Showing posts with label கௌரி குளம். Show all posts
Showing posts with label கௌரி குளம். Show all posts

Thursday, April 09, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 21

                                             இரண்டாம்  நாள் கிரி வலம்  - 2

கௌரி குளத்தின் அழகு 

டோல்மாவில் அன்னை பார்வதியை தரிசனம் செய்து விட்டு  கீழிறங்கினால் வலது பக்கம் அன்னை நீராடும் கௌரி குளத்தை தரிசனம் செய்கின்றோம். மேலிருந்து கௌரி குளத்தின் அழகை இரசிக்கின்றீர்கள் அன்பர்களே.   




டோல்மாவில் இருந்து லாம் சூ பள்ளதாக்கிற்கு இறங்கும் பாதை மிகவும் செங்குத்தானது. மேலும் பாறைகள் நிறைந்தது பார்த்துப்பார்த்து மெதுவாகத்தான் இறங்க வேண்டும் இவ்விடம் கைத்தடி மிகவும் அவசியம். சென்ற யாத்திரையின் போது பாதை முழுவதும் வழுக்கும் உறைபனி இருந்ததால் மிகவும் சிரமத்துடன்தான் இறங்கினோம். இந்த யாத்திரையின் போது பாதையில் பனியில்லாததால்    அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. 
  
டோல்மாவில் இருந்து இறக்கம் 


டோல்மாவில் இருந்து குதிரையில் இறங்குவது பாதுகாப்பானதல்ல என்பதால் யாத்திரிகளை இறங்கச்சொல்லி விட்டு அவர்கள் குதிரையை புல் மேய விட்டுவிட்டு தாங்களும் உணவு உண்டு விட்டு பின்னர்  யாத்திரிகள் கீழே இறங்கி வந்த பின் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். 


லாம் சூ சமவெளியில்  நடை பயணம் 



குதிரைக்காரர்கள் இந்தத் தடவை  மிகவும் முன்னேறி விட்டனர். ஹிந்தியில் பேசுகின்றனர் நாம் சொல்வதை புரிந்து கொள்கின்றனர். செல்போன் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டும், பாட்டு கேட்டுக்கொண்டும் வருகின்றனர். வழியில் செல்பவர்களுக்கும் உதவ முன் வருகின்றனர்.   ஒரு  திபெத்தியப்பெண் எதோ உதவி கேட்க அடியேனிடம் தலைவலி மாத்திரை உள்ளாதா ?என்று கேட்டு வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுத்து உதவினார். 


பறவைப்பார்வையில் சமவெளி

குமாரசுவாமி ஐயா போர்ட்டர்களுடன் 

      
 நந்தியெம்பெருமான் தரிசனம் 

லாம் சூ சமவெளியில் இறங்கிய பின் பாதை சமதளம்தான் அதிக ஏற்ற இறக்கங்கள் கிடையாது. இரு பக்கமும் நெடிதுயர்ந்த மலைகள் ஆற்றை ஒட்டிய பாதை சில இடங்களில் பனியிலும் நடக்க வேண்டி வரலாம். ஆனால் பாதைதான் சுமார் 8 கி.மீ  தூரம். அதுவும் டோல்மா ஏறி இறங்கியபின் இந்த தூரம் அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்வது போல தோன்றுகின்றது.   ஆனால் மிகவும் கடினமான டோல்மா ஏற்றத்தை கடந்து வந்து விட்டதால் இது அவ்வளவு சிரமமானதாக தோன்றாது.  இப்பகுதியில் நமக்கு திருக்கயிலாயத்தின் தரிசனம் கிட்டுவதில்லை ஆனால் நந்தியெம்பெருமானின் பக்கவாட்டு தரிசனம் கிட்டுகின்றது.   

வழியில் சூரிய மின்சார தகடுகள் மற்றும் செல்போன் ஆன்டனாக்கள்

ஒரு அருவியின் தடம் 

                                                ஜுடுல்புக் முகாம் 


பான்போக்களின் குருவுடன் மில்ரெபா போட்டியிட்ட போது மில்ரெபா   திருக்கயிலாயத்தை வலம் வந்தார், நாரோ இடம் வந்தார் இருவரும் இங்கு சந்தித்துக்கொண்டனர். பெரு மழை பெய்தது அப்போது மில்ரெபா ஒரு பெரிய பாறையை உயர்த்தி குடையாக பிடித்தார். இவ்வாறு மில்ரெபா அதிசயம் நிகழ்த்திய  இடம் என்பதால் அதிசய குகை என்றழைக்கப்படுகின்றது. எழுவரும் எந்தவித சிரமமும் இல்லாமல் ஜுடுல்புக் முகாமை அடைந்தோம். இன்னொரு குழுவினருடன் உணவு, அறை ஆகியவற்றை பகிர்ந்து கொண்டோம். மிகவும் அவசியமான ஓய்வெடுத்தோம்.  இவ்வாறாக இரண்டாவது நாள் கிரி வலம் சிவசக்தியின் அருளால் சுபமாக அமைந்தது. 

