuk, earlier it was a foot path now it has been  widened to double path. Also there are many name boards at important places but now it is in Chinese only, they  have built their own style toilets at vantage points. Slowly one day it may be possible for one to complete the parikrama by a vehicle,  but they will miss the thrill of trekking in the beautiful conditions. 

When we commenced our Holy circumambulation of the Mount Kailash the weather was clear  after about one hour of trekking suddenly it started snowing.  At first it was just a drizzle but it intensified and it became a fall. Normally in the higher reached because of colder climate rain becomes snow. undeterred we proceeded further praying to the Lord  to take care of us. 

Please wait for the next post to know about what happened later.

கயிலை மலையானே போற்றி! போற்றி! -32 (திருக்கயிலாய யாத்திரை-2012)

 முதல் நாள் கிரி வலம் 

 யமதுவாரத்திலிருந்து ஐயனின் தெற்கு முகம்

சாகா தாவா பண்டிகையின் போது மாற்றப்படும் கொடிமரம்

யமதுவாரம்

 அஷ்டபத் சென்றதால் கிரி வலத்தை  சமயத்தில் முடிக்க வேண்டுமே என்று நாங்கள் யமதுவாரம் செல்லவில்லை. மேலே உள்ள படங்கள் அகோர முகம் என்னும் ஐயனின் தெற்கு முகம் மற்றும் யமத்துவாரம். இவை 2005 யாத்திரையின் போது எடுத்த படங்கள். இனி வருபவை இந்த வருடத்திய படங்கள்.


கிரி வலத்தை தொடங்குகின்றோம்

(முகர்ஜி, சுதார்,மஹாஜன்,ஹிமான்சு,  சேர்ப்பா ரஞ்சித், குப்தா)

பாபு, போர்ட்டர் சிறுவன், அடியேன்

 ரஷ்மி, பங்கஜ் குப்தா
(படத்தை பெரிது படுத்தினால் லாரி செல்வதை காணலாம்)


யக்யாங் பாண்டே




கிரி வலம் ஆரம்பித்த போது இருந்த சூழ்நிலை 

 கிரி வலப் பாதையில் கோயல் தம்பதியினர்

வழியில் ஒரு நீர் வீழ்ச்சி உறைந்து  இருக்கும் காட்சி 

 கிரி வலப் பாதை


ஆனந்தமாக கிரி வலம் வருகின்றோம் 


 நடுவில் சிறிது நேரம் ஓய்வு
 மற்றவர்களுகாக காத்திருக்கின்றோம்


லா  சூ ஆறு

டார்ச்சன் திரும்பி வந்து கிரி வலத்திற்கு வேண்டிய நொறுக்குத் தீனி, குளுகோஸ், சுடு தண்ணீர் கொண்டு செல்ல பிளாஸ்க் மற்றும் மழைக் கோட் ஆகியவற்றை அவர்கள் கொடுத்த தோளில் மாட்டக்கூடிய தண்ணீர் புகாத பையில் போட்டு  எடுத்துக் கொண்டு பேருந்து மூலமாக டார்போசே வந்து சேர்ந்தோம். மதிய உணவிற்காக பொன் வைத்த இடத்தில் பூ வைப்பது போல ஒரு சமோசா, ஒரு Frooti மற்றும் ஒரு kitkat, மற்றும் ஒரு ஆப்பிள் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கையில் கொடுத்து விட்டனர்.

 கிரிவலம் செய்ய அனுமதி கிடைக்குமா என்பதே முதலில் சந்தேகமாக இருந்தது,  அனுமதி கிட்டியபின் பனி பெய்ததால் குழப்பம் என்று எல்லாம் நீங்கி சூரியனைக் கண்டால் பனி மறைவது போல அவர் தாள் பணிந்து புறப்பட்டால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று கிரிவலம் ஆரம்பிக்கும் இடத்தை அடைந்தோம். அஷ்டபத் சென்றதனால் கால தாமதம் ஆகி விட்ட காரணத்தால் யமதுவாரம் செல்லமுடியவில்லை. அங்கிருந்து கிடைக்கும் தென்முக தரிசனம் கிட்டவில்லை. யமதுவாரம் தாண்டி சிறிது தூரத்தில் உள்ள கிரி வலம் ஆரம்பிக்கும் இடத்திற்கு நேராக  பஸ் மூலமாகவே சென்று விட்டோம். சாகா தாவா பார்க்கலாம் என்று நினைத்திருந்தோம் ஆயினும் கொடி மரத்தைக் கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று ஐயனின் பதமலர்களுக்கு வாழ்த்துப்பாடி,கிரி வலத்தை வெற்றி கரமாக முடிக்க வேண்டிக் கொண்டு மதிய நேரத்தில் நடைப்பயணமாக முதல் நாள் கிரி வலத்தை துவக்கினோம். இன்றைய தினம் யாரும் குதிரையை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவில்லை, அடியேன் உட்பட சிலர் மட்டும் போர்ட்டர்களை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம். 

இன்றைய தின கிரி வலத்தின் போது இரண்டு முன்னேற்றங்களை கவனித்தோம் முதலாவது கிரிவலப் பாதை இரட்டைப் பாதை ஆகி விட்டிருந்தது. வழியெங்கும் எண்ணெற்ற பக்தர்கள். கூட்டம் அதிகமாகவே இருந்தது. பல பல வண்ண கோட்களில், தமிழர்கள், தெலுங்கர்கள் திபெத்தியர்கள் வட நாட்டினர் சீனர்கள், ஜப்பானியர்கள் ஐரோப்பியர்கள் என்று பல தரப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் திருக்கயிலாயம் என்னும் மலரை சுற்றி வரும் காட்சி அருமை. வழியில் அங்கங்கே அறிவிப்புப் பலகைகள் அமைத்துள்ளனர் ஆனால் இங்கு ஆங்கிலத்தில் இல்லை . லா சூ ஆறு முழுவதும் உறைந்தே காணப்பட்டது. திருக்கயிலாய காப்பு மலை காட்டும் பல்வேறு முகங்களை பார்த்துக்கொண்டே லா  சூ  சமவெளியில் மனதில் ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டே மெல்ல மெல்ல மலையேறினோம். சில அன்பர்கள் தேவார திருவாசகம் ஓதிக்கொண்டே எங்களை கடந்து சென்றனர். பாண்டியனாய் வந்து தமிழ் வளர்த்த தென் பாண்டி நாட்டானின் திருமுன் சுந்தரத் தமிழ் பதிகம் கேட்டது காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. இன்றைய தின ஏற்றம் அவ்வளவு செங்குத்தானது அல்ல என்பதால் மிகவும் சிரமம் இருக்கவில்லை.

இன்றைய கிரி வலத்தின் போதும் ஒரு அற்புத அனுபவம் கிட்டியது அது என்னவென்று அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை காத்திருங்கள் அன்பர்களே.