Saturday, June 15, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -27 (திருக்கயிலாய யாத்திரை-2012)


மானசரோவரின் கரையிலிருந்து

தூரப்பார்வையில் திருக்கைலாயம்


விடுதியிலிருந்து திருக்கயிலாய தரிசனம்




மானசரோவரிலிருந்து திருக்கயிலாய தரிசனம்


மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை
வணங்கி நிற்கும் கோயல் குடும்பத்தினர்
                           ( அனில், உமா, ஹர்சித்)



மானசரோவரைப் பற்றிய அறிவிப்புப் பலகை

விடுதியின் முன்னர் குளிருக்காக வெயில் காய்கிறோம்
யஞ்யாங் பாண்டே, நிஷா பாண்டே ( சகோதர சகோதரிகள்)
எடி அஹர்வால் சுவாதி அஹர்வால்
சந்தோஷ் கானி

சுதார், புனிதா, சதீஷ், அடியேன்

நிழல் புகைப்படம்

திபெத்திய குழந்தையுடன் நிஷா பாண்டே



அறையில் பிரதீப் குமார் குப்தா மற்றும் சேர்ப்பா சோனம்

யஞ்யாங், நிஷா பாண்டே

மானசரோவர் விடுதியில் தற்போது Inverter அமைத்துள்ளனர்

 கரையிலும் ........

தடாகத்திலும் பறவைகள் கூட்டம் 


நாங்கள் தங்கிய விடுதி.
  பின் புலத்தில் சியூ கோம்பா

 மகேந்திர குமார் புனிதா தம்பதிகள்

திபெத்தியரின் மண் வீட்டின் உட்புறம்
( சுவர்கள், சட்டங்கள், சோஃபாக்கள் எல்லாம் ஒரே வர்ண மயம்தான்) 

 திபெத்திய குடும்பத்தினருடன்   பங்கஜ் குப்தா
(அவர்களின் சமையலறையில்)

ஆனந்தமாக ஆடும் அஜய் குமார் கௌசிக் 

பாறைகளைக் கொண்டே அமைத்துள்ள பிரார்த்தனை வீடு

இந்த யாத்திரையின் போது சென்ற யாத்திரையின் போது கிடைக்காத இன்னொரு அருமையான தரிசனம் கிட்டியது, அதுதான் முழுமதி நாளில் மானசரோவரின் கரையில் தங்கும் வாய்ப்பு. மாலை அந்தி சாயும் நேரத்தில் மானசரோவரின் குஹூ(Khihu-சியூ) புத்த விகாரத்தின் அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வந்து தங்கினோம். சென்ற தடவை நான்கு தங்கும் விடுதிகள்தான் இருந்தன. ஆனால் 7 வருடங்கள் கழித்து இப்போது சுமார் 20 விடுதிகள் உள்ளன. மேலும் கூடாரம் அமைத்துக் கொண்டு தங்கும் குழுவினரும் பலர் இருந்தனர். இதன் மூலம் திருக்கயிலாயம் செல்லும் யாத்திரிகள் வருடா வருடம் அதிகமாகிக்கொண்டு வருகின்றது என்பது கண்கூடு. ஆதவன் மறையும் வேளையில் மானசரோவரின் அழகை இரசித்தோம். எண்ணற்ற கடல் பறவைகள் ஏரியெங்கும் நிறைந்திருந்தன. அவை செய்யும் அட்டகாசங்களை பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு பொன் வட்டில் ஏரியில் இருந்து உதித்தது, ஆம் பூரண சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் வெளிப் போந்தான். என்ன ஒரு காணக் கிடைக்காத காட்சி. அன்னை ஜகத்ஜனனியின் திருமுக மண்டலம் போல தோன்றியது. மெல்ல மெல்ல சந்திரன் மேலெழுந்து வந்த போது மானசரோவர் மஞ்சள் நிறத்தில் அற்புத காட்சி தந்தது. அப்படியே அந்த அழகை புகைப்பட கருவியில் பதிந்து கொண்டோம். வானத்தில் லக்ஷகணக்கான நட்சத்திரங்கள் கண் சிமிட்டி அழகை இன்னும் அதிகப்படுத்தின. இதை காண உண்மையிலேயே கண் கோடி வேண்டும். அந்த அழகை பார்த்துக் கொண்டே சிறிது மெய் மறந்து நின்றோம் அன்னை கௌரிக்கு அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத அபிராம வல்லிக்கு, கருணை கடைகண் கற்பகவல்லிக்கு ஆயிரம் கோடி நன்றிகள் செலுத்தினோம்.