கல்லாத புலறிவில் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் ஆய்வந்து வனப்புஎய்தி இருக்கும் வண்ணம் 
பல்லோரும் காணஎன்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே (கயிலை மலையில்) கண்டேனே! 

                                                                                                                                                         யாத்திரை தொடரும் . . . . . . 


Tuesday, April 07, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 20

இரண்டாம்  நாள் கிரி வலம்  - 1

 டோல்மாவில்   மலையரையன் பொற்பாவை   தரிசனம்  

அதிகாலையில் டேராபுக்

காலை எழுந்தவுடன் டேராபுக் முகாம் இவ்வாறுதான்  காட்சியளித்தது. வெள்ளியை உருக்கி ஊற்றியது போல தரை முழுவதும் பால் வெள்ளை நிறமாக காட்சியளித்தது.  காலையிலேயே திபெத்தியர்களும். சீனர்களும் எறும்புகள் போல ஒருவர் பின் ஒருவராக   சுறு சுறுப்பாக மலை ஏறிக்கொண்டிருந்தனர். 

முதல் நாள் பார்த்த அதே பைரவரின் வாகனம் இன்றும் பல்வேறு இடங்களில் கண்ணில் பட்டது சில சமயம் அருகில் நடந்து வரும் பின்னர் கண்ணில் படாமல் ஒடி விடும். டோல்மாவிலும் கண்ணில் பட்டது.  
  

மலைகள் எல்லாம் வெள்ளிக் கவசம் பூண்டிருந்தன

ஐயனை இன்னும் மேகங்கள் மூடிக்கொண்டுதான் இருந்தன.  ஐயனையும் அன்னை பார்வதியையும் மனதார வணங்கிவிட்டு இரண்டாம் நாள் கிரி வலத்தைத் துவங்கினோம். குதிரைக்காரர்களும் முதலில் முரண்டு பிடித்தனர். எப்படியும் இவர்கள் கிரி வலம் செல்வதில் இருந்து விலகப்போகவதில்லை என்பதை உணர்ந்த பின் அவர்களும் ஒன்றும் சொல்லாமல்  புறப்பட்டு விட்டனர். முதலில் இவர்களுடன் சைகையில் தான் பேசவேண்டும், தற்போது இவர்களும் ஹிந்தியில் முக்கியமான சொற்களை கற்றுக்கொண்டிருக்கிறார்கள் எனவே  தற்போது இவர்கள் நாம் சொல்வதை புரிந்து கொண்டு  நமக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றனர்.   

மஞ்சுஸ்ரீ மலையின் பக்னா ரீ மலைச்சிகரம்


வஜ்ரபாணி மஞ்சுஸ்ரீ மலைகளுக்கிடையில் கிழக்கு முகத்தின் நீட்சி

ஒருவர் பின் ஒருவராக மலையேற்றம் 


நடுவில் சிறிது நேரம் ஓய்வு

சீன குதிரை வருடம் என்பதால் உள்ளூர்க்காரர்கள் கூட்டம் அதிகமாக  இருந்தது. இவர்கள் வெட்டவெளியில் அப்படியே தூங்கி அதிகாலையிலேயே கிரி வலத்தை மேற்கொண்டதால் பலர் நடந்து சென்றதால் பாதையில் பனி இருக்கவில்லை. ஆனால் சுற்றிலும் முதல்நாள் பெய்த பனி நிறைந்திருந்தது.    வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பச்சை குழந்தைகளை மார்பிலும் தோளிலும் ஏந்திய பெண்கள்,  ஏன் கர்ப்பிணிகள் கூட கிரி வலம் வந்து கொண்டிருந்தனர். குதிரை வருடம் என்பதால் கர்ப்பத்தில் உள்ள  குழந்தைக்குக் கூட பன்னிரண்டு  முறை கிரி வலம் செய்த புண்ணியம்   கிடைக்கும் என்பது திபெத்தியர்களின் நம்பிக்கை. கிரி வலத்தின் போது அல்லது  திருக்கயிலாயத்தின் அருகாமையில் குழந்தை பிறந்தால் இறையருள் பெற்ற குழந்தையாக  விளங்கும் என்பதால் நிறைமாத கர்ப்பிணிகள் கூட கிரிவலம் வருவார்கள்.