நிர்மலமான வானத்தில் ஆயிரமாயிரம் நட்சத்திர தோழிகளுடன் நிலவு உலா வந்த அற்புத காட்சியை கண்ட போது லலிதா சகஸ்ரநாமத்தின் இந்த நாமம்தான் மனதில் பளிச்சிட்டது. முகசந்த்ர – களங்காப –ம்ருகநாபி –விசேஷகா அதாவது அன்னையின் அஷ்டமி சந்திரன் போல விளங்கும் திருமுக மண்டலத்தில் விளங்கும் கஸ்தூரி திலகம், சந்திரனிடம் தோன்றும் களங்கம் போல தோன்றுகின்றது.  மாசு படாத சுற்று சூழலில் உயர்ந்த இமயமலையில் அன்னையின் திருமுகத்தை திவ்யமாக தரிசித்தோம்

இந்தத் தடவை இன்னும் ஒரு முன்னேற்றத்தையும் கவனித்தோம்.  முதல் தடவை சென்ற போது மின்சாரத்தை பயன்படுத்தி நாம் நம்முடைய மின்சார கருவிகளை பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது கைபேசிகள் மற்றும் புகைப்படக்கருவிகள் அவர்களிடமே இருப்பதாலும் அவர்களே மின்சார கருவி(Inverter) அமைத்துள்ளனர். தற்போது கைப்பேசி என்பது  எல்லாருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டதாலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். மானசரோவரின் கரையில் புதிதாக பல பெயர்ப்பலகைகள் வைத்துள்ளனர். அதில் ஆங்கிலம், சீன, திபெத்திய மொழியில்  மானசரோவரின் பெருமைகளை எழுதி வைத்துள்ளனர்.  மஹாத்மா காந்தி அவர்களின் அஸ்தியும் இத்தடாகத்தில் கரைக்கப்பட்டது என்ற ஒரு புது தகவல் இதிலிருந்து கிட்டியது.

முழுமதி நாளில் அம்பாளை பூரணச் சந்திரனாக பாவித்து ஸ்ரீ சக்ரத்தின் உச்சியில்  சிவசக்தி ஐக்கிய ரூபிணியாக தியானித்து லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய அந்த சந்திர சடாதரி, முகுந்த சோதரி, மாதவி, சுமங்கலி, சாம்பவி அமர சோதரி, சர்வ ம்ருத்யு நிவாரணி, சர்வ ரோக பிரசமணி எல்லாவித நலன்களையும் அருளுகின்றாள் என்பதால் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தோம். இன்று மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் மானசரோவரின் கரையில் இருந்து ஐயனின் தரிசனம் கிட்டவில்லை. இன்னும் அதிகமான உயரம் வந்ததாலும் மூன்று நாட்களாக சரியாக சாப்பிடாததாலும் இன்னும் சிலருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இன்றைய தினம் மிகவும் அற்புத தரிசன நாள் ஐயனின் முதல்தரிசனம் மற்றும் அம்மையின் முழுநிலவு தரிசன நாள். மானசரவர் கரையில் இந்த யாத்திரையின் போது இரு பௌர்ணமி இரவுகளும் ஒரு பகலும் தங்கும் பாக்கியம் அம்மையப்பரின் அருளால் சித்தித்தது. ஆனால் இரவில் தேவர்கள் நீராடுவதைக் காண எழுந்து சென்று பார்க்க முடியவில்லை வேக வேகமாக பயணம் செய்ததன் விளைவாகவும் இருக்கலாம்.

இது வரை முழு நிலவொளியில் மானசரோவரின் அழகையும், காலை சூரிய உதயத்தின் போதைய அழகையும் கண்டு களித்தீர்கள், வரும் பதிவில் இன்னொரு அற்புதமான அழகை காண உள்ளீர்கள், அது என்ன என்று அறிய ஆவலாக உள்ளதா? சற்றுப் பொறுங்கள்.

*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்

திருக்கயிலாயம்




பாடல் எண் : 8
தொடுத்தார் புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார்
எடுத்தான்திரள்தோள் முடிகள்பத்து மிடிய விரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங் கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலை மலையாரே.

பொருள் :கயிலைமலை இறைவர் முப்புரங்களை மேரு வில்லை வளைத்து எரியாகிய ஒளி பொருந்திய அம்பைத் தொடுத்து எரித்து அழித்தவர். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் திரண்ட தோள்கள் பத்துத் தலைகள் ஆகியன நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். அவன் பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வாள் முதலிய படைகள் கொடுத்தவர். மார்க்கண்டேயனின் உயிரைக் கவர அவன்மேல் நெருங்கி வந்த எமனைச் சினந்து அவனைக் காலால் உதைத்தவர்.



தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள், தங்களின் வர்ணனை அற்புதம்... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

Unknown said...

கயிலாய தரிசனம் காண கண் கோடி வேண்டும் . படங்கள் அருமை . நன்றி

S.Muruganandam said...

மிக்க நன்றி தனபாலன் ஐயா.

S.Muruganandam said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி Gnanam Sekar