சிவ ஸ்தலம் 

டேராபுக்கில் இருந்து டோல்மா செல்லும் ஏற்றம் சுமார் சுமார் 65 டிகிரி சாய்மானம் என்பதால் பாதை வளைந்து வளைந்து செல்கின்றது. இப்பாதையில்  இரண்டு முக்கியமான இடங்கள் உள்ளன அவை   Shiva Sthal என்னும் சிவ ஸ்தலம்  மற்றும் Sin testing stones  எனப்படும்   கர்மா சோதிக்கும் பாறைகள். டோல்மா  ஏறும் போது சிவஸ்தலத்தை தாண்டுபவர்கள் புதுஜன்மம் எடுப்பதாக ஐதீகம்.    நாம் புனிதமடைந்த பிறகே அன்னை பார்வதியை டோல்மாவில் தரிசிக்க இயலும். சிவ ஸ்தலத்தை வணங்கும் திபெத்தியர்களை தாங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காண்கின்றீர்கள். 

கர்மா சோதிக்கும் பாறைகள்


இரு பாறைகளுக்கிடையில் சிறிய இடைவெளி உள்ளது  அதில் புண்ணிய பாவம் அற்றவர்கள் மட்டுமே அதாவது புனிதர்கள் மட்டுமே நுழைந்து வெளியே வர முடியும் என்பது ஐதீகம். படத்தில் ஒரு திபெத்தியர் பாறைகளின் இடையே  புகுந்து வெளியே வருவதைக் காண்கின்றீர்கள். 

திருமதி  ரேவதி  சேகர் மற்றும் குமாரசாமி போர்ட்டருடன் 



கையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் ஒரு சீனப்பெண்

குடும்பம் குடும்பமாக சிரத்தையுடன் கிரி வலம் வந்து கொண்டிருந்தனர். ஒரு சீன பெண்மணிக்கு மிகவும் மூச்சிரைத்தது.  அவருடன் யாரும் இருக்கவில்லை.  ஒரு பாறை மேல் அமர்ந்து சிறிது நேரம் ஆக்சிஜன் எடுத்துக்கொண்டு  ஏதும் நடவாதது போல அநாசயமாக எழுந்து மலையேற்றத்தை தொடர்ந்தார் .  



டோல்மாவிற்கான இறுதி ஏற்றம் 

மெல்ல மெல்ல மலையேறினோம் ஒரு அடி ஏறினால் இரு அடி சறுக்கல் என்பது போல மெதுவாகவே நின்று நின்று மூச்சு வாங்கிக்கொண்டே மேலே ஏற முடிந்தது.  டோல்மாவை நெருங்கும் சமயம் மலை முகட்டிலிருந்து  இன்னொரு முகடுவரை பிரார்த்தனை கொடிகள் கட்டியிருந்தனர்.  அது அப்படியே விதானம் அமைத்தது போல நிழல் கொடுத்தது இவ்வளவு நெருக்கமாக கொடிகள் கட்டியிருந்தனர். இப்படி ஒரு கொடி விதானத்தின் கீழ் சென்ற போது லலிதா நவரத்ன மாலையின்

அந்தி மயங்கிய வான விதானம் 
   அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொலி பாரோர் 
     தேம்பொழிலாமிது செய்தவள் யாரோ

எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
   எண்ணுபவர்க்கருள் எண்ணம் அளிப்பாள் 

மந்திரவேத மயப்பொருள் ஆனால் 
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே    என்னும் பாடல்தான் மனதில் தோன்றியது. அன்னை மலைமகளை, பார்வதியை, கௌரியை, அன்னபூரணியை. ஜகத்ஜனனியை, கருணைக் கடலை மனதார துதித்துக்கொண்டே  இறுதி ஏற்றத்தில் ஏறினோம். 






டோல்மாவை நெருங்குகின்றோம் 



கண்டோம் அன்னையை 


அன்னையை தரிசித்த ஆனந்தத்தில் குமாரசாமி ஐயா

டோல்மாவில் உள்ள ஒரு பாறையே  நமக்கு பார்வதி தேவி திபெத்தியர்களுக்கு   தாரா தேவி. எனவே டோல்மா கணவாயை திபெத்தியர்கள் தாரா கணவாய் என்றும் அழைக்கின்றோம். சிவசக்தியின் அருளால் எந்தவித துன்பமும் இன்றி எழுவரும் டோல்மாவை அடைந்து  அன்னையை லலிதா சகஸ்ரநாமம் கூறி மனதார  உலக நன்மைக்காக வழிபட்டோம். டோல்மாவில் சிறிது உறைபனி இருந்ததால் வழுக்கியது பார்த்து பார்த்து அடி வைக்க வேண்டி இருந்தது. அன்னையின் காலடியில் சிறிது நேரம் இருந்தபின் இறக்கம் துவங்கியது. 


சிறிது தூரம் இறங்கிய பின் அன்னை  மரகதவல்லி மீனாட்சி நீராடும் மரகதப்பச்சை  கௌரி குளத்தை தரிசனம் செய்தோம். 






கௌரி குளம்

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்துஎன் உளம் மன்னி 
கருத்துஇருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணி கொள் கயிலை(தில்லை) கண்டேனே!

                                                                                                                            யாத்திரை தொடரும் . . . . . . 

Thursday, July 11, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -38 (திருக்கயிலாய யாத்திரை-2012)

கௌரி குளம்

டோல்மாவிலிருந்து  கீழிறங்கி செல்லும் பாதை முழுவதும்
தூய வெண்  பனியால் நிறைந்திருந்தது

கௌரி குளத்தை நெருங்கிறோம்



கௌரி குளம் அருகில் உள்ள சிறு குளம் 
இந்தத் தடவை கிடைத்த காட்சி

சென்ற யாத்திரையின் போது கிடைத்த காட்சி

( ஐயனின் பவள மேனியில்  பால் வெண்ணீறு  திகழ்வது போல இங்கே பாறைகள் எல்லாம் பனியால் மூடப்பட்டு சமவெளி போல  தெரிந்த இடம் எவ்வாறு  உள்ளது பாருங்கள்)

முழுவதும் உறைந்த கௌரி குளம்


 பச்சை  பசுங்கொடி   பார்வதி நீராடும்
 கௌரி குளம் மரகத வர்ணத்தில்  
சென்ற யாத்திரையின் போது இப்படி தரிசித்தோம்.

இன்ற யாத்திரையில் இப்படி தரிசித்தோம்

இப்படியும்  சில சமயம் தரிசனம் கிட்டும்


கௌரி குளத்தின் கரையில் 
அனில்-உமா கோயல் தம்பதியினர்

கௌரி அன்னையை வழிபடும் உமா கோயல்

டோல்மா கணவாயில் இருந்து செங்குத்தான  இறக்கத்தில் அமைந்துள்ளது கௌரி குளம் பனியில்லாத போது யாரும் அதன் அருகில் செல்வது மிகவும் கடினம் ஏனென்றால் மேலிருந்து பாறைகள் விழும் வாய்ப்புகள் அதிகம்.  ஆகவே யாரும் கௌரி குளத்திற்கு செல்வதில்லை. ஐயனின் பவள மேனியில் பால் வெண்ணீறு திகழ்வது போல,     இப்போது மலை முழுவதும் தூய வெண் பனி நிறைந்திருப்பதால் அன்னையின் குளத்திற்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிட்டியது. 


 கௌரி குளத்தில் இருந்து பனி படர்ந்த மலைப் பாதையில் இறக்கம்



அடியேனும் போர்ட்டர் சிறுவனும்






கீழே விழுந்த போது இந்த  போர்ட்டர் ரூபத்தில்தான்  தோடுடைய செவியன்  சிவ பெருமான் விடையேறி வந்து  காப்பாற்றினார்)

லாம் சூ சமவெளியை அடைந்து விட்டோம்

 மலைகளில் எத்தனை முகங்கள் 

லாம் சூவிலும் பனி தொடர்கின்றது

மலை முழுவதும் பனி  நிறைந்திருந்தால் எப்படி முதலில் இறங்குபவர்கள் இறங்கினார்களோ அதே வழியில் இறங்கினோம். சிறிது நேரம் சென்றபின் கண்ணில் கண்ட காட்சி அருமையாக இருந்தது. எதிரே கௌரி குளம் முழுதும் உறைந்து காட்சி அளித்தது. பாதை சரியாக இருக்கும் போது கௌரி குளத்தை நெருங்குவது மிகவும் கடினம், மேலிருந்து அப்படியே தரிசனம் செய்து விட்டு அப்படியே இறங்கி விடுவோம். பனி இவ்வளவு நிறைந்தருந்ததால்  இன்றைய தினம் அன்னை தானே  தங்களை கௌரி குளத்திற்கு அருகில் அழைத்து அருமையான தரிசனம் கொடுத்தாள். கௌரி குளத்தை மரகதக்குளமாக முன்னர் பார்த்திருந்தேன் இந்தத்தடவை அந்த அர்த்த சந்திர வடிவத்தை தூய வெள்ளை கௌரி குளத்தைப் பார்க்கும் பாக்கியம் அன்னை மலைமகள் அருளால் கிட்டியது.

லலிதா சகஸ்ர நாமத்தில் வரும் ஒரு நாமம் – அஷ்டமீ சந்த்ர- விப்ராஜ- தலிக-ஸ்தல சோபிதா, அரை வட்ட வடிவான அ|ஷ்டமி சந்திரனைப் போல் விளங்கும் நெற்றியுடையவள்; அந்த    நாமம் மனதில் பளிச்சிட்டது. அம்பாளை பஞ்சமி, பைரவி, பர்வத புத்ரியை, பஞ்ச நல் பாணியளை கொஞ்சிடும் குமரனை, குணமிகு வேழனை கொடுத்த நல் குமரியளை அவளது கருணைக்காக வணங்கி கீழே இறங்குவதை தொடர்ந்தோம்.

மேலே ஏறுவதை விட கீழே இறங்குவது மிகவும் கடினமானதாக இருந்தது. பனியின் காரணமாக பாதை வழுக்கலாக இருந்ததால் பலர் வழுக்கி விழுந்தனர். பாறைகளைப் பார்த்து பாதங்களை குறுக்காக வைத்து பார்த்து பார்த்து இறங்க வேண்டி வந்தது. அடியேனுடைய போர்ட்டர் சிறுவன் பாறைகளை தன் ஊன்று கோலினால் காண்பித்துக் கொண்டு கையைப் பிடித்துக் கொண்டு முன்னே செல்ல அடியேன்  எனது ஊன்று கோலை பார்த்து ஊன்றி மெதுவாக இறங்கினேன். அப்படியும் பல முறை கீழே விழுந்து எழுந்தேன். “தீ மேல் இடினும் ஜெய சக்தியென திடமாய் அடியேன் மொழியும் திறமும் அருள்வாய்” லலிதாம்பிகையே என்னும் லலிதா நவரத்ன பாடல் வரிகளை மனதில் ஜபித்துக்கொண்டு கீழிறங்கும் போது ஐயன் தனது திருவிளையாடலைக் காட்டி அருளினார்.  ஓர் இடத்தில் அடியேன் வழுக்கி விழுந்து என்னுடைய போர்ட்டர் சிறுவனையும் இழுத்துக் கொண்டு அம்மா! அங்காள பரமேஸ்வரி! என்று உருண்டு விழும் சமயம், திபெத்திய போர்ட்டர் போல உருமாறி அடியேனை கையைப்பிடித்து தடுத்து நிறுத்தி மேலே தூக்கி விட்டு அந்த கறை கண்டன், கறை படிந்த பற்களால் அடியேனை பார்த்து சிரித்தார். அடியேன் பாராயணம் செய்யும் ருத்ரத்தின் முழு அர்த்தம் அந்த கணத்தில் விளங்கியது. அனைத்து ஜீவராசிகளிலும் ஜீவனாகவும், ஈஸ்வரனாகவும் விளங்குபவர் அந்த சிவபெருமானே, நாம் நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களை விட்டால் இந்த சீவனும் சிவனாகலாம். ஐயா நீயே சரணம் என்று அனைத்தையும் அவரது திருப்பாதங்களில் சமர்ப்பணம் செய்து விட நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை, இதைத் தானே அப்பர் பெருமானும் "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்று பாடிப்பரவினார்.  பின்னர் மெதுவாக கீழிறங்கி லாம் சூ சமவெளியை அடைந்தோம்.

இவ்வாறு இன்றைய தினத்தின் மலையேற்றத்தையும் இறக்கத்தையும் சிவசக்தி  அருளால் முடித்தோம். இன்னும் நடக்க வேண்டிய தூரம்  உள்ளது அந்த  அனுபவமும் அப்போது கிடைத்த ஒரு அற்புத தரிசனமும் அடுத்த பதிவில் காணாலாமா அன்பர்களே